நற்காதல் நெய்திடவா – 15 (1)

அது முன்மாலை பொழுது. வேதாவின் மனநிலையைப் போலவே வானமும் கருத்திருந்தது. மழை வருவதற்கான அத்தனை அறிகுறிகளும் காற்றில் தெரிய, அவளை அன்பு மழையால் நனைக்கும் வெற்றியின் வார்த்தைகளின் ஈரம் தேடியது அவள் மனது.

தன் வீட்டின் முன்புறம் இருந்த வராண்டாவில் வந்து நின்றாள். முதல் முறை வெற்றி அங்கு நின்று அவளிடம் பேசிய நினைவு நிழலாக வந்தது. அங்கு அவனே நிற்பது போன்ற பிரம்மையில் கண்களை இறுக மூடித் திறந்தாள்.

அந்நேரம் மழை பொழிய, சாரல் அவளை நனைத்து, மேனி சிலிர்க்க செய்தது.

“யார் குடை பிடிப்பது.. மழைக்கும்.. காதலுக்கும்.. நனைவோம்” என்று கவிதை பேசிய வெற்றியின் நினைவு வர, அலைபேசியில் அவனை அழைத்தாள் வேதா.

முந்தைய இரவு மற்றும் இன்றைய அதிகாலையைப் போலவே அவளின் அழைப்பை எடுக்கவில்லை அவன். தன்னைத் தவிர்க்கிறான் என்று கலங்கிய மனத்துடன் நின்றவளுக்கு அவன் மேல் கோபமும் சேர்ந்தே வந்தது.

சென்னை – ஆந்திரா தேசிய நெஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வெற்றியின் தோளில் தட்டினார் சுந்தரம்.

“போன் அடிக்குது பாருடா. வண்டியை ஓரமா நிப்பாட்டி, யாருனு எடுத்து பேசு” அவர் சொல்ல, வெற்றி மௌனமாய் வண்டியை செலுத்தினான்.

“டேய், உன்னைத் தான்டா” அவர் அதட்ட, “பின்னாடி உட்கார்ந்து இருக்க உங்களுக்குப் போன் அடிக்கிறது கேட்கும் போது, எனக்குக் கேட்காதா ப்பா? பேசாம வாங்க” எதிர் காற்றில் அப்பாவிடம் எகிறியது அவன் குரல்.

“ஏதாவது பேங்க் சம்மந்தப்பட்ட காலா இருக்கப் போகுது டா. எடுத்துப் பேசுடா” என்றவர், குழப்பத்துடன், “நீ எப்பவும் போனை எடுக்காம இருக்க மாட்டியே? என்னாச்சு இன்னைக்கு? வேதா காலா?” என்ற அவரின் கேள்வியில் வெற்றியின் கைகள் தன்னிச்சையாக வாகனத்தின் வேகத்தைக் குறைத்தது.

“ஒரு காதல் தேவதை…” அவளுக்கு மட்டுமேயான பாடல். ஒவ்வொரு முறை அலைபேசி அடிக்கும் போது, அவனது மனதும் சேர்ந்தே வலிக்க அடித்துக் கொள்கிறது. அவளை எதிர்கொள்ளும் துணிவில்லை அவனுக்கு.

முன்தினம் நடந்ததற்கு யாரை குற்றம் சாட்டுவது? யாரோ பேசினார்கள். யாரோ கேள்வி கேட்டார்கள். அதற்கு வேதா எப்படிப் பொறுப்பாவாள்? என்று அவன் மண்டையில் கொட்டி உணர்த்தி இருந்தார் சுந்தரம். அதற்கு முன்பே அவளை அழ விட்டு வந்ததற்கு அவனும் வருந்திக் கொண்டிருந்தான்தான்.

இப்பொழுது வண்டியை ஓரம் கட்டி அவளுக்கு அழைத்தான்.

“வெற்றி..” என்ற குரலில் இருந்த பரிதவிப்பில் அவனுக்குத் தொண்டை அடைத்தது.

“வெற்றி…” அவனது அமைதி பார்த்து மீண்டும் அழைத்தாள் வேதா.

“வேதா…” கரகரத்த குரலில் அழைத்தான். சட்டென அவள் பக்கம் ஒரு விசும்பல் ஒலி வர, “எம்மாடி வேதா, அழறியா?” பதட்டமாகக் கேட்டான் வெற்றி. அவளை விட்டு வெகுதூரம் தள்ளியிருந்தான். அந்த நிமிடம் அவளின் கண்ணீரை துடைத்து விட முடியா கொடுமை அவனைக் கொன்றது.

அவனின் அந்த அழைப்பில் லேசாக விசும்பி, “சாரி, வெற்றி. அத்தையை அப்படிப் பேசுவாங்கன்னு.. சத்தியமா நான் எதிர்பார்க்கல.. உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டோம் இல்ல. நான் என்ன பண்ணட்டும்? எனக்குத் தெரியல. அதுக்காக என்னைச் சட்டுனு விட்டுட்டு போய்ட்டீங்க நீங்க. இல்ல?” அழுகையினால் குரல் திக்கி திக்கி வர, வார்த்தைகளும் திக்கியது. அந்தக் கண்ணீர் தோய்ந்த வார்த்தைகள் அவனைத் துல்லியமாகத் தாக்கியது.

“செல்லமே. நான் கோபத்துல..” அவனின் சமாதானத்தை ஏற்கும் நிலையில் இல்லை அவள்.

“என்னை அப்படிக் கூப்பிடாதீங்க. என்கிட்ட பேசாதீங்க. என்னை அழ வச்சுட்டீங்க இல்ல?”

“வேதா..”

“நோ, சொன்னீங்க. என்னை வேணாம் சொன்னீங்க. என் கையை உதறிட்டு போனீங்க.” அழுகையின் ஊடே புகார் படித்தாள்.

“நேத்து நைட் கால் பண்ணேன் எடுக்கல நீங்க. இப்போவும் எடுக்கல”

“நைட் டிராவல்ல இருந்தேன் வேதா. இப்பவும் அப்பா கூட ட்ரைவ் வந்து இருக்கேன்.” சமாதானத்தின் முதல் படியாக விளக்கம் சொல்ல முயன்றான்.

“மிஸ்டு கால் பார்த்தா எப்பவும் கூப்பிடுவீங்க. இப்போ ஒரு மெசேஜ் கூடப் போடல. நமக்கு நேத்துதான் எங்கேஜ்மென்ட் ஆச்சு. ஆச்சு தானே? என்னை வேணவே, வேணாம்னு முடிவே பண்ணிட்டீங்களா?” அவளின் கேள்வி அவனைப் பலமாகத் தாக்கியது.

“வேதா..”

“வேணாம். இப்போ நீங்க எதுவும் சொல்ல வேணாம். நான் கேட்க மாட்டேன்.” அழுகை நின்று அவள் குரலில் ஒரு தீர்க்கம் வந்திருந்தது.

“நான் ஒரு போதும் எதையும் அவமானமாகக் கருதியதில்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம். இது உங்க ஜெயகாந்தன் சொன்னதுதான். உங்களை நாங்க வேணும்னு அவமானப்படுத்தல. எங்களுக்கும் அது அவமானமாதான் இருந்தது. எங்க வீட்ல வச்சு அப்படி நடந்தது, உங்ககிட்ட என்ன சொல்லி மன்னிப்பு கேட்க? என்ன சமாதானம் சொல்ல, சத்தியமா எனக்குத் தெரியல. ஆனா, நீங்க கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உங்களுக்கு எங்க நியாயம் புரியலாம். புரியலன்னாலும் பரவால்ல. ஏன்னா, நீங்கதான் ஏற்கனவே உங்க முடிவை எடுத்துட்டீங்க தானே?” என்றவள்,

“காதல் பிறக்க அற்பமான காரணங்கள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனா, அது அழிய சில அற்ப மனிதர்கள் போதும். எங்க அத்தையை மாதிரி. அவங்களால உங்க காதல் அழிஞ்சுடுச்சு. இல்ல வெற்றி சார்?” அழுத்தமாகக் கேட்டாள். அந்தக் குரலில் மறைந்திருந்த வலியும், வேதனையும் அவனை உடைத்து போட்டது. அவளின் வேற்றுமையான வெற்று அழைப்பில் நொறுங்கினான் வெற்றி.

“இல்ல, வேதா..”

“ஆமா. இல்லதான். இனி நமக்குள்ள எதுவும் இல்ல. என்னை விட்டுட்டு போனீங்க தானே? அப்படியே இருக்கட்டும்” வெற்றியை பேச விடவேயில்லை வேதா. கடைசி வார்த்தையையும் அவளே சொல்லி, அழைப்பை துண்டித்திருந்தாள்.

வெற்றி அந்த இடத்திலேயே அலைபேசியைக் கையில் பிடித்துக் கொண்டு அசையாமல் நின்றான். அவன் விரலில் நேற்று வேதா அணிவித்த மோதிரம் பளபளத்தது. மென்மையாய் அவன் கரம் பற்றிய வேதாவின் ஸ்பரிசத்தை இப்போதும் அவனால் உணர முடிய, உணர்ச்சி மிகுதியில் தொண்டை அடைத்து வலித்தது.

அப்பொழுது அவனை நோக்கி நீண்ட சுந்தரத்தின் கரங்களில் தண்ணீர் இருந்தது.

“தண்ணி குடி வெற்றி” என்று நீட்டியவரை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

“விடு டா. ஒரு கல்யாணம்னா நூறு பிரச்சனை வரும். அதுவும் உன்னோடது போல லவ் மேரேஜ்னா ஆயிரம் பிரச்சனை. அப்பா இருக்கேன் இல்ல. நீ ஏன் கவலைப்படுற? என்னைக்கு இருந்தாலும் வேதாதான் நம்ம வீட்டு மருமக..” முன் தினத்தில் இருந்து இதையே பலமுறை சொல்லி விட்டார். அந்த ஆறுதல் அவனுக்குத் தேவையாக இருக்க, அப்பாவின் முகம் பார்த்தான் அவன். மகனின் தோளில் கைப் போட்டு சேர்த்தணைத்துக் கொண்டார் சுந்தரம்.

அவருக்கு அவனது மனது புரிந்தது. அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவரைத்தான் அப்பா என்று அழைக்கிறான் வெற்றி. இந்தத் திருமணப் பேச்சின் மூலம் அவரைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி விட்டோம் என்று குற்ற குறுகுறுப்பில் இருக்கிறான் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.

அம்மாவை மூன்றாம் மனிதர்கள் தவறாகப் பேசியதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதைப் புரிந்த கொள்ள முடியாதவரா அவர்? அந்தக் கடினமான சூழலை முன்தினமே அவசர அவசரமாகச் சரி செய்திருந்தார் அவர். ஆனாலும், மகனை இப்படிப் பார்க்க அவருக்கு மனத்தைப் பிசைந்தது.

அவனது காதலை கூட முதலில் அவரிடம் தானே சொன்னான் அவன். இப்போது அவன் மனக் கஷ்டத்தில் உழலும் போதும், அவரை அல்லவா வெளியில் அழைத்துச் வந்திருக்கிறான். மனம் நெகிழ்ந்து போனார் அவர்.

“வா வெற்றி. ஒரு டீ குடிப்போம்” அவர் சொல்ல, அமைதியாய் வண்டியை நோக்கி நடந்தான். பத்து நிமிடங்களில் சாலையோர தேநீர் கடையின் முன் வண்டியை நிறுத்தினான் அவன்.

அப்பாவிற்குத் தேநீரும், தனக்குக் காஃபியும் வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்தான்.

அவன் கண்கள் அங்கிருந்த மர பெஞ்சையே இமைக்காமல் பார்க்க, “வேதாவோட இங்க வந்திருக்கியா?” என்று கேட்டார் சுந்தரம்.

மௌனமாய்த் தலையசைத்தான் வெற்றி. அவருக்குச் சிரிப்பு வந்தது.

“என்னமோ பெரிய காதல் தோல்வி மாதிரி சீன் போடாத டா வெற்றி” மகனின் முதுகில் அடித்துச் சொன்னார் அவர்.

“போங்கப்பா” கோபமாகச் சொன்னான் வெற்றி.

அவருக்கு முன் தினம் இதையே மகன் உடைந்த, கரகரத்த குரலில் சொன்னது நினைவு வந்தது.

வேதா வீட்டில் இருந்து கோபமாக வெளியில் வந்து வேனில் ஏறினான் வெற்றி.

வானமாமலை, விஜய் இருவரும் அவர்களின் பின்னே ஓடி வந்து சமாதானம் செய்ய, வெற்றி இறங்கி வரவில்லை.

வானமாமலை கசங்கி போன முகத்துடன் சுந்தரத்தின் கைப் பிடித்தார்.

“எங்களை மன்னிச்சுடுங்க. என் தங்கச்சி பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்கறேன். என் பொண்ணு தங்கம். அவளுக்கு எதுவும் தெரியாது. நாங்களும் வேணும்னு எதையும் மறைக்கல..” படபடவென அவர் பேச, சுந்தரம் அவரின் கையை அழுத்திக் கொடுத்தார்.

“எனக்குப் புரியுது சம்மந்தி. நீங்க இவ்வளவு விளக்கம் எல்லாம் சொல்லத் தேவையில்ல. நாங்க கோபமா கிளம்பல. எங்க மகனை மதிச்சி கிளம்பறோம். அவ்ளோதான். நாளைக்குப் பொறுமையா பேசுவோம். இப்ப நடந்ததால எதுவும் மாறப் போறதில்ல.” சுந்தரம் சொல்ல, வானமாமலை அவரை மலைப்புடன் பார்த்து, நன்றி சொன்னார்.

அவர்களின் வேன் வேதாவின் வீட்டில் இருந்து வெளியேற, மகனிடம் சென்று அமர்ந்தார் சுந்தரம். அவன் இருக்கையில் கண் மூடி அமர்ந்திருந்தான். அவரை உணர்ந்து கண் திறந்து, “சாரி ப்பா” என்றான், மனப்பூர்வமாக.

“யாரோ பேசினதுக்கு நீயேன் டா வெற்றி சாரி சொல்ற?” மகனின் தோளில் கைப் போட்டு சொன்னார் அவர்.

“நீ பண்ணது சரியில்ல வெற்றி” ரேவதி அவனது இருக்கையில் சாய்ந்து நின்று சொல்ல, “அம்மா..” என்றான் அவன்.

“25 வருஷமா பேச்சுக் கேட்கிறேன் டா. இது பெரிய விஷயமா எனக்கு? அவங்க கேட்டதுக்குச் சரியான பதிலை சொல்றதை விட்டு, இப்படிப் பேசிட்டு வந்துட்டீயே டா. வேதா, அழுதிட்டு இருந்தா. பாவம்” என்று அவர் சொல்ல சொல்ல, குற்ற உணர்வு அவனை நெரித்தது.

“எங்களுக்கு நீ முக்கியம். உன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, உன் கூட, நீ கூப்பிட்டதும் வெளில வந்துட்டோம். அப்போ, வேதாவும் அப்படித் தானே வெற்றி யோசிப்பா? உனக்கு நாங்க முக்கியம் மாதிரி, அவளுக்கு அவங்க குடும்பம் முக்கியம் இல்லையா?” ரேவதி கேட்க, அசையாமல் அமர்ந்திருந்தான் வெற்றி.

அவனுக்கு மனத்தை என்னமோ செய்தது. வேதாவின் கலங்கிய முகம் கண்களில் வந்து நின்று அவனை வதைத்தது.

“பதில் சொல்லு டா.” ரேவதி அவனை உலுக்க, மௌனம் மட்டுமே அவன் மொழியாகியது.

“இது பூ வைக்கிற ஃபங்ஷன் வெற்றி. ரொம்ப நெருங்கின சொந்தக்காரங்களை மட்டும்தான் கூப்பிட்டு இருப்பாங்க. அவங்களுக்குக் கண்டிப்பா நம்ம விஷயத்தை, உங்க லவ் பத்தி எல்லாம் சொல்லி இருப்பாங்க. ஏன்னா, மாப்பிள்ளை என்ன பண்றார்? நீங்க பார்த்த பையனா இந்த மாதிரி கேள்வி எல்லாம் கண்டிப்பா வந்திருக்கும்” அவர் சொல்ல, கேள்வியாக அம்மாவின் முகம் பார்த்தான் வெற்றி.

“அவர்கிட்ட கேட்டவங்களுக்குத் தகவல் சொல்லி இருப்பார் டா. அதுக்காக எல்லாச் சொந்தத்துக்கும், எல்லாத்தையும் சொல்லணும்னு என்ன அவசியம்? அதுவும் அவரா எப்படிச் சொல்வார்? இதெல்லாம் நாமளே புரிஞ்சுக்கணும் வெற்றி. உனக்குக் கோபத்துல எதுவுமே பிடிபடல” அவர் சொல்லவும் தலைக் குனிந்தான் வெற்றி.

“ஒரு விசேஷ வீடுன்னா, பிரச்சனை பண்ணவே நாலு பேர் கிளம்பி வருவானுங்க. அவங்க பேச்சை கேட்டு, நாமளும் இப்படி நடந்துட்டு இருக்க வேண்டாம். இப்படி வெளிய வந்திருக்க வேண்டாம்” என்றார் ரேவதி மன வருத்தத்துடன். தன்னால் தானே இப்படியானது என்று மகனுக்காக மறுகினார் அவர்.

“வேதா வீட்டுக்கு திரும்பிப் போய்ப் பேசுவோமே மா?” என்று கேட்ட மகனை முறைத்து விட்டு முன்னே சென்று தன் இருக்கையில் அமர்ந்தார் ரேவதி.

error: Content is protected !!
Scroll to Top