அடுத்து வந்த நாட்கள் அவர்கள் இருவரும் வேலையில் மூழ்கிப் போக, பெற்றோர் அவர்களின் திருமண வேலைகளைப் பார்த்துக் கொண்டார்கள். இருவரும் அவசியத்திற்கு மட்டுமே விடுமுறை எடுத்தார்கள்.
இந்த இடைப்பட்ட நாட்களில் மோனிகா, பிரதீப் திருமணம் நடந்து முடிந்திருந்தது. திருமணத்திற்குப் பிறகும் புகைப்படம் எடுக்கும் ஒரு நிகழ்வை நடத்தினார்கள் அவர்கள். வெற்றி, வேதா இருவரும் இந்த முறையும் அவர்களுக்குத் துணையாகச் சென்றனர். ஆனால், தங்களைத் தனியாகப் புகைப்படம் எடுக்கப் பிரபுவை அனுமதிக்கவில்லை அவர்கள்.
அங்கே இயல்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர்கள் இருந்தார்கள். ஆனால், பிரத்தியேகமாக ஃபோட்டோ ஷூட் என்று எதையும் நிகழ்த்தவில்லை அவர்கள். இருவருக்கும் அதில் பெரிதாக விருப்பமில்லாததே காரணம்.
வேதா இப்போது வங்கிப் பணியில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தாள். யாரும் குற்றம் குறைகள் சொல்ல முடியாத அளவு திறம்பட வேலை செய்தாள்.
வெற்றிக்கு அன்று வங்கியில் நிறைய வேலைகள். மாணவர்கள் இருவருக்குக் கல்விக் கடன் வழங்க வேண்டியிருந்தது. அவனுக்கு எப்போதும் நிறைவு தரும் பணி அது.
“எஜுகேஷன் லோன்” என்று நினைக்கும் போதே அவனின் வேதாவின் நினைவு வர, புன்னகைத்தான் வெற்றி. கைகளை மேலே உயர்த்திச் சோம்பல் முறித்து, அவன் கண்ணை மூடித் திறக்க, எதிரே அவனின் காதல் பெண்ணே நின்றிருந்தாள்.
“எம்மாடி வேதா. செல்லமே. நீ தானா?” அவன் சந்தேகமாகக் கேட்க, “ஹாய் மாண்புமிகு மேலாளர் சார்” கண் சிமிட்டி கிண்டலாகச் சொன்னாள் வேதா. சிரித்தான் வெற்றி.
“வேலையா இருக்கீங்களா?” அவள் கேட்க, “முடிஞ்சது. கிளம்பணும்” என்றவன் அவளை யோசனையாகப் பார்த்தான்.
இந்த இரண்டு மாதங்களில் அவளின் அன்பில்தான் எத்தனை மாற்றம்? அவன் மேல் காதலே இல்லை என்றவள், இப்போது மழையைப் போல அவன் மனத்தை நனைக்கிறாள்.
அவளின் அன்பும் மழைப் போன்றதுதான். மெல்லிய தூறலாகத் தொடங்கி, இப்போது அடை மழையாகப் பொழிகிறாள். ஆனாலும், அதைக் காதலென்று உணரவில்லை அவள். அப்படியே உணர்ந்தாலும் அவனிடம் வெளிப்படுத்தவில்லை.
எல்லாவற்றையும் வார்த்தைகளாக்க வேண்டுமா என்ன? அன்பென்பது சொல் அல்ல, செயல் என்பது அவனது நம்பிக்கை. அதனால், அவளின் அன்பின் கரைந்தான் அவன்.
அவளுக்குத் திருப்பி இரு மடங்காக அந்த அன்பைக் கொடுக்க அவன் தயங்கியதுமில்லை.
இருபது நிமிடங்களில் அவன் வேலை முடித்து, “வேதா, போலாம்” என்று சொல்ல, இருவரும் வெளியில் வந்தார்கள்.
“காஃபி சாப்பிடலாமா?” வேதா கேட்க, “கண்டிப்பா. எந்தக் கடை போகட்டும்? இல்ல ஹோட்டல் போகலாமா?” எதிர்க்கேள்வி கேட்டான் வெற்றி.
“வீட்டுக்குப் போகலாம்” என்று அவள் பதில் சொல்ல, மறுக்கவில்லை வெற்றி.
அவர்கள் நேராக வேதாவின் வீடு சென்றனர்.
இருவருக்குமான காஃபியுடன் பால்கனி சென்று நின்றனர். நகரம் விளக்கு ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அவர்களுக்கு நடுவே இருந்த இடைவெளியிலும் மௌனத்திலும் அர்த்தம் நிறைந்திருந்தது. ஒருவருக்கொருவர் தேவையான அமைதியை தந்தபடி காஃபியை அருந்தினர்.
காஃபி காலியான பின்னும் நீடித்தது மௌனம்.
“என்ன திடீர்னு காஃபி டேட்?” வெற்றி கேட்க, வேதா மெல்ல திரும்பி அவன் கண்களைப் பார்த்தாள்.
“காஃபி அருந்திய பின்னும் நீடிக்கும் தூரத்தை காதல் எனவும் கொள்ளலாம்” மீண்டும் குமரகுருபரனின் வரிகளை மென்மையாய் உச்சரித்துத் தன் காதலை அவள் சொல்ல, அவன் கண்களில் மின்னியது காதல் நட்சத்திரம்.
“எம்மாடி வேதா” என்றவன் அவளை இழுத்து அணைத்திருந்தான்.
வேதா பணி மாற்றல் பெற்று வேறு வங்கிக் கிளைக்குச் சென்றதில் இருந்து வெற்றியை அதிகம் தேடினாள். அத்தனை வேலைகளுக்கும் மத்தியில் அவள் மனதும், கண்களும் அவனைத் தேடியது.
அவளுக்குத் தூரம் நெருக்கத்தைத் தந்தது. பிரிவு, பிரியத்தைப் பூக்க செய்தது. அவர்களுக்கு நடுவில் விழுந்த இடைவெளிதான் அவர்களை இணைத்தது.
“செல்லமே. அப்போ நம்மது லவ் மேரேஜ் தானே?” அவன் சந்தேகம் கேட்க, அவன் மார்பில் சிரித்தாள் வேதா. அவனுக்குச் சிலிர்த்தது. அவளை மேலும் தன்னோடு இறுக்கினான் வெற்றி.
வெற்றி விரும்பியபடியேதான் இப்போது அனைத்தும் நிகழ்ந்தது. வானமாமலை யாரிடமும் மறைக்காமல் மகளுக்குக் காதல் திருமணம் என்று அறிவித்தார்.
அவர்களின் திருமண வேலைகள் அசுர வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.
திருமணப் பத்திரிக்கை விநியோகிக்கும் வேலைகளைக் கூடப் பெற்றோரே பார்த்துக் கொண்டனர்.
திருமணத்திற்குப் பின் இருவரும் சேர்ந்து வசிக்க அம்பத்தூரில் வீடு பார்த்து, பால் காய்ச்சினார்கள். அந்த வீடு அவர்களின் வரவிற்காகக் காத்திருந்தது. திருமணத்திற்கு ஒரு வார காலம் இருக்கும் போதே, மகளின் வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் அங்கே கொண்டு வந்து இறக்கி விட்டார் வானமாமலை.
மறுநாள் அதிகாலையில் திருமணம் என்று வந்து நின்றது காலம்.
இரவு இரு குடும்பங்களும் கூடியிருந்த சபையில் நிச்சய ஓலை வாசித்து, இருவர் வீட்டு முறைப்படி நிச்சயதார்த்தம் செய்தனர்.
அதன் பின் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடாகி நடந்தும் முடிந்திருந்தது.
வேதவர்ஷினி, வெற்றிவேந்தன் முகங்களில் மகிழ்வும் நிறைவும் நிறைந்திருந்தது.
இருவரின் குடும்பத்தினரும் முன்னர் நடந்த அனைத்தையும் மறந்து உறவாடிக் கொண்டிருந்தார்கள்.
இரவு வரவேற்பு நிகழ்ச்சி முடியவே, பத்து மணிக்கு மேலாகி இருந்தது.
அதன் பின்னர் மணமக்கள் உணவருந்தி, நண்பர்கள் செய்த கலாட்டாக்களில் இருந்து தப்பித்து அவரவர் அறைக்கு வந்தனர்.
வேதவர்ஷினி இன்னமும் வரவேற்பிற்காக அணிந்திருந்த புடவையில் தானிருந்தாள்.
“வேதா, அம்மா ஹெல்ப் பண்ணவா? சீக்கிரம் ட்ரெஸ் மாத்திட்டு படு மா. காலைல நாலு மணிக்கு எழுந்துக்கணும்” ஜெயலட்சுமி மகளிடம் சொல்ல, அவளோ திரும்பி அண்ணியைப் பார்த்தாள்.
“என்ன வேதா, நான் ஹெல்ப் பண்ணவா?” ஷாலினி கேட்க, மறுப்பாகத் தலையசைத்தாள் வேதா.
ஷாலினி அவளை நெருங்கியதும், “எனக்கு அவரைப் பார்க்கணும்” என்று அவளிடம் மெல்ல கிசுகிசுத்தாள் வேதா.
“ஆத்தாடி. இப்பவா? மண்டபம் முழுக்க ஆளுங்க இருக்காங்களே. ஆளாளுக்குக் கேள்வி கேட்பாங்க” ஷாலினி முணுமுணுக்க, “என்னத்தா வேணும்?” என்று அவர்களிடம் கேட்டார் முத்துமாரி.
“அப்பத்தா…” என்றழைத்து வேதா புன்னகைக்க, பத்து நிமிடங்களில் அவள் நினைத்தது நடந்திருந்தது.
இங்கிருந்து வேதாவை, முத்துமாரி வெளியில் அழைத்துச் செல்ல, மணமகன் அறையில் இருந்த வெற்றியை வெளியில் கூட்டி வந்து விட்டுச் சென்றார் அய்யனார்.
“சீக்கிரம் பேசிட்டு வரணும்” முத்துமாரி கண்டிப்புடன் சொல்ல, வேதா அப்பத்தாவின் கன்னத்தில் முத்தமிட்டு சிரித்தாள்.
“பத்தே நிமிஷம்” சொல்லி விட்டு, சுற்றும் முற்றும் அவள் பார்க்க, “ஆச்சி, நீங்க போங்க. நான் நிக்கறேன்” என்றாள் ஷாலினி.
“இட்ஸ் ஓகே. விடிஞ்சா எங்களுக்குக் கல்யாணம். யாரு என்ன சொல்லப் போறாங்க?” என்று கேட்டான் வெற்றி.
“நீ வா, வேதா” வேதாவின் கைப் பிடித்து அவன் முன்னே நடக்க, முத்துமாரி வெட்கச் சிரிப்புடன் ஷாலினியை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.
இருவரும் திருமண மண்டபத்தின் மொட்டை மாடியில் இருந்தார்கள்.
அங்கே சுவரை ஒட்டி மேலே ஷீட் போடப்பட்டிருக்க, இருவரும் அந்தச் சுவரில் சாய்ந்து மறைவில் நின்றிருந்தனர்.
“வேதா செல்லமே, என்ன?” வெற்றி கேட்க, அவனையே இமைக்காமல் பார்த்தாள் வேதா.
“விடிஞ்சா, வேதவர்ஷினி வெற்றிவேந்தன். குறிலும், நெடிலும் ஒன்றாகப் போகுது.” கண் சிமிட்டி குறும்பாகச் சொன்னான் வெற்றி.
அதைக் கேட்டதும் அவள் அணிந்திருந்த புடவையின் நிறத்திற்கு மாறியது அவள் கன்னங்கள்.
“வெட்கமா செல்லமே?” அவனின் கேள்வியில் இன்னும் வெட்கம் வர, போலி கோபத்துடன் அவனை இடித்துக் கொண்டு நின்றாள்.
அவள் இடித்ததில் நிலை தடுமாறி பிடிமானத்திற்கு அவளையே பிடித்தான் வெற்றி. அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து, சரிந்து, அணைத்து நேராக நிற்பதற்குள் சிரிப்பில் சிதறினார்கள்.
“இது எப்படி நடந்தது வெற்றி?” வேதா சந்தேகமாகக் கேட்க, “நல்ல நேரம் பார்த்துச் சந்தேகம் கேட்ட போ” என்று சலித்தான் வெற்றி.
“பிரியங்கள் பேசியதால்.. நீயாகிட வந்தேன்” அவளின் பிடித்தமான புத்தகங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவன் காதலை மீண்டும் சொல்ல, “ஆஹா.. இலக்கியம்.. காதல் பேசுது” சிரிப்பும், ரசனையுமாகச் சொன்னாள் வேதா.
“எங்க இப்போ கேளுங்க பார்ப்போம்? எப்படி? நான், நீயாக முடியும்னு?” தலையசைத்து, புருவங்களை உயர்த்தி, உதடு பிதுக்கி அவள் கேட்க, அவன் கண்கள் ரசனையுடன் அவள் முகத்தில் ஊர்வலம் சென்றது. பட்டு மறைக்காத அவளின் இடையில் கைக் கொடுத்து அவளைத் தனக்கருகில் இழுத்தான் வெற்றி.
அவன் மேல் முழுமையாக மோதி நின்றாள் வேதா.
வெற்றியின் மறுகரம் அவளின் கழுத்தில் பதிந்து வருட, “வெ.. வெற்றி..” என்று திக்கினாள் வேதா.
கழுத்தை வருடிய அவன் கரம் அவளின் கூந்தலில் நுழைந்து, கோதியது. தீயின் தகிப்பையும், பனியின் குளிர்ச்சியையும் ஒன்றாக உணர்ந்தாள் வேதா.
“வேதா..” அந்த மோக குரலில் மெல்ல கண் மூடினாள்.
“என்ன கேட்ட?” அவளின் உதட்டை உரசியது அவன் கேள்வி.
“எப்ப..டி..” அவளின் கேள்வியை விழுங்கி பதில் சொல்லத் தொடங்கினான். அவளின் இதழ்கள் அவன் வசமாகியிருந்தது. இடையில் இருந்த அவன் கரம் அழுத்தம் கொடுத்து அணைத்தது. வேதா மொத்தமாய் அவன் வசமாகி இருந்தாள்.
இருவரும் ஒரே மூச்சுக் காற்றைச் சுவாசிக்க, அவனை நிறைத்தது அவள் வாசம். அவளுக்கு இதழ் முத்தத்தின் வழியே இதயத்தைக் கடத்தினான் வெற்றி.
வேதாவிற்கு உடல் சிலிர்த்தது. உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைக்குப் பரவிய சில்லிப்பில், சிலிர்ப்பில், “வெற்றி..” என்று மோகமாய் அவன் இதழ்களுக்குள் உச்சரித்தாள். மீண்டும் மீண்டும் அவள் இதழ்களில் மென்மையாய் முத்தமிட்டு, “இப்படித்தான், நான் நீயாவது. நாளைக்கு நீ.. நானாவது” என்று அவன் சொல்ல, அவள் முகத்தை நிறைத்தது நாணம்.
“வெற்றி…” அந்தக் காதலான அழைப்பில் அவளின் முகம் உயர்த்தி, கண்களில் முத்தமிட்டு, “நீயென்பது நீ நீயல்ல. இனி நானே” என்றான் வெற்றிவேந்தன். அவன் மார்பில் சாய்ந்து அதை ஆமோதித்தாள் அவனின் காதல் பெண் வேதவர்ஷினி.
“ஆமா தானே?” அவன் கண்ணடித்துக் கேட்க, கண்ணிமைக்காமல் அவனையே பார்த்தாள் வேதா. அந்தக் கண்களில் மென்மையாய் முத்தமிட்டான் வெற்றி. அந்தக் கணம் அவனைப் பார்த்த அவள் கண்களில் காதல் முழுமையாய் இருந்தது.
“வேதாவுக்குப் பேச்சு மறந்து போச்சு” நெற்றி முட்டி, இதழ்களில் தடம் பதித்து நின்றவனை அவளுக்கு நிரம்பப் பிடித்தது.
இப்பொழுது, அவளுக்கு அவனை மிக மிகப் பிடித்திருந்தது.
நிறைந்தது!
சுபம்!