புதுமனை புகுவிழாவை மிகவும் எளிமையாக நடத்த திட்டமிட்டு நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்திருந்தார்கள்.
பூஜை, பால் காய்ச்சு என மிகவும் சிறப்பாக நிறைவாக நடந்து முடிந்திருந்தது விழா.
மாணிக்கவேல் ராதா தம்பதியினர் மகளுக்கு வீடு வாங்க உதவியதோடு விழாவை சிறப்பாக நடத்தவும் காரணமாக இருந்தார்கள். பிரியதர்ஷினியின் அண்ணன் பிரகாஷ், அவன் மனைவி பிள்ளைகள் எனப் புது வீடே மழலையர் பள்ளி போலக் காட்சியளித்தது.
பார்த்திபன், பார்கவியின் பெற்றோர் வந்திருந்தார்கள்.
ஐந்து பிள்ளைகளின் சத்தம் அந்த வீட்டை நிறைத்திருக்க, பிரபஞ்சனின் அம்மா மரகதவல்லியின் முகம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.
பார்த்திபன் தன் பரிசை நண்பனிடம் கொடுத்தான். அவர்களின் திருமணம் தொட்டு பல நிகழ்வுகள் புகைப்படச் சட்டத்தில் பொக்கிஷ தருணங்களாக உறைந்திருக்க, “டேய் தேங்க்ஸ் டா பார்த்தி” என்று நண்பனை கட்டிக் கொண்டான் பிரபஞ்சன். அப்போதே இடம் பார்த்து அந்தப் புகைப்படங்களை அழகாக வீட்டுச் சுவரில் அலங்கரித்தான்.
மதியமே விழா முடிந்து அனைவரும் கிளம்பியிருந்தார்கள்.
“நீங்க இன்னைக்கு நம்ம வீட்லயே இருங்கப்பா” என்று மரகதவல்லி சொல்ல, பார்த்திபன் மனைவியைப் பார்த்தான். அவள் சம்மதிக்கவும் அங்கேயே தங்கி விட்டார்கள் அவர்கள்.
இங்கும் முதல் தளத்தின் படுக்கையறையை ஒட்டி பெரிய பால்கனி இருந்தது.
பிள்ளைகள் நாள் முழுக்கப் போட்ட ஆட்டத்தில் மதியம் சில மணி நேரம் உறங்கி எழுந்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு இப்போது உறக்கம் வரவில்லை.
அப்பா, மாமாவுடன் கிரிக்கெட் விளையாட களமிறங்கி இருந்தார்கள். பிரசன்னா அவன் உயரத்திற்கு இருந்த கிரிக்கெட் மட்டையைப் பிடித்து நிற்பதை காணவே கொள்ளை அழகாக இருந்தது.
“ஏய், என் பிள்ளையைப் பார்த்து சிரிக்காத பிரி” என்று தோழியை மிரட்டினாள் பார்கவி.
“மாமா, என்னைப் பாருங்க. பால் போடுறேன் நானு” என்று பிரபஞ்சனிடம் கத்தினாள் பிரியம்வதா.
“நீ போடுடா தங்கம். மாமா நீ போடுற பாலை பறக்க விடுறேன் பாரு” என்று பிரசன்னாவின் கைப் பிடித்து நின்றான் பிரபஞ்சன்.
“உங்கப்பா அடிக்கிற பாலை நாம பிடிச்சு அவனை அவுட் ஆக்குறோம் பவி குட்டி. ஓகே?” என்று பவித்ராவின் பின்னால் நின்றிருந்தான் பார்த்திபன்.
“அப்போ நானு? மாமா.. நானு..” என்று பிரவாகன் கோபிக்க, “அட வாடா மாப்ள. மாமா இருக்கேன் உனக்கு” என அவனையும் பக்கத்தில் இழுத்துக் கொண்டான் அவன்.
பல வருடங்களுக்கு முன்பு பார்கவியோடு இணைந்து இதே போல அபார்ட்மெண்ட் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய நினைவு அவன் மனத்தில் அலை மோதியது. அந்த இனிமையான நினைவுடன் அவன் திரும்பிப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் கண்கள் காதலுடன் மனைவியைக் களவாடின. அவள் முகத்தில் இருந்த சோர்வை கண்டதும், “போதும், கேம் ஓவர்” என்று கத்தினான் அவன்.
“போங்கப்பா. போங்க மாமா” என்று பிள்ளைகள் ஆட்சேபிக்க, “தம்பி தூங்கணும் இல்ல செல்லங்களா?” என்று பிரித்விராஜனை அவன் கைக் காட்டவும் பிள்ளைகள் அவனைச் சுற்றினார்கள்.
“இவங்க இப்போல்லாம் ஏன் கிரிக்கெட் விளையாடவே போறது இல்ல?” என்று பிரியதர்ஷினி நண்பர்களைக் கண் காட்டி கேட்க, “அதானே ஏன் போறது இல்ல?” என்று பதில் கேள்வி கேட்டாள் பார்கவி.
அது நண்பர்களின் காதில் விழ, “ஆமா, மிஸ்டர் பி இப்போல்லாம் நீங்க ஏன் கிரிக்கெட் விளையாட போறதில்ல?” என்று நண்பனிடம் கேட்டான் பார்த்திபன்.
“ம்ம். ஏன்னா நீ ரொம்பப் பிஸியா இருந்த. நீயே ஒரு கிரிக்கெட் டீம் கிரியேட் பண்ற வேகத்துல இருந்தியா.. அதான் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல” என்று பிரபஞ்சன் குறும்பு புன்னகையுடன் நண்பனை கேலி செய்ய, “டேய் பிரபா. மூனே மூனு பிள்ளைதான்டா பெத்திருக்கேன் நானு” என்று பிரபஞ்சனை முறைத்தான் அவன்.
“அந்த மூனு பிள்ளைக்கே என்னை மறந்துட்டியேடா”
“அடேய்” என்று எட்டி நண்பனை அணைத்தான் அவன்.
“மாமா..” என்று பவித்ரா அவன் காலை கட்டிக் கொள்ள, பிரவாகன் வேறு அவர்களை முறைத்து வைக்க, “அட நீயும் வாடா மாப்ள” என்று அவனைத் தூக்கினான் பார்த்திபன்.
“மாமா நானு” என்று நடுவில் பிரியம்வதா வரவும், குனிந்து அவளைத் தூக்கினான் பிரபஞ்சன்.
நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.
அந்த வீடு முழுக்க மகிழ்ச்சியும், மழலைகளின் சிரிப்பொலியும் நிறைந்திருந்தது.
பிரபஞ்சனுக்கு அப்படியொரு நிறைவான உணர்வில் மனம் நெகிழ நண்பனை அணைத்து விடுவித்தான்.
“அப்படியே அவங்கப்பா மாதிரியே மாமா மாமான்னு உன் பிரபா பின்னாடியே போறா பாரு என் பொண்ணு” என்று பார்கவி மகளைப் பார்த்து புலம்ப, “அதை அன்றே கணித்து விட்டாள் பிரியதர்ஷினி” என்று இல்லாத காலரை தூக்கி விட்டாள் பிரியதர்ஷினி. அவள் சிரிக்க அது பார்கவியையும் தொற்றியிருந்தது. சற்று நேரத்தில் பிள்ளைகள் சாமியாட, அவர்களை உறங்க வைத்தார்கள்.
பிரபஞ்சன் பிரியதர்ஷினிக்கு நடுவில் பிரியம்வதா, பிரசன்னா படுத்திருக்க, மரகதவல்லியிடம் சென்றிருந்தான் பிரவாகன்.
பவித்ரா, பார்த்திபன் மாமாவுடன் வந்து விட்டாள். அவளுக்குக் கதை சொல்லி உறங்க வைத்திருந்தான் அவன்.
பிரித்விராஜனும் உறங்கியிருக்கப் பார்கவி திரும்பி கணவனைப் பார்த்தாள்.
“தூங்கு பாரு” என்றான் மென்மையாக.
“தூக்கம் வரல பார்த்தி” என்றாள். இருவரும் சென்று பால்கனியில் கால் நீட்டி அமர்ந்தார்கள்.
மனைவியை நெருக்கமாக இழுத்து தன் தோள் சாய்த்துக் கொண்டான் அவன்.
“பார்த்தி”
“ம்ம்”
“ஐ லவ் யூ” என்றாள். சட்டெனக் குனிந்து அவள் முகத்தைக் கையில் ஏந்தினான்.
“என்ன பார்க்கறீங்க? சொல்லணும்னு தோனுச்சுச் சொல்லிட்டேன்” என்றாள்.
“ஹாஹாஹா, அங்க இருந்து எவ்ளோ தூரம் வந்துட்டோம் இல்ல பாரு?” என்று அவளின் நெற்றி முட்டி சிரித்தவன், “பார்கவியை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்றான் காதலுடன்.
பார்த்திபனுக்குப் பார்கவியின் மேலான காதல் என்றென்றைக்கும் குறையாதிருக்கும்.
காதல் மனங்கள் என்றென்றும் இணைந்திருக்கும், மகிழ்ந்திருக்கும், நிறைந்திருக்கும்.
நிறைந்தது!
சுபம்!