நற்காதல் நெய்திடவா – 16 (2)

வேதா வீட்டினரின் முகத்தில் மகிழ்வும், பூரிப்பும் அப்பட்டமாகத் தெரிந்தது.

“அப்போ மாப்பிளைக்கு வேலை இங்க. ஆனா, வேதா பேங்க் அம்பத்தூர்னா வீடு ரெண்டுக்கும் நடுவுல பார்த்திடுவோமா?” வானமாமலை கேட்க, “ம்ம். அப்படித்தான் பார்க்கணும்னு வெற்றி சொல்லிட்டு இருந்தான்” என்றார் சுந்தரம்.

“நான் நெட்ல வீட்டு ப்ரோக்கர் பார்த்து பேசுறேன் ப்பா” விஜய் சொல்ல, “நமக்குத் தெரிஞ்ச ஆளுங்க இருக்காங்க தம்பி. நல்ல வீடா பார்த்திடலாம். ரெண்டு பேருக்கும் வீடு அலவன்ஸ் பேங்க் கொடுக்கும். அதனால நாம எதையும் யோசிக்கத் தேவையில்ல” சுந்தரம் சொல்ல, “ஆமா. அதை மறந்து போனோம் பாருங்க. நாம ஒன்னா போய் நல்ல வீடா பார்த்திடுவோம்” என்றார் வானமாமலை. அவரை ஆமோதித்தார் சுந்தரம்.

அதைத் தொடர்ந்தும் பேச்சுக்கள் நீண்டு கொண்டிருக்க, வெற்றி வங்கியில்தான் இருந்தான். வேதாவின் குடும்பம் தங்களின் வீடு திரும்பியது.

வேதாவிற்கு மனது குடைந்து கொண்டேயிருந்தது. வெற்றிக்கு அழைக்க முடியாமல் ஏதோ ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

மறுநாள் அவள் வங்கிக்கு செல்ல, அவளின் இடத்திற்குப் புதிதாக ஒரு பெண் சேர்ந்திருந்தார்.

அவளது வங்கி வருத்தத்துடன் அவளுக்கு விடை கொடுத்தது. ஆனால், வெற்றி இயல்பாக அவளின் கைப் பிடித்துக் குலுக்கி, “தேங்க்யூ, தேவதர்ஷினி மேடம். இந்தப் பிராஞ்ச் உங்களை ரொம்ப மிஸ் பண்ணும்.” என்றான். அத்தோடு, “ஆல் த பெஸ்ட். புதுப் பிராஞ்ச்ல எதுவும் இஸ்யூனா யோசிக்காம என்னைக் கூப்பிடுங்க” என்று விடை கொடுக்க,

‘உன்னாலதான் டா புதுப் பிராஞ்ச் டிரான்ஸ்பராகிப் போறேன் நானு. நாளைக்கு எனக்கு என்னனாலும், என் புருஷன் நீதான் வந்து நிக்கணும். இதுல பேசுறத பாரு’ என்று மனத்தில் அவனை அர்ச்சித்துக் கொண்டே அவன் கைக் குலுக்கி, “தேங்க்யூ மாண்புமிகு மேனேஜர் சார்” என்று தீவிரமாகச் சொன்னாள் வேதா.

வெற்றி சிரிப்பை மறைத்து, முறைத்தான்.

“எம்மாடி வேதா, செல்லமேன்னு வாங்க. உங்களைச் சிறப்பா கவனிக்கிறேன்” முணுமுணுத்துக் கொண்டே அம்பத்தூர் வங்கிக் கிளைக்குச் சென்றாள் அவள்.

மீண்டும் புதிய மனிதர்கள், புதிய பணிச் சூழல், புது வாடிக்கையாளர்கள் எனத் தொடங்கிய இடத்திற்கு வந்து நின்ற உணர்வு அவளுக்கு. ஆனாலும், இந்த முறை அனுபவத்தின் காரணமாக, வெகு எளிதாக வேலையைக் கையாண்டாள் வேதா. அவளுக்கு வேலை நேரம் சீக்கிரம் முடிந்தாலும், பயணத் தூரத்தின் விளைவால் அவள் வீடு வரும் போது, தினமும் பின்மாலையாகி விடும்.

விஜய்க்கு விடுமுறை முடிந்திருக்க, ஹைதராபாத் சென்று விட்டான் அவன்.

வேதாவின் அம்மா, அப்பா மட்டும் அவளோடு இருந்தனர். அவளுக்கும், வெற்றிக்குமான பேச்சுக்கள் அலைபேசியில் ஓரிரு வார்த்தைகள் எனச் சுருங்கி இருந்தது.

அதற்கு அவளின் புதிய வங்கிக் கிளையை மட்டுமே கைக் காட்டிட முடியாது. வெற்றி அவளைத் தவிர்க்கிறான் என்பது அப்பட்டமாக அவளுக்கு விளங்கியது.

அன்று வீடு திரும்பியதும், அவனுக்கு அழைத்தாள் அவள்.

சமீப வழக்கம் போல, “பேங்க்ல இருக்கேன் வேதா. எனிதிங் இம்பார்டன்ட்?” என்று கேட்டான் வெற்றி. அவன் குரலே அவளைத் தூர நிறுத்தியது.

“எனக்கு உங்களைப் பார்க்கணும்” என்று அவள் சொல்ல, “வீக்எண்ட் பார்க்கலாம்” என்றான்.

“இல்ல. இப்பவே பார்க்கணும். வீட்டுக்கு வாங்க. இல்லனா, நான் உங்க வீட்டுக்கு வரேன்” அவள் பிடிவாதமாகச் சொல்ல, “எல்லாம் உன் இஷ்டம்தான். இல்ல?” என்றான் வெற்றி பட்டென.

“இல்லையே. உங்களைப் பார்க்கணும்னு தானே கேட்டேன். அதுல என்ன.. ” அவளைப் பேச விடாமல், “இருபது நிமிஷத்துல வீட்ல இருப்பேன். வா” என்றவன், “உங்கப்பா அங்க இருக்கார். இல்ல?” என்று கேட்டான். அவள் பதில் சொல்லும் முன்னே, “நான் வந்து உன்னைக் கூப்பிட்டுக்கிறேன்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

வேதாவிற்கு இந்த வெற்றியை புரியவும் இல்லை. பிடிக்கவும் இல்லை. அவன் மேல் அவள் கோபமாக இருந்தது மாறி, இப்போது அவன் கோபமாக இருப்பதின் காரணம் அவளுக்கு லேசாகப் புரிந்தாலும், அவனிடம் எப்படிப் பேசுவது என்று அவளுக்குத் தெரியவில்லை.

ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பப் பேசுவதில் அவளுக்கு விருப்பமில்லை. ஆனால், அதற்காக நீ மட்டும் கோபமாக இருக்கலாமா? என்று அவள் மனசாட்சியே அவளுக்கு எதிராக நின்று பேச, குழம்பிப் போனாள் வேதா.

“வேதா” வெற்றி அழைக்கவும் படக்கெனத் திரும்பிப் பார்த்தாள்.

“மாப்பிள்ளை வந்து எவ்ளோ நேரமாச்சு. அதைக் கூடக் கவனிக்காம, என்ன பண்ற வேதா நீ?” என்று மகளை அதட்டினார் வானமாமலை.

“மாப்பிள்ளை கடைக்குப் போகணும் சொல்றாங்க. போய்ட்டு வா வேதா” ஜெயலட்சுமி முன்னே வந்து சொல்ல, பெற்றோரை பார்த்து தலையசைத்து விட்டு, வெற்றியோடு வெளியேறினாள்.

அவளின் பெற்றோரிடம் இயல்பாகப் பேசினான் வெற்றி. ஆக, கோபம் அவள் மீது மட்டும்தான் என்பது அவளுக்குத் தெளிவானது.

இருவரும் வெற்றியின் வீடு செல்ல, காலி வீடு அவர்களை வரவேற்றது.

“இங்க ஓகேவா? இல்ல, வெளில எங்கயாவது போய்ப் பேசலாமா?” வெற்றி புருவம் உயர்த்தி நக்கலாகக் கேட்க, “ஏன் வெளில போகணும்?” என்று எதிர்க்கேள்வி கேட்டாள் வேதா.

“ம்ம். உனக்குப் பிரச்சனையில்லன்னா எனக்கு ஓகேதான்.” அவன் பேச்சின் உள்ளர்த்தம் பிடிபடவில்லை அவளுக்கு.

“ஆளை கண்டாலே தெரிச்சு ஓடுறது. என் மேல அவ்ளோ நம்பிக்கை” அவன் பல்லைக் கடித்துக் கொண்டு முணுமுணுக்க, அவள் காதில் லேசாக விழுந்தது அவன் வார்த்தைகள்.

“சாரி.” என்றாள், அவன் முகம் பார்த்து.

ஏன், எதற்கு என்று கேட்காமல், “வாவ் வேதா மேடம். எவ்வளவு சீக்கிரம் சாரி சொல்லிட்டீங்க?” என்று நக்கலாகக் கேட்டவன், “ஆமா, எதுக்குச் சாரி?” என்றும் கேட்டான்.

“பூ வைக்கிற அன்னைக்கு நடந்ததுக்கு, அப்புறம் நான் உங்ககிட்ட கோபமா பேசினதுக்கு, உங்களை அவோய்ட் பண்ணதுக்கு..” அவள் சொல்ல சொல்ல, அவன் கண்களில் இறுக்கம் படர்ந்தது.

மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு, “ஹான், அப்புறம்?” என்று கேலியாகக் கேட்டான் அவன்.

“இனி நமக்குள்ள எதுவும் இல்லைனு சொன்ன தானே? இப்போ என்ன உரிமையில் வந்து பேசுற நீ?” அவன் கேட்ட தொனியில் மளுக்கென்று குளம் கட்டியது அவள் கண்கள்.

“அது கோபத்தில் சொன்னேன். அதைப் போய்ப் பெருசா..”

“ஏன் வேதா. உனக்குக் கோபம் வந்தா, நீ என்ன வேணாலும் பேசலாம். நான் அதைப் பெருசா எடுத்துக்கக் கூடாது. ஆனா, எனக்குக் கோபமும் வரக் கூடாது. உன்னைப் பேசவும் உரிமையில்லை. அப்படித் தானே?” அவன் கேட்க, கண்களை விரித்து அவனைப் பார்த்தாள் வேதா.

“எப்பவும் பெருசா லெக்சர் கொடுப்பியே. இப்போ பேசேன்” அவன் சொல்ல, “சாரி” என்றாள். வேறெந்த சமாதானமும் அவளிடம் இல்லை.

“அன்னைக்கு நான் கோபத்தில் பேசினேன். உன் காலை எடுக்காம இருந்தேன். ஆனா, என் மேல் தப்புன்னு ரியலைஸ் ஆனதும், உனக்குக் கால் பண்ணி பேசினேன் தானே? மன்னிப்புக் கேட்டேன் தானே?” அவள் ஆமென்று தலையசைக்க, “ஆனா, நீ என்ன பண்ண? நமக்குள்ள எதுவும் இல்லைனு சொல்லிட்டு என்னைக் கடந்து போகணும்னு ஸ்டேட்டஸ் வைக்கிற இல்ல?” கோபத்துடன் அவள் முகத்துக்கு நேராக வெற்றி குனிந்து கேட்க, மிரண்டு போனாள் வேதா.

“இல்ல, அந்த ஸ்டேட்டஸ் நான்…”

“பேசாத. உனக்கு என்னைப் பத்தி கவலையே கிடையாது. எப்பவும் அப்பா, அப்பா, அப்பா. இல்லையா, என் குடும்பம் வேணும். அவங்கதான் பெருசுன்னு பேசுவ. உன்னைப் போலத் தானே எனக்கும் ஃபீலிங்ஸ் இருக்கும்? உனக்கு இருக்கிற பாசம் எனக்கும் இருக்கக் கூடாதா?”

“இல்ல, வெற்றி. நான்..”

“உன்னைப் பேசாத சொன்னேன் நான். ஏற்கனவே நிறையப் பேசிட்ட. இப்போ நான் பேசுறேன். அமைதியா நில்லு” அந்தக் குரலில் கண்கள் கலங்கி விட்டது அவளுக்கு.

அவன் முகம் ஒரு நொடி மென்மையாகி, பின் கடினமாகியது.

“உன் கோபம் என்ன? உன் கையை உதறிட்டு, உன்னை வேணாம்னு சொல்லிட்டு போனேன்னு தானே? அது என் தப்புதான். உங்க வீட்ல இருந்து வெளில வந்ததும், எனக்கு மனசே கேட்கல. உங்கத்தை, எங்கம்மாவை அவ்வளவு கேவலமா நடத்தி, பேசியிருந்தாலும் கூட, எங்கம்மா அதை மறந்து, அப்பவும் உனக்காகதான் பேசினாங்க. என்னைத் திட்டினாங்க.

நீ உன் குடும்பத்துக்காக யோசிக்கிற மாதிரி, நான் என் குடும்பத்துக்காக யோசிக்க மாட்டேனா? உனக்கு ஏன் அது புரியல?

எங்கப்பாவை நான் வேற ஒருத்தரா பார்த்ததே இல்ல. அன்னைக்கு, அம்மா, அப்பாவை அவ்வளவு கொச்சைப்படுத்திப் பேசி… பேசினது உன் வீட்டு ஆளுங்க. அதுக்கு நீ தானே பொறுப்பு எடுத்துக்கணும்? உங்கம்மா, அப்பா எல்லாம் பேசினாங்க. ஆனா, அம்மாகிட்ட நீ ஒரு வார்த்தை பேசினியா?” அவன் வரிசையாகப் புகார் வாசிக்க, அதில் உண்மையும் இருக்க, வேதா வாயடைத்து போய் அவனைப் பார்த்தாள்.

“எங்கம்மா எவ்வளவு பேச்சு வாங்கி இருக்காங்க தெரியுமா? இப்பவே உங்க வீட்ல இப்படிப் பேசுறாங்க. 25 வருஷத்துக்கு முன்னாடி எங்கம்மாவை எவ்வளவு பேசி இருப்பாங்க? யார் வீட்டுக்கும் போக மாட்டாங்க அம்மா. எந்த நல்ல காரியத்துக்கும் அம்மாவை கூப்பிட மாட்டாங்க. கண்ட நாயும் அம்மாகிட்ட இளிச்சு பேசும். ஆனா, இதெல்லாம் அப்பா வரவும் மாறுச்சு. சித்தப்பா கொடுமை எல்லாம் எனக்கு நடக்கல. அப்பாவாதான் என் வாழ்க்கைக்குள்ள வந்தார், இன்னைக்கு ஒரு ப்ரெண்ட்டா மாறியிருக்கார்.

ஆனா, அவரை நான் ஹர்ட் பண்ணிட்டேன். என் லவ், அதால வந்த உறவால அவர் அசிங்கப்படுறதை பார்க்கும் போது.. எனக்கு எப்படி இருந்திருக்கும்? ஆனா, உனக்காகப் பொறுத்துக்கிட்டேன். அப்பவும் உனக்காகதான் யோசிச்சேன்.

நமக்கு நிச்சயம் ஆகலைன்னாலும் அங்க உன்னை விட்டுட்டு வந்திருக்க மாட்டேன் நான். உங்கத்தை இருக்க இடத்தில.. ச்சே. ஆனா, அப்போ நான் உன்னை, என்னோட வரச் சொல்லி கூப்பிட்டது கூட உனக்கு முக்கியமாகப் படல. அப்பவும் நீ திரும்பி உங்கப்பாவை தானே பார்த்த? உடனே நான் கையை உதறிட்டுப் போனது மட்டும் செல்லத்துக்கு வலிச்சுடுச்சு. இல்ல? உங்களுக்கு மட்டும்தான் வலிக்கும் பாரு. எங்க மனசு எல்லாம் கல்லால செஞ்சு வச்சுருக்கு” கையைக் காற்றில் வீசி அத்தனை கோபமாகச் சொன்னான் வெற்றி.

“நான்.. நான்.. சாரி வெற்றி” அவனை நெருங்கி அவள் சொல்ல, “பக்கத்துல வராத” என்று கத்தினான் அவன்.

“உங்கப்பா இடத்தில என்னை நீ வைக்க வேணாம். ஆனா, உங்கப்பாவை மட்டுமே பார்க்காத. என்னையும் கொஞ்சம் பாரு. இல்லனா, என்னை விட்டு..”

“வெற்றி.” பட்டென அவன் வாயை மூடினாள். அவள் கையை விலக்கி, “உங்கப்பா மேல எனக்கு நிறையக் கோபமும், வருத்தமும் இருக்கு. ஆனா, அதையே பிடிச்சுட்டு இருக்காம. உனக்காக அவர்கிட்ட நான் நார்மலா தானே பேசுறேன்? அவர்கிட்ட மன்னிப்புக் கேட்டேன். ஆனா, நீ? எங்கம்மா, அப்பாகிட்ட ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசி இருக்கலாம். மன்னிப்பு எல்லாம் வேணாம். போகாதீங்கன்னு அன்னைக்குச் சொல்லி இருக்கலாம்”

“நான் சாரி, சொன்னேன்” என்றவளை அவன் பார்த்த பார்வையில் மேலே பேசவில்லை அவள்.

“முதல்ல உனக்கு என் மேல லவ்னு ஒன்னு இருந்தா தானே, இதெல்லாம் தோணும்? நீதான் என்னை லவ் பண்ணவேயில்லையே. நான்தான்..”

“வெற்றி..” அவன் கைப் பிடித்து அவள் அழைக்க, “என்னைக் கடந்து போகணும். இல்ல? உன்னை என்னமோ நினைச்சேன். கடைசியில..” அப்படியொரு கோபத்துடன் கத்தினான்,

“போடி” என்றான்.

அவள் அதிர்ந்து உறைந்து நிற்க, வெற்றி தன் அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டான்.

ஒரு மணி நேரம் கழித்து அவன் அறைக் கதவு தட்டப்பட, எழுந்து கதவை திறந்தான். அம்மாவை பார்த்ததும், அங்கு விட்டுப் போன வேதாவின் நினைவு அப்போதுதான் அவனுக்கு வந்தது. அவளிடம் கத்தியது நினைவில் வர மனம் கசங்கியது.

அத்தனை நாள் மனத்தில் அடக்கி வைத்திருந்த கோபத்தை மொத்தமாய்க் கொட்டி விட்டுத் தற்போது வருந்தினான் அவன். வேதாவிற்குப் பேச வாய்ப்புக் கொடுத்திருக்க வேண்டும் என்று காலம் தாழ்த்தி வருந்தினான்.

ஒருவித அழுத்தத்துடன் அறைக்குள் சென்று கண் மூடி படுத்திருந்தவன் மன உளைச்சலில் அப்படியே உறங்கி இருந்தான்.

வேதா, அவனை அழைப்பாள் என்று எதிர்பார்த்தான்தான். பின்னோடு அறைக்குள் வருவாள் என்று நினைத்திருந்தான். சமாதானம் சொல்வாள் என்ற அவனின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது.

இப்போது வெளியில் சென்றிருந்த அவன் குடும்பத்தார் வீடு திரும்பியிருக்க, அவர்களிடம் பேசி விட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தான்.

வேதாவை அலைபேசியில் அழைக்க, “மாப்பிள்ளை, சொல்லுங்க” என்றார் வானமாமலை.

“வேதா, எங்க மாமா? அவகிட்ட கொடுங்க. பேசணும்” அவன் சொல்ல, “தூங்கறா மாப்பிள்ளை. உங்க கூட டிபன் சாப்பிட்டேன்னு சொல்லிட்டு வந்ததும் படுக்கப் போய்ட்டாளே.” என்று வானமாமலை சொல்லவும், “சரிங்க மாமா. நான் காலையில பேசுறேன்” என்றவன், அழைப்பை துண்டித்தான்.

வேதாவிற்கு அவனது இயல்பு தெரியும். பல சமயங்களில் பேசி விட்டு வருந்தும் வகையறா அவன் என்று. ஆனாலும், இம்முறை அவன் வார்த்தைகளை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அதில் இருந்த உண்மை குத்தியது.

“நாளைக்கு எங்கம்மாவை உங்க சொந்தக்காரங்க இந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்ப்பாங்கன்னு நினைக்கும் போதே எனக்குக் கஷ்டமா இருக்கு” வெற்றியின் வார்த்தைகள் இப்போதும் அவள் காதில் எதிரொலித்தது.

“உங்க குடும்ப நியாயத்தைப் பார்க்க சொன்ன நீ, என் பக்கத்து நியாயத்தை, எங்க வருத்தத்தை ஒரு செகண்ட் யோசிச்சு பார்த்தியா வேதா?” அந்தக் கேள்வி அவள் மனத்தைக் குடைந்தது.

“அன்னைக்கு நடந்ததில் உன் தப்பு எதுவும் இல்லைனு எனக்குத் தெரியும். அதுக்காக மட்டும் உன்னை நான் என்னோட வரச் சொல்லி கூப்பிடல. உன் மேல எனக்கு இருக்க லவ்னாலயும்தான் கூப்பிட்டேன். ஆனா, உனக்கும், உங்கப்பாக்கும் லவ் ஆகாதே” என்னவெல்லாம் பேசி விட்டான்.

‘என்ன செய்து சரி செய்யப் போகிறேன் நான்?’ படுக்கையில் கண் மூடி படுத்திருந்தவளின் மனது விழித்திருந்தது.

அவளின் கவலைகள் காலத்திற்குப் புரியாதே, மறுநாள் காலையில் அமைதியற்ற மனதுடன் வங்கிக் கிளம்பினாள்.

“சாரி செல்லமே.” ஒற்றை வரி செய்தியை, நான்கு முறை அனுப்பியிருந்தான் வெற்றி.

“ஓகே” என்று பதில் அனுப்பினாள் வேதா. ஏனோ வேறெதுவும் பெரிதாக எழுத அந்த நொடி அவளுக்குத் தோன்றவில்லை.

“மாப்பிள்ளை கூட எதுவும் சண்டையா வேதா?” அம்மா கேட்க, “என்னம்மா, இப்படிக் கேட்கிற? அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே மா” என்று சமாளித்தாள் வேதா. அப்பா அவளையே ஊன்றி கவனிக்க, அவருக்குப் புன்னகையைக் கொடுத்து விட்டு வங்கிக்கு கிளம்பினாள்.

இரவெல்லாம் வெற்றியை அலைக்கழித்தது வேதாவின் நினைவு. அவள் பார்வையில் இருந்த பரிதவிப்பு, கலங்கிய கண்கள், கண்களுக்குள் வந்து நின்று அவன் மனத்தைக் கூறு போட்டது.

அவளை அழைக்க அலைபேசியை எடுத்தான். ஏதோ உள்ளுணர்வில் அவளின் வாட்ஸ்அப் பார்த்தான்.

அவர்களின் நிச்சயத்தின் போது எடுத்த புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்திருந்தாள். அவர்கள் இருவரின் மோதிர விரலும் கோர்த்திருக்க, இருவரின் விரல்களில் இருந்த மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்த, “வி” எனும் ஆங்கில எழுத்து ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருந்தது.

“இவளுக்குச் சேட்டையைப் பாரேன்” துளி கோபமும், முகத்தை மலர செய்த ரசனையுமாகச் சொல்லிக் கொண்டான் வெற்றி.

“நீ இன்றியும் நான் நனைவேன். நமக்கான மழையில்” என்றது அவளின் அன்றைய ஸ்டேட்டஸ்.

அவனுக்கு மிகப் பிடித்த குமரகுருபரனின் கவிதை வரிகள் அது.

“இவள…” அவனுக்குக் கோபம் மறைந்து சிரிப்பு வந்தது.

உதட்டில் உறைந்த மென்நகையுடன் வேதாவை அழைத்தான். அவனது அழைப்பை எடுக்கவில்லை வேதா.

error: Content is protected !!
Scroll to Top