Udhaya Ragam – 3 (2)

“போலீஸ் வீட்டுக் கல்யாணம் தானே, நீங்க யூனிஃபார்மில் கூட வரலாம். அதெல்லாம் உங்க தலைக்குப் புரியாமயா போய்டும்?”

“புரியும் தான். ஆனா, அவருக்கு நான் வேணும்னு பண்ணது போல இருக்கும். இப்ப பார்க்கும் போது ஒன்னும் சொல்ல மாட்டார். ஆனா, அப்புறமா நேரில் பார்க்கும் போது நல்லா கேட்பார்” என்று அந்த “நல்லா” வில் அழுத்தம் கொடுத்துச் சொன்னான். சட்டென்று சத்தமாகச் சிரித்து விட்டாள் அவள்.

“ஓகே, புரியுது. நீங்க, வேற என்னமோ சொல்லிட்டு இருந்தீங்க”

“ஆமா, அது வந்து, நான் சைபர் க்ரைம் டிபார்ட்மெண்டில் இருக்கறதால.. இல்ல, பொதுவாகவே போலீஸ் வேலைல.. எங்களுக்கு நேரம், காலம் கிடையாது. எப்போ, என்ன வேலை வரும்னு சொல்ல முடியாது. சில நேரம்.. வந்து.. இதுல.. ஷிட்..” திடீரென்று நிறுத்தி விட்டு, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அதுவரை பேசிக் கொண்டிருந்தவன் அமைதியாகவும், அவளும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் கண்களில் இருந்து அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“உங்க… உன்கிட்ட நான் ரொம்பத் தடுமாறுறேன். எனக்கு இது ரொம்பப் புதுசு” என்றான் பட்டென்று, நொடியில் சிவந்து விட்டது அவள் முகம்.

கன்னச் சதை கடித்துச் சிரிப்பை விழுங்க முயன்றாள். ஆனாலும், கண்கள் காட்டிக் கொடுத்து விட்டது.

பன்னீர் ரோஜா நிற மைசூர் பட்டு சேலை அணிந்திருந்தாள். அதற்குப் பொருத்தமாகக் காதில் வெள்ளைக் கல் பதித்த ஜிமிக்கி, கழுத்தை ஒட்டி ரூபி கற்கள் பதித்த ஆரம், கைகள் இரண்டிலும் இளம்ரோஜா நிற கண்ணாடி வளையல்கள், தலை நிறைத்த மல்லிகைப் பூ எனத் தன் முன் ஒரு பெரிய பன்னீர் ரோஜாவை போல மென்மையாகச் சிரித்துக் கொண்டிருந்த பெண்ணை, தலை முதல் கால் வரை நிதானமாய்ப் பார்த்தான் அவன்.

அவன் பார்வையில் வானவில்லை போல வண்ணங்களை மாற்றிக் கொண்டேயிருந்தது அவள் முகம்.

“நான், ப்ளர்ட் பண்ற மாதிரி இருக்கா? ஏன் சிரிக்கற?” என்றான்.

‘அவனிடம் எப்படிச் சொல்வாள்? நான் உன்னைப் பாதிப்பது, எனக்குப் பிடித்திருக்கிறது என்று?’

“நான் சிரிக்கல. நீங்க மேல சொல்லுங்க” என்றாள் அவள். அவளது ஒவ்வொரு அசைவிலும் ஒலியெழுப்பிச் சிணுங்கிக் கொண்டேயிருந்தது கண்ணாடி வளையல்கள். அந்தச் சிணுங்களில் தடுமாறிக் கொண்டே இருந்தான் அவன்.

“நம்ம வீடு பெரம்பூர், எனக்கு வேலை வெப்பேரி. உனக்குக் கடை கலெக்டர் நகர். மூணும், மூணு திசையில் இருக்கு. நீயே யோசிச்சு பாரு. காலையில் எழுந்து ஆளுக்கொரு பக்கம் ஓடனும். சாயங்காலம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வர்ற வேலை, ரெண்டு பேருக்குமே இல்ல.

என் வேலையில் நேரம் சொல்லவே முடியாது. நீ கடையை அடைச்சுட்டு தான் வீட்டுக்கு வரணும். நைட் பத்து மணி கூட ஆகலாம் இல்லையா? இதுல நமக்கான நேரம் எப்படி அமையும்? இதுவே வீட்ல இருக்கப் பொண்ணுன்னா…”

அத்தோடு நிறுத்தி, நீயே புரிந்து கொள் என்பதைப் போலத் தோளை குளுக்கி காட்டினான். ஆனால், அவளுக்குத் தான் புரியவில்லை.

“பத்து மணி ஆகாது. ஆனா, எட்டு, ஒன்பது ஆகலாம். இதுக்கும், நமக்கான நேரத்துக்கும் என்ன சம்மந்தம்?” என்று கேட்டாள் அவள்.

அவளுக்கு எப்படி விளக்குவது என்று தெரியாமல் முழித்தான் அவன்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கால்களை, குழந்தை ஒன்று ஓடி வந்து கட்டிக் கொண்டது.

சுற்று முற்றும் பார்த்தபடியே, குழந்தையைக் கைகளில் அள்ளியவள், “பாப்பா, யார் நீங்க? உங்க அம்மா எங்க?” என்று விசாரித்தாள்.

“அம்மா…” என்று கீழே கையைக் காட்டியது குழந்தை.

“தனியா படியேறி வந்துட்டா போல, வாங்க. கீழ போய் யார் குழந்தைன்னு கேட்டு கொடுப்போம்” வினாடியில் போலீஸ்காரனாக மாறி இருந்தான். ஆனால், அவர்களுக்கு வேலை வைக்காமல் குழந்தையின் தாயே அங்கு வந்து விட்டார்.

“பூஜா குட்டி” என்று அழைத்தவரிடம், தாவியது குழந்தை.

“ஒரு இடத்தில நிக்க மாட்டேங்கிறா. கையில பிடிக்க முடியல. ஒரு நிமிஷத்தில பிள்ளையைக் காணோம்னு பதறிட்டேன். தாங்க்ஸ்ங்க”

“ஓகே, பரவாயில்ல. ஆனா, எப்பவும் குழந்தையைப் பத்திரமா பார்த்துக்கோங்க” என்று எச்சரித்து அனுப்பினான் அவன்.

கண்களை உருட்டினாள் ராகவி.

“ஆளுக்கொரு பக்கம் வேலைக்கு ஓடினா, இந்தக் குழந்தை, குட்டி எல்லாம் எப்போ தான் பெத்துக்கறதாம். எங்க நேரம் இருக்கும்” மெல்ல முணுமுணுத்தான்.

குழந்தை, பெத்துக்க… என்ற இரு வார்த்தைகள் மட்டுமே அவள் காதில் விழுந்திருக்க, அதுவே அவன் சொல்ல வந்ததை விளங்கிக் கொள்ள அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

அவளது முகச் சிவப்பை கவனித்து விட்டு, “புரிஞ்சுடுச்சு போல” என்றான் குறும்பு சிரிப்புடன், உதட்டை கடித்துச் சிரிப்பை அடக்க முயன்றாள் ராகவி.

‘கடவுளே, முதல் சந்திப்பில் இப்படித் தான் பேசிக் கொள்வார்களா? என்னைப் பிடிச்சிருக்கா? எனக்கு, உன்னைப் பிடிச்சிருக்கு’ இப்படியாகத் தான் பேசிக் கொள்வார்கள் என்று அல்லவா அவள் நினைத்திருந்தாள். ஆனால், பிடித்தம் பற்றிய பேச்சுக்கு முன்னேயே, பிள்ளை பெறுவதைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறான் இவன்.

“அதான், வீட்ல இருக்கப் பொண்ணா வேணும்னு சொல்லிட்டீங்களே. அப்புறம் என்ன.. உங்களுக்குப் பிரச்சினை இருக்காது”

“ம்ம்ம். ஆனா, இப்போ வேலைக்குப் போற பொண்ணு. இல்ல, சொந்தமா கடை வச்சுட்டு இருக்கப் பொண்ணு சரியா இருக்கும்னு தோணுது” என்றான், அவளையே பார்த்தபடி,

“இருக்கும், இருக்கும்” முணுமுணுத்தாள்.

குறுகுறுவென்று அவளையே வட்டமடித்த அவன் கண்களைச் சந்திக்க முடியாமல், பார்வையை விலக்கி, அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

“குழந்தைங்க ரொம்பத் தொல்லை பண்றாங்க இல்ல?” ஒற்றைப் புருவம் உயர்த்தி அவன் வினவ,

“என்ன?” என்றாள் மெலிதாக அதிர்ந்து,

“இல்ல, நம்மைப் பேச விடாம.. இடையில் புகுந்து ரொம்பத் தொல்லை பண்றாங்க இல்ல? அதைச் சொன்னேன்.” அவன் சொன்னது அங்கே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அல்ல என்பது அவளுக்கு நன்றாகப் புரியவே செய்தது. சிரித்து விடாமல் இருக்க அவள் பெருமுயற்சி செய்ய வேண்டியிருந்தது. மனமெங்கும் இன்ப அவஸ்தை பரவப் பேச்சற்று நின்றாள் ராகவி.

அவளுக்குக் கைக் கொடுக்கும் விதமாகச் சரியாக அந்நேரம் அங்கே வந்தான் ராகவன்.

அவன் கையில் இரண்டு பிளாஸ்டிக் சேர்கள் தூக்கியபடி அவர்களை நோக்கி வந்தான். அவன் பின்னேயே இருவர் சிறிய டேபிள் ஒன்றை தூக்கிக் கொண்டு வந்தனர்.

இரண்டே நிமிடத்தில், அங்கே டேபிள், இருவர் அமர இருக்கை, குடிக்கக் காஃபி என்று அழகான செட்டப்பை உருவாக்கி இருந்தான் அவன். அவளுக்குத் தெரியும், அவன் இப்படிச் செய்வான் என்று, அதற்குத் தான் அவள் காஃபி ஷாப்பிற்குச் செல்ல மறுத்தது.

ராகவனை மெச்சும் விதமாகப் புருவத்தை உயர்த்தி, உதடு வளைத்துச் சிரித்தான் அவன்.

“தாங்க்ஸ்” என்றான், ராகவனைப் பார்த்து,

பதிலுக்குப் புன்னகைத்து, “இப்போ உட்கார்ந்து பேசுங்க” என்று விட்டுப் போனான் ராகவன்.

“பிளீஸ்” என்று ராகவியை அவன் அமர சொல்ல, மெல்ல நகர்ந்து அமரப் போனவள், சேலை தடுக்கி கீழே விழப் போனாள்.

பட்டென்று கை நீட்டி, அவள் விழுந்து விடாமல் தடுத்து நிறுத்தினான் அவன்.

“பார்த்து, பார்த்து… கேர்ஃபுல்” என்றான்.

அவன், அவளைக் கீழே விழ விடவில்லை. ஆனாலும், அவள் விழுந்தாள். தலை கீழாக, காதலில், அவன் மேல்.

அவர்களைத் திரும்பி திரும்பி பார்த்தபடியே போகும் ராகவனைப் பார்த்தவன், “ஓ மை கடவுளே, உனக்கு என்ன பிடிச்சிருக்கு” என்று சத்தமாகச் சொல்ல, அவனை அதிர்ச்சியுடன் விழி விரித்துப் பார்த்தாள் ராகவி.

“நீங்க ரெண்டு பேரும் இரட்டையர்கள். அவனால உன்னோட உணர்வுகளை, உன் மனசை புரிஞ்சுக்க முடியும். இல்லையா?” என்று அவன் கேட்க, மெல்ல “ஆம்” என்று தலைசையத்தாள் அவள்.

“உனக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு அவனால உணர முடிஞ்சிருக்கு. அவன் இப்போ என்னைப் பார்த்த பார்வையில் அவ்வளவு அன்பு..” என்று சொல்லிக் கொண்டே போனான் அவன்.

இதழ்கள் தாமாகப் புன்னகையில் மலர, “ஆமா, எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு.” தயங்காமல் அவனை நேர்ப் பார்வை பார்த்து சொன்னாள் ராகவி.

உதடு பிரித்து அழகாகப் புன்னகைத்தான் அவன்.

“எனக்கு…” என்று அவன் ஆரம்பிக்க,

“உதய்? அது யாரு? என் பேர் உதய் இல்லைங்க?” என்ற குரலில் அதிர்ந்து திரும்பினான் அவன். சட்டென்று அவன் எழுந்து நிற்க, அவளும் அவனைத் தொடர்ந்து எழுந்து நின்றாள்.

அங்கே நின்றிருந்த மற்றொரு ஜோடி தான் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அப்போ நீங்க உதய் இல்லையா? உங்க பேரு என்ன?” என்று அந்தப் பெண் மீண்டும் குரல் உயர்த்த, அவர்களை நோக்கி நகரப் போனவனின் கரங்களை அழுந்த பற்றி நிறுத்தினாள் ராகவி.

மனம் படபடவென்று அடித்துக் கொண்டது.

அனிச்சையாக நகர்ந்து அவனை நெருங்கி நின்றவள், “ஹலோ மிஸ்” என்று அழைத்து,

“உதய், இங்க இருக்கார்” என்றாள் சத்தமாக.

ஜோடி மாறி இருப்பது அப்போது தான் அவர்களுக்கே புரிந்தது. நால்வரும் சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

error: Content is protected !!
Scroll to Top