பார்கவி பணி முடித்துக் கீழிறங்கி வர, அங்கே அவளுக்காகக் காத்திருந்தான் பார்த்திபன்.
அவனைக் கண்டதும் அனிச்சையாக மலர்ந்தது அவள் முகம். வேக நடையுடன் அவனை நெருங்கி வந்தாள். தன் இரு சக்கர வாகனத்தை ஆக்கிரமித்து அமர்ந்திருந்தவன் கண்கள் மனைவியைக் கண் களவு செய்தன.
அவன் கண்ணோடு கண் பதித்துக் கண்ணை உருட்டி மிரட்டினாள்.
“பாரு பாரு என்றேன்.. பார்த்தால் ஆகாதா?” அவனது மயக்கும் குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாகப் பாடினான்.
“என்னமோ பார்க்காத மாதிரிதான்” என்று அவள் உதடு சுழிக்க, “எவ்ளோ பார்த்தாலும் போதலையே பாரு” என்று புலம்பினான். அவன் இடையில் செல்லமாக இடித்து, “பின்னாடி வாங்க. இன்னைக்கு நான் வண்டி ஓட்டுறேன்” என்றாள்.
சட்டென அவன் கண்களும் புருவங்களும் உயர, நீண்டதொரு விசில் அடித்தான் அவன்.
“வித் ப்ளஷர் பாரு” என்றான்.
“அது என்னமோ எப்பவும் நான் செய்யற வேலையை அப்பப்போ நீ செஞ்சா தனிக் கிக்தான்” என்று கண்ணடித்தான்.
“பார்த்தி..”
“பார்க்க வெயிட்டிங். எப்போ வண்டியை டிரைவ் பண்ற, அப்புறமா என்னை..” பட்டென்று அவன் வாயை அடித்து மூடினாள்.
மென்னகையில் உடல் குலுங்க கீழிறங்கினான். அவள் வண்டியை ஆக்கிரமிக்க, அவளுக்குத் தலை கவசம் அணிவித்து விட்டு, அவள் தோளில் கைப் போட்டு, இடையை அணைத்துப் பின்னால் அமர்ந்தான்.
வானம் மெல்ல இருட்ட, முதல் மழைத் தூறல் அவர்களின் மேனியை நனைக்க, மனம் நனைத்த காதலுடன் வீடு வந்தார்கள்.
இந்தச் சில மாதங்களில் அவர்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. எல்லாமே நல்லவை என்று சொல்லிட முடியாது. ஆனாலும் அவர்களின் மகிழ்ச்சி குறையாமல் பார்த்துக் கொண்டார்கள்.
இதோ இரண்டே நாள்களில் அவர்களின் முதல் திருமண நாள் வரப் போகிறது. ஐந்தாம் நாள் ரேணுகா புது வீட்டுக்கு பால் காய்ச்சி குடியேற போகிறாள்.
மறுவாரம் பிரபஞ்சன் மகன் பிரவாகனின் பிறந்தநாள் வருகிறது.
அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகள் வரிசை கட்டி நின்றன.
சத்யபாமா அலைபேசியில் மகளோடு பேசிக் கொண்டிருக்க, “இந்தாம்மா டீ குடிச்சிட்டே பேசு” என்று அவருக்குத் தேநீர் கொடுத்தான் பார்த்திபன்.
அதைக் கையில் வாங்கிய சத்யபாமா உர்ரென்று அவனை முறைக்க, “பாருக்கு டீ கொடுத்துட்டேன்ம்மா. நீ குடி” என்றான் இயல்பாக.
“உன் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு டீ போட்டு குடுத்துருப்ப நீ?”
“நீ மாமியார் ஆனதும் மறதி நோய் வந்துருச்சும்மா உனக்கு” என்றான் கிண்டலாக.
“ஏன்டா சொல்ல மாட்ட. ஒரு நாள் லீவ் விட்டா கூடப் பிரபஞ்சன் கூடச் சேர்ந்து கிரிக்கெட் ஆட ஓடிருவ. இதுல நீயி எனக்கு என்னைக்குச் சமைச்சு கொடுத்துருக்க?”
“நான்தான் சொன்னேனே. உனக்கு மறதி நோய் வந்துருச்சுன்னு.” என்று அவன் மேலும் கேலி செய்ய, “பேசுவடா. பாரு பாருன்னு..” என்று அவர் ஆரம்பிக்க, “என் பொண்டாட்டி பின்னாடிதானே சுத்துறேன்? ஃப்ரீயா விடும்மா” என்றான்.
“எங்கப்பா கூடத்தான் சத்யா சத்யான்னு வீடு முழுக்கச் சத்தம் போட்டு கூப்பிட்டுட்டு சுத்தினார். நான் என்ன உன்னைப் போலச் சண்டைக்கா வந்தேன்” என்று குறும்பு புன்னகையுடன் அவன் கேட்க, “பார்த்திபா” என்று அதட்டியவருக்குச் சிரிப்பு வந்து விட்டது.
அப்போது கூடத்துக்கு வந்த துரைராஜ், “சண்டைக்கு வந்தேனாவா? எங்கம்மான்னு என் கூட மல்லுக்கு நிப்படா நீ” என்று அவர் சொல்ல, சத்யபாமா முகத்தில் வெட்கமும் கோபமும் போட்டி போட, “உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலை இல்லையா? ரேணு வீட்டு பால் காய்ச்சு வருது, இன்னும் என்னென்ன வாங்காம விட்டுப் போய் இருக்குன்னு பார்க்க வேணாமா?” என்று காய்ந்தார்.
“நீ சொன்ன குத்து விளக்குல இருந்து குண்டூசி வரைக்கும் ஆல்ரெடி வாங்கியாச்சும்மா. பூ, பழம் மட்டும்தான் பாக்கி” என்று சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
பார்கவியும் உடை மாற்றி வந்து விட்டாள். சத்யபாமா போட்டிருந்த பட்டியலை அலைபேசியில் எடுத்து, எல்லாம் வாங்கியாகிற்று என்று அவரிடம் காண்பித்தாள்.
பார்த்திபன் சார்பாகக் கணிசமாகத் தொகையைத் தங்கைக்குத் தரப் போகிறான் என்று பெற்றோருக்குத் தெரியப்படுத்தினான்.
சட்டென்று சத்யபாமாவின் முகத்தில் சந்தோஷ சாயல்.
“பாரு ரொம்ப நாளா உங்க லவ் ஸ்டோரி கேட்குறா. அவகிட்ட உங்க காதல் கதையைச் சொன்னாதான் என்னம்மா?” என்று அம்மாவை அவன் வம்புக்கு இழுக்க, “ஏன் உனக்குத் தெரியாதா? உங்கப்பா உனக்கு ஓராயிரம் தரம் சொல்லியிருப்பாரே. நீயே அவளுக்குச் சொல்ல வேண்டியதுதானே?” என்று நொடித்தார்.
“உங்க காதல் கதையை நீ சொல்லி கேட்டா தான்ம்மா இன்ட்ரெஸ்ட்டா இருக்கும்” என்றவனைப் போலி கோபத்துடன் முறைத்தார்.
“போம்மா, ரொம்பப் பண்ற நீ. நீங்க சொல்லுங்கப்பா” என்று அப்பாவின் புறம் திரும்பினான்.
பார்கவி அவன் பக்கத்தில் நெருங்கி அமர்ந்து மாமனாரின் முகத்தைக் கதை கேட்கும் ஆர்வத்துடன் பார்த்தாள்.
“அதுவாம்மா.. அப்போ நான் போஸ்ட் ஆபீஸ் வேலையில சேர்ந்து ஒரு நாலைஞ்சு வருஷம் இருக்கும். வண்டியில போகக் கொஞ்சம் தூரம்னு ட்ரெயின்ல போவேன். வீட்ல இருந்து வண்டியில போய்..” என்று அவர் சொல்லத் தொடங்க,
“பார்கவி, நைட்டுக்கு சமைக்கணும். வேலை கிடக்கு, நீ எந்திருச்சி வா” என்று இடையிட்டு மருமகளை அதட்டினார் சத்யபாமா.
“நான் ஆர்டர் போட்டுடுறேன். அவள கதை கேட்க விடும்மா” என்றான்.
“வர்றேன் இருங்கத்த” என்ற பார்கவி, “வண்டியில போய்..” என்று மாமனார் கதையை விட்ட இடத்தில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.
“என் ஃப்ரெண்ட் வீட்ல வண்டிய விட்டுட்டு அங்க இருந்து ட்ரெயின் ஏறி ரெண்டாவது ஸ்டாப்பிங்ல இருக்கப் போஸ்ட் ஆபீஸ் போவேன்ம்மா”
பாரு, பார்த்தி இருவரும் ஒன்றாக “ம்ம்” என்றார்கள்.
“என் ஃப்ரெண்ட் வீட்டுக்கு பக்கத்து வீடு உங்கத்தையோட அண்ணன் வீடு”
இப்போது, “ஓ..” என்றார்கள்.
“உங்கத்த ஊர்ல இருந்து லீவுக்கு அண்ணன் வீட்டுக்கு வந்திருந்தா. அப்போ ஒரு நாள் சாயந்தரம் நான் வேலை விட்டு வந்து வண்டி எடுத்தேனா.. அப்போ என் ஃப்ரெண்ட் வீட்ல யாரும் இல்ல வேறயா..”
“அப்புறம்..” என்றார்கள் சிரிப்புடன்.
“நான் போய்ச் சமையல் வேலையைப் பார்க்கறேன்” என்று உள்ளே விரைந்திருந்தார் சத்யபாமா. அதற்கும் அவர்கள் சிரிக்க, “காலம் போன காலத்துல இந்த மனுஷனுக்குக் கதை கேட்குது..” என்ற அவரின் புலம்பல் கூடம் வரை கேட்டது.
“நான் கேட்டை திறக்க போனா எதிர்வீட்டு ஆளு நாயக் கூட்டிட்டு வாக்கிங் வந்தாரு. அது என்னன்னா என்னைப் பார்த்து உசுரை கொடுத்து குரைக்குது. நான் அதுக்குப் பயந்து நிக்கறேன். சரி, கேட்ட திறந்து உள்ள போகலாம்னா சாவியை வேற கீழ போட்டுட்டேன். அந்த நாய் கத்திட்டு என் மேல பாய வருது. அந்த மனுஷன் அதை இழுத்து பிடிச்சுட்டு போறார். நான் பதறியடிச்சுக் கேட்டை திறந்து அப்பாடான்னு நின்னா. நாய் சத்தத்துல வெளில வந்த உங்கத்த என்னை வண்டி திருடுறவன்னு நினைச்சுட்டாம்மா” என்றார் பாவமாக.
“திருடன்னு என்னைக் கல்லை விட்டு அடிச்சுட்டாம்மா” அதைக் கேட்டதும் பக்கென்று சிரித்திருந்தார்கள் இருவரும்.
சத்யபாமா பொய் கோபத்துடன் அவர்களை எட்டிப் பார்க்க, மூவரும் வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏனோ அந்தக் காட்சி அவர் மனத்தை லகுவாக்கியது.
துரைராஜ்க்கு சிரிப்புடன் சேர்ந்து இருமல் வந்தது. பார்கவி சட்டென அவருக்குத் தண்ணீரை எடுத்து நீட்டினாள்.
அவளிடம் பெரும்பான்மையான பொழுதுகளில் அவர் மாமியாராகத்தான் நடந்து கொண்டிருக்கிறார். அவர் எதிர்பார்த்த மருமகள் அவள் இல்லை என்றாலும் அவருக்கு ஏற்றார் போல் வளைந்து கொடுத்து போனவளை அவரால் வெறுக்க முடியவில்லை.
தன்னைத் தாழ்த்தி விடுவாள், தனிக் குடித்தனம் போய் விடுவாள் என்ற அவரின் பயங்களுக்கு வேலையற்றுப் போனது.
மகனின் முகத்தில் நிரந்தரமாக இருக்கும் மகிழ்ச்சிக்கு அவள்தான் காரணம் என்பது புரியாதவரா அவர்.
அவர்கள் வீட்டில் நிலவும் சுமூகமான சூழலுக்கு அவளும் ஒரு காரணம் என்பதை நன்கு அறிவார்.
அந்நொடி அவர் வீடே சிரிப்புச் சத்தத்தில் நிறைந்திருப்பதைக் காண அவர் நெஞ்சம் நெகிழ்ந்து நிறைந்தது.