பார்த்திபன் காதலி – 43 (1)

“எல்லாம் எடுத்துக்கிட்டியா பார்கவி?” என்று சத்யபாமா கேட்க, “ம்ம் எடுத்துக்கிட்டேன்த்த” என்றாள்.

“நாளைக்கு விசேஷத்துக்கு நீங்களே வந்துடுவீங்க இல்லத்த?” என்று அவள் கேட்க, “ஆமா, எங்களுக்கு வழி தெரியாது பாரு. அதெல்லாம் நாங்களே வந்துடுவோம்” என்று நொடித்துக் கொண்டார்.

அவள் சிரிப்புடன், “சரிங்கத்த. அப்பா வெயிட் பண்றாரு. நான் வர்றேன்” என்றாள்.

அந்நேரம் அவர்களின் வீட்டில் உதவி செய்யும் பெண்மணி வேகமாகக் கூடத்துக்கு வந்து, “எனக்கு நாளைக்கு லீவுதானேம்மா? நீங்க சொன்னீங்கன்னு சொன்னா உங்கத்த விட மாட்டேங்கறாங்க.‌ நீங்களே என்னான்னு கேளுங்கம்மா” என்று அவளிடம் முறையிட்டார்.

“நாளைக்கு நாள் முழுக்க நாம பிரபா அண்ணா வீட்லதானேத்த இருக்கப் போறோம்? அப்புறம் எதுக்கு அக்காவை வர சொல்றீங்க? அவங்க லீவ் எடுத்துக்கட்டும்” என்று அவர் மறுக்க முடியாதபடி சொல்லி விட்டாள்.

“நீங்க லீவ் எடுத்துக்கோங்க கா. இன்னும் ரெண்டு நாள் வேணும்னாலும் சேர்த்து எடுத்துக்கோங்க” என்று அவருக்கு விடுமுறையை வாரி வழங்கினாள்.

அவர் உள்ளே சென்றதும், “ம்ம், பிள்ளை பூச்சிக்குலாம் வாய் முளைச்சுருச்சு” என்று நொடித்தார்.

“ஒரு பிள்ளை பிறக்கற வரைக்கும் பேசாம இருந்துட்டு…”

“பேசாமயே இருந்திருந்தா நீங்க என்னைப் பிள்ளை பூச்சி போல நசுக்கி போட்டிருக்க மாட்டீங்க அத்த?” என்று அவள் கேட்க, “கண்டிப்பா செஞ்சுருப்பா” என்று சொல்லியபடியே வீட்டுக்குள் வந்தார் துரைராஜ்.

பார்கவி புன்னகைக்க, சத்யபாமா கணவரை கடுமையாக முறைத்தார்.

துரைராஜ் பேரனை வாங்கிக் கொஞ்ச, “பச்ச புள்ளைய கையில வச்சுட்டு உங்க மருமக வேலைக்குப் போறாளாம்” என்று கணவரிடம் அவர் புகார் படிக்க, “வேலைக்குப் போறதுக்குலாம் தடை போடுற ஆள் நான் கிடையாதுன்னு உனக்கு நல்லா தெரியும் சத்யா. அதுனால பேசாம இரு” என்று மனைவியை அதட்டினார்.

“அவங்கப்பா வேலைக்கு ஆள் போடுறதை விட்டுட்டு மகளை வேலை வாங்குறார். நீங்க என்னன்னா..”

“அவங்கப்பா இடத்துல நாம இருந்திருந்தா நீ என்ன செஞ்சுருப்ப சத்யா?” என்று அவர் கேட்க, “உங்ககிட்ட போய்ப் பேசினேன் பாருங்க. என்னைச் சொல்லணும்” என்று முகம் திருப்பினார் சத்யபாமா.

“உன் மகன் சொல்ற மாதிரி அப்பப்போ மாமியார் அவதாரம் எடுத்துடுற நீ.” என்று கிண்டலாகச் சொல்லி சிரித்தார் அவர்.

“ம்ம்” என்று ஆரம்பித்த சத்யபாமா, வீட்டினுள் நுழைந்த ரங்கராஜனை கண்டதும், “வாங்க அண்ணே” என்று புன்னகை முகமாக மாறினார்.

துரைராஜ் இப்போது பணி ஓய்வு பெற்று விட்டார். வீட்டில் ஓய்வாக இருக்கிறார்.

மேலும் பத்து நிமிடங்கள் அங்கிருந்து விட்டு, அப்பாவும் மகளும் மண்டபத்துக்குக் கிளம்பினர்.

பிரசன்னாவை வயிற்றில் சுமக்கும் போது பார்கவி பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டாள்.

காரணம் அப்பாவின் உடல்நிலை. திடீரென்று ஒருநாள் காய்ச்சல் என்று படுத்தவர் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலையானது. அப்போதே அப்பாக்கு முழு ஓய்வு கொடுத்து அவள் எல்லாவற்றுக்கும் பொறுப்பேற்று கொண்டாள்.

இப்போது ரங்கராஜன் மேற்பார்வையில் அவள்தான் முழுமையாகத் தொழிலை கவனிக்கிறாள். பார்த்திபன் அவளுக்கு உதவுகிறான்.

அவர்களின் இரண்டு கல்யாண மண்டபம், கேட்டரிங் பிசினஸ் என அனைத்து பொறுப்புகளையும் அவளே பார்க்கிறாள். அவளின் பெற்றோர், மாமியார், மாமனார் துணை இருக்க, பிள்ளை வளர்ப்பு அவளுக்கு அத்தனை சிரமம் தரவில்லை.

மறுநாள் சுபமுகூர்த்தம் என்பதால் அவர்களின் இரண்டு மண்டபங்களும் முன் பதிவாகி இருந்தது. இரண்டுக்கும் உணவு தயாரிக்கும் பொறுப்பு அவர்களிடமே வந்திருந்தது. ஆனால் மறுநாள் அவர்கள் வேறொரு முக்கிய நிகழ்வுக்குச் செல்கிறார்கள். அதனால் இப்போதே சென்று மறுநாளுக்கான எல்லா ஏற்பாடுகளையும் முன்னேற்பாடாகக் கவனிக்கச் செல்கிறாள்.

நாளைய தினம் பிரபஞ்சன் பிரியதர்ஷினியின் புது வீட்டுக்கு பால் காய்ச்சுகின்றனர்.

அவர்கள் இருந்த அபார்ட்மெண்ட் பிளாட்டை வாடகைக்கு விட்டுவிட்டு தனி வீடு வாங்கிக் குடி பெயர்கிறார்கள்.

அந்த விழாவுக்கு நண்பனுக்கு உதவ இப்போதே அங்குச் சென்றிருந்தான் பார்த்திபன்.

பார்கவி எல்லா வேலைகளையும் முடித்து வீடு திரும்பப் பார்த்திபனும் வீடு வந்து விட்டான்.

மறுநாள் அதிகாலையில் குடும்பமாகப் பிரபஞ்சன் வீடு சென்றார்கள்.

பிரித்வி அம்மாவின் மடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அப்பாவின் பக்கத்தில் கொட்ட கொட்ட கண் முழித்து அமர்ந்திருந்த பிரியம்வதா, கார் நின்றதும் ஆவலாக வெளியே பார்க்க, அங்கே புன்னகையுடன் நின்றிருந்தான் பிரபஞ்சன்.

“பிரியாக்குட்டி, வாங்க வாங்க” என்று அவளுக்காகக் கார் கதவை திறந்து விட்டு கையை விரித்தான். அவனிடம் தாவி சென்றாள் அவள். அவளைத் தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு கீழிறக்கி விட்டு, “வாம்மா பார்கவி” என்று பார்கவிக்குக் கதவை திறந்து விட்டான் பிரபஞ்சன்.

“மாமா, நானு..” என்று பிரசன்னா உதட்டை பிதுக்கி அவனை முறைக்க, “நம்மளை எல்லாம் உங்க மாமாக்கு கண்ணு தெரியாது ராஜா. நீ வா உன்னை அப்பா தூக்கிக்கறேன்” என்று மகனுடன் கூட்டணி சேர்ந்தான் பார்த்திபன்.

“டேய், வாடா. என் வீட்டுக்கு வர உனக்கு வெத்தலை பாக்கு வச்சு அழைக்கணுமாக்கும்.‌ வாடா உள்ள” என்று நண்பனிடம் அசட்டையாகச் சொல்லி, பிரியம்வதாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் அவன்.

பிரியதர்ஷினி அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல, வீட்டு வாசலில் மார்பில் கையைக் கட்டிக் கொண்டு நின்று அப்பாவை முறைத்துக் கொண்டிருந்தான் ஏழு வயது பிரவாகன்‌. பின்னே அவன் அப்பாவிற்குப் பிரியம்வதாவை பார்த்தால் அவனை மறந்து விடுமே என்ற கோபம் அவனுக்கு.

“நீ வாடா மாப்ள. மாமா இருக்கேன் உனக்கு” என்று அவன் கை பிடித்து வீட்டுக்குள் சென்றான் பார்த்திபன். அப்போது பிரபஞ்சனின் நான்கு வயது மகள் பவித்ரா ஓடி வர, பிரவாகனின் கையை விட்டுவிட்டு, “பவி குட்டி செல்லம்” என்று அவளைக் கையில் அள்ளி கொஞ்சி முத்தமிட்டான் பார்த்திபன்.

“போங்க மாமா, என்கிட்ட பேசாதீங்க” என்று கோபமாக அவனிடம் முறுக்கி கொண்டு உள்ளே சென்று விட்டான் பிரவாகன்.

அவன் பின்னேயே சென்று சமாதானம் செய்திருந்தான் பார்த்திபன்.

error: Content is protected !!
Scroll to Top