“அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது” என்ற பாடல் வரிகளை முணுமுணுத்தபடி கண்ணாடி முன் நின்று, அதில் தெரிந்த மனைவியை ரசித்துக் கொண்டிருந்தான் பார்த்திபன்.
மூன்று மாதமேயான மகனுக்குப் பசியாற்றி, அவனைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் பார்கவி. மனைவியைப் பிரியம் பொங்க பார்த்தவன், வேகமாக அவளை நெருங்கி அவளிடமிருந்து மகனை வாங்கினான்.
“அச்சோ பார்த்தி, அவனை நான் பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க. அவன் ஏப்பம் எடுக்கறேன்னு பால் வாந்தி எடுத்து வைக்கப் போறான் உங்க மேல..” என்று மகனை வாங்க அவள் கை நீட்ட, “நீ மொதல்ல இந்த ஜூஸை குடி” என்று மேஜை மேலிருந்த பழச்சாறை கண் காட்டினான்.
அதைக் கையில் எடுக்காமல், அவனை நெருங்கி நின்று, அவனைக் கண் களவு செய்தாள்.
“என்ன பாரு, பார்வையெல்லாம் பலமா இருக்கு?”
“ஏன் நீங்க மட்டும்தான் பார்ப்பீங்களா? நாங்க பார்க்க கூடாதா?”
“பாரு, பாரு. உன்னை யாரு வேணாம்னு சொன்னா? இந்தப் பார்த்திப் பாரு பார்க்கத்தான்” என்று மறுகையால் மனைவியை வளைத்தான்.
“அப்படியா?” என்று புருவம் உயர்த்தினாள்.
“அய்யய்யோ உன் பார்வையே சரியில்ல. ஆளை விடு, பாரு” என்று அலறியவன், அதற்கு நேர்மாறாக அவள் கன்னத்தில் மீசை உரச முத்தமிட்டான்.
அவன் கையில் இருந்த அவர்களின் மகன் ஏப்பம் எடுத்து, வயிறு நிறைந்ததில் கண்கள் சொருகியிருந்தான். மகனை அவனுக்கான தொட்டிலில் கவனமாகக் கிடத்தி தட்டி கொடுத்து விட்டு மனைவியிடம் வந்தான்.
அவளை மென்மையாக அணைத்து வாசம் பிடித்தான்.
“நீயும் கொஞ்ச நேரம் அவன் தூங்கும் போதே தூங்கி எழுந்திரி பாரு” என்றான்.
“ம்ம், வேலை இருக்கு பார்த்தி. உங்களுக்கு லேட்டாகலையா?” என்று முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.
“என் பாருவ கவனிக்க முடியாத அளவுக்கு நான் பிஸியில்ல. லேட்டானா என்ன? எனக்காக மிஸ்டர் பி வெயிட் பண்ணுவார்” என்றான்.
“பாவம் அண்ணா, போய் அவருக்கு ஹெல்ப் பண்ணுங்க நீங்க” என்று அவனை மெல்ல விலக்கினாள்.
“ரொம்ப அழகாகிட்ட பாரு. ஆல்ரெடி நீ அழகுதான். ஆனா இப்போ நல்லா வெயிட் போட்டு கும்முன்னு இருக்க. உன்னை விட்டு தள்ளி இருக்கறதுலாம் எனக்குத் தண்டனையா இருக்கு பாரு” உன்மத்தத்துடன் உளறினான். அவன் மார்பில் முட்டி, “உங்களை யாரு தள்ளி இருக்கச் சொன்னது?” என்று அவன் இடையில் கைப் போட்டு இழுத்தாள்.
“டெம்ப்ட் பண்ணாத பாரு” என்று கிசுகிசுத்து அவள் கன்னம் உரசி, இதழ்களால் இதழ்களைத் தேடித் தொட்டு ஆழ முத்தமிட்டான்.
இதழ்களில் இருந்து கீழிறங்கி கழுத்தில் அவன் இதழ்கள் முத்த ஊர்வலம் போக, “பார்த்தி..” என்றாள். சட்டென உணர்வுகள் வடிய, அவளின் நெற்றி முட்டி, “மிச்சத்தை நைட் பார்க்கறேன் பா..ரு” என்று அவள் பெயரை அழுத்திச் சொல்லி முத்தமிட்டான்.
அவன் சட்டையைப் பிடித்திழுத்து, “உங்களுக்கு வயசு கூடக் கூடக் கிளாமர் கூடுதே மிஸ்டர் பார்த்திபன்” என்று அவள் சொல்ல, வெடித்துச் சிரித்திருந்தான். எந்த வயதிலும் தன் இணையை ரசிக்கும் காதல் மகத்தானதுதானே!
“38 வயசுலாம் ஒரு வயசா பாரு?”
“அதானே. என்ன லேசா வெள்ளை முடி வருது உங்களுக்கு” என்று அவனது முன்னுச்சி முடியை ஒதுக்கினாள். மீசையில் அங்காங்கே பளிச்சிட்ட வெள்ளிக் கம்பிகளை இழுத்தாள்.
“ஷ்ஷ்ஷ் என்ன பாரு பண்ற?”
“உங்க கவர்ச்சி கூடி போச்சே என்ன செய்யலாம்னு யோசிக்கறேன்” என்று அவனை மேலும் கீழுமாகப் பார்த்தாள்.
“என்னைக் கட்டிக்கோ, ஒட்டிக்கோ” என்று அவளோடு ஒட்டி உரசி இழைந்தான். இத்தனை ஆண்டுகளில் அவளிடமும் நிறைய மாற்றங்கள். ஆனால் அவன் கண்களுக்குப் பேரழகியாகத் தெரிந்தாள் மனைவி.
“நான் கிளம்பறேன். உன்னைய எப்போ பிக் அப் பண்ணணும் சொல்லு பாரு. நான் வந்துடுறேன்” என்று சொல்லி, அவளை விலக மனமின்றி விலகி சென்றான்.
அங்கே கூடத்தில் காவேரி மிகவும் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருந்தார். பின்னே மகள் பிள்ளை பேற்றுக்காக வீடு வந்திருக்கிறார் அல்லவா. அவளுடன் பேத்தியும், பேரன்களும் வந்திருக்க, அவருக்கு வேலை இல்லை என்றாலும் எதையாவது இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருந்தார்.
மருமகனை கண்டதும், “சாப்பிடுறீங்களா மாப்ள?” என்று அவனிடம் கேட்டார்.
“மாமாவோட சாப்பிடுறேன் அத்த” என்றவன் கால்கள் மாமனாரை நோக்கி நகர்ந்தன.
அந்தப் பரந்த கூடத்தின் ஒரு பகுதியில் ரங்கராஜன் அமர்ந்திருக்க, அவர் மேல் ஏறி நின்று, “தாத்தா தாத்தா” என்று அவர் பெயரை ஏலம் விட்டுக் கொண்டிருந்தான் அவர்களின் மூன்று வயது புதல்வன் பிரசன்னா.
“பிரச…ன்னா” என்று செல்லக் கண்டிப்புடன் பார்த்திபன் மகனை அழைக்க, சடாரென்று அவனைத் திரும்பி பார்த்தான் மகன்.
“ப்பா” என்று சமர்த்தாகக் கீழிறங்கி அவனை நோக்கி கை நீட்டினான்.
“நா இவ்ளோ நேரம் தாத்தா மேல ஏறாத சொன்னா இவன் கேட்கலப்பா. தாத்தா பாவம் இல்ல? இவன்கிட்ட சொன்னா கேட்க மாட்டேங்கறான்ப்பா. நீங்க சொல்லுங்கப்பா” என்று தம்பியை கைக் காட்டி புகார் படித்தாள் அவனின் செல்ல மகள் பிரியம்வதா.
“ராசாத்தி, நம்ம தம்பிடா. தாத்தாக்கு வலிக்கல குட்டிம்மா” என்று பேத்தியிடம் சொன்னார் ரங்கராஜன்.
“இல்ல, தம்பி உங்க கால்ல ஏறி நின்னான். உங்களுக்கு வலிக்கும்னு அம்மா சொல்லியிருக்காங்க. தம்பியை உங்க மேல ஏறக் கூடாதுன்னு அன்னைக்கு அம்மா சொன்னாங்க இல்ல தாத்தா? அம்மா..” என்று அவள் குரல் கொடுக்க, ரங்கராஜன் பேத்தியின் கைப் பிடித்து, “தம்பி தெரியாம செஞ்சுட்டேன் ராசாத்தி. தம்பி பாவம் இல்ல?” என்று கேட்டார்.
“அம்மாகிட்ட சொன்னா தம்பிக்கிட்ட கோபிச்சுப்பாங்க இல்ல? இந்த ஒரு டைம் விட்டுடுடா ராசாத்தி” என்றார்.
“உங்களுக்கு வலிச்சிருக்கும் இல்ல தாத்தா? அவனைச் சாரி சொல்ல சொல்லுங்க” என்றாள் கறாராக.
“சொல்லுங்கப்பா” என்று அப்பாவையும் தன் கூட்டணியில் சேர்த்தாள். அக்காவை முறைத்து பார்த்த பிரசன்னா, அப்பாவின் காலை கட்டிக் கொண்டு அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து பால் பற்கள் தெரிய புன்னகைத்து அவனை மயக்கினான். பார்த்திபன் சிரிப்பை அடக்கி மகனைப் பார்க்க, சட்டென்று தாத்தாவிடம் தாவி, அவர் மீசையைப் பிடித்திழுத்து கழுத்தை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டு, “சாரி தாத்தா, சாரி.. சாரி..” என்று ராகம் போட்டான்.
பேரனின் முத்தத்தை விடவா மற்றவை அவருக்கு முக்கியத்துவம் பெற்று விடப் போகிறது.
“சரிங்க தங்கப்புள்ள, போதும் போதும்” என்று பேரனை சரி கட்டினார் அவர்.
பிரசன்னா அவரிடம் இருந்து நழுவி அப்பாவிடம் ஓட, மகனை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டு கீழிறக்கி விட்டான் அவன்.
“வலிக்குதா தாத்தா?” என்று அவரின் தோளை தொட்டு பிஞ்சு கரங்களால் அழுத்தி விட்டாள் பிரியம்வதா. ரங்கராஜனுக்கு மனம் உருகிப் போனது. அப்படியே தன் மகள் சாயலில் பேத்தியை கண்டவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
மகள்கள் எப்போதும் இளவரசிகளையே அப்பாக்களுக்குப் பரிசளிக்கிறார்கள்.
“வலிக்கல ராசாத்தி” என்றார் சிரிப்புடன். அவரின் சிரிப்பை கண்டதும்தான் சமாதானமானாள் பிரியம்வதா.
பார்த்திபன் திரும்பி மகளைப் பார்க்க, தாத்தாவின் கைப் பிடித்து எழுப்பி விட்டவள், அவர் உணவு மேஜையை நோக்கி நடக்கவும் அப்பாவிடம் வந்தாள்.
அவளை அலேக்காகத் தூக்கி சுழற்றி முகம் முழுக்க முத்தமிட்டு கீழிறக்கி விட்டான் பார்த்திபன்.
“ப்பா, அம்மாச்சி கூப்தாங்க” என்று கத்தினான் பிரசன்னா.
அப்பாவின் கரம் பிடித்து நடந்து வரும் அக்காவை முறைத்தான். உணவு மேஜையின் மேல் சட்டமாக அமர்ந்திருந்தவன் குதித்துக் கீழிறங்கி அவர்களிடம் ஓடி வந்தான். அப்பாவின் மறுகையைப் பிடித்து நடந்தபடி, முன்னே எட்டி அக்காவைப் பார்த்து நாக்கை நீட்டி பழிப்பு காட்டி சிரித்தான்.
“அ…ப்பா..” என்று மகள் புகார் படிக்க, “நம்ம தம்பி குட்டிம்மா. அவன் உன்கிட்ட விளையாடுறான்டா” என்று அவன் சொல்ல, “ம்ம்ம்” என்றாள் மகள்.
இருவரையும் சரிக்கட்டி அவன் உணவு மேஜையில் அமர்த்த, அவர்களுக்கு உணவு பரிமாறக் காவேரி அங்கு வரவும், ரொம்பவும் சமர்த்தாக அமர்ந்து அவரைப் பார்த்தார்கள் குழந்தைகள். இந்தச் செல்லம் சேட்டை எல்லாம் அவரிடமும் உண்டு என்றாலும், அவரின் கண்டிப்புக்கு கொஞ்சமே கொஞ்சம் பயம் உண்டு அவர்களுக்கு.
“எனக்குத் தோச” என்றான் பிரசன்னா மழலையில்.
உடனே வீம்புக்கென்று, “எனக்குத் தோச வேணாம்” என்றாள் பிரியம்வதா. ரங்கராஜன் அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரிக்க, “குட்டிம்மா” என்று கண்டிப்புடன் மகளை அழைத்தான் பார்த்திபன்.
“அம்மாச்சி எது கொடுத்தாலும் சாப்பிடுவேன்ப்பா” என்று உடனே பல்டி அடித்து விட்டாள் அவள்.
காவேரி சிரிப்புடன், “இந்தா உனக்குப் பிடிச்ச உளுந்து வடை” என்று அவள் தட்டில் வடையை வைத்தார்.
மறுநொடி, “என்..க்கு” என்று போர்க்கொடி உயர்த்தினான் பிரசன்னா.
“எங்க தங்கப்புள்ளைக்கு இல்லாததா? இந்தாங்க ராசா” என்று அவன் தட்டில் சூடான வடையை வைத்தார்.
அவன் கையில் எடுக்கும் முன், “சூடா இருக்கும் தங்கம். உங்களுக்குத் தாத்தா பிச்சு தர்றேன், வாங்க” என்று பேரனை தன் பக்கம் இழுத்து அவனுக்கு ஊதி ஊதி ஊட்டி விடத் தொடங்கினார் ரங்கராஜன்.
பார்த்திபன் மகளைக் கவனித்தான்.
“நீங்களும் சாப்பிடுங்க” என்று கணவரிடம் காவேரி சொல்ல, “இல்ல பாரு வரட்டும்” என்றார் அவர்.
“குட்டி தூங்குறான் மாமா. அவனோட அவளும் கொஞ்ச நேரம் படுத்து எந்திரிக்கிறேன்னா. நீங்க சாப்பிடுங்க” என்று பார்த்திபன் சொல்ல, சரியெனத் தலையசைத்தார் அவர்.
அப்போது ஒரு சீப்பு செவ்வாழை பழத்துடன் அங்கு வந்த சரளா, “பிள்ளைங்களுக்கு வாழைப்பழம் வைக்கலையாம்மா?” என்று காவேரியிடம் கேட்டு, அவர் கையில் இருந்த பழத்தை பிய்த்து ஆளுக்கு ஒன்றாகக் குழந்தைகளுக்குக் கொடுத்தார்.
“நம்ம தோட்டத்துல விளைஞ்சது, தேனா இனிக்குது புள்ளைங்களா. சாப்பிடுங்க” என்றார்.
“நாம ஒரு வாழ கன்னு வச்சோம் இல்ல மாப்ள. அது இப்போ பெரிய தோப்பாகி கிடக்கு வீட்டுக்கு பின்னாடி” என்று பார்த்திபனிடம் அவர் சொல்ல, புன்னகையுடன் ஆமோதித்தான் அவன்.
அந்த வாழை மரத்தை போலவே அவர்களின் வாழ்வும் வாழையடி வாழையாக வளர்ந்திருந்தது.
அவர்களின் அன்பின், அளவற்ற காதலின் சாட்சியாக அவர்களின் பிள்ளைகள் அவன் கண் முன்னே இருந்தார்கள்.
மகள் பிரியம்வதாக்கு ஐந்து வயது.
மகன் பிரசன்னாவுக்கு மூன்று வயது.
இரண்டு குழந்தைகள் போதும் என்று சத்யபாமா அறிவுறுத்த, அவனுக்கும், அவளுக்கும் மூன்றாவது குழந்தை ஆசை இருந்தது.
பார்கவியின் பெற்றோருக்கும் அதே ஆசைதான். ஆனாலும் மகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு அவளிடம் எதுவும் சொல்லவில்லை அவர்கள்.
பார்கவிக்குக் கர்ப்பகாலங்கள் பெரிதான கஷ்டங்களைத் தரவில்லை. அதனால், “இன்னும் ஒரே ஒரு குழந்தை பார்த்திப் பிளீஸ்” என்று அவள் கெஞ்சவும், பார்த்திபனும் அவளைக் கொஞ்சியதில் மூன்றாவது மகன் பிறந்திருந்தான்.
பிரித்விராஜனுக்கு மூன்று மாதம் ஆகிறது.
மாமனாருடன் பேசிக் கொண்டே பிள்ளைகளையும் கவனித்துக் காலை உணவை முடித்திருந்தான் அவன்.
“நான் பிரபா வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன் மாமா, வர்றேன் அத்த” என்றான்.
“பிரபா மாமா பாக்க நானும் வர்றேன்ப்பா” என்று அப்பாவின் கைப் பிடித்து அவனோடு நடந்தாள் பிரியம்வதா. மகளுக்குக் கார் கதவை திறந்து விட்டு, அவளைப் பாதுகாப்பாக இருக்கையில் அமர்த்திப் பாதுகாப்பு பட்டையைப் போட்டு விட்டு காரை எடுத்தான் அவன்.