அதுவரை முதிர்ந்து தெரிந்த அவன் முகம் அச்சிரிப்பில் இளமையாய், கவர்ச்சியாகத் தெரிய, கண்ணசைக்காமல் அவனைப் பார்த்திருந்தாள் அவள்.
“சாரி, சாரி. தப்பா எடுத்துக்காதீங்க. வேணும்னு சிரிக்கல. நீங்க சொன்னதும் சிரிப்பு, தானா வந்திடுச்சு” இப்போதும் சிரித்துக் கொண்டு தான் சொன்னான்.
“இட்ஸ் ஓகே” என்றாள் அவள்.
“மனதும், மூளையும் அழுத்தத்தில் இருக்கும் போது, பெரும்பாலும் சரியான முடிவெடுக்க மாட்டோம். இல்லையா? கொஞ்சம் சிரிச்சு சரியானதும், மனசு தானா பிரச்சனைக்குத் தீர்வு காண தொடங்கிடும். பல நேரம் சரியான தீர்வுகளை ப்ரெண்ட்ஸும் சொல்லுவாங்க. எனக்கும் சரின்னு பட்டா, அவங்க கொடுக்கற அறிவுரையை எடுத்துக்கவும் செய்வேன்” என்று இப்போது தீவிரமான குரலில் சொன்னாள் அவள்.
“புரிஞ்சுது” என்று புன்னகைத்தான் அவன்.
அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமாய் அமர்ந்திருந்தனர் இருவரும்.
காற்றும், பறவைகளும் சலசலத்து பேசிக் கொண்டிருந்தன.
“என்ன பிரச்சனை?” என்றான் பட்டென்று, பறவைகளின் ஆலாபனையில் மெய் மறந்திருந்தவள், சட்டென்று அவனைத் திரும்பி பார்த்தாள்.
அவனிடம் இருந்து அக்கேள்வியை எதிர்பார்க்காதவள், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சில கணங்கள் விழித்தாள்.
“யாருக்கு, என்ன பிரச்சினை?” கேள்வியைத் திருப்பிப் போட்டு, அவனிடமே கேட்டாள் அவள்.
“சாரி. உங்களுக்குச் சொல்ல விருப்பம் இல்ல போல, நானும் கேட்டு இருக்கக் கூடாது தான்”
“அப்படி இல்ல. என்னனு சொல்ல, எப்படிச் சொல்லனு…” தயங்கினாள்.
“பொதுவா பிரச்சனையை நாம ஒரு கோணத்தில் தான் அணுகுவோம். அதுவும் இல்லாம, பிரச்சனை நமக்குன்னும் போது, நம்ம பக்கம் தான் நியாயம் இருக்கறதா படும். அதை ஏன் யாரும் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்கன்னு கோபமும், ஆற்றாமையும் தான் வரும். ஆனா, நம்ம பிரச்சனையை வேற ஒருத்தர் கிட்ட பகிர்ந்துக்கும் போது தான் அதில உள்ள எல்லாக் கோணமும் நம்ம கண்ணுலையும் படும். சோ, உங்களுக்குச் சொல்லலாம்னு தோன்றினால், என்னை நம்பி சொல்லலாம்.” திரும்பி அமர்ந்து அவளை நேராகப் பார்த்துச் சொன்னான் அவன்.
அவள் எதையோ சிந்தித்தபடி அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“சில நேரங்களில் நமக்கு நெருக்கமானவங்களை விட, நம்மை யாருன்னே தெரியாதவங்க தான் நமக்குச் சரியான வழியைக் காட்டுவாங்க. என்னை அப்படி நினைச்சிட்டு சொல்லு.. சொல்லுங்க” என்றான். சில வினாடிகள் அவன் கண்களையே பார்த்திருந்தாள் அவள். தன்னைத் தான் ஆராய்கிறாள் என்று தெரிந்தும், விழிகளை அகற்றாமல் அவளது பார்வையைச் சந்தித்தான் அவன்.
“நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, எல்லாப் பிரச்சினைக்கும் ரெண்டு பேரும், ரெண்டு பக்க நியாங்களும் இருக்கத் தானே செய்யும். உங்க பக்கத்தைச் சொல்லுங்க. அவர்.. உங்க கணவரின் பக்கத்தையும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுவோம்” என்றான்.
கணவனைக் குறிப்பிட்டதுமே மலர்ந்து விட்டது அவள் முகம். அதை அவனும் சரியாகக் கவனித்துக் குறித்து வைத்துக் கொண்டான்.
“ம்ம்ம் ஓகே” என்றவள், சட்டென்று எதையும் சொல்லி விடவில்லை.
“ஏன்?” என்றாள் அவனைத் திரும்பி பார்த்து,
“எனக்குப் பேசுவதை விட, கேட்பது பிடிக்கும். நல்லா கூர்ந்து, கவனிச்சு கேட்கும் போது, சொல்லப் படாத விஷயங்களையும் புரிந்து கொள்ள முடியும். சோ, ஐ லவ் டு லிசன்” என்றான்.
“இல்ல, நான் அதைக் கேட்கல. அதாவது, நீங்க, என் கதையைக் கேட்டதைக் கேட்கல…” என்றவள், ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து, “நீங்க, இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்டாள்.
“பறவையைப் பார்க்க, அது இருக்கும் வனத்திற்குத் தானே வரணும்” சொன்னான்.
ஆனால், அவளுக்கு அவன் சொன்னது சரியாகக் காதில் விழவில்லை.
“என்னது? என்ன சொன்னீங்க?” என்றாள்.
“சும்மா சுற்றுலா போல வந்தேன். ஜஸ்ட் உடம்புக்கும், மனசுக்கும் ஓய்வு கொடுக்க” அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான்.
“ஓ, ஓகே”
வானின் நீலத்தை வெண்மேகங்கள் சூழ்ந்து மறைத்திருந்தது. தங்க தகடாய் மின்னிய சூரியன், நிலவுக்கு வழி விட்டு, மெல்ல மெல்ல நீல நிறம் பூண்டிருந்த கடலில் மூழ்கிக் கொண்டிருந்தான்.
கண்களால் அக்காட்சியைப் படமெடுத்து மனதில் சேமித்து வைக்கத் தொடங்கினாள் அவள்.
“ம்க்கும்..” என்று அவன் தொண்டையைச் செரும, மெல்ல பார்வையை அவன் பக்கம் திருப்பினாள்.
“ப்ரெண்ட்ஸ்??” அவள் புறமாக வலக்கரம் நீட்டினான்.
“இல்ல, வேணாம். உங்களை யாரோ தெரியாதவர். இனி, இவரை வாழ்க்கையில் சந்திக்கவே போறதில்லைன்னு நினைச்சுக்கறேன். அப்ப தான் என்னால, என் கதையைச் சுலபமா சொல்ல முடியும்” என்றாள்.
ஏதோ யோசனையுடன் பெரிதாகப் புன்னகைத்து, தலையசைத்தான் அவன்.
“கல்யாண வாழ்க்கைக்கு அடிப்படையே நம்பிக்கை தானே?. ஒருத்தர் மேல ஒருத்தர் வைக்கும் அன்பையும், காதலையும் தாண்டி நம்பிக்கை முக்கியம் இல்லையா? அந்த நம்பிக்கை தகர்ந்து போகும் போது, வாழ்க்கையே ஆட்டம் கண்டுடுது இல்ல? அவர்… ஹீ ப்ரோக் மை ட்ரஸ்ட்” நீச்சல் குளத்தில் பார்வையைப் பதித்தப்படி சொல்லத் தொடங்கினாள்.
“நீ.. நீங்க சொல்றது புரியுது. உங்க கேள்வி சரி தான். ஆனா, அவருக்கும் காரணங்கள் இருந்திருக்கும் இல்லையா?” மென்மையாய் வந்து விழுந்தது கேள்வி.
அதற்கு மாறாகச் சூடாகப் பதில் கொடுத்தாள் அவள்.
“யாருக்கு தான் காரணங்கள் இல்ல? இங்க கொலை பண்றவன், கொள்ளை அடிக்கறவனுக்குக் கூட அவனுக்கான நியாயங்களும், காரணங்களும் இருக்கத் தான் செய்யும். அதுக்காக அதைச் சரின்னு சொல்லிட முடியுமா?”
“ஹ்ம்ம். யூ ஹாவ் அப் பாய்ண்ட். அப்படி என்ன பண்ணார்? நீங்க பிரிவு, டிவோர்ஸ்… இப்படி ஒரு முடிவு எடுக்கற அளவுக்கு என்ன நடந்துச்சு? அதைச் சொல்லுங்க. பிரச்சினையின் நுனி சிக்கினா தான், சிக்கலை அவிழ்க்க முடியும்”
மெதுவாகக் கால்களை முன்னே நீட்டி, இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். மனதினுள் வார்த்தைகளைக் கோர்ப்பதும், கலைப்பதுமாக இருந்தாள்.
ரிசார்ட்டை சுற்றி இருந்த மரங்களில் இருந்து வினோத ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது ஒரு பறவை.
“அது என்ன பறவை? வித்தியாசமான சத்தம் இல்ல” என்று அவனைப் பார்த்து கேட்டாள்.
“ரொம்ப வித்தியாசமான சத்தம் தான்” அவனும் உன்னிப்பாகக் கவனித்து விட்டுச் சொன்னான்.
“ஆனா, என்ன பறவைன்னு எனக்கும் தெரியல. ஒருவேளை கண்ணால் பார்த்தால் சொல்ல முடியும்னு நினைக்கறேன்” என்றான்.
“பாருங்க. எவ்வளவு நேர்மையா பதில் சொல்றீங்க. இது, இந்தப் பறவைன்னு ஒரு பேரை நீங்க சொல்லி இருந்தா, நான் நம்பி இருக்கத் தான் போறேன். ஆனா, நீங்க அப்படிப் பொய் சொல்லி என்னை ஏமாத்தலை. நேர்மையா எனக்குத் தெரியாதுன்னு தானே சொன்னீங்க. நான், இந்தக் குறைந்தபட்ச நேர்மையை என் கணவர் கிட்ட எதிர்பார்த்தேன். அதில் என்ன தப்பு சொல்லுங்க? எப்பவும் முகத்துக்கு நேரா உண்மையைச் சொல்றது கிடையாது. விஷயம் தெரிஞ்சு, நாம கேட்கும் போது ஒரு சப்பைக் கட்டு தயாரா இருக்கும். எப்பவும் பொய், சமாளிப்பு, திருட்டுத்தனம். ப்ளடி போலீஸ்” அவனுக்கு விளக்கி விடும் அவசரத்தில் சொல்லிக் கொண்டே போனவள், கடைசி வாக்கியத்தைச் சொல்லும் போது கோபத்தில் பல்லைக் கடித்திருந்தாள்.
“உங்க ஹஸ்பண்ட் போலீஸா?” என்னவோ மிரண்டது போலக் கேட்டான். அவளுக்குச் சிரிப்புத் தான் வந்தது.
“திருட்டு பய, இவனுக்குலாம் எவன் போலீசில் வேலைக் கொடுத்தது?”
அவளின் ஐயா(தாத்தா) எப்போதும் கேலியாய் சொல்லும் வார்த்தைகள் மனதில் வந்து போனது. அதில் அவளது சிரிப்புப் பெரிதாகியது.
ராஜா தன்னையே பார்த்திருப்பது புரிய, “ஆமா. ஏசிபி, சைபர் செல்.” என்றாள்.
அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், “அதில் உங்களுக்கு ரொம்பப் பெருமை போல..” என்று கேட்க, பட்டென்று மறுக்காமல் ஒத்துக் கொண்டாள்.
“எஸ், ரொம்பவே. சின்ன வயசில் இருந்தே போலீஸ் வேலை மேல ஒரு கிரேஸ் இருந்தது. ஆனா, வீட்டு சூழ்நிலை என்னால, நான் விரும்பின ஐபிஎஸ் படிக்க முடியாம போச்சு. சரி, அதனால் என்னனு ஐபிஎஸ் முடிச்சு, நல்ல போஸ்டிங்கில் இருந்தவரை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”
“இது அவருக்குத் தெரியுமா?”
“இந்நேரம் தெரிந்திருக்கும்” என்றாள் சிரித்துக் கொண்டே, அவனும் கூடவே சிரித்து விட்டு,
“போலீஸ்னா அவ்வளவு ஈஸியா டிவோர்ஸ் கொடுக்க மாட்டார் தானே? சட்டத்தை அவங்களால எளிதா வளைக்க முடியும், இல்லையா?”
“இறுக்கி பிடிக்க மட்டுமில்ல, பறக்க விடவும் காதலால முடியும்”
“ரொம்பக் குழப்பறீங்க” தலைமுடியை அழுந்த கோதிக் கொண்டான்.
“போலீஸ்காரன் வீட்ல என்ன பெரிய பிரச்சனை வந்திடப் போகுது?”
“ஊருக்கு, நாட்டுக்கு தான் போலீஸ். வீட்ல எல்லாப் பஞ்சாயத்தையும் நான், நாங்க தான் பார்க்கணும். ஐயா எதையும் கவனிக்க மாட்டார். முன்னாடியே என்கிட்ட இதைப் பத்தி சொல்லியே தான் கல்யாணமும் பண்ணிக்கிட்டார். அதனால் சட்டுனு சட்டையைப் பிடிக்கவும் முடியல” என்றாள் எரிச்சலுடன்,
“ஓஹோ” என்று அவன் நிமிர்ந்து அமர,
“கல்யாண வாழ்க்கையைப் பத்தி நிறையக் கனவுகள் இருந்துச்சுன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன். பெரிய பெரிய கனவு எல்லாம் இல்ல. ஆனா, என் கணவர், என் மேல உயிரா இருக்கணும். என்னைத் தாங்கனும், கொண்டாடணும்னு சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் இருக்கத் தான் செஞ்சது. அவர் வாழ்க்கையில் நான் தான் எல்லாமா இருக்கணும், எனக்கு அடுத்து தான் எல்லாமே வரணும்னு… ம்ப்ச்” சொல்வதற்கே சலிப்பாக இருந்தது அவளுக்கு, ஒரு உச் கொட்டலுடன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.
“இது எதிர்பார்ப்பு இல்லையா? கனவு இல்லையா?” வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான் அவன்.
“என்ன?” என்றாள் அவள்.
“இல்ல, ஒன்னுமில்ல. நீங்க சொன்னதை மனசில ஒட்டிப் பார்த்தேன். எல்லாப் பெண்களையும் போலத் தான்…”
சட்டென்று இடையிட்டு அவனது பேச்சை நிறுத்தினாள் அவள்.
“மூணு நாளைக்கு முன்னாடி, வீட்ல சண்டை. நாங்க கூட்டுக் குடும்பம். சின்ன விஷயம்னாலும் மொத்த குடும்பமும் ஹாலுக்கு வந்திடும். அவருக்கும், அவங்க அப்பாக்கும் வாக்குவாதம் முத்தி, எங்கயோ ஆரம்பிச்ச பிரச்சினை… எங்கயோ போய் நின்னிடுச்சு. நான் சும்மா இல்லாம, அவங்க அப்பாவை, என் மாமனாரை எதிர்த்துக் கேள்வி கேட்டேன். பதிலுக்கு, என்னை அடிக்க… அவர் கையை ஓங்கிட்டார்” கண்கள் கலங்கி, தொண்டை அடைக்க மூச்சு விடவே சிரமமாக இருந்தது அவளுக்கு.
அவளை இந்நிலையில் சுஹாசினி பார்த்தால் என்ன செய்வாள் என்ற நினைப்பே, அவளை நேராக நிமிர்ந்து அமரச் செய்தது. கைகள் தன்னிச்சையாகக் கண்களைத் துடைத்தது.
“இனி அவனை எங்க பார்த்தாலும் பேசக் கூடாது” என்ற சுஹாசினியின் எச்சரிக்கை காதில் ஒலித்தது. தற்போது அவனிடம் தன் சொந்த கதை, சோகக் கதையைச் சொல்வதைக் கேட்டால், என்ன செய்வாள் என்று நினைக்கையிலேயே மனம் பதட்டமாகியது.
அதனை ஒதுக்கி தள்ளி விட்டு, கைகளை மடியில் கோர்த்து, நீச்சல் குளத்தில் நிறைந்திருந்த நீரின் தளும்பலை பார்த்திருந்தாள் அவள்.
மனதில் கணவனின் நினைவுகள் தளும்பிக் கொண்டே இருந்தன. கண்களை இறுக மூடி, அவனது நினைவுகளில் இருந்து மீள முயன்றாள்.
“காதல் கல்யாணமா?” அவனது திடீர் கேள்வியில் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தாள்.
“உங்களோடது, காதல் கல்யாணமான்னு கேட்டேன்”
“அது ஒன்னு தான் குறைச்சல்” முணுமுணுத்தாள். ஆனாலும், மறுத்துச் சொல்லத் தோன்றவில்லை.
‘முதலில் பெற்றோர் பார்த்த வரன் என்று நினைத்து தான் சந்தித்தோம். ஆனால், எங்களின் முதல் சந்திப்பு.. இட் வாஸ் டெஸ்டினி, என்று தான் அப்போது நினைத்தேன். ஆனால், இப்பொழுது அது ஒரு விபத்து. தெரியாமல் நடந்து விட்ட தவறு என்று புரிகிறது’ மனதில் ஓடிய எண்ணங்களை வெளியில் சொல்லத் தோன்றாமல் மௌனமாய் அமர்ந்திருந்தாள்.
“அப்போ காதல் திருமணம் தானா?” என்றான் மென் புன்னகையுடன்,
“ம்ம்ம் தெரியல. பெரியவங்க முடிவு படி தான் மீட் பண்ணதா, நாங்க ரெண்டு பேருமே நினைச்சோம். ஆனா, அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவருக்குப் பார்த்த பொண்ணு நான் இல்லைன்னு. எனக்குப் பார்த்தது அவர் இல்லைன்னு. ஆனா, எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு இருந்தது. அதனால, வேற வழியில்லாம பெரியவங்க கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க”
“ஓ, இன்டரெஸ்டிங். ஆனா, எனக்குப் புரியலை. என்ன நடந்துச்சு? புரியற மாதிரி சொல்லுங்க. பிளீஸ்” என்றான்.
“முதல் சந்திப்பில் இருந்து தொடங்குங்க” என்று அவன் சொல்ல, கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
“சீரியஸ்லி? நிஜமா தான் கேட்கறீங்களா?”
“ஆமாங்க. சண்டை, அடிக்க வந்தார். இதை மட்டும் வச்சுட்டு முடிவு பண்ண முடியாது இல்லையா? லெட்ஸ் ஸ்டார்ட் வித் குட் மெமொரிஸ் ஃபர்ஸ்ட். சோ, காதலில் இருந்து, இல்ல உங்களின் முதல் சந்திப்பில் இருந்து தொடங்குங்க” என்றான்.
“சொல்றதில் எனக்கு ஒன்னுமில்ல. ஆனா, அது ஒரு பெரிய கதை. உங்களுக்குப் போர் அடிக்கப் போகுது. வேண்டாம், விடுங்க” என்றாள் அவள்.
“இல்ல, சொல்லுங்க. உங்க கூடப் பேசுறதே ரொம்பச் சுவாரசியமா தான் இருக்கு. அதனால உங்க காதல் கதையும்…” அவள் முறைப்பதை பார்த்து நிறுத்தியவன், “நான் கேட்க தயாரா இருக்கேன். நீங்க சொல்லுங்க. பிளீஸ்” என்றான்.
சிறு நேரம் யோசித்து விட்டு,
“ஹ்ம்ம், ஓகே” என்றாள்.
மனதிற்குள் தங்களின் முதல் சந்திப்பை கொண்டு வர முயன்றாள். அவளை அதிகம் சோதிக்காமல் காட்சி படமாக மனதில் ஓடத் தொடங்கியது.
வானை வெறித்தபடி மெலிதான குரலில் சொல்லத் தொடங்கினாள்.
“கல்யாணத்தில் தான் சந்திச்சோம்…” என்று அவள் ஆரம்பிக்க,
“உங்க கல்யாணத்துலயா? அதுக்கு முன்னாடி பார்த்துக்கலையா நீங்க?” என்று அவன் இடையிட்டுக் கேள்வி கேட்க, கண்களை உருட்டி அவனை முறைத்தாள் அவள்.
“இடையில பேசாம, கேள்வி கேட்காம, உம்ம் கொட்டி கதை கேளுங்க” என்று மிரட்ட, வாய் பொத்தி தலையை வேகமாக ஆட்டினான். மெல்ல இதழ் பிரித்துச் சிரித்தவள், மேலே சொல்ல ஆரம்பித்தாள்.
அவளது நினைவுகளில் அவனையும் சேர்த்து இழுத்துக் கொண்டு மூழ்க ஆரம்பித்தாள்.