“ராகவி, ராகவி” என்று அவளது பெயரை கத்தி ஏலம் விட்டபடி வந்தான் அவளது உடன்பிறப்பு ராகவன்.
சென்னையின் பிரபலமான திருமண மண்டபம் அது. தமிழ்நாடு காவல்துறையில் உயர் பதவியில் இருப்பரின் மகளின் திருமணம் என்பதால், அரங்கம் முழுவதும் முக்கியப் பிரமுகர்களால் நிறைந்திருந்தது.
“என்ன ராகவ்? என்னாச்சு?” தன் முன்னால் மூச்சு வாங்க நின்றவனைக் கேள்வியுடன் புருவம் உயர்த்திப் பார்த்தாள் ராகவி.
“அப்பா, உன்னை, மாப்பிள்ளை…” சொல்ல வந்தததைக் கூடச் சொல்ல முடியாத அளவுக்கு மூச்சு வாங்க, கால்களில் கையூன்றி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றான்.
“இந்தா, முதல்ல தண்ணியைக் குடி, ஓடி வந்தியா? அப்படி என்ன அவரசம்?” அவனிடம் தண்ணீர் பாட்டிலை நீட்டினாள் சுஹாசினி.
“தாங்க்ஸ், சுஹா” முழுப் பாட்டிலையும் ஒரே மூச்சில் குடித்துக் காலி செய்து விட்டு நிமிர்ந்தான்.
“மாடியில இருக்கற ஹால்ல உனக்காக, மாப்பிள்ளை வெயிட் பண்றாராம். அப்பா, உன்னைப் போய் அவரை மீட் பண்ண சொன்னார்.” இப்போது சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொன்னான்.
“என்னடா உளர்றா? மாப்பிள்ளையா? யார் அவன்?” என்று சுஹாசினி கேட்க,
“கல்யாண மாப்பிள்ளையா? அவருக்கு நம்ம ராகவி கிட்ட என்ன பேசணுமாம்?” பனிமலர் தன் பங்கிற்குக் கேள்வி எழுப்பினாள்.
“அச்சோ, கல்யாண மாப்பிள்ளை இல்ல. இது வேற ஆள். அப்பாவோட ப்ரெண்ட் பையனாம். இங்க கல்யாண வீட்டில் வச்சு பார்த்திருக்காங்க. அவங்க குடும்பம் நம்ம அப்பா, ஐயா, ஆயா கிட்ட எல்லாம் பேசிட்டு இருந்தாங்க. பேச்சு எங்க, எங்கயோ போய்க் கடைசில பசங்க என்ன பண்றாங்கன்னு நின்னுச்சா, அங்க இருந்து அப்படியே கல்யாணத்துக்குத் தாவிடுச்சு. இப்ப உங்க ரெண்டு பேரையும் மீட் பண்ண சொன்னாங்க.”
“ஓகே, ஓகே. கல்யாண வீட்டுல ரெண்டு கல்யாணங்கள் முடிவாகுறது சகஜம் தான் ராகவ். ஆனா, ராகவி இன்னும் ஒரு தடவை கூட அவனை.. சாரி, அவரைப் பார்க்கலை, பேசலை. அதுக்குள்ள மாப்பிள்ளைன்னு சொல்லாத. முதல்ல அவ பேசிட்டு வரட்டும்” என்ற சுஹாசினி, திரும்பி தோழியின் கைப் பற்றி,
“இது நல்ல ஆஃபரா இருக்கே ராகவி. கல்யாணத்தை வேடிக்கை பார்க்க வந்த நமக்கே கல்யாணத்துக்குப் பத்திரிக்கை அடிக்க ரெடி பண்ணுறாங்க” கண்ணடித்தாள்.
“சுஹா, இட்ஸ் நாட் ஃபன்னி” முறைத்தாள் ராகவி.
“சரி சரி. கூல் டவுன் ராகவி, போ. சும்மா ஒரு காஃபி மீட் போல நினைச்சுக்கோ. பேசிப் பாரு, பிடிச்சா சரி தான். இல்லையா, அவரை இன்னையோடு மறந்திடுவோம். ஓகே?” என்று சொல்ல,
“அதெல்லாம் முடியாது சுஹா. கல்யாணத்துக்குத் தானே வந்தோம். இங்க வச்சு என்ன பொண்ணு பார்க்கறது? ம்ஹூம். முடியாது. நான் போகல” என்றாள் ராகவி.
“பொண்ணு இல்ல, மாப்பிள்ளை தான் பார்க்கறோம்” என்று சிரித்துக் கொண்டே சொன்ன சுஹாசினி, “போய்ட்டு வா, ராகவி” என்றாள்.
தலையை மறுப்பாக அசைத்துக் கொண்டேயிருந்தாள் ராகவி.
அன்று காலை அந்தத் திருமணத்திற்குக் கிளம்பும் போது இப்படி ஒரு திருப்பம் வரும் என்று அவள் எதிர்பார்த்திருக்க வில்லை. என்ன செய்வது என்று குழம்பியபடி அங்கேயே நின்றாள்.
அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் தான் அவள் இந்தக் கல்யாணத்திற்கு வந்தது. இதுநாள் வரை வீட்டில் அவளின் கல்யாண பேச்சு எடுக்கும் போதெல்லாம் தவிர்த்து வந்தவள், இப்படிக் கல்யாண வீட்டில் வைத்து மாப்பிள்ளையைப் பார்க்க சொல்லும் போது என்ன சொல்லி மறுப்பது, தவிர்ப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள்.
“என்ன போக முடியாதா? சரி, வேற என்ன பண்ணலாம், நீயே சொல்லு?” என்று சுஹாசினி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளைத் தேடி கொண்டு, அவளது ஆயா விசாலாட்சியும், ஐயா கண்ணதாசனும் அதற்குள் அங்கு வந்து விட்டனர்.
மெல்ல அவளருகில் நெருங்கி வந்து, “இந்த ராகவ் உன்கிட்ட சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லலையா, செல்லம்?” என்று விசாலாட்சி கேட்க, அவரைக் கண்ணைச் சுருக்கி முறைத்தாள் ராகவி.
“ஆயா, நீங்களுமா? கொஞ்சம் என்னனு கேளுங்க ஐயா. இந்தக் கல்யாணத்துக்காக நான் இன்னைக்குக் கடைக்குக் கூடப் போகாம வந்திருக்கேன். இப்போ, இந்த மாப்பிள்ளை பார்க்கறது ரொம்ப முக்கியமா?” என்று அவரின் முகம் பார்க்க,
“உங்க அப்பா, அங்க யாரோ முக்கியமான ஆள் கூடப் பேசிட்டு நிக்கறான் டா. அதான், அவனால வர முடியலை. இல்லனா, அவனே வந்து உன்கிட்ட சொல்லி இருப்பான். பையன் மேல உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பார். ஒரு முறை போய்ப் பேசிட்டு வந்திடேன் டா செல்லம்.
உனக்கும் கல்யாண வயசு வந்திடுச்சு. எவ்வளவு நாள் தான் வேணாம்னு தள்ளிப் போடுவ? உங்கம்மாவோட ப்ரெண்ட் பையன் தான். அந்த வீட்டு மனுஷங்க நல்ல குணமா தான் தெரியறாங்க. அந்தத் தம்பியும் பார்க்க நல்லா இருக்கார். பேசி பாரு. சரி வரலைன்னா, என்கிட்ட விட்டுட்டு நீ, உன் வேலையைப் பாரு” என்று பேத்தியின் தோளை தட்டிக் கொடுத்தார் கண்ணதாசன்.
‘அப்பாவோட ப்ரெண்ட்னு தானே சொன்ன..’ கண்களால் ராகவனிடம் கேள்விக் கேட்டாள் ராகவி. “சாரி” என்று முணுமுணுத்தான் அவன்.
அவனுக்குத் தெரியும், அம்மாவின் பெயருக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள் என்று, அதனால் தான் அப்பாவின் பெயரை சொல்லி இருந்தான். அவளை எதற்கும் வற்புறுத்த வேண்டாம் என்ற எண்ணம் தான் அவனுக்கு.
“அதான் உங்க ஐயா சொல்றாங்க இல்ல ஆச்சி. போ, போய்ப் பேசிட்டு வா.” பேத்தியின் கன்னத்தைப் பிடித்துக் கெஞ்சினார் விசாலாட்சி.
அவளுக்குத் துளியும் விருப்பம் இல்லை என்றாலும் கூட, சம்மதமாகத் தலையை அசைத்தாள்.
“சிரிச்ச முகமா போ ஆச்சி”
மொத்த பற்களையும் வெளியில் காட்டி சிரித்தபடி நகர்ந்தாள் ராகவி.
“சரி, சரி, வா ராகவி. பாவம் பையன், ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கார்.” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான் ராகவன்.
கல்யாண மண்டபத்தின் பக்கவாட்டில் இருந்த படிக்கட்டுகளில் ஏறி முதல் மாடிக்குப் போனார்கள். அங்கிருந்த ஹாலை கைக் காட்டியவன், “ப்ளூ ஷர்ட் போட்டு இருப்பார். போலீஸ், பேரு…” அதற்கு மேல் அவன் சொன்ன எதையும் அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
ஹாலை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள். “ஹேய் பாப்பா, சொல்றதை முழுசா கேட்டுட்டு போ” பின்னிருந்து கத்தினான்.
“அவர்கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கறேன். நீ கிளம்பு” அந்தப் பதிலை எதிர்பார்க்காதவன், புன்னகைத்தபடி வந்த வழியே திரும்பி போனான்.
‘கல்யாண வீட்ல, கல்யாணம் பேசன்னே இப்படி ஒரு செட் அப் வச்சு இருப்பாங்களோ?’ தனக்குள்ளே பேசிக் கொண்டு நடந்தாள். அங்கே ஹாலின் ஓரமாக ஒரு தம்பதிகள் நின்று பேசிக் கொண்டிருக்க, வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று கண்களைச் சுழற்றி தேடினாள்.
அந்த ஹாலின் இன்னொரு மூலையில் நின்றிருந்தான் அவன். காக்கி பேண்ட்டின் மேலே இளநீல நிற சட்டை அணிந்திருந்தான். அவன் சட்டையின் கையை மடித்து விட்டிருந்த விதமும், அவனது உடையும், பளபளத்த காலணியும், அவன் கல்யாணத்திற்கு வந்தது போலத் தெரியவில்லை.
ஏதோ கேஸ் விஷயமாகக் கிரிமினலை விசாரிக்க வந்தது போலிருந்தது. மாநிறம், அசாத்திய உயரம், அந்த உயரத்திற்குத் தகுந்த கச்சிதமான உடலமைப்பு, ஓட்ட வெட்டிய தலைமுடி, மேலுதட்டை மறைத்துக் கொண்டிருந்த அடர்த்தியான மீசை என ஒரு போலீஸிற்கான அனைத்து லட்சணங்களும் அவனிடம் அம்சமாய்ப் பொருந்தி போனது.
இடது காலை தூக்கி சுவரில் வைத்து, வலது காலை தரையில் ஊன்றி, யாரையோ எதிர்ப்பார்க்கும் தோரணையில், நொடிக்கொரு தரம் மணிக்கட்டை திருப்பி நேரத்தை கவனித்த படி நின்றிருந்தவனைப் பார்த்ததுமே அவளுக்குச் சிரிப்புத் தான் வந்தது.
காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனது பொறுமை காற்றில் கரைவதை அவளால் நன்கு உணர முடிந்தது. முகத்தின் எரிச்சல் அப்பட்டமாய்த் தெரிந்தது. அவனது செய்கைகள் அவளுக்குச் சுவாரசியம் கூட்ட, சில நொடிகள் நின்று அவனை நன்றாக உள்வாங்கி விட்டே அவனை நோக்கி நடந்தாள்.
அவனுக்கு மிக அருகில் சென்று, “ஹாய், எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்கன்னு நினைக்கறேன்” என்றாள்.
அதுவரை மொபைலுக்குத் தலையைக் கொடுத்திருந்தவன், அவளது குரலில் கலைந்து சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
தன்னைக் கண்டதும் அவன் முகத்தில் கடுப்பு, கோபம், எரிச்சல், வியப்பு, ரசனை என மின்னலாய் மின்னி மறைந்த உணர்ச்சிகளை அவள் மிகவும் ரசித்தாள்.
“ஹாய்” என்றாள் மீண்டும்.
“ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்க போல. ஆனா, இதுல என் தப்பு எதுவும் இல்ல. எனக்காக ஒருத்தர் இங்க காத்திருக்கிறதே, எனக்கு இப்பத் தான் தெரியும்” என்றாள் மெல்ல,
“எனக்கும்…” என்றான் கம்பீர குரலில்,
“என்ன?”
“இல்ல, எனக்காக.. இந்தக் கல்யாண வீட்டில் ஒரு பொண்ணு காத்திட்டு இருப்பான்னு, எனக்கும் இங்க வந்து தான் தெரியும்னு சொன்னேன்” அவனது விளக்கம் அவளைப் புன்னகைக்க வைத்தது.
என்ன தான் மண்டத்தின் முதல் மாடியில் இருந்தாலும் கூட, இசையும், இரைச்சலும் அவர்களின் காதில் அறைந்து இம்சித்தது.
“இந்தச் சத்தத்தில், இப்படி நின்னுட்டே ரொம்ப நேரம் பேச முடியாதுனு நினைக்கறேன். பக்கத்தில ஏதாவது காஃபி ஷாப் போகலாமா? அங்க கொஞ்சம் ஃப்ரீயா உட்கார்ந்து பேசலாம்” கண்களால் அந்த ஹாலை அளந்தபடி சொன்னான் அவன்.
அங்கே அமருவதற்கு இருக்கைகள் கூட இல்லை. எவ்வளவு நேரம் நின்று கொண்டே பேசுவது என்ற அவனின் எண்ணம் அவளுக்கும் புரிந்தது.
ஆனால், அவளின் சகோதரனை பற்றி அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை என்பதால், மெலிதாகப் புன்னகைத்து, “இல்ல, இங்கேயே நின்னு பேசலாம்” என்றாள்.
“ஓகே” என்று ஒரு அலட்சிய தோள் குலுக்களுடன் ஒத்துக் கொண்டான் அவன்.
முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன்,
“நீங்க, என்ன பண்றீங்க?” என்று அவளிடம் கேட்டான்,
“யூ சீ, நான் அடிக்கடி பொண்ணு பார்க்க போற ஆள் கிடையாது. போலீஸ் அப்படினாலே இங்க பாதிப் பேர் பொண்ணு கொடுக்க மாட்டான். என்னமோ தெரியல, உங்க வீட்ல சரின்னு சொல்லி இருக்காங்க.” என்றவன், சொல்ல வந்ததை இடையில் நிறுத்தி விட்டு,
“சாரி, இதான் என் பிரச்சனை. எனக்கு இந்த மாதிரி மீட்ல என்ன பேசணும், என்ன பேசக் கூடாதுன்னு தெரியல. நீங்க கேள்வி கேளுங்க, நான் பதில் சொல்றேன்” என்றான்.
“எனக்கும் இதெல்லாம் புதுசு தான்” என்றவள்,
“நான் ராகவி. வீட்டுக்கு ஒரே பொண்ணு. சட்டம் படிச்சிருக்கேன். ஆனா, வக்கிலா பிராக்டீஸ் பண்ணல. எங்களுக்குச் சின்னதா ஜவுளி கடை இருக்கு. “விசாலாட்சி சில்க்ஸ்” எங்க ஆயா தொடங்கினது. எங்க வீட்டுப் பக்கத்தில் தான் கடை, கலெக்டர் நகரில் இருக்கு. இத்தனை வருஷம் ஐயாவும், ஆயாவும் தான் பார்த்துக்கிட்டாங்க. இப்போ, நான் படிப்பை முடிச்சதும் கடையை முழுசா என் கையில் கொடுத்துட்டாங்க. நான் தான் பார்த்துக்கறேன்.”
“ஓ, அப்படியா?” என்று சிறு அதிர்ச்சியைக் காட்டியவன்,
“எங்க வீட்ல இது பத்தி, என்கிட்ட எதுவும் சொல்லலையே. நான், வேலைக்குப் போகாத பொண்ணா இருந்தா பெட்டரா இருக்கும்னு நினைச்சேன்” சிறிது தயக்கத்துடன் அவள் முகம் பார்க்காமல் சொன்னான் அவன்.
“ஓ, ஏன் அப்படி? வேலைக்குப் போற பொண்ணுங்க எந்த விதத்தில் குறைஞ்சு போய்ட்டோம்” கடுப்புடன் கேட்டாள் அவள்.
“அச்சோ, அப்படி இல்ல. நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை. எங்க வீட்டு சூழலுக்கு… என் வேலை அப்படி..”
தடுமாறியவன், இடக் கையால் தலை முடியை கோதிக் கொண்டான்.
“இல்ல, என் வேலையில நேரம், காலம் கிடையாது. நான் போலீஸ், தெரியும் தான?” என்று அவன் புருவம் உயர்த்த, அவள் குனிந்து அவனது காக்கி பேண்டையும், சூவையும் பார்த்தாள். அவளது பார்வையைக் கவனித்ததும், அவனையும் அறியாமல் புன்னகைத்தான்.
“சாரி, கல்யாணத்துக்கு வந்தே ஆக வேண்டிய சூழல். பொண்ணோட அப்பா என்னோட சீனியர் ஆபிசர் மட்டுமில்ல, அப்பாக்கு தெரிந்தவர் வேற, ஸ்டேஷனுக்குப் போனதுக்கு அப்புறம் தான் அப்பா கிளம்பி வர சொன்னார். அதான், அப்படியே யூனிஃபார்மோட வந்துட்டேன். கடைசி நிமிஷத்தில் சட்டையை மட்டும் தான் மாத்த முடிஞ்சது”
தர்மசங்கடமாகப் புன்னகைத்தான்.