பார்த்திபன் காதலி – 31 (1)

பார்த்திபனை அழைத்துச் செல்ல பிரபஞ்சன் வந்து விட்டான். காரில் ஏறும் முன் பார்கவியின் கையைப் பிடித்து நின்றான் அவன்.

“கூல் டவுன் பாரு. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். எங்க வீட்ல பேசிட்டு உனக்கு மெசேஜ் பண்றேன். ஓகே?” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான். அவனிடம் பேசுவதற்கு அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் கேள்விகளெல்லாம் பதிலாகி போனதொரு மனநிலையில் நின்றிருந்தாள்.

“பாரு” என்றான். நிமிர்ந்து பார்த்தாள்.

“முடிஞ்சா நைட் கால் பண்றேன். தூங்கிடாத” என்று கண் சிமிட்டினான். தூக்கமா? அது எங்கிருந்து வர போகிறது அவளுக்கு.

அவன் கரம் உயர்ந்து அவள் கன்னத்தை மென்மையாகத் தட்டியது.

“வரவா?”

“வாங்க” என்றாள். சட்டென்று அவன் அவளை நோக்கி வர, “என்ன?” என்றாள் குழப்பத்துடன்.

“நீதானே வர சொன்ன பாரு?” என்று முணுமுணுத்தான்.

சன்ன சிரிப்புடன், “நான் போயிட்டு வாங்கன்னு சொன்னேன்” என்றாள்.

“மார்னிங்தானே வந்திருப்பீங்க? போய் நல்லா ரெஸ்ட் எடுங்க.”

பார்கவியைச் சமாளிக்க என்னென்ன சாகசங்கள் செய்ய வேண்டி வருமோ என்று அவன் பயந்திருக்க, அவன் மனம் புரிந்து அவள் சம்மதித்ததில் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

“ரெஸ்ட்லாம் அப்புறம், முதல்ல வீட்ல போய் நம்ம விஷயம் பேசணும். பேசுறேன்” என்று அழுத்தமாகச் சொல்லி, அவளின் கையை அழுத்திக் கொடுத்து விடை பெற்றான்.

பார்கவி வீட்டினுள் வர, கூடத்தில் காவேரி பஞ்சாங்கத்தை எடுத்து வைத்து அமர்ந்திருந்தார்.

“ஏங்க, பாருப்பா” என்று கணவரை துணைக்கு அழைத்தார்.

“அவங்க சரின்னு சொன்னா இந்த மாசமே கல்யாணத்தை வச்சுக்கலாமா?” என்று முகூர்த்த நாள் பார்க்கத் தொடங்கினார்.

“காவேரி” என்று ரங்கராஜன் சிரிப்புடன் கடிய, “அய்யய்ய உங்க அளவுக்குலாம் எனக்குப் பொறுமை இல்ல சாமி” என்று கையை விரித்தார்.

“லவ் மேரேஜ் தானேங்க இதுக்கு ஜாதகம், பொருத்தம்லாம் பார்க்கணுமா என்ன?”

“பார்த்திபன் தம்பி அவங்க வீட்ல பேசிட்டு சொல்லட்டும். அவங்களுக்கு ஜாதகம் பொருத்தம் பார்க்கற பழக்கம் இருந்தா என்ன செய்யுறது?” என்று அவர் எதார்த்தம் பேச, “ம்க்கும் கல்யாணம் பண்ணிக்க வேண்டியவங்க மனசு பொருந்தினதுக்கு அப்புறம் வேறென்ன பொருத்தம் பார்க்கணும் இங்க?” என்று சடைத்துக் கொண்டார்.

“சரிதான். ஆனா அவங்க வீட்ல என்ன சொல்லுவாங்களோ?”

“அவங்க எதுவும் சொல்லாட்டியும் நீங்களே அவங்களுக்கு எடுத்து கொடுப்பீங்க போல” என்று காவேரி கோபமாகச் சொல்ல, “நான் இங்க நடக்கிறத பேசறேன். நீ என்னன்னா..” என்று அவரும் பதிலுக்கு முறைக்க, இருவருக்கும் நடுவில் வந்து நின்றாள் பார்கவி.

“ம்மா, என் மேல கோபம் இல்லையே?” என்று அவள் கேட்க, “என்னத்துக்குக் கோபம் வரணும்னு சொல்லு முதல்ல?” என்று கேட்டார் காவேரி.

“ம்மா”

“உனக்கு வராத தைரியம் மாப்ளைக்கு வந்திருக்குன்னு நானே சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன். இதுல என்னைய கோபப்படச் சொல்றா உங்க பொண்ணு. இப்போ மாப்ள மட்டும் வரலைன்னா அவ்ளோதான். நானே ஏதாவது செஞ்சு அவர ஊருக்கு வர வச்சுருப்பேன். ரெண்டு வருஷம்லாம் அவரா வரட்டும்னு விட்டுட்டு இருந்திருந்தா அவ்ளோதான். அவங்கம்மா அவருக்கு.. வேணாம். அந்தப் பேச்சு எதுக்கு இப்போ? நாம கல்யாணத்துக்கு நாள் பார்ப்போம்.” என்றார்.

“எப்படிம்மா.. நான் எதுவும் உங்ககிட்ட சொல்லலையே”

“நீ சொல்லணும்னு அவசியம் இல்ல பாரும்மா.” என்று மகளின் கன்னத்தில் தட்டினார். அப்பாவின் காலடியில் அமர்ந்தாள் பார்கவி. மகளின் தலைக் கோதி கொடுத்தார் அவர்.

“ஏங்க, நம்ம ஜோசியருக்குப் போனை போட்டு இந்த மாசத்துலயே ஒரு நல்ல முகூர்த்த நாள் குறிச்சி குடுக்கச் சொல்லுங்க. அப்படியே நம்ம மண்டபத்து மேனேஜருக்குப் போனை போட்டு நம்ம சொல்ற தேதியில மண்டபம் புக்காகி இருக்கான்னு பார்த்துச் சொல்லச் சொல்லுங்க” என்று அடுத்தடுத்த ஆணைகளைப் பிறப்பித்தார். அப்பாவை நிமிர்ந்து நோக்கினாள் மகள். அவரும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்களின் மண்டபம் அடுத்த மூன்று மாதங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டிருந்ததை இருவருமே அறிவர்.

ரங்கராஜன், “முதல்ல மாப்ள பேசிட்டு சொல்லட்டும். அப்புறமா ஜோசியர் கிட்ட பேசுவோம்” என்று சொல்ல, “உங்களை நம்பினா காரியம் ஆகாது. போனை கொண்டாங்க இப்படி” என்று கணவரிடம் இருந்து அலைபேசியைப் பிடுங்கினார்.

“காவேரி, காரியம் கூடி வரும் போது காத்திருக்கறதுல தப்பில்லம்மா. நீ பாட்டுக்கு ஜெட் வேகத்துல போறியே. மாப்ள அம்மாவ ஒரு நிமிசம் யோசிச்சியா? அவங்களோட இத்தன நாளா பேசி பழகிட்டு, நம்ம பொண்ணு விஷயத்தை நீ நேரடியா பேசலன்னா, அவங்க என்ன நினைப்பாங்கன்னு நீ யோசிக்கவே இல்ல பாரு” என்று அவர் சொல்லவும், “ஆமாங்க. நான் அவங்களை மறந்தே போயிட்டேன் பாருங்க. இன்னைக்கு மண்டபத்துல வச்சு கூட என்கிட்ட பார்த்திபன் யாரையோ லவ் பண்றானாம். அதான் ஊருக்கு வந்துட்டான். எந்தப் பொண்ணை லவ் பண்றான்னு தெரியலன்னு புலம்பிட்டு இருந்தாங்க” என்றார்.

“இப்போ அந்தப் பொண்ணு நம்ம பார்கவின்னு தெரிய வந்தா..”

“அச்சோ, ஆமால்ல. அவங்க என்ன சொல்லுவாங்களோ தெரியலையே” என்று கையைப் பிசைந்தார்.

“அவங்ககிட்ட இத நானே சொல்றதுதானே சரியா இருக்கும்? இல்லன்னா கோபிச்சுக்கப் போறாங்க. நான் அவங்களுக்குப் போன் பண்றேன்” என்று தன் அலைபேசியைத் தேடி எடுத்து சத்யபாமாவை அழைத்தார்.

இரண்டு முறை அழைத்தும் அவரின் அழைப்பை சத்யபாமா ஏற்கவில்லை.

காவேரிக்கு ஒரே கவலையாகி போனது. பார்கவியின் மனத்திலும் சின்னதாக உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது.

அவர்கள் திருத்தணி கோவிலுக்குச் சென்ற போது சத்யபாமா அவளிடம் மிகவும் நன்றாகப் பேசினார். மகனுக்குப் பார்த்த பெண்ணைப் பற்றிச் சொல்லி புகைப்படம் கூட அவளிடம் காட்டினாரே. அன்றைக்கு இருந்த சூழலில் அவள் ஒன்றுமே சொல்லியிருக்கவில்லை. இப்போது அதுவே தவறாகப் போகுமே என்ற எண்ணம்தான் அவளுக்கு.

“அப்பா இருக்கேன் பாரும்மா. நீ எதுக்கும் கவலைப்படாத” என்று அவளுக்குத் தைரியம் சொன்னார் ரங்கராஜன். காவேரி அவரின் இஷ்ட தெய்வங்களுக்கு எல்லாம் வேண்டுதலை வரிசையாக வைத்துக் கொண்டிருந்தார்.

அங்கே பார்த்திபன் வீட்டினுள் நுழைந்த மறுகணம், அதற்காகவே காத்திருந்தது போல அவனைப் பிடித்துக் கொண்டார் சத்யபாமா.

“வாப்பா பார்த்திபா. இப்பத்தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா உனக்கு?” என்று கோபமாகக் கேட்டார்.

“ம்மா..”

“அம்மான்னு நா ஒருத்தி இருக்கறது உனக்கு ஞாபகம் இருக்கா? அப்படி ஞாபகம் இருந்தா உன் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் செய்வியா?”

“இப்ப என்னம்மா செஞ்சுட்டேன்னு இப்படி நிக்க வச்சுக் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க நீங்க?”

“இன்னும் என்ன பார்த்திபா செய்யணும் நீயி? அமெரிக்காக்கு ரெண்டு வருசத்துக்கு வேலைக்குப் போய்ட்டு இப்படி ஏழே மாசத்துல வந்து நிக்கற. நான் பார்த்த பொண்ணை வேணாம்னு சொல்லிட்டு.. நீயே யாரையோ விரும்புறேன்னு சொல்லுற. இன்னைக்கும் வீட்டுக்கு வந்த கையோட எங்ககிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லாம, பிரியதர்ஷினி பொண்ணு வளைகாப்புக்கு வந்து நிக்கற‌. அங்கேயும் எங்க கூட இருக்காம பாதியில காணாம போயிட்ட. எங்க போற, எப்போ வருவன்னு என்கிட்ட ஒன்னும் சொல்லல. எங்க அந்தப் பொண்ணு வீட்டுக்கு போயிட்டு வர்றியா நீ?” என்று சரியாகக் கணித்துக் கேட்டார்.

“என்னைப் பேசவே விடாம நீங்களே பேசிட்டு இருந்தா எப்படிம்மா?”

“அப்போ அங்கதான் போயிட்டு வர்ற இல்ல? பொண்ணு யாரு? சென்னை பொண்ணு தானா?” என்று அவர் கேட்க, மார்பின் குறுக்காகக் கையைக் கட்டி, அவரையே பார்த்து நின்றான்.

“எல்லாம் உன் இஷ்டம் தான்னா நாங்க எதுக்கு இருக்கோம்?” என்று கோபமாகக் கேட்ட சத்யபாமாவின் கண்கள் கலங்கி விட்டன.

“ம்மா, என்னம்மா நீங்க?” என்று அவன் அவரை நெருங்க, “போ பார்த்திபா” என்று முறைத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்தார்.

அவரின் பக்கத்திலேயே அவனும் அமர்ந்து விட்டான். சத்யபாமா வேகமாக முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டார்.

பார்த்திபன் புன்முறுவலுடன், “அம்மா” என்று அழைக்க, அப்போது வெளியில் சென்றிருந்த அவனது அப்பா துரைராஜ் வீடு வந்தார்.

error: Content is protected !!
Scroll to Top