அவர்கள் முதன்முறையாக எந்தத் திருமண மண்டபத்தில் சந்தித்துக் கொண்டார்களோ, அதே மண்டத்தில்தான் அவர்களின் திருமணமும் நடந்தது.
மணப்பெண்ணின் அறையில் இருந்த ராகவி கல்யாண பெண்ணிற்கே உரிய பதட்டம், படபடப்பு சூழ அமர்ந்திருந்தாள். அவளைக் காட்டிலும் நூறு மடங்கு பதட்டமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் அவளது குடும்பத்தினர். ராகவனை இரண்டு முறை அழைத்துக் கேட்கவே செய்து விட்டாள் அவள்.
“ராகவ், வாட்ஸ் ராங்?” என்றவளை, கண்களில் மெல்லிய நீர் படலத்துடன் பார்த்த ராகவன்,
“ஒன்னுமில்லயே. எல்லாம் நல்லபடியா முடியனுங்கற பதட்டம் தான். வேற ஒன்னுமில்ல” என்றான்.
“சரி சரி” என்று விட்டு, முகத்தை அழகு நிலைய பெண்ணிடம் கொடுத்தாள் ராகவி.
அவளுக்கு இருந்த படபடப்பில் மேடையில் போய் அமர்ந்த பின்பும் கூடச் சுஹாசினி, மலரைத் தான் அதிகம் தேடிக் கொண்டேயிருந்தாள்.
“ரிலாக்ஸ் பட்டே” என்ற உதயின் குரல் அவளுக்கு இதம் தர மறுத்தது.
அவளது மனநிலை புரிந்தோ, என்னவோ சுஹாசினி தன் வழக்கம் போல அவளின் பின்னே நின்று கலகலத்துக் கொண்டிருந்தாள்.
“ராகவ், என்னடா உன்னை இப்படித் தனியா விட்டுட்டு அவ மட்டும் கல்யாணம் பண்ணிக்கறா. பிறக்கறதுக்கு முன்னாடி இருந்தே ஓன்னாவே இருந்தீங்களே டா. இப்படி உன்னைத் தனியா விட்டுக் கல்யாணம் பண்ண இவளுக்கு எப்படி டா மனசு வந்தது?” கேலி செய்து கொண்டிருந்தாள்.
ஆனால், அவனை விட்டால் ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்து அழுது விடுவது போலவே நின்றிருந்தான் ராகவன்.
“ஃபீல் பண்ணாத ராகவ், சீக்கிரம் நாமளும் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று சுஹாசினி சொல்ல, பக்கத்தில் நின்றிருந்த உதயின் உறவுமுறை பெண்மணி ஒருவர் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
“அச்சோ, நாமன்னா, அந்த நாம இல்லங்க பெரியம்மா. அவன் தனியா, நான் தனியா. வேற வேற கல்யாணம். இவனைப் போய், நான் கல்யாணம் பண்ணுவேனா. எனக்குத் தம்பி அவன். குழந்தை பிள்ளை. இவனைப் போய்…” என்று விளக்கம் கொடுத்து கொண்டிருந்தாள். அவனுக்கும், அவளுக்கும் ஒரே வயது தான் என்பதை மறந்து.
“பட்டே, ராகவி. உனக்கு ஏன் இப்படி வேர்க்குது? தாலி நான் தான் கட்டப் போறேன் பட்டே. நீ ஏன் இப்படி நெர்வஸ்ஸா இருக்க?” அவள் பக்கமாக நகர்ந்து, சற்றே குனிந்து கிசுகிசுப்பான குரலில் கேட்டான் உதய்.
“அச்சோ, எல்லோரும் நம்மளையே பார்க்கறாங்க உதய்.” அவளின் பதட்டம் அவனுக்குச் சிரிப்பையே தந்தது.
“பார்க்கட்டும், நீ என்னைப் பாரு” என்றவனை விழிகளை மட்டும் திருப்பிப் பார்த்தாள்.
“அழகா இருக்கப் பட்டே” கண் சிமிட்டினான்.
அவள் அணிந்திருந்த பட்டின் சிவப்போடு போட்டி போட்டது அவளின் கன்னச் சிவப்பு.
குறித்த முகூர்த்தத்தில் உதய், ராகவியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான்.
“நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம்… ஓகேயாச்சு ராகவி” அவர்களுக்கு மட்டும் கேட்கும் படி பாடினாள் சுஹாசினி.
அவ்வரிகளில் உதயும், ராகவியும் மலர்ந்து புன்னகைத்தார்கள்.
அவன் கரம் இன்னமும் அவளின் கழுத்தில் இருக்க, லேசாகத் தலை உயர்த்தி, இரு கண்களும் சந்தித்துக் கொண்ட நொடி இதழ்கள் தாமாகப் புன்னகையில் விரிந்திருந்தது.
கவிதையாய் இருந்த அக்காட்சி, மிக அழகான புகைப்படமாகக் கேமராவில் அடைக்கப்பட்டிருந்தது.
அவர்களின் திருமணத்தில் எடுக்கப்பட்டதில் இருவருக்கும் மிகப் பிடித்தமான புகைப்படமும் அது தான்.
****
இருவரும் அன்று தான் முதல் முறை சந்திப்பது போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே அசையாமல் நின்றிருந்தனர்.
அறைக்குள் அப்போது தான் நுழைந்திருந்த ராகவி, முதலில் தயக்கத்தை உடைத்து, “உட்காருங்க உதய், நான் தப்பா நினைக்க மாட்டேன்” என்றாள்.
அவனுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வர, “அதை நான் சொல்லணும் பட்டே” என்றான் உதய்.
“நீங்க சொல்லல. அதான், நான் சொல்லிட்டேன்” என்றாள்.
அவளை நோக்கி சின்னச் சின்ன எட்டுக்கள் எடுத்து வைத்தான். அவள் இப்போது பேச மறந்திருந்தாள்.
அறையை நிறைத்திருந்தது இசை. அவர்களைச் சிறிதும் தொல்லை செய்யாது காதலாகப் பாடிக் கொண்டிருந்தார் பாடகர் மனோ.
“உள்ளபடி நானே, உன்னைச் சேர்ந்தேனே, ஒட்டி இருப்பேனே”
அந்த வரிகளில் இருவரின் இதழ்களும் அனிச்சையாய் விரிந்தது.
“மனோ ரொம்பப் பிடிக்குமா உதய்?” என்று அவள் கேட்ட நொடி,
“போதும், இனி பேச்சு” என்றார் மனோவே.
உதய் பற்கள் தெரிய உதடு பிரித்துச் சிரித்தான். மென் அடிகள் வைத்து அவளை நோக்கி அவன் வர வர அவனையைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி.
இவன் வேகமாக வந்தால் தான் என்ன என்று அவளின் ஒரு மனமும், அவன் நெருங்கி வந்து விடக் கூடாது என்று படபடப்பாக மறு மனமும் நினைத்துக் கொண்டிருந்தது.
உதய் தன் பார்வையை அவளில் இருந்து அகற்றவேயில்லை.
“வாழும், மஞ்சள் வெயில்..
ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல…” என்ற மனோவின் கேள்விக்கு,
விழிகளை அவள் விழிகளில் பதித்து, “ஆடை, ம்ம்ம்..பட்டு கட்டி வந்திருக்கலாம், பட்டே” என்று மனைவியிடம் பதிலளித்தான் உதய்.
அவள் குனிந்து தன்னைத் தழுவியிருந்த ஷிபான் சேலையைப் பார்த்தாள்.
இருவரின் விழிகளும் ஏதேதோ மொழிகள் பேசிக் கொண்டிருக்க,
மனோ, “ஆஜா.. ஆஜா.. கையணைக்க ஆஜா…” என்கையில் இருவரின் விழிகளும் சிரித்தது.
அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த இடைவெளி குறைந்து கொண்டே வந்தது.
“உன்னால் தூக்கம் கெட்டு…” என்ற சித்ராவின் குரலுக்கு,
“அப்படியா?” என்று ராகவியைப் பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்தினான் உதய். கேள்வியாக.
மறுப்பாகத் தலையை அசைத்தாள் ராகவி.
“இனி கெடும்” என்றான் மெலிதான வசீகரக் குரலில்.
அதற்கு ஏற்றார் போல்,
“சொன்னால் போதுமடி.. வாம்மா, நானும் ரெடி. காதல் செய்யக் காத்திருக்கு நெஞ்சம்” என்று அவனை ஒத்திசைத்தார் மனோ.
இப்போது பக்கென்று சத்தமாகச் சிரித்து விட்டான் உதய். ராகவி தன் சிரிப்பை கட்டுப்படுத்த கன்னச் சதை கடித்திருந்தாள்.
“ஏக்கம், என்னையும் தான் தாக்கும்.. முத்தமிட்டு…” என்ற சித்ராவின் குரலில்,
உதயின் கண்களைச் சந்திக்க முடியாமல் ராகவி தன் உதடு கடித்தாள்.
அவளின் ஏக்கத்தைத் தீர்க்க தயாரானான் உதய், ஒற்றைக் கண் சிமிட்டி.