மழை மெலிதாகத் தூறிக் கொண்டிருக்கப் பார்த்திபன் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். பொழுது நன்றாகப் புலர்ந்திருந்தது.
மொட்டை மாடி விளிம்பில் அமர்ந்து காகம் ஒன்று கரைந்து கொண்டிருக்க, அவன் உதடுகள் புன்னகையில் விரிந்தன.
அது என்ன மாயமோ தெரியவில்லை. இங்கும் அவன் மனைவிக்கும் காகத்துக்கும் தனிப் பந்தம் உருவாகி விட்டது.
“நாம போன ஜென்மத்துல பறவையா இருந்துருப்போமே பாரு” என்று அவளிடம் சந்தேகம் கேட்பான்.
“எங்க அப்புச்சி என்னைய தேடி வர்றார்னு எங்கம்மா சொல்லுவாங்க. நீங்க என்னன்னா போன ஜென்மத்துக்குப் போய்டீங்க. அதுலயும் உங்களைக் கூட்டு சேர்த்தீங்க பாருங்க” என்று அவன் இடையில் செல்லமாக இடிப்பாள்.
காகம் மீண்டும் கரைய, அதனிடம், “வெயிட் பண்ணு. மேடம் இப்போ வருவாங்க” என்று சொல்லி கீழிறங்கினான்.
மணி ஏழு என்றது கடிகாரம். பார்கவி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அவளை எழுப்ப மனம் வரவில்லை அவனுக்கு. முந்தைய இரவு கார் வாங்குவது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அதில் இருவருக்கும் இடையே வார்த்தை போர் மூள, பட்டென்று அவன் வாயை முத்தத்தால் அடைத்திருந்தாள் அவள்.
மனைவி முத்தமிட்டாலே பித்தேறி விடும் அவனுக்கு.
கடந்த ஒரு வாரமாக அவளிடம் இருந்து விலகியே இருந்தவன், முன் தினம் அதை மறந்து அவளை வாரி சுருட்டி கொண்டான்.
அந்த அசதியில் அவள் உறங்க, அவளையே நின்று பார்த்துக் கொண்டிருந்தவன், மெதுவாகத் தோட்டத்துக்கு நடந்து விட்டான்.
இப்போதெல்லாம் தோட்டத்துப் பக்கம் வரவே அவனுக்கு நேரம் வாய்ப்பதில்லை.
எப்போது அங்கு வந்தாலும் அவன் கால்கள் நேராகப் பவள மல்லி செடியை நோக்கி நகர்ந்து விடும். அதற்குக் கூடுதலாகத் தண்ணீர் ஊற்றுவான்.
“இம்புட்டு தண்ணி விடக் கூடாது தம்பி.” என அப்பா கூட அவனை அதட்டுவார். ஆனால் மனம் கேட்பதில்லையே. அந்தச் செடியை வாஞ்சையோடு வருடி விடுவான்.
இப்போதும் அங்குதான் சென்றான். மறுகணம் அவன் கண்கள் ஆச்சரியத்தில் மலர்ந்து விரிந்தன.
பவள மல்லி செடி முழுக்கப் பூக்கள் பூத்து குலுங்கின. விண்மீனை தரையில் கொட்டியது போலத் தரையெங்கும் பூக்கள். அதன் நூதன மணம் அவன் நாசியில் நுழைந்து சுவாசத்தை நிறைத்தது. மெல்ல குனிந்து கை நிறையப் பூக்களை அள்ளியவன் உடலில் வினோத உணர்வு ஓடியது.
மழைத் தூறலில் நனைந்த பூக்கள் ஈரமாய்ப் பளபளத்தன. கையில் இருந்த பூக்களுடன் அப்படியே அறைக்குள் நுழைந்தான்.
படுக்கையை ஒட்டிய மேஜையில் பூக்களை வைத்து விட்டு, படுக்கை நுனியில் அமர்ந்து, “பாரு” என்று மனைவியை எழுப்பினான்.
“ம்ம்” என்று தூக்கத்தைத் தொடர்ந்தாள். இப்போது அவள் கன்னம் தொட்டான்.
அவன் கை பிடித்துப் புரண்டு அவன் தொடையில் தலை வைத்து தூங்கினாள்.
மெதுவாகக் குனிந்து அவள் கழுத்தில் ஈரமாக முத்தமிட்டு, “பார்கவி” என்றழைத்தான்.
அவள் முகத்தை அவன் மடியில் புதைக்க, “பவள மல்லி பூத்திருக்கு பாரு” என்றான்.
அவளுக்குத் தூக்க கலக்கத்தில் அவன் சொன்னது மனத்தில் பதியவில்லை.
“என்னங்க?” என்றாள்.
“நம்ம தோட்டத்துல வச்ச பவள மல்லி பூ பூத்திருக்கு பாரு” என்றான். அவளின் அரைக் குறை தூக்கம் விலகியோட, “நிஜமாவா பார்த்தி” என்று ஆவலாகக் கண்களை விரித்தாள்.
படுக்கை அறையில் இருந்த நூதன மணம் அவன் சொன்னதை உண்மை என்றது.
மேஜையில் இருந்த பூக்களை எடுத்து அவளிடம் நீட்டினான். சில உணர்வுகளுக்கு உருவம் கொடுக்க முடியாது. விளக்கம் கொடுக்க முடியாது. அதை உணர்பவரால் மட்டுமே அதை விளங்கி கொள்ள முடியும்.
பூக்களை வருடிய இருவரும் ஒருவரையொருவர் உணர்ச்சி வசப்பட்டுப் பார்த்துக் கொண்டார்கள்.
மனைவியை இறுக அணைத்து, “ஹேப்பி அனிவர்சரி பாரு” என்றான். அவன் முகமெங்கும் முத்தமிட்டு பதிலுக்கு வாழ்த்தினாள்.
அவன் சந்தேகத்தைச் சொன்னான். அவளுக்கும் அதே சந்தேகம் இருக்கத்தான் செய்தது. ஆனாலும் மனம் முழுக்கப் பயம் வியாபித்திருந்தது.
அவன் கழுத்தில் கரம் கோர்த்து, “பயமா இருக்கு பார்த்தி” என்றாள்.
“நான் இருக்கேன் பாரு” ஆதரவாக அவளை அணைத்துக் கொண்டான். அவளிடம் கர்ப்பத்தைப் பரிசோதிக்கும் கருவியை எடுத்து நீட்டினான்.
“ஆல்ரெடி வாங்கி வச்சுட்டீங்களா?” மிரட்சியுடன் கேட்டாள்.
“ம்ம், போன வாரமே” என்றான். கடந்த காலம் கண் முன் வர, அவள் கண்களில் கலக்கம் சூழ்ந்தது.
“கூல் டவுன் பாரு. என் பாரு ரொம்பப் பெரிய தைரியசாலி தெரியுமா? திஸ் இஸ் பார்ட் ஆஃப் லைஃப் பாரு. எனக்காகன்னு யோசிக்காத. எனக்குக் குழந்தை ஆசை இருக்குதான். ஆனா அவங்க உன்னை வருத்தி வரணும்னு இருந்தா நான்..”
“பிளீஸ் நெகடிவ்வா பேசாதீங்க பார்த்தி”
“இல்ல பாரு. நாம இப்பவே ரொம்ப ரொம்பச் சந்தோஷமா நிறைவாதான் இருக்கோம். குழந்தைங்க வந்தா ரொம்ப நல்லா இருக்கும். நான் மறுக்க மாட்டேன். ஆனா அதுக்காக அவங்க இல்லன்னா நமக்கு வாழ்க்கையே இல்லங்கற நம்பிக்கையெல்லாம் எனக்கு இல்ல..”
“ம்ம்”
“மெடிக்கல் இன்டஸ்ட்ரி எவ்வளவோ வளர்ந்திருச்சு. சோ..”
“போதும்” என்று அவன் வாயை கை கொண்டு மூடியவள், அவன் கையில் இருந்த பரிசோதனை கருவியைப் பிடுங்கி கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்திருந்தாள்.
பார்த்திபன் பேசின பேச்சுக்கு மாறாகப் பதட்டத்துடன் காத்திருந்தான்.
பார்கவி கதவை திறக்கவும், “என்ன பாரு” என்று ஆர்வத்துடன் அவள் கைப் பிடித்தான்.
அவன் கையில் பரிசோதனை கருவியைத் திணித்தாள். அதில் பளிச்சென்று இரட்டை கோடுகள் இருந்தன. அதைக் கண்டு அவன் முகம் பளிச்சுட்டது. மனைவியை அணைத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டான்.
“அப்பாம்மாக்கு சொல்லணும்” என்று அவள் சொல்ல, “பிரபா..” என்றவன், “ஃபர்ஸ்ட் ஹாஸ்பிடல் போகணும்” என்று பரபரத்தான். ஒரு முறை கருக் குழாயில் கர்ப்பம் தரித்தவர்களுக்கு அடுத்து அப்படி நிகழ வாய்ப்புகள் அதிகம் என ஏற்கெனவே அவர்களை மருத்துவர் எச்சரித்திருந்தார். அதனால் அவனுக்குப் பதற்றம் தொற்றியது.
“கிளம்பு பாரு. ஹாஸ்பிடல் போகலாம். நான் அப்பாய்ட்மெண்ட் வாங்கறேன்” என்றான். மறுகணம் மருத்துவமனைக்கு அழைத்து விட்டான். அவள் தயாராகி வெளியே வந்து தோட்டத்துப் பக்கம் செல்ல அவளை நடக்க விடவே மனமில்லை அவனுக்கு.
அவனை விட்டால் அவளை அப்படியே கையில் சுமந்து விடுவான்.
அவன் மனம் கிடந்து தவித்துத் துடித்தது.
பார்கவி பவள மல்லி செடியில் இருந்த பூக்களைப் பார்த்து விட்டு அவனுடன் நடந்தாள்.
“காக்கா கத்துது பார்த்தி. அதுக்குச் சோறு வைக்கச் சொல்லுங்க மாமாவை”
“ம்ம்” என்றான். பதற்றத்தில் வியர்த்த கையுடன் அவள் கைப் பற்றி நடந்தான்.
அம்மா, அப்பாவிடம் சொல்லி அம்மாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.
மருத்துவரை சந்தித்து ஸ்கேன் எடுக்கையில் அவனது இதயத் துடிப்பு இரட்டிப்பாகியிருந்தது.
“கங்கிராஜுலேஷன்ஸ்” என்று மருத்துவர் புன்னகையுடன் சொல்ல, அவனுக்கு உயிரை உருவி மீண்டும் உடலோடு ஓட்ட வைத்த உணர்வு.
இம்முறை குழந்தை பாதுகாப்பாகக் கர்ப்பப்பையில் இருக்கிறது என்று மருத்துவர் சொன்ன கணம் அவனுக்குக் கண்கள் கலங்கி விட்டன.
மனைவியைத் தோளோடு சேர்த்தணைத்து விடுவித்தான்.
மருத்துவர் ஆலோசனை பெற்று வீடு திரும்பினர்.
பார்கவியின் பெற்றோர், பிரபஞ்சன், பிரியதர்ஷினி என அனைவரும் அவர்களுக்காக வீட்டில் காத்திருக்க, சத்யபாமாவை கையில் பிடிக்க முடியவில்லை. கையோடு வாங்கிப் போய் இருந்த இனிப்பை அனைவருக்கும் கொடுத்து இனிப்பான செய்தியை பகிர்ந்து கொண்டார்.
ரங்கராஜன் மகளின் தலையில் கை வைத்து அழுத்திக் கொடுத்தார். காவேரி கண்ணீருடன் மகளின் கன்னம் வழித்து முத்தமிட்டார்.
பிரபஞ்சன் நண்பனின் தோளில் கைப் போட்டு, “பார்த்திபனுக்கு ப்ரோமோஷன் வந்திருச்சு” என்றான்.
பிரியதர்ஷினி பார்கவியிடம் வர, அவளோடு நடந்து வந்த பிரவாகன் அம்மாவின் கையை உதறி விட்டு ஓடி வந்து, “பாது அத்த” என்று பார்கவியின் காலை கட்டிக் கொண்டு அவளைத் தூக்க சொன்னான். அவள் குழந்தையைத் தூக்க குனிய, அவளுக்கு முன்னே முந்திக் கொண்டு பார்த்திபன், பிரபஞ்சன் இருவரும் பிரவாகனை தூக்க முயன்றதில் முட்டிக் கொண்டார்கள்.
அவர்கள் மண்டை முட்டிக் கொண்டதில், “ஆஆஆ” என்று வலித்தது போலக் குழந்தை கத்த, அனைவருக்கும் சிரிப்பு வந்தது. பார்த்திபன் அவனைத் தூக்கி வாகாகத் தோளில் சுமந்து, “உங்க பாரு அத்தை கிட்ட இப்போ பேசுங்க செல்லம்” என்றான்.
“பாது அத்த” என்று மாமன் கையில் இருந்து எட்டி அத்தைக்கு முத்தம் கொடுத்தான் குழந்தை.
“நீ குட்டியா இருக்கும் போது உன்னைக் கொஞ்ச கூடாதுன்னு உங்கப்பா சொன்னான் டா. நீ என்னன்னா பாரு அத்தன்னு பாச மழை பொழியற. நாளைக்கு என் மகள் வருவா.. அப்போ உங்கப்பனை நான் கெஞ்ச விடல, என் பேரு பார்த்திபன் இல்லடா” என்று அவன் சவால் விட, இளையவர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள்.
பார்கவி, “என்ன பேசுறீங்க?” என்று அவன் இடையில் இடித்துக் கடிய, “போங்க அண்ணா, சும்மா அடிச்சு விடாதீங்க. நீங்க வேணும்னா பார்த்துட்டே இருங்க. நாளைக்கு உங்க பொண்ணும் உங்களை மாதிரியே இவர் பின்னாடி சுத்த போறா. நானும் பாருவும் காண்டாகப் போறோம்” என்று பிரியதர்ஷினி சொல்ல, பார்த்திபன் திருதிருக்க, பிரபஞ்சனும், பார்கவியும் சத்தமாகச் சிரித்திருந்தார்கள்.
அவர்களைத் திரும்பி பார்த்த பெற்றோரின் முகத்திலும் புன்னகை நிறைந்திருந்தது.