பார்கவி ஒன்பது மணி போலக் குளித்துத் தயாராகி மகனுடன் கீழிறங்கி வந்தாள்.
“இப்படிக் கொண்டா அவனை, நான் அவனைக் குளிக்க ஊத்தி தூக்கிட்டு வர்றேன். நீ சாப்பிடு” என்று பேரனை கையில் வாங்கிக் கொண்டு மகளைக் கவனித்தார் காவேரி.
“ராஜா குட்டி, தூக்கம் வரலையா உங்களுக்கு? வாங்க, வாங்க” என்று அவனை வாங்கிய சரளா, கூடத்தில் கால் நீட்டி அமர்ந்து, அவனைக் காலில் வாகாகக் கிடத்தினார். காவேரி எண்ணெய் எடுத்து நீட்ட, அதை வாங்கி அவன் உடலெங்கும் தடவி, மென்மையாகத் தேய்த்து விடத் தொடங்கினார்.
ரங்கராஜன் அலுவலக அறையில் இருந்து பேரன் பிரசன்னாவுடன் வர, அவருடன் தொழில் பேச்சு பேசியபடி காலை உணவை முடித்திருந்தாள் மகள்.
அவர்கள் அலுவலில் மூழ்கியிருந்த வேளையில் பேரனை குளிக்க வைத்து தூக்கி வந்தார் காவேரி. மகனுக்குப் பசியாற்றி அவன் உறங்கியதும், அவனைத் தூக்கி கொண்டு, அவள் எழுந்திருக்க, மகளைக் கடுமையாக முறைத்தார் காவேரி.
ரங்கராஜன் மகளிடம் இருந்து பேரனை வாங்கிக் கொண்டு வாசலை நோக்கி நடக்க, “கொஞ்ச நாளைக்கு நீங்களே எல்லாத்தையும் பார்க்க வேண்டியதுதானேங்க. பச்ச உடம்புக்காரி இவளையும் இப்படிக் கூட்டிட்டு அலையறீங்களே உங்களுக்கே நல்லா இருக்கா?” என்று அவர் கணவரை கடிய, ரங்கராஜன் பாவமாகத் திரும்பி மகளைப் பார்த்தார்.
“ம்மா, நான் என்ன அங்க போய் வேலையாம்மா செய்யப் போறேன்? எல்லா வேலையும் சரியா நடக்குதான்னு பார்க்க போறேன். அவ்ளோதான். சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுவேன்ம்மா” என்றாள்.
“நான் எது சொன்னாலும் அதுக்கொரு ரெடிமேட் பதில் வச்சுருப்ப நீ. உங்கப்பா மேல இருக்கற அக்கறை உன் மேலயும் இருக்கணும் உனக்கு. புரிஞ்சுதா?” என்று மகளை அதட்டி, “வேலை முடிஞ்சதும் நேரா வீட்டுக்கு வந்து சேருங்க” என்று கணவரை அதட்டினார்.
“பிள்ளைக்குத் தேவையானத எல்லாம் எடுத்துக்கிட்டியா?” என்று மகளை விசாரித்து, எல்லாம் இருக்கிறதா என்று அவரே சரி பார்த்து அவர்களை அனுப்பி வைத்தார். பிரசன்னா அவருடன் இருந்தான்.
காரில் ஏறியதும் பார்த்திபனை அழைத்து, மண்டபத்துக்குச் செல்கிறேன் என்று தகவல் சொன்னாள் அவள்.
“பாரு, பிரபாக்குப் பிரசென்ட் பண்ண ஆர்டர் பண்ண பெயிண்டிங்க நேத்து நம்ம வீட்ல டெலிவரி பண்ணிடானுங்க. அது எப்படி இருக்குன்னு கொஞ்சம் பார்த்து சொல்றியா? அப்படியே நாளைக்கு நமக்குப் போட ட்ரஸ், வேற திங்க்ஸ் எதுவும் வேணும்னா அங்க இருந்து எடுத்துக்கோ. சரியா?” என்று கேட்டான்.
“ம்ம், ஓகே. நான் வீட்டுக்கு போய்ட்டு உங்களுக்குக் கால் பண்றேன்” என்றாள். மகள் பேச்சை கேட்டிருந்த ரங்கராஜன், ஓட்டுநரிடம் காரை மகளின் மாமியார் வீட்டுக்கு விடச் சொன்னார்.
இருபது நிமிடங்களில் அங்கிருந்தார்கள்.
அப்போது ரங்கராஜனுக்கு முக்கியமான அலைபேசி அழைப்பு வரவும், காரில் சாய்ந்து நின்று பேசிக் கொண்டிருந்தார்.
“போன் பேசிட்டு உள்ள வாங்கப்பா” என்று அவரிடம் சொல்லி விட்டு மகனைத் தூக்கி கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.
“வா பார்கவி. இப்பத்தான் மாமியார் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா?” என்று அவளை வரவேற்றார் சத்யபாமா. அவள் கையில் இருந்த பேரனை ஆசையுடன் வாங்கிக் கொண்டு, “ஏன்டா குட்டி பயலே. உங்கம்மாக்கு நம்ம வீட்டுக்கு வழி மறந்து போச்சுன்னா நீ சொல்லி கூட்டிட்டு வர வேண்டியதுதானே?” என்று பேரனிடம் முறையிட்டார்.
“ஏன் உங்களுக்கு வழி தெரியாதா அப்பத்தா? நீங்க வந்து எங்களைப் பார்க்க வேண்டியதுதானேன்னு உங்க அப்பத்தாவை நீ கேளுடா பிரித்வி” என்று புன்னகையுடன் திருப்பிக் கொடுத்தாள் பார்கவி.
சத்யபாமாவின் காதில் அவள் சொன்னது விழாதது போலப் பேரனை கொஞ்சி கொண்டிருந்தார்.
“நேத்து இவர் பேர்ல டெலிவரி வந்ததா அத்த?”
“ஆமா, நல்ல வெயிட்டா பேக் பண்ணி தூக்கிட்டு வந்து கொடுத்தானுங்க. அதோ அங்க இருக்குப் பாரு” என்றார். அவர் கை சுட்டிய பொருளை சென்று கவனமாகக் கையில் எடுத்துப் பிரித்துப் பார்த்தாள்.
பிரபஞ்சன் பிரியதர்ஷினி இருவர் வாழ்க்கையின் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அங்கே புகைப்படச் சட்டத்தில் பொக்கிஷமாக உறைந்திருந்தது. அவர்கள் பிள்ளைகள் இருவரின் புகைப்படத்தையும் பிரியத்துடன் வருடினாள்.
“நாளைக்கு விசேஷத்துக்கு இதைக் கிஃப்ட் கொடுக்கப் போறீங்களா?” என்று அவர் அவளிடம் கேட்க, “ஆமா அத்த” என்றாள். கணவனை அழைத்துப் புகைப்படச் சட்டம் பத்திரமாக வந்திருக்கிறது. அழகாக இருக்கிறது என்று தெரியப்படுத்தினாள்.
“இவனைப் பார்த்துக்கோங்க அத்த. நாளைக்குப் போட நகை வேணும். நான் போய் எடுத்துட்டு வர்றேன்” என்று மாடி ஏறினாள்.
ஆம், மாடிதான். மகள் பிறந்த மறுவருடம் வீட்டை கொஞ்சம் விரிவாக்கம் செய்து, முதல் தளத்தில் இரண்டு அறைகள் சேர்த்து அவர்களுக்கான தனிப் பகுதியை கட்டி விட்டார்கள்.
“என் பிள்ளை கையில காசில்ல, கடனாகி போகும்” என்ற சத்யபாமாவின் புலம்பல்களுக்கு எல்லாம் இப்போது வேலையின்றிப் போனது.
ஏனென்றால் பார்த்திபனின் கடனெல்லாம் எப்போதோ அடைத்தாகி விட்டது.
மகள் கருவில் இருக்கும் போதே கணவனின் கடனை எல்லாம் தன் சேமிப்பை கொண்டு அடைக்கச் செய்திருந்தாள் பார்கவி. அவன் தயங்கி மறுக்க, “வெட்டியா பேங்க்குக்கு வட்டி கட்டுவீங்களா நீங்க? நான் ஒன்னும் எங்கப்பா காசை தூக்கி உங்களுக்குத் தரல. இது என்னோட சேவிங்ஸ். உங்ககிட்ட கணக்கு வச்சு நான் திருப்பி வாங்கிப்பேன்” என்று அவள் சொல்ல, “என்கிட்டயே கணக்கு வைப்பியா?” என்று கேட்டான் அவன்.
“அப்புறம்?” என்று உதடு சுழித்தாள். அவனைப் பேசி பேசியே சம்மதிக்க வைத்திருந்தாள். வங்கிக்கு கட்ட வேண்டிய வட்டி கணக்கை பார்த்தவனுக்குக் கண்ணைக் கட்டி விட்டது. ஆகவே சரியென்று சம்மதித்து விட்டான். மறுவாரமே வங்கிச் சென்று வீட்டுக் கடனை கட்டி முடித்திருந்தார்கள்.
சத்யபாமா, “உங்க வீட்டு பணமா? எங்களுக்கு வேணாம்” என்று வர, “என் ஹஸ்பன்ட் பேர்ல இருந்த கடனை நாங்க அடைச்சோம் அத்த. எப்படி இருந்தாலும் வருஷக் கணக்கா அதை நாங்கதானே கட்டணும்? அப்புறம் அது என் சேவிங்ஸ்ல இருந்த பணம். எங்கப்பாம்மா கிட்ட நான் வாங்கிட்டு வரல” என்றாள் அழுத்தமாக. அதை மீறி அவராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
மகனது கடன் அடைந்ததில் அவருக்கு மகிழ்ச்சிதான்.
ஆனாலும், மருமகளின் வீட்டுப் பணம் என்றால் வேண்டாம் என்று அவர் ஒதுக்கி வைக்க, பேத்தி பிறந்ததும் அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை பார்கவியின் பெற்றோர்.
அவர்களின் விருப்பப்படி பேத்திக்குச் செய்து விட்டார்கள்.
“எங்க பேத்திக்கு நாங்க செய்யறோம். அத நீங்க தடுக்க முடியாது” என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார் காவேரி.
மகள் பிறந்ததும் அவர்கள் வீட்டை விரிவாக்கம் செய்ய, மருமகனுக்குப் புதிய கார் ஒன்றை பரிசளித்து விட்டார் ரங்கராஜன்.
சத்யபாமா கூட இம்முறை எதுவும் சொல்லவில்லை. எப்போதாவது பணத் திமிரை காட்டுறாங்க என்று குத்தி பேசினாலும் ஓரளவு சமூகமாகவே நடந்து கொண்டார்.
பார்கவி தனக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் ஒரு பையில் எடுத்துக் கொண்டு கீழிறங்கி வந்தாள்.