பெங்களூரின் பிரதான சாலையில், மிதமான தூறலில் நனைந்தபடி விரைந்து கொண்டிருந்தது அந்தச் சொகுசு கார்.
அதன் உள்ளே அமர்ந்திருந்த பெண்கள் தங்களுக்குள் சலசலத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் உடல் மொழியில் உற்சாகம் சற்றே தூக்கலாக இருந்தது.
காரை செலுத்திக் கொண்டிருந்தவன், அவர்களின் ஒவ்வொரு பேச்சுக்கும் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.
ஆனால், அதில் ஒருத்தி மட்டும் அவர்களின் உலகில் இருந்து விலகி, வெறித்த பார்வையுடன் வேறெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். விழிகள் தன் கண் முன்னே எல்லையற்று நீண்டு கொண்டிருந்த சாலையில் பதிந்திருந்தாலும், கவனம் அதில் இல்லை என்பது நன்றாகவே தெரிந்தது.
தனது உணர்வுகளைத் தான் வெளிப்படுத்தாமலேயே அருகில் இருப்பவனால் உணர்ந்து கொள்ள முடியும் என்பதை அவள் நன்கு அறிவாள். ஆனாலும், தறிக் கெட்டு ஒடும் சிந்தனைகளைத் தடுக்க முடியாமல் குழம்பிய மனதுடன் அமர்ந்திருந்தாள்.
“மங்களூர் ரீச் ஆகிட்டு கால் பண்ணுக்கா. பண்ணுவ தானே?” என்று அவன் வெகு அக்கறையுடன் வினவ, தன் பார்வையைக் காரை செலுத்திக் கொண்டிருந்த அவனது கைகளில் பதித்து, “பண்றேன்” என்றாள் அவள்.
மீண்டும் அவள் கண்கள் சாலையையும், அதில் விரையும் வாகனங்களையும், மனிதர்களையும் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தது.
நிமிடங்கள் தூரங்களை விழுங்க, சற்றைக்கெல்லாம் பெங்களூர் விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.
“அப்புறம், நாங்க கிளம்பறோம். நீ வீட்டுக்கு பார்த்துப் போ. மழைப் பெய்யுது, கவனம். இடையில எங்கேயாவது காரை நிறுத்தி ரெஸ்ட் எடு. தொடர்ந்து ஒட்டாத. சென்னை ரீச்சானதும் எனக்குக் கால் பண்ணி சொல்லு.” என்று அவன் கண்களைப் பார்த்து அக்கறையுடன் சொன்னாள்.
அவள் எச்சரித்துக் கொண்டிருக்கும் போதே மழை அவர்களைத் தொட்டுத் தழுவி, நழுவி பின் தரைத் தொட்டது.
“ஹ்ம்ம் ஓகே. இப்போ, நீங்க செக்யூரிட்டி செக் போற வரை, நான் இங்கேயே நிக்கறேன் பாப்பா, பிளீஸ்.” என்று அவன் சொல்ல, கவலை தோய்ந்த அவன் முகத்தைப் பார்த்தவள், “சரி” என்று விட்டு, அவ்விடம் விட்டு மெல்ல நகர்ந்தாள். அவளது தோழிகள் இருவரும் அவளைப் பின் தொடர்ந்தனர்.
அவரவர் பெட்டியை இழுத்தபடி விமான நிலையத்திற்குள் நுழைந்தனர்.
“ஒரு நேரம் அக்கா சொல்றான், ஒரு நேரம் பாப்பா சொல்றான். ஏதாவது ஒன்னை சொல்றானா பார். கேட்கறவன் எல்லாம் மண்டை குழம்பி போகனும்” தோழியின் காதில் கிசுகிசுத்து சிரித்தாள் சுஹாசினி. அதைக் கேட்டவளின் முகத்திலும் புன்னகை மின்னி மறைந்தது.
“இதென்ன புதுசா கேட்கற மாதிரி ரியாக்ட் பண்ற சுஹா? அவன் இன்னைக்கு, நேத்தா இதைச் சொல்றான்? அவன் எமோஷனல்லா இருந்தா, இப்படித் தான் உளருவான்னு நமக்கு நல்லா தெரியும். ஜஸ்ட் கண்டுக்காம விடு” என்றாள் பனிமலர்.
பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம் அந்த அதிகாலை வேளையிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பெண்கள் மூவரும் மங்களூர் செல்கின்றனர்.
“காஃபி?” என்றாள் சத்தமாக முதலாமவள். அவளுக்கு, அந்த அதிகாலையிலும் பசி வயிற்றைக் கிள்ளியது.
“வேண்டாம்” மற்ற இருவரும் ஒன்றாக மறுப்பு தெரிவிக்க, தனக்கு மட்டும் காஃபி வாங்கிக் கொண்டாள். மூவரும் தங்கள் விமான அழைப்பிற்காக அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்து காத்திருக்கத் தொடங்கினர்.
உதட்டுக்கு காபியை கொடுத்துக் கொண்டே, கண்களைச் சுழற்றினாள் அவள். அங்கிருந்த அத்தனை முகங்களிலும் வழிந்த உறக்கத்தையும் தாண்டி, மகிழ்ச்சியின் ரேகைகள் அப்பட்டமாகத் தெரிந்தது. வெகு சிலரின் முகத்தில் தான் பிரிவின் வலி தென்பட்டது.
அவர்கள் விடை பெறும் பொருட்டுக் கட்டி அணைப்பதையும், முத்தமிடுவதையும், கைகளைப் பற்றிக் கொள்வதையும் கண்களைச் சுருக்கி பாத்தாள். தன்னால் சிரிக்கக் கூட முடியாத சூழலில் இவர்களால் எப்படிச் சந்தோசமாக இருக்க முடிகிறது என்ற எண்ணம் மனதை ஆக்கிரமிக்கப் பெருங்குரலெடுத்து கத்த வேண்டும் போலிருந்தது.
அப்படிச் செய்தால் பைத்தியம் என்று நினைத்து விடுவார்கள் என்பதும் புரிந்தது. மனதை அறுத்த தேவையற்ற எண்ணங்களை மனதின் ஆழத்திற்குத் தள்ளி விட்டு, காபியை மெதுவாக அருந்த தொடங்கினாள்.
“ஹேய், இங்க பாரேன்” என்ற சுஹாசினியின் அழைப்பில் அவள் பக்கம் திரும்பினாள். இயந்திரத்தைப் போல அவள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தாள்.
ஒரு மணி நேரம் அவர்களின் பேச்சில் கரைந்திருக்க, அவர்களின் விமானத்திற்கான அழைப்பு வந்தது.
மூவருக்கும் அடுத்தடுத்த இருக்கைகள். விமானம் டேக் ஆப்பிற்கு ஆயத்தமாக, தனது சீட் பெல்ட்டை இறுக்கமாக பற்றி இருந்த பனிமலரை பார்த்து புன்னகைத்து, “ரிலாக்ஸ் மலரே. ஃப்ளைட்ல நீ மட்டுமா இருக்க? கண்ணைத் திறந்து பாரு. எவ்வளவு பேர் இருக்காங்க. பயப்படாத. ஒன்னும் ஆகாது” தோழியின் தோளில் கைப் போட்டு, அவளது தோளை அழுத்தியபடி சொன்னாள் சுஹாசினி.
அவசர அவசரமாக ஆழ்ந்த மூச்சுக்களை உள்ளிழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயற்சித்தாள் பனிமலர்.
“சில வருஷத்துக்கு முன்னாடி இதே மங்களூர் ஏர்போர்ட்ல தானே, துபாய் ப்ளைட் ஒன்னு ஆக்சிடென்ட் ஆச்சு. ரன் வேயில் இருந்து தவறி, பள்ளத்தாக்கில் ஃப்ளைட் விழுந்து, அவ்வளவு பேர் இறந்து போனாங்க. நூறுக்கும் மேல இருக்கும். இல்ல?” சுஹாசினி அவளைத் தீப் பார்வை பார்க்க, அதைக் கவனிக்காமல் தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.
“டேபிள் டாப் ரன்வே இல்லையா? அதனால தான் அப்படி ஆச்சுன்னு சொன்னாங்க. விமானம் தரையிறங்கும் போது தடுமாறி… ம்ப்ச், வெரி ரிஸ்க்கியான ரன்வே. ஆனா, ரொம்ப அழகான ஏர்போர்ட்.” என்று அவள் தன் போக்கில் சொல்லியபடி தலையை அசைத்துக் கொண்டிருக்க, சுஹாசினி வேகமாகத் தங்களின் இருக்கைக்கு மேலிருந்த ப்ளைட் அட்டெண்டருக்காகப் பட்டனை அழுத்தினாள்.
அடுத்த நிமிடம் அவள் முன் நின்ற பெண்ணிடம், “சாரி” என்றவள், “கொஞ்சம் தண்ணி கிடைக்குமா? ஆர் ஜுஸ்? எதுனாலும் ஓகே.” என்றாள் பதட்டத்துடன்,
“பிளீஸ் வெயிட் ஃபார் டேக்-ஆப் மேம்.” என்று புன்னகையுடன் சிடுசிடுத்தவள், “ஆல் ஓகே மேம்?” என்று லேசாக முன்னால் சாய்ந்து பனிமலரின் முகம் பார்த்து விசாரிக்க,
“ஷீ இஸ் ஹாவிங் பேனிக் அட்டாக்” என்றாள் சுஹாசினி.
“பத்து நிமிசத்தில சரியாகிடுவா. பிளீஸ், தண்ணி மட்டும் கொடுங்க” என்றாள் கெஞ்சலாக,
“யூ நீட் எனி ஹெல்ப் மேம்?” பணிப்பெண்ணும் பதட்டத்துடன் கேட்க,
“நோ, இட்ஸ் ஓகே. ஜஸ்ட் வாட்டர் பிளீஸ்”
“ஓகே” என்று விலகிய அந்தப் பெண், அடுத்தச் சில நொடிகளில் திரும்பி வந்து சுஹாசினியின் கையில் தண்ணீரை கொடுத்து விட்டு சென்றாள்.
“மலர், டேக் டீப் ப்ரத். மெதுவா, நல்லா மூச்ச இழுத்து விடு. உனக்கு ஒன்னுமில்ல. நாங்க உன் பக்கத்தில தான் இருக்கோம். நீ பத்திரமா இருக்க. பிளீஸ், டேக் அ டீப் ப்ரத்”
அது வரை வேறு ஏதோ உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவள் சட்டென்று அந்த வார்த்தைகளில் தரையிறங்கி இருந்தாள்.
“ஐ அம் சாரி சுஹா. சாரி. தெரியாம உளறிட்டேன். மலர் ரிலாக்ஸ். ஒன்னுமில்ல டா, பிளீஸ். மூச்சை இழுத்து விடு” என்றாள் படபடப்புடன், சுஹாசினியோ கோபம் சற்றும் குறையாமல் அவளையே முறைத்துக் கொண்டிருந்தாள்.
‘எல்லாம் தெரிந்த நீயே இப்படிச் செய்யலாமா?’ என்று குற்றம் சாட்டியது அவள் விழிகள். அதை எதிர்கொள்ள முடியாமல் தன் விழிகளைத் தாழ்த்தினாள் அவள்.
மீண்டும் மீண்டும் மன்னிப்பை முன் வைத்தவள், தானும் இணைந்து தோழியை இயல்பாக்க முயன்று சிறிது நேரத்தில் வெற்றியும் கண்டனர்.
சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கோர விபத்தில் தன் கண் முன்னே மனதுக்கு மிக நெருக்கமான ஒருவரை இழந்திருந்தாள் பனிமலர். அப்போதிலிருந்து இப்படித் தான், அவளால் விபத்துக் குறித்த பேச்சுக்களைக் கூடச் சாதாரணமாகக் கடக்க முடியாது.
அந்த விபத்திற்குப் பின் வந்த நாட்களில், சாதாரணச் சாலை பயணத்தைக் கூட முடிந்த அளவு தவிர்த்தாள் பனிமலர். தோழிகள் இருவரும் இணைந்து தான் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்குக் கொண்டு வந்தது. ஆனால், இன்று அவளது பேச்சே மீண்டும் தன் தோழியைப் பயமுறுத்தி இருக்கிறது என்பதை நினைக்கையிலேயே அவளுக்குப் பெரும் சங்கடமாகிப் போனது.
குற்ற உணர்ச்சி மனதை அழுத்த கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள். ஒரு மணி நேர பயணம் என்பதால், உடனே தரையிறங்குவதற்கான அறிவிப்பு வந்தது.
அடுத்தப் பத்தாம் நிமிடம் விமானத்தை விட்டு வெளியில் வந்ததும் தான் பனிமலர் சற்று ஆசுவாசமானாள்.
சிறிது நேரத்தில் எல்லாம் தங்கள் உடைமைகளுடன் விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தவர்கள், அங்கே வாயிலில் அவர்களுக்காகக் காத்திருந்த காரில் ஏறி அமர்ந்தனர்.