Udhaya Ragam – 2 (1)

அந்த ரிசார்ட்டில் அவர்களுக்காக இரண்டு அறைகள் புக் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மூவரும் ஒரே அறையில் தான் இருந்தார்கள். மற்றொரு அறையை இரவு உறங்குவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சுஹாசினி சொல்ல, மற்ற இருவரும் சம்மதமாகத் தலையசைத்தனர்.

மெல்ல பேசிக் கொண்டே, பெட்டியில் இருந்த துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்தாள் சுஹாசினி.

“சுஹா, நான் கொஞ்சம் நேரம் வெளில நடந்துட்டு வரவா?” அவளருகே வந்தவள் தயங்கியபடி கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்தாள் சுஹாசினி.

“கொஞ்ச நேரம் படுத்து எழுந்திரு. உன் முகம் பார்க்கவே அவ்வளவு டையர்ட்டா தெரியுது” என்றாள் கரிசனையுடன்.

“நைட் எல்லாம் நல்லா தானே தூங்கினேன். இப்ப காலையிலும் தூங்கனுமா?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள் அவள்.

“இயர்லி மார்னிங் ஃப்ளைட். அதனால் காலையில சீக்கிரமா எழுந்துட்டோம் இல்லையா?. அதான் சுஹா தூங்க சொல்றா. பட், உனக்குச் சோர்வாக இல்லனா நடந்திட்டு வாயேன்” என்றாள் பனிமலர்.

“நானும் கூட வரவா?” என்று பனிமலர் கேட்க,

“இல்ல, நான், நீங்க சொன்ன மாதிரி கொஞ்ச நேரம் தூங்கறேன்.”

காலை உணவை அறைக்கே வரவழைத்து அமைதியாக உண்டனர் மூவரும். உணவை முடித்ததும் மற்ற இருவரும் பெட்டியை பிரித்து அடுக்கும் வேலையில் இறங்க, அவள் சென்று படுத்து விட்டாள்.

மாலை வரை அடித்துப் போட்டது போல் உறங்கியவளை தோழிகள் தான் உலுக்கி எழுப்ப வேண்டியிருந்தது.

மெல்ல சோம்பல் முறித்து எழுந்தவள், குளித்து உடை மாற்றி வந்தாள். மாலை டீயுடன், சுடசுட மங்களூர் போண்டாவை உண்டு விட்டு, “கொஞ்ச நேரம் பீச்சில் நடக்கலாம்” என்ற அவளின் கோரிக்கையை இப்போது மறுக்கத் தோழிகளிடம் காரணமில்லாமல் போனது.

சிறிது நேரம் அலைகளுடன் அளவளாவினாள். உடல் சோர்வோ, மனச் சோர்வோ எதுவோ ஒன்று அவளை, அலைகளில் நிற்க முடியாமல் தவிக்க வைத்தது. தோழிகளுக்குக் கைக் காட்டி விட்டு, ரிசார்ட் வளாகத்தினுள் நுழைந்து, அங்கிருந்த நீச்சல் குளத்தைச் சுற்றிப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றில் சென்று அமர்ந்தாள்.

நீல வானத்தையும், அத்தோடு இணைந்து எல்லையில்லாமல் தளும்பி நின்ற கடலையும் விழியெடுக்காது பார்த்திருந்தாள். கடல் அலைகளைப் போலக் கொந்தளித்துக் கொண்டிருந்த அவளின் மனம், அந்த அலைகளைப் பார்த்தே சாந்தமாகும் விசித்திரத்தை எண்ணியவளின் இதழ்களில் மென்நகை வந்து அமர்ந்தது.

“என்ன தனியா உட்கார்ந்து சிரிச்சுட்டு இருக்கீங்க?” என்ற குரலில் சட்டென்று திரும்பி பார்த்தாள். காலையில் சந்தித்த ராஜா நின்றிருந்தான்.

“உங்க அக்காவையும், தங்கையையும் எங்க?” என்றான். அவள் கண்களைச் சுருக்க, “உங்க தோழிகளைக் கேட்டேன்” என்றான்.

“என்ன வேணும் உங்களுக்கு?” அவள் எதிர்பார்த்ததை விட மிகக் கடினமாக வந்து விழுந்தது கேள்வி.

“எனக்கு எதுவும் வேணாம் ரோஜா. எல்லோருக்கும், எல்லோரிடத்திலும் தேவைகள் இருக்கறதில்ல. தேவைகள் நிமித்தம் பழகுறதும் இல்ல. உங்களைப் போலவே, கால் நீட்டி, வானம் பார்த்து, அமைதியா உட்காரணும் போல இருந்தது. அவ்வளவு தான். வேற காரணங்கள் ஏதும் இல்ல.” நிதானமாகச் சொன்னான்.

வாய் வார்த்தையாக ஒன்றும் சொல்லாமல் கையைக் கடலை நோக்கி நீட்டினாள் அவள்.

அங்கே கடற்கரையில் குழந்தைகளுடன், குழந்தையாய் குதித்து ஆடிக் கொண்டிருந்தாள் சுஹாசினி. அவர்களுடன் இரு குடும்பங்கள் இணைந்திருந்தன. அவர்களின் குழந்தைகளுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் அவள். அதைக் கரையில் நின்று விடியோவாகப் பதிவு செய்து கொண்டிருந்தாள் பனிமலர். ஓடிச் சென்று மொபைலை பிடுங்கி தூர எறிய வேண்டும் போலிருந்தது அவளுக்கு. கடந்த வாரம் முழுவதும் ஒரு வீடியோவால் சுஹாசினி பட்ட அவமானம் அவளுக்குத் தானே தெரியும்.

மணப்பெண் திருமணத்தை மணமேடையில் வைத்து மறுத்தது, பெரிய பிரேக்கிங் நியூஸ் என்று பெயர் செய்து கொண்டு ஒரு செய்தி தொலைக்காட்சி விடாமல் ஒளிபரப்பினார்களே. போதாததற்கு ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியூப் என்று அங்கேயும் ஒரு சுற்று வலம் வந்தது அந்த வீடியோ.

அவள் செய்தது தவறு தான். ஆனாலும்…

எவனோ வேலையில்லாதவன் எடுத்த வீடியோவை, வெட்டியாய் பொழுதை கழிக்கும் பலர் பார்க்க, நிம்மதி போனது என்னமோ இரண்டு குடும்பங்களுக்கு மட்டும் தான்.

சுஹாசினி எளிதில் உடைந்து போகும் குணம் கொண்டவள் அல்ல, முதலில் அவளே அந்த வீடியோவை பார்த்து சிரிக்கவே செய்தாள். ஆனால், இரண்டே நாட்களில் சுற்றி இருந்தவர்களின் கேலிகளும், கேள்விகளும் அவளை வாயடைக்க வைத்தது. மரவட்டையாகத் தனக்குள் சுருண்டு கொண்டாள்.

“அவங்க குழந்தைகளோட விளையாட தானே செய்யறாங்க. அதை மல்லி வீடியோ எடுக்கறதில தப்பில்ல. ஃப்ரீயா விடுங்க” சட்டென்று அவனைத் திரும்பி பார்த்தாள் அவள்.

“இல்ல, உங்க கண்ணுல பயமும், கவலையும் தெரிஞ்சது. அதான் சொன்னேன்” என்றான்.

“அப்படியே நீங்க காலையில் சொன்னதும் ஞாபகம் வந்தது. தாமரை அவங்க வீடியோ பத்தி சொன்னீங்களே” என்றபடி, அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் அவன்.

அவள் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

“ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?” என்று அவன் கேட்க, “அது கேள்வியைப் பொறுத்து இருக்கு” என்றாள் அவள்.

அவன் முகத்தில் இளஞ்சிரிப்பு தவழ, “இல்ல நீங்க சொன்ன காரணம், எனக்கு இப்ப நினைச்சாலும் நம்ப முடியாததா இருக்கு. அதென்ன சோகத்தைக் கொண்டாடுறது?” என்று கேட்டான் அவன்.

“நம்ப முடியலையா? ஏன்? என்னைப் பார்த்தா பொய் சொல்ற மாதிரியா இருக்கு?”

“அச்சோ இல்லைங்க. பொதுவா எல்லோரும் சந்தோஷத்தை கொண்டாடுவாங்க. நீ.. நீங்க துக்கத்தை, சோகத்தைக் கொண்டாட வந்திருக்கிறது…” தயக்கத்துடன் நிறுத்தினான் ராஜா.

“அது உண்மை தான். எல்லோரும் சந்தோசத்தைத் தான் கொண்டாடுவாங்க. சோகத்தை, துக்கத்தை, கோபத்தைப் பொதுவா நம்ம மனசுக்குள்ள போட்டு பூட்டி வைக்கத் தான் முயற்சி செய்வோம். ஒவ்வொரு விஷயத்தையும் உள்ளப் போட்டு அழுத்தி, அழுத்தி பின்னாடி ஒரு நாள் அந்த அழுத்தம் தாங்காம, மனசு வெடிச்சு நம்மையும், நம்ம சுத்தி இருக்கறவங்களையும், காயப்படுத்திடுவோம். அது தான் நாங்க அப்பப்போ பிரச்சினைகளைச் சரி செய்ய டிரை பண்றோம்” நீல வானத்தைப் பார்த்தபடி, நீளமாய்ச் சொல்லி முடித்தாள் ரோஜா.

“என்ன பண்ணுவீங்க?”

“பிரச்சனைக்குத் தீர்வா?” என்று அவள் கேட்க,

“ஆமா” என்றான்.

“அட நீங்க வேற சார், நான் என் பிரச்சினையைச் சொல்லி அழ, என்னைச் சமாதானப்படுத்தி, என் தோழிகள் எனக்கு ஆறுதல் சொல்லி, பிரச்னைக்குத் தீர்வு யோசிச்சு சொல்லுவாங்கன்னு நினைச்சிங்களா?” என்றாள் சிரிப்புடன்,

“அப்படி இல்லையா?” என்றவனுக்கும் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

“இல்லவே, இல்ல.” என்று தலையை வேகமாக அசைத்தவள், “முதல்ல தெளிவா கேள்வி கேட்டு என்ன பிரச்சினை, யாரால வந்தது? யார் கூட.. இதெல்லாம் விசாரிப்பாங்க. அப்புறம் கிண்டல் பண்ணி கெக்க பிக்கனு சிரிப்பாங்க.” குரலில் சிரிப்பு வழிய சொன்னாள்.

“உயிர் தோழிகள் எதுக்கு இருக்காங்க சொல்லுங்க? நம்மையும் நம்ம பிரச்சினைகளையும் பார்த்துச் சிரிக்கத் தான். அதுக்கு அப்புறம் இவங்களையே சமாளிக்கறேன், பிசாத்து இந்தப் பிரச்சினை எல்லாம் என்ன சுண்டக்கான்னு ஈஸியா ஹேண்டில் பண்ணிடுவேன்” என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் சிரிக்க ஆரம்பித்திருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top