ராகவன் பெயரை பார்த்ததும், இதழ்கள் தன்னிச்சையாக மலர, அழைப்பை ஏற்றாள்.
“சொல்லு ராகவ்” என்றாள்.
“என்ன குரலே சரியில்ல?” என்று அவன் கேட்க, இங்கே கண்களை உருட்டினாள் ராகவி.
“இப்ப தான் பிரபாகரன் அத்தான் கிட்ட பேசினேன்…” இழுத்தாள்.
“என்ன சொல்றார்.?
“ஏதேதோ சொல்றார். என்னமோ, நான் அந்த வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் தான்… “
“நீ உதய் வாழ்க்கையில் வந்ததுக்கு அப்புறம் தான் அவர் அப்படி நடக்க ஆரம்பிச்சிருக்கார்” அவள் சொல்ல வந்ததை,
அவன் வேறு விதமாக முடிக்க,
“நீயும்… நீயும்… என்னைத் தான் ..”
“நான் உன்னைச் சொல்லலை பாப்பா” அழுத்தமாகச் சொன்னான் ராகவன்.
“அப்புறம் அப்புறம்…?”
“மனித மனம் ரொம்ப விசித்திரமானது பாப்பா. அதைப் புரிஞ்சுக்கவே முடியாது. மாமா, அவர் மனைவி இறந்து போன நேரத்தில் அந்தத் துக்கத்தை அப்படியே மனசுக்குள்ள போட்டு அழுத்தி வச்சு, வெளில காட்டிக்காம, அழாம, குடும்ப வற்புறுத்தலுக்கு வேற ஒரு கல்யாணம் பண்ணி, வாழ்ந்து…
ம்ப்ச், அவருக்கு மனைவி இறப்பை அந்தத் துக்கத்தை விழுங்க, ஜீரணிக்க அப்போ டைம் கிடைக்கல. அந்தக் கிரீஃப் (Grief) அவருக்கு இன்னும் மனசுல அப்படியே இருக்கு.”
“ஆனா, ராகவ். அவர், அவர் நார்மலா தான் இருந்தார்..”
“அது தான் பிரச்சனையே… வெளில காட்டிக்காம், திடமா இருக்கப் போல நடிச்சு. உள்ளுக்குள்ள உடைஞ்சுட்டு இருப்பாங்க. ஒரு வேளை அப்பவே அவர் அழுது, கடந்து வந்திருந்தா இத்தனை வில்லங்கம் ஆகி இருக்காது.
தன் தப்பை, தன்னோட தப்பா அவர் நினைச்சதை மகன் மேல போட்டு அவரோட மனசாட்சி கிட்ட இருந்து தப்பிக்கப் பார்த்து இருக்கார். இது நாம எல்லோரும் பண்றது தானே? நம்ம தவறுக்கு அடுத்தவங்களைக் கைக் காட்டி தப்பிக்கப் பார்க்கறது. அதையே இவர் பல வருஷம் செய்து இருக்கார், அவ்ளோ தான்.
உதய் மாமா சொன்னாங்க. இடையில அவர் கொஞ்சம் மாறி தான் இருந்து இருக்கார். ஆனா…”
“ஓகே, நீயும் என்னையே பிளேம் பண்ணு” எரிந்து விழுந்தாள்.
“இல்ல பாப்பா. அதுவரை காலை சுத்தின நாய்க் குட்டி காணாம போன கோபம் அவருக்கு. அது தான் உன் மேல…” என்றவனை முடிக்க விடவில்லை ராகவி.
“நான்சென்ஸ்..” கத்தினாள்.
“ராகவி, விருப்புக்கும், வெறுப்புக்கும் இடையில ஒரு மெல்லிய கோடு தான் இருக்குனு சொல்ற அயன் மெய்டன் பாடல் வரிகளை உண்மைனு தான் சொல்லணும்.
ஒரு ஆராய்ச்சியில் சில பேர் கிட்ட அவங்க நேசிக்கறவங்க, வெறுக்கறவங்க ரெண்டு பேரோட ஃபோட்டோவும் காட்டி இருக்காங்க. அப்போ ஆச்சரியப்படுற வகையில் மூளையின் ஒரே பகுதியில் தான் லைட் எரிஞ்சு இருக்கு. என்ன ஒன்னு காரணங்கள் தான் வேற.. வேற..
அதனால் தான் நேசிக்கவறவங்களை வெறுத்தா, தீவிரமா வெறுக்கறோம். வெறுத்தவங்களை எளிதா மன்னிச்சு, ஆழமா நேசிக்க ஆரம்பிக்கறோம்”
“நல்லா கதை சொல்ற…” எரிச்சலுடன் சொன்னாள் ராகவி.
அதுவரை இருந்த தொனி மாறி, இப்போது தீவிரமாகப் பேச ஆரம்பித்தான் ராகவன்.
“அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கார் பாப்பா. ஹீ நீட்ஸ் ஹெல்ப். டாக்டர் பார்க்கறார். சரியாகி வருவார்.
காய்ச்சல், தலைவலி சொன்னா.. அச்சோனு பதறுற நாம தான் மனசு சரியில்லைன்னு யாராவது சொன்னா. விடு, சரியா போய்டும்னு சொல்றோம். அதுக்கும் டாக்டர் பாக்கனும்னு நமக்குத் தோனுறது இல்ல.
மனநலம் பாதிக்கப்பட்டவங்களை இன்னமும், பைத்தியங்களா மட்டும் தான் பார்க்கறோம். டாக்டர் கிட்ட கூட்டி போக யோசிக்கறோம். உடல் நலத்தைப் போல, மனநலமும் ரொம்ப முக்கியம்னு நமக்குப் புரியவே மாட்டேனுது. அவங்களுக்குத் தான் அதிகக் கவனிப்பும், அக்கறையும், அன்பும் வேணும் பாப்பா.”
“அவர் அவர் என்னல்லாம்…”
“பண்ணார் தான். இல்லைனு சொல்லல. ஆனா, இத்தனை நாள் பண்ணலயே. இங்க வந்து மனநல வார்டு ஒரு ரவுண்ட் வா சொல்றேன். ஆளுக்கு ஒரு கதை இருக்கும். பாதிக்கும் மேல ஏதோ ஒரு விதத்தில் அன்பால் பாதிக்கப்பட்டவங்க தான். பிரிவை தாங்க முடியாம, காதல் தோல்வி, இப்படிப் பல காரணங்களால் புத்தி பேதலிச்சு போனவங்க தான் இங்க அதிகம்”
“எனக்கு அவ்ளோ பெரிய மனசு இல்ல ராகவ். என்னால முடியாது. பிளீஸ் விட்டுடு…” அவர் மேல் கோபம் குறைந்திருந்தால் கூட, இயல்பாகப் பேச முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அது சாத்தியமில்லை என்றே தோன்றியது.
“வார்த்தைகளால் உணர்வுகளை வெளிப்படுத்த சபிக்கப்பட்டவங்க நாம பாப்பா. ஆனா, தெரியாம தவற விடுற வார்த்தைகளைப் பெருசு பண்ண கூடாது”
“நீ கிழவன் மாதிரி பேசுறதை நிறுத்து முதல்ல…” கடுப்புடன் சொன்னாள்.
“அன்பு தான் அனைத்திற்கும் காரணம் பாப்பா.
முதல் க்ரஷ், முதல் காதல் கடிதம், முதல் காதல், முதல் முத்தம், முதல் உயிருக்கு உயிரான தோழி… இதெல்லாம் எத்தனை வயசு ஆனாலும் சரியா ஞாபகம் வச்சு சொல்றோம் இல்ல?.
ஏன்? நம்ம மூளை ரொம்ப ட்ரிக்கியான வஸ்து. நம்மால் அதைப் பிரெடிக்ட் பண்ணவே முடியாது. நடந்தது எல்லாம் போகட்டும் விடு பாப்பா. பிரியதர்ஷினி அக்காவோட மனசை புரிஞ்சுக்கிட்ட உன்னால…”
“ரெண்டும் ஒன்னு இல்ல ராகவ். அக்கா, அது வேற…” கத்தினாள்.
“அவங்க குழந்தையோடு… குழந்தையை அவங்க கொல்ல நினைக்கல. அந்த நொடியில் எடுக்கப்பட்ட தவறான முடிவு. அதே தான் உன்னோட மாமனாரும்…”
“வாயை மூடு..”
“சாரி, பாப்பா. அவருக்கு உதவி தேவை. அவங்க செய்யறாங்க. நீ இனி உன் வாழ்க்கையைப் பாரு. அதைச் சொல்ல தான் கூப்பிட்டேன்.” என்றான் அவளைச் சமாதானப்படுத்தும் வகையில்.
“ஐ நீட் டைம் ராகவ். அவரை, மாமனாரை என்னால, சாரி என்னால மறக்க முடியும்னு தோணல. இப்போதைக்கு.. எதுவும் முடியாது. நீ என்னவேனா சொல்லு. என்னால அவர் பண்ணதை ஜஸ்ட் மனநலம் கீழ கொண்டு வர முடியாது. என்னால நிச்சயம் முடியாது. அவர் மாறுரார். மாறலை. எனக்கு அந்தக் கவலை இல்லை இப்போ.
இந்த ஒரு வருஷத்துல என் வாழ்க்கையில் எவ்வளவோ நடந்துடுச்சு. இனி, எனக்குத் தெரியாம எதையும், என் வாழ்க்கையில் நான் நடக்க விடுறதா இல்ல. என் வாழ்க்கை.. இனி என் முடிவா தான் இருக்கும்” அழுத்தமாகச் சொன்னாள்.
“அது தான், சரி. நல்ல முடிவா எடு” அழைப்பை துண்டித்தான் ராகவன்.
அறைக்கு வெளியே இருந்த சிறிய பகுதியில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டேயிருந்தான் ராஜா.
மனதின் கேள்விகள் அத்தனைக்கும் நடந்தே தீர்வு கண்டுபிடித்து விடும் மும்முரத்தில் இருந்தான்.
திடீரென்று ஏதோ தோன்ற தலையைப் திருப்பி, நீச்சல் குளத்தைத் திரும்பிப் பார்த்தான்.
நிலவொளியில் யாரோ மிதந்து கொண்டிருந்தது தெரிந்தது.
உடல் முழுவதிலும் இருந்து இரத்தம் மூளையை நோக்கி பாய, உடல் அனிச்சையாய் பதட்டத்தைத் தத்தெடுக்க, மறுகணமே ஓடிச் சென்று தண்ணீருக்குள் குதித்திருந்தான்.
நீச்சல் குளத்தில் இறகை போல மிதந்து கொண்டிருந்தாள் ராகவி.
அவளை இழுத்து, கைகளில் அள்ளிக் கொண்டு மேலே வந்தான்.
“என்ன.. என்ன.. பண்றீங்க?” கத்தினாள்.
“ஷப்பா, உனக்கு ஒன்னுமில்லையே? பயமுறுத்திட்ட.” கரகரத்த குரலில் சொல்லிக் கொண்டே அவனது அறைக்குத் தூக்கிக் கொண்டு போனான்.
அறையில் நிறைந்திருந்த ஏசியில் அவளுக்கு உடல் நடுங்கியது. தண்ணிரில் நனைந்த குளிரினால் தான் நடுங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்துத் திட்டினான் அவன்.
“ஸ்விம்மிங் பூலில் என்ன பண்ண இருந்த? கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு?”
“ரிலாக்ஸ் பண்ண போனேன்.”
“நைட்டு எட்டி மணிக்கா? நீ, மூனு உயிர் இப்போ. தண்ணியில, அதுவும் மிதக்கவும், உயிரே போச்சு எனக்கு”
“நான் ஃப்ளோட்(Float) பண்ண டிரை பண்ணிட்டு இருந்தேன்” திக்கினாள்.
இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தவளை அங்கிருந்த துண்டை எடுத்து தலைத் துவட்டி விட்டான். ஒரு துண்டை எடுத்து உடலில் சுற்றி விட்டான்.
அப்போதும் அவளின் நடுக்கம் குறையாமல் இருக்க, சற்றும் யோசிக்காமல் தன் உடல் வெப்பத்தை அவளுக்குக் கடத்தினான்.
இப்போதும் மனோ தான் பின்னணியில் பாடிக் கொண்டிருந்தார்.
“ஏக்கம் என்ன பைங்கிளி
என்னை வந்து சேரடி”
என்ற வரிகள் ஏக்கத்தோடு ஒலிக்க, உணர்ச்சி மிகுதியில், நேரம் காலம் தெரியாமல் மனம் முழுவதும் நிரம்பி வழிந்த அவன் பெயரை உச்சரித்திருந்தாள் “உதய்” என்று.