அரை மணி நேர பயணத்தில் அவர்கள் தங்குவதற்குப் புக் செய்திருந்த பீச் ரிசார்டின் முன்னிருந்தனர்.
“வாவ், என்ன ஒரு அழகு” கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிந்த கடலையும், கையெட்டும் தூரத்தில் நின்ற கட்டிடத்தையும் மாறி, மாறிப் பார்த்தபடி சொன்னாள் சுஹாசினி.
“பிக்சர் பெர்பெக்ட். இந்த இடம் பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு. இந்த ஒரு வாரமும் நமக்குச் சூப்பரா போகும்” என்று குரலில் மகிழ்ச்சி பொங்க சொன்னாள் பனிமலர். அவள் முகம் இப்போது தான் சற்றுத் தெளிந்திருந்தது.
தோழிகளின் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே, அனைத்தையும் ஒரு கண் சுழற்சியில் கவனித்தவள், எவ்வித எதிர்வினையும் ஆற்றவில்லை. தோழிகளின் ஆர்வத்தை ஒரு புன்னகையுடன் கடந்து விட்டு, அறைகள் இருந்த பகுதியை நோக்கி செல்லத் தொடங்கினாள்.
சுற்றுப்புறத்தை ரசித்துக் கொண்டே நடந்ததாலே என்னவோ, பாதத்தைப் படிக்கட்டில் தவறுதலாக வைத்து நிலைக் குலைந்து கீழே விழப் போனாள் அவள்.
“ஆ… அம்மா” என்று கத்தியவளை, சட்டென நீண்ட வலிய கரங்கள் அழுத்தமாய்ப் பற்றி அவள் விழுவதைத் தடுத்து நிறுத்தியது. அவள் நேராக நிற்கவும் உதவியது.
“தேங்க்ஸ்” என்றவள் நிமிர்ந்து கைகளுக்குச் சொந்தமான முகத்தைப் பார்த்தாள். விழிகளை அவன் முகத்தில் இருந்து எளிதாக அவளால் அகற்ற முடியவில்லை.
“அடி எதுவும் படலையே? நீ… நீங்க ஓகே தானே?” என்று பதட்டத்துடன் கேட்டான் அவன்.
அவளுக்கு மனதோரம் சிறு நெருடலாய் கணவனின் நினைவு வந்து போனது.
ஒருவேளை கீழே விழுந்திருந்தால் என்னவாகி இருப்போம் என்று நினைக்கையிலேயே அவளது உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.
தனது பதிலுக்காக அவன் காத்திருப்பது புரிய, தொண்டையைச் செருமி சரி செய்து கொண்டு, “இல்ல அடிபடல, ஐ அம் ஓகே” என்றாள். அவனை விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றாள்.
அதற்குள் அவளது தோழிகள் இருவரும் அடித்துப் பிடித்து அங்கே ஓடி வந்திருந்தனர்.
“என்னாச்சு?” என்றாள் சுஹாசினி.
“ஏன் கத்தின?” என்று பனிமலரும் கேட்க,
“கால் தடுக்கிடுச்சு, கீழ, விழ இருந்தேன். சார் தான் ஹெல்ப் பண்ணார்” என்று அருகில் நின்றிருந்தவனைக் கை காட்டினாள்.
சுஹாசினியும், பனிமலரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கண்களால் தங்களுக்குள் எதையோ பேசிக் கொண்டனர்.
சுஹாசினி தன் தோழியிடம் நெருங்கி வந்து நின்றாள்.
“தேங்க்ஸ் சார்” என்று வேகமாய் ஒரு நன்றியை அவன் முன் வைத்து விட்டு, தோழியின் கரம் பற்றி, “போகலாம்” என்றாள்.
“ஹாய் மேம், உங்க ப்ரெண்ட் கீழ விழாம காப்பாத்தி இருக்கேன். பதிலுக்கு நன்றி மட்டும் தானா? இப்படி அறிமுகப்படுத்திக்காம போனா எப்படி?” என்றான் அவன்.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல, அவனிடம் நின்று பேச தோழிகள் மூவருக்கும் துளியும் விருப்பமில்லை.
“நானும், இங்க தான் தங்கி இருக்கேன். ஒருவேளை மீண்டும் சந்திக்க நேரிட்டா, என்ன பேர் சொல்லி கூப்பிடுறதுன்னு தான் கேட்டேன். மத்தபடி தப்பான எண்ணத்தோடு கேட்கலை. அதுவும் இல்லாம நீங்களும் தமிழ். நானும்…” விளக்கினான்.
அறையை நோக்கி நடக்க யத்தனித்தவர்கள், சட்டென நின்றனர்.
“நீங்க கேட்டதும் சொல்லி இருக்கணும். எங்க தப்பு தான். ஒரு பேர்ல என்ன இருக்கு?” என்ற சுஹாசினி,
“இது என் ப்ரெண்ட் ரா….” என்று ஆரம்பிக்க, அவளது காலை நச்சென்று மிதித்தாள் அவள். காலை உதறிக் கொண்டு, “ஆ..” என்று கத்தியபடி முடித்தாள் சுஹாசினி.
“ரா…ஆ..? என்னங்க பேர் இது?” என்று புருவங்களைச் சுருக்கி குழப்பமாகக் கேட்டான் அவன்.
“இல்ல, ரோஜா சொல்ல வந்தா… அதுக்குள்ள டங்க் கொஞ்சம் ஸ்லீப் ஆகிடுச்சு” என்றாள் பனிமலர்.
“ஓஹோ.. சரி சரி” என்றவன், “ரோஜா, ரொம்பப் பொருத்தமான பெயர்” என்று புன்னகைத்தான்.
தோழிகள் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நான் ராஜா..” என்று அவன் வலக்கரம் நீட்ட, நீண்டிருந்த அவன் கரத்தை பார்த்தது பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தாள் அவள்.
“ஓ, மிஸ்டர் ராஜா. உங்களை மீட் பண்ணதில் ரொம்பச் சந்தோஷம். அப்புறம், மீட் தாமரை” என்று அருகில் நின்ற சுஹாசினியை அறிமுகப்படுத்தி விட்டு, “நான்..” என்று பனிமலர் இழுக்க,
“இவ மல்லி, மல்லிகா” என்று முடித்து வைத்தாள் அவளருகில் நின்ற தாமரை என்று அவளால் அறிமுகப்படுத்தப்பட்ட சுஹாசினி.
“வாவ், எல்லாமே அழகான மலர்களின் பெயர்கள். உங்களைப் போலவே.. நைஸ் டு மீட் யூ ஆல்.” என்று புன்னகைத்தவன், “அப்புறம் டூர் வந்திருக்கீங்க போல?” என்று கேட்டான்.
“இல்ல.” என்றாள் ரோஜா.
“பிசினஸ் ஆர் வேலை விஷயமா?” ஆவலாகக் கேட்டான். அவனது அதிகப்படி ஆர்வம் அவளுக்கு எரிச்சலை கிளப்பியது.
அவனை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டி, “நான்… எனக்கு டைவோர்ஸ் ஆகப் போகு… இல்ல, டைவோர்ஸ் வாங்கலாம்னு இருக்கேன். இவ… தாமரைக்குப் போன வாரம் கல்யாணம் நின்னுடுச்சு. ஆக்ச்சுவலி கல்யாணத்தை அவ தான் நிறுத்தினா. நியூஸ், சோஷியல் மீடியான்னு ஒரு வாரமா பயங்கரமா டிரெண்ட்ல இருந்தா. அவளோட வீடியோ தான் வைரலாகி சுத்துச்சு. நீங்க பார்க்கல?” என்றாள்.
நச்சென்று அவள் காலை ஓங்கி மிதித்தாள் சுஹாசினி. இப்போது வலியால் காலை உதறுவது ரோஜாவின் முறையானது.
“இப்போ, உன்கிட்ட அவர் டீட்டெய்ல் கேட்டாரா?” என்றது சுஹாசினியின் பார்வை.
அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல், “மல்லிக்கு…” என்று ரோஜா தொடங்க, பனிமலரின் கண்கள் பெரிதாகிக் கொண்டே போனது. ‘சொல்லி விடாதே’ என்ற கெஞ்சல் அதில் மிகுந்திருக்க, அவளது அதிர்ந்த முகத்தைப் பார்த்து, தான் சொல்ல வந்ததை விழுங்கி, “அவளுக்கு லவ் ஃபெயிலியர்” என்று மாற்றிச் சொன்னாள்.
“ஓ” என்று அவன் குழப்பமாய் அவர்கள் மூவரையும் பார்க்க,
“ஒருத்தன் மனசை சல்லி சல்லியா நொறுக்கிட்டு வந்துட்டா. அதுவும் காதல் தோல்வியில் வரும் தானே?” என்று அவள் அப்பாவியாக, அவனைப் பார்த்துக் கேட்க, அவனது குழப்பம் அதிகமானது தான் மிச்சம்.
அவர்களை விநோதமாய்ப் பார்த்தபடி அவன் நின்றிருக்க, பனிமலர், ரோஜாவை கோபமாக முறைத்துக் கொண்டிருந்தாள்.
“இங்க, சோகத்தைக் கொண்டாடலாம்னு வந்திருக்கோம்” என்று சொல்லி முடித்தாள் ரோஜா.
இப்படி ஒரு காரணத்தைத் தன் வாழ்நாளில் கேட்டு அறிந்திராதவன், அவர்களை ஆச்சரியமாய்ப் பார்த்தான். அவனுக்குச் சிரிப்பும், வியப்பும் ஒரே நேரத்தில் தோன்றியது. உதடுகள் புன்னகையில் சற்றே வளைந்தது போலிருந்தது.
“அக்கா, தங்கைகளா நீங்க?” என்று அவன் கேட்க,
“ஆமா” என்றாள் ரோஜா.
“பார்த்தா அப்படித் தெரியலையே” என்று மூவரையும் பார்வையால் அளந்தான் அவன்.
அதில் எரிச்சலுற்ற சுஹாசினி, “அதான், தெரியுது இல்ல. அப்புறம் ஏன் கேட்கிறீங்க?” என்றாள்.
“அதில்ல, பார்க்க ஒரே மாதிரி இருக்கீங்களே. அதான் கேட்டேன்” என்று தாடையைத் தடவினான் அவன்.
“ம்ம்ம், ஆமா. நாங்க சிஸ்டர்ஸ் தான். நான் மூத்தவ.” என்ற சுஹாசினி, ரோஜாவை கைக் காட்டி, “இவ ரெண்டாவது” என்று விட்டு, பனிமலரை பார்த்து, “இவ கடைக்குட்டி” என்றாள்.
“ஆனா, மூனு பேரும் ஒரே வருஷத்தில் தான் பொறந்தோம். வேற வேற மாசம், பக்கத்து பக்கத்து வீட்ல.. ஆனா, ஒரே தெரு தான். இருப்பதினாலு வருஷமா ஒன்னா தான் வளர்றோம். அதனால் அக்கா, தங்கைன்னு தாராளமா சொல்லலாம்” முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு சொன்னாள். பனிமலர் சிரிப்பை அடக்க முயல்வது அவளது ஓரப் பார்வையில் நன்றாகப் பட்டது.
அவள் முன் நின்றிருந்தவன், அந்தப் பதிலையும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு, “அதான் பார்க்க ஒரே மாதிரி இருக்கீங்க போல” என்றான்.
ரோஜா நிற்க முடியாமல் தவிப்பதை கண்ட சுஹாசினி அதற்கு மேல் அவனுடன் பேச முற்படவில்லை.
“அப்புறம் சோகத்தை எவ்வளவு நாள் கொண்டாடுவதா உத்தேசம்?” என்றான்.
“சோகம் தீரும் வரை” ரோஜாவிடம் இருந்து பட்டென்று பதில் வந்தது.
ஒருநொடி மின்னலாய் அதிர்ச்சி போல ஏதோ ஒரு உணர்வு அவன் முகத்தில் ஓடி மறைந்தது.
“தோராயமா எவ்ளோ நாள்?” என்று மீண்டும் கேட்டான்.
“நீங்க எதுக்கு அதைக் கேட்கறீங்க? உங்களுக்கு ஏன் அந்தக் கவலை எல்லாம்?” எகிறினாள் சுஹாசினி. ஆனால், அவனுக்குப் பொறுமையாகப் பதில் சொன்னாள் ரோஜா.
“தெரியாது. அப்படித் தேதி, நேரம் எல்லாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அதான், சோகம் தீருற வரேன்னு சொன்னேன் இல்ல. திருப்பி, திருப்பி அதையே கேட்டா என்ன அர்த்தம்?” என்று விட்டு, தங்களின் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் அவள்.
அது வரை தன்னைப் பெரிதும் கட்டுப்படுத்தி இருந்தவன், சட்டெனச் சத்தமாகச் சிரித்து விட்டான். ஆனால், அதையெல்லாம் பெரிதுபடுத்தும் மனநிலையில் அவர்கள் இல்லாததால், “வர்றோம் சார்.” என்று விடை பெற்றனர்.
அவர்களை நிறுத்தி மேலும் கேள்விகள் கேட்கும் எண்ணம் அவனுக்கும் இல்லாததால், அமைதியாய் ஒதுங்கி வழியை விட்டான்.
“அவர் கிட்ட நம்மளோட உண்மையான பேரை சொல்லி இருக்கலாம். என்னமோ பெரிய ரகசியம் மாதிரி, அவர் நினைச்சா கண்டுபிடிக்க முடியாத எதுவும் இருக்கா என்ன?” சிரித்துக் கொண்டே கேட்டாள் பனிமலர்.
“என்னமோ சொல்லத் தோணல, சொல்லலை. அப்படியே விடேன். நீ வேற நொச்சு பண்ற” எரிச்சலுடன் சொன்னாள், ரோஜா என்று அவர்களால் பெயர் வைக்கப்பட்டவள்.
“ஓகே. சாரி” தோள் குலுக்களுடன் விலகி நடந்தாள் பனிமலர்.
“நான் ஒழுங்கா சரியான பேரை தான் சொல்ல வந்தேன். நீ தான் ரோஜா, தாமரைன்னு அளந்து விட்ட.. இப்போ, உண்மையான பேர் ஏன் சொல்லலைன்னு அவளைக் கேட்கறியா? உன்னைக் கொல்லப் போறேன், பாரு…” கோபமாகப் பொரிந்தாள் சுஹாசினி.
“அது வந்து… சாரி சுஹா. ஏன்னு தெரியலை. சட்டுனு விளையாடி பார்க்கணும்னு தோணுச்சு.”
“விதி, நம்ம வாழ்க்கையில் விளையாண்டது போதும். நாமளும் அது கூடச் சேர்ந்து ஆட வேண்டாம். இருக்கப் பிரச்சினை போதாதுன்னு.. நீ வேற..” புலம்பிக் கொண்டே நடந்தாள்.
“சாரி பா. எப்படியும் அவருக்கு நம்ம பேர் தெரியும்…” சத்தமாகச் சிரிக்கப் போனவள், சுஹாசினியின் முறைப்பில் அதை அப்படியே விழுங்கினாள்.
“உன்னைக் கீழ விழ விடாமல் காப்பாத்தினான் தான். ஆனா, அவன் பார்வையே சரியில்ல. உன்ன முழுங்கற மாதிரி பார்க்கறான். நீயும், அவனைக் கண்ணெடுக்காம, அப்படிப் பார்க்கற. எனக்கு ஒன்னும் சரியாப் படல. யூ ஆர் மேரிட். அது உனக்கு ஞாபகத்தில் இருக்கட்டும்” என்று ரோஜாவை எச்சரித்தாள் சுஹாசினி.
முன்னே நடந்து கொண்டிருந்த பனிமலர், பெட்டியை வேகமாகக் கீழே போட்டு விட்டு அவர்கள் அருகில் வந்து நின்றாள்.
“ஆள் அட்டகாசமா இருக்கார் இல்ல?” என்றாள் கண் சிமிட்டி. பதிலுக்குப் பல்லைக் கடித்தபடி அவளை முறைத்தாள் ரோஜா.
“ஏய், உனக்கு ஏன் இப்போ கோபம் வருது?” கத்தினாள் சுஹாசினி.
“ஸ்டாப் இட் சுஹா. எரிச்சலா இருக்கு” என்று விட்டு, விலகி நடக்க ஆரம்பித்தாள் ரோஜா.
“உனக்கு மட்டுமில்ல, அந்த… அவருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அவர் கால்ல மெட்டி போட்டு இருந்தார். நீ கவனிக்கலையா?” வேண்டுமென்றே கத்தினாள் பனிமலர்.
சட்டென்று திரும்பி அவளை முறைத்தாள் ரோஜா.
“பொண்டாட்டிக்கு பயந்தவன் போல..” சொல்லி விட்டு, கிளுக்கி சிரித்தாள் சுஹாசினி.
“கல்யாணத்தனைக்குப் போட்ட மெட்டியை இன்னமும் கழட்டாமல் இருக்கார்னா, பொண்டாட்டி மேல பயம் இல்ல, காதல் தான் அதிகம் போலத் தெரியுது”
பனிமலர் சொல்லி முடிக்கும் முன்பே ரோஜாவின் முகம் பளிச்சென்று மலர்ந்திருந்தது.
“உன் போக்கு எனக்கு ஒன்னும் சரின்னு படல. இனி, அவனை எங்க பார்த்தாலும் பேசக் கூடாது. அவோய்ட் பண்றோம். சரியா? இந்த ஒரு வாரத்தை நிம்மதியா இங்க கழிச்சுட்டு, முழுசா வீடு போய்ச் சேர்ந்தா போதும்.” சுஹாசினியின் குரலில் கலவையான உணர்வுகள். அதில் கவலை தான் அதிகமாக இருந்தது போலிருந்தது.
ரோஜா, மறுப்பாக ஒன்றும் சொல்லவில்லை. அதே நேரம் அவள் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டது போலவும் காட்டிக் கொள்ளவில்லை.
“ஊர்ல ஹோட்டலே இல்லாத மாதிரி உன் தம்பி, இந்த ரிசார்ட்டை புக் பண்ணி வச்சிருக்கான் பாரு. அவனைச் சொல்லணும்” சுஹாசினியின் புலம்பலை காதில் ஏற்றிக் கொள்ளவில்லை ரோஜா.
மங்களூரில், அதுவும் குறிப்பாக இந்த ரிசார்ட்டை அவன் புக் செய்ததற்கான காரணம் அவளுக்கு நன்றாகத் தெரியும். ஏன், சுஹாசினிக்கும் கூடத் தெரியும் தான்.
அவளது வாழ்வு தொடங்கிய இடத்தில் மீண்டும், அவளைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறான் அவன். நிரந்தரப் பிரிவை அவள் தேர்ந்தெடுக்கும் முன், அவள் வாழ்வு தொடங்கிய விதத்தை நினைவு படுத்த விரும்புகிறான் போலும். ஆனால், இதனால் எல்லாம் அவள் முடிவு மாறி விடுமா?
இந்த ஒரு வாரம் அவளது முடிவை மாற்றி விடுமா? ஏழே நாட்கள் அவளது வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கி விடுமா? அவளுக்கு நிச்சயமாய்த் தெரியவில்லை.
இத்தனை நாட்கள் வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்தது மாறி, இனி அவளுக்காக வாழ்ந்திட வேண்டும் என்ற உந்துதல் அவளுள்ளே உதித்திருந்தது.
சுஹாசினி கதவைத் திறக்க, அவரவர் எண்ணங்களோடு மௌனமாய்த் தங்களின் அறைக்குள் நுழைந்தனர் தோழிகள்.
பயணக் களைப்பு உடலை அசர செய்திருந்த போதும், அதைப் பொருட்படுத்தாமல், கடலைப் பார்த்திருந்த அறையின் திரைசீலைகளை விலக்கி விட்டாள்.
அவளது மனதை போலச் சீறி, கொந்தளிக்காமல் மிகச் சாந்தமாக இருந்தது கடல்.
“இப்ப என்ன நடந்திடுச்சுன்னு உங்க வீட்டுக்கு கிளம்பற நீ?” சீறலாய் கணவனின் குரல் காதில் எதிரொலித்தது.
“இன்னும் என்ன நடக்கும்னு எதிர்பார்க்கறீங்க?” பதிலுக்குக் கத்தியவள்,
“லவ் இஸ் அப் பவர்ஃபுல் புராமிஸ் அண்ட், நீங்க அந்தச் சத்தியத்தைக் காப்பாத்தலை. காதலை வெறும் சொல்லில் இல்ல, செயலில் காட்டணும். வார்த்தையில் இல்ல, வாழ்ந்து காட்டுறதில் தான் இருக்கு காதல். இது எதையுமே நீங்க சரியா செய்யலை. இனி, என் அன்பும், காதலும் உங்களுக்கு இல்ல” அவளின் கரத்தை இறுக பற்றியிருந்த கணவனின் கையை உதறி விட்டு, கண்ணீருடன் கதறிய நினைவில் இப்போதும் அவளுக்குக் கண்ணோரம் கண்ணீர் திரண்டு விழ தயாராக நின்றது.