மகளின் அன்பில் இளமாறன் இளகி நின்றான்.
“ரோஜாம்மா எங்க?” அவன் கண்கள் மனைவியைத் தேட, “அதோப்பா.. நித்திம்மா கூட…” அவன் தாடையைப் பிடித்துத் திருப்பிக் காட்டினாள் ஆதினி.
“ஆமா, அம்மா அங்க இருக்காங்க” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுகந்தி, சங்கரன் அவனிடம் வந்து நின்றார்கள்.
மேடை அலங்காரம், உணவு, முக்கிய விருந்தினர்கள் என்று அவர்கள் பேச்சு நீள, இளமாறனை தேடி சமையல்கலை வல்லுநர் வந்து நின்றார்.
அன்றைய தினத்தின் சமையல் பொறுப்பு வெளியில் கொடுக்கப்பட்டிருந்தது. சென்னையின் வளர்ந்து வரும் கேட்டரிங் நிறுவனம் ஒன்றிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தான் இளமாறன். ஆனால், அவனே பிரபல செஃப் என்பதால் எல்லாவற்றிலும் அவனது கருத்தை கேட்டு நின்றார் அதன் உரிமையாளர்.
இப்போதும் ஏதோ வேலையாக அவர்கள் அழைக்க, “ஆதியை என்கிட்ட கொடுத்துட்டு போய் என்னனு பாரு மாறா” என்றார் சுகந்தி.
“நானும் வரவாப்பா மாறா?” என்று சங்கரன் கேட்க, அவரையும் உடன் அழைத்துச் சென்றான் அவன்.
அவன் சமையல் அறைக்குள் நுழைந்ததும் அவன் பார்வையில் விழுந்தார் கேட்டரிங் உரிமையாளர். அவரை நோக்கி நடந்தான் இளமாறன்.
அங்குத் தயாராகிக் கொண்டிருந்த உணவின் வாசம் அவன் நாசியை நிறைக்க, “இதுல உப்பு கம்மியா இருக்கு. கொஞ்சம் சேருங்க” என்றான்.
“இதுக்குதான் செஃப் உங்களைக் கூப்பிட்டோம்” என்றவரை புன்னகையுடன் பார்த்தான் இளமாறன்.
அவரின் அனுபவத்தின் முன், இவனுக்குக் கொடுக்கும் மரியாதை பெரிது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் மரியாதையுடன் நின்றான்.
உணவில் உப்பு சேர்க்கப்பட்டு ஐந்து நிமிடம் கொதித்ததும் அவனிடம் ஒரு சிறிய கரண்டியில் எடுத்து நீட்டினார்கள்.
பிரியாணியின் தொடு உணவான, “மிர்ச்சி கா சலான்” ருசிப் பார்த்து, “பெர்ஃபெக்ட்” என்றான் இளமாறன்.
எதிரில் நின்றவரின் முகம் மலர்ந்துப் போவதை பார்த்து மலர்ந்து புன்னகைத்தான்.
“அப்போ பந்தி வச்சுடலாம். மத்த அயிட்டம் எல்லாமே ரெடி” என அவர் சொல்லவும், சரியென்று விட்டு அப்பாவும், மகனும் வெளியில் வந்தார்கள்.
இங்கே,
“பாட்டி, அப்பா எங்க? எப்போ வருவாங்க?” என்று ஆதினி மழலையில் கேட்க, “இப்போ வந்துடுவாங்க ராஜாத்தி” என்றார் சுகந்தி.
“தாத்தா?”
“உங்க தாத்தாவை பத்திரமா உங்கப்பா கூட்டிட்டு வருவார் ராஜாத்தி” இம்முறை பேத்திக்குச் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் அவர்.
“ம்ம், சரி” என்ற ஆதினியின் கோலி குண்டுக் கண்கள் மேடையின் மேல் பதிந்தது.
“அத்தை ஏன் அழகா இருக்காங்க?” என்று அவள் கேட்கவும் சத்தமாகச் சிரித்து விட்டார் சுகந்தி.
வெண்பா பட்டும், நகையும், பூவும், மாலையும், புதுப் பெண்ணிற்கே உரிய கல்யாண களையுமாக நிறைந்து அழகியாக நிற்க, குழந்தையின் கண்களுக்கு அது வித்தியாச சுவாரசியத்தைத் தந்து, கேள்வி எழுப்பியதை புரிந்துக் கொண்டவர், “உங்கத்தை எப்பவும் அழகுதான் செல்லம்” என்றார் சிரிப்புடன்.
அந்நேரம் வெண்பாவிற்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு சென்ற ரோஜாவை பார்த்து விட்டு, “அம்மா?” என்று கேட்டாள் குழந்தை.
“உங்கம்மா, கொள்ளை அழகு. உன்னைப் போலவே” என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டார்.
அவள் யோசித்து அடுத்தக் கேள்வியைக் கேட்கும் முன், “உங்க அத்தைக்கு இன்னைக்குக் கல்யாணம். அதான் பட்டு புடவை, நகை, மாலை எல்லாம் போட்டு அழகா இருக்காங்க” என்று விளக்கம் கொடுத்தார்.
ஆதினி சற்றே யோசித்து விட்டு, “அம்மாவுக்கு எப்போ கல்யாணம்?” என்று கேட்டாள்.
வெண்பாவின் பக்கத்தில் நின்றிருந்த ரோஜாவும் முழு அலங்காரத்துடன் கொள்ளை அழகாக வலம் வர குழந்தையின் கேள்வி சுகந்திக்கு நியாயமாகப்பட்டது.
அவர் சிரிப்பை அடக்கி, “உங்கம்மாக்கு, உங்கப்பா கூடக் கல்யாணமாகிடுச்சு ராஜாத்தி. நம்ம வீட்ல ஃபோட்டோ இருக்கே? உங்க வீட்ல சுவர் முழுக்க இருக்கே? ராஜாத்தி தினம் பார்க்கறீங்களே” என்று அவர் கண்களை விரித்துப் பேத்திக்கு நினைவுப்படுத்த, குழந்தை மெல்ல தலையசைத்தாள்.
“அதுல நான் இல்ல. ஆதினி இல்ல” அவளின் பல நாள் குறையை, புலம்பலை இப்போதும் குழந்தை வெளிப்படுத்த,
“நீ அப்போ உங்கம்மா வயித்துல.. இல்லயில்ல.. ராஜாத்தி அதுக்கு அப்புறம்தான் உங்கம்மா வயித்துல வந்தீங்க” என்று பேத்திக்குச் சரியாகச் சமாதானம் சொன்னார் சுகந்தி.
சற்று யோசனைக்குப் பின், “ம்ம்” என்ற குழந்தை, “அம்மா வயித்துல இருந்து என்னை, நீங்க தானே எடுத்தீங்க பாட்டி?” என்று அடுத்தக் கேள்வியைக் கேட்டாள்.
பலமுறை பதில் சொன்னதைப் போலவே இப்போதும், “உங்கப்பாவோட செல்லக்குட்டி அம்மாவை, என் ராஜாத்தியை நான்தான் முதல்ல கையில எடுத்தேன்” என்று பேத்தியின் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னார்.
ஆதினி சத்தமாகச் சிரித்தாள். அவள் பார்வை இன்னமும் தன் அம்மாவின் மேலிருக்க, “அப்போ தம்பி பாப்பாவையும் நீங்கதான் எடுப்பீங்களா பாட்டி?” என்று சந்தேகம் கேட்டாள்.
ரோஜாவின் வயிற்றில் மேல் படிந்து, பேத்தியிடம் மீண்டது சுகந்தியின் பார்வை.
“ம்ம். பாட்டிதான் எடுப்பேன். உன் தம்பியை பத்திரமா, எங்க ராஜாத்திகிட்ட கொடுப்பேன். ஹேப்பியா?” வேகவேகமாகத் தலையை அசைத்த குழந்தையின் பார்வை, மேடையில் ரோஜாவை நோக்கி நடந்த இளமாறன் மேல் விழுந்தது.
“அப்பா..” என்றவள் சற்றே குழம்பி, “பாட்டி, நீங்க தானே எங்கப்பாவோட அம்மா?” என்று நிச்சயப்படுத்திக் கொள்ளக் கேட்க, “ஆமாடி ராஜாத்தி. நான்தான் உங்கப்பாவோட அம்மா” என்றார் பெருமையாக.
“அப்பாவை உங்க வயித்துல இருந்து, நீங்கதான் எடுத்தீங்களா?” அந்த மழலையும், பேச்சும், கேள்விகளும் அவரை மொத்தமாக மயக்கியது. ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தி அவள் கேட்ட விதத்தை எப்போதும் போல மெச்சி மனதினுள் ரசித்தார் சுகந்தி.
“உங்கப்பாவை என் வயித்துல இருந்து வேற ஒரு டாக்டர் எடுத்தாங்க குட்டி” அவர் சொல்லவும், வேகமாக, “வெம்பா அத்தையா?” என்று கேட்டாள் ஆதினி.
வெண்பாவும் மகப்பேறு மருத்துவர் என்பதால் குழந்தையின் கேள்வி என்னவோ சரிதான். ஆனால், சுகந்தி என்ன பதில் சொல்வார்.
பேத்தியை உச்சி முகர்ந்து, “உங்க அத்தை அப்போ பிறக்கவேயில்ல ராஜாத்தி” என்றார் சிரிப்புடன். ஆதினி புரியாமல் குழம்பிப் பார்க்க, அவள் நெற்றியில் கோடுகள் விழுந்தது.
“உங்கப்பாக்கு அப்புறம்தான் வெண்பா அத்தை பிறந்தாங்க. உங்க அத்தையவே பாட்டி வயித்துல இருந்து வேற டாக்டர்தான் எடுத்தாங்க” சுகந்தியின் விளக்கம் குழந்தைக்குச் சுவாரசியம் கொடுக்கவில்லை போலும். முகத்தைச் சுருக்கி, உதட்டை பிதுக்கினாள்.
மகள் மற்றும் அம்மாவின் பார்வை தன் மேலிருந்ததை உணர்ந்து கீழிறங்கி அவர்களை நோக்கி வந்தான் இளமாறன்.
“அ…ப்பா” என்று அவனிடம் தாவினாள் ஆதினி.
“அப்பா, அத்தைக்குக் கல்யாணம், அதான் அழகா இருக்காங்க” என்று அவள் சொல்லவும், சிரித்தான் இளமாறன்.
“ஆமா செல்லக் குட்டி” என்று அவன் ஆமோதிக்க,
“அம்மாவும் அழகு தானாம். பாட்டி சொன்னாங்க” என்று மகள் பெருமை பேச, “அதென்னமோ உண்மைதான்” என்றவன் அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“மாறா, உன் பொண்ணு என்னமா கேள்வி கேட்கிறா தெரியுமா? அறிவுச் செல்லம் எங்க ராஜாத்தி” பேத்தியின் கன்னம் கிள்ளி கொஞ்சினார் சுகந்தி.
“அப்பா பசிக்குது” ஆதினி சொல்லவும், “செல்லத்துக்குப் பசிக்கக் கூடாதே” என்றான் இளமாறன்.
“நித்தியம்மா கூடச் சாப்பிட போறீங்களா செல்லம்? மித்ரனும், மிருதுவும் கூடச் சாப்பிடுவாங்க இல்ல?” அவன் கேட்கவும் வேகமாகத் தலையசைத்தாள் குழந்தை.
“அப்பா, நான் ஐஸ்கிரீம் சாப்பிடவா?” என்று ஆதினியும், “மாறா, நான் அவளைச் சாப்பிட வைக்கவா?” என்று சுகந்தியும் ஒரே நேரத்தில் கேட்க, மகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்த கவனத்தில் அப்படியே, “சரிம்மா” என்றான் இளமாறன்.
சுகந்தி ஒரு கணம் தன் காதில் விழுந்த வார்த்தையை நம்பவியலா அதிர்ச்சியுடன் மகனை ஏறிட்டார்.
மகன் தன்னைத்தான் அழைத்தானா?
இல்லை, தன்னை இல்லையோ? அவன் மகளையோ? என்று தவிப்பும், ஏக்கம் தந்த இம்சையுடன் அவர் மகனை பார்த்து நிற்க, இளமாறன் இயல்பானான்.
“உங்க பேத்தியை சாப்பிட கூட்டிட்டு போங்கம்மா” என்றான்.
சுகந்திக்கு அந்த “அம்மா” என்ற அழைப்பு மட்டுமே காதில் விழுந்தது. முதல் முறையாக உணர்ந்து அழைக்கிறான். அவரின் இதயம் இளகி இமைகள் கண்ணீரில் நனைந்து நின்றது.
மகனிடம் எப்படி இந்த மாற்றம்? அதிலும் இத்தனை வருடங்கள் கழித்து? அவர் பதில் தேட முனையவில்லை.
சில கணங்கள் கேள்விக்குறியவை அல்ல.
கவிதையானவை!!!
அவன் ஏன் அப்படி அழைத்தான்?
மனதில் தோன்றியது. சொல்லி விட்டான்.
அவ்வளவுதான்!!!
“சரி, மாறா…” என்றவரின் குரல் தளுதளுத்தது, மகனிடம் தலையசைத்து பேத்தியை தூக்கிக் கொண்டு முன்னே நடந்தார் சுகந்தி.
இப்போது இளமாறன் எனும் சிறுவனின் மனதும் பாசத்தால் நிறைந்து சாந்தமடைந்தது.
“ம்மா” என்றழைத்தான் அவன். சுகந்தி தன் நடையை நிறுத்தி விருட்டெனத் திரும்பி மகனைப் பார்க்க, இம்முறை அழுத்தமாக அம்மாவின் முகத்தைப் பார்த்துப் பேசினான் இளமாறன்.
“கெஸ்ட் நிறைய வர ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க இங்க இருக்கணும்மா. பாப்பாவை சசிண்ணா, இல்லனா வினோத்கிட்ட கொடுத்துட்டு நீங்க என் கூட இருங்கம்மா” என்றான். சுகந்தி கண்ணீருடன் நின்று, முரணாகப் புன்னகைத்து தலையசைத்தார்.
“சரி மாறா” என்று அவர் விலகி நடக்க,
“இளா..” அவளின் மேடிட்ட வயிறு கணவனை இடிக்கும் அளவுக்கு நெருக்கமாக வந்து நின்று அவனை அழைத்தாள் ரோஜா.
“இருக்கேன் ரோஜா” என்று புன்னகையுடன் அவளைப் பார்த்து சொன்ன இளமாறன் கண்களில் இப்போது பாசத்திற்கு ஏங்கிய அந்த எட்டு வயது சிறுவனைக் காணவில்லை.
ரோஜா சிரித்தாள். அது இளமாறன் முகத்திலும் பிரதிபலித்தது.
நிறைந்தது!!!
சுபம்!!!