பார்த்திபன் காதலி – 41 (1)

உன்மத்தத்துடன், “பெஸ்ட் பர்த்டே கிஃப்ட் எவர்” என்று மனைவியின் காதில் காதலுடன் சொன்னான் பார்த்திபன். அவன் மேல் கொடியாகப் படர்ந்திருந்தவள் விழிகளை மட்டும் உயர்த்தி, “ஹேப்பிப் பர்த்டே பார்த்தி” என்று அவன் விழி பார்த்து வாழ்த்தி, ஈரமாய் அவன் மார்பில் இதழ் ஒற்றினாள்.

முன்தினம் அவன் வாங்கிக் கொடுத்திருந்த சேலையை உடுத்தி தயாரானாள். அவனுக்காகச் சந்தனநிற சட்டையும், அடர்நீல நிற காற்சட்டையும் அவள் வாங்கி வைத்திருக்க, அதை உடுத்தி, கவர்ச்சியும், கம்பீரமுமாக நின்றிருந்தான் அவன்.

“உங்களுக்குப் பர்த்டேன்னா நான்தான் உங்களுக்குக் கிஃப்ட் வாங்கித் தரணும். இங்க ஆப்போசிட்டா நீங்க எனக்கு வாங்கித் தந்திருக்கீங்க” என்று அவள் சொல்ல, “உனக்குச் சேலை வாங்கிக் கொடுக்கணும்னு தோனுச்சு. அதுக்கு என் பர்த்டே ஒரு காரணம். அவ்ளோதான்” என்றான். அவனுக்குப் புதிய மடிக்கணினி ஒன்றை பரிசளித்தாள் அவள்.

“ஹே நான் புதுசு வாங்கணும்னு நினைச்சுட்டே இருந்தேன் பாரு. தேங்க்யூ” என்று அவளை அணைத்து முத்தமிட்டான்.

அவனுக்குக் கழுத்து சங்கிலி ஒன்றையும் பரிசளித்தாள்.

“இது அப்பாவோடது பார்த்தி. அப்பா எனக்குக் கொடுத்தாங்க.” என்று அவனுக்கு அணிவித்து விட்டாள். அந்தப் பரிசு விலை மதிப்பற்றது என்பதை உணர்ந்தவன், அவளின் நெற்றி முட்டி மௌனமாக நின்றான்.

அப்போது அவளின் அலைபேசி அழைக்க, “அத்ததான். இந்தாங்க பேசுங்க” என்று அவனிடம் நீட்டினாள்.

அவனை அம்மா, அப்பா இருவரும் வாழ்த்தினார்கள்.

“இப்ப வீட்டுக்கு வந்துடுவேன்ம்மா” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவன், “என் போன் எங்க?” என்று அவனது அலைபேசியைத் தேடினான்.

காலையில் இருந்து அழைப்புகள், குறுஞ்செய்தி சத்தங்கள் என எதுவும் கேட்கவில்லையே என்று அவன் தேட, அவள் நாக்கை கடித்து நின்றாள்.

“என்ன பாரு?”

“நான்தான் உங்க போனை நைட் சைலண்ட்ல போட்டேன்” என்று அவனது அலைபேசியை எடுத்து நீட்டினாள்.

“ஓ யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னா?” குறும்பு புன்னகையுடன் அவன் கண் சிமிட்ட, “ம்ஹும். எனக்கு முன்னாடி பிரபா அண்ணா உங்களுக்கு விஷ் பண்ணிட கூடாதுன்னு..” என்று தலையை அசைத்து அவள் சொன்ன விதத்தில் வெடித்துச் சிரித்திருந்தான் அவன்.

“அடிப்பாவி, அவன் கூடப் போய்ப் போட்டி போடுற?”

“போட்டி போடுற மாதிரிதானே நீங்க வச்சுருக்கீங்க”

“அட பட்டுக்குட்டி பார்கவி. என் லைஃப்ல உன் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. புரிஞ்சுதா?” என்று அவளின் முகமெங்கும் முத்தமிட்டான்.

“நீ பொறாமை படும் போது கொள்ளை அழகா இருக்க” என்று கொஞ்சினான்.

“அப்போ உங்க ஃப்ரெண்ட் நேத்து நைட்டே உங்களுக்கு விஷ் பண்ணிட்டாரா?”

“இல்ல பாரு. வா கீழ போவோம்” என்று அவளின் கைப் பிடித்து இழுத்தான்.

அவனின் அலைபேசியில் வரிசையாகக் குறுஞ்செய்தி வரும் சத்தம் கேட்டது.

அவர்கள் கீழிறங்கி வர அங்கே ரங்கராஜனுடன் பேசியபடி அமர்ந்திருந்தான் பிரபஞ்சன்.

மாமனார் அவனை மனதார வாழ்த்த, பிரபஞ்சன் நண்பனின் தோளை தட்டி, அவன் கைப் பிடித்து ஒரு கவரை திணித்தான்.

“என்னது?” அவனுக்கு மேல் ஆர்வமாகப் பார்கவி கேட்க, “இந்தா நீயே பாரு” என்று அவளிடம் நீட்டினான்.

“நோ நோ, நீங்களே பாருங்க.” என்று பின் வாங்கினாள். அவர்கள் ஐந்து நாள் பயணமாக மங்களூர் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்து பரிசளித்திருந்தான் பிரபஞ்சன்.

“டேய் பிரபா. எதுக்குடா இதெல்லாம்..”

“என் பையன் இல்லாட்டி நானும் உங்களோட வந்திருப்பேன் பார்த்தி.” என்று அவன் சொல்ல, “அண்ணா..” என்று அதிர்ந்து நெஞ்சில் கை வைத்து விட்டாள் பார்கவி.

“அட உங்களோட இல்லம்மா. நான் பிரியாவோட வர்றேன்னு சொன்னேன்” என்றான் நமுட்டு சிரிப்புடன்.

“மிஸ்டர் பி, பிளீஸ் பேசாம இருங்க” என்று அவனை முறைத்தான் பார்த்திபன்.

“நல்லதுக்கே காலம் இல்லடா பார்த்திபா” என்று புலம்பினான் பிரபஞ்சன்.

பிரியதர்ஷினி சிரிப்பும் முறைப்புமாக அவர்களைப் பார்த்திருந்தாள்.

மருமகனின் பிறந்தநாள் என்று காலை உணவை சிறப்பாகச் சமைத்திருந்தார் காவேரி. காலை உணவு முடித்து, மனைவியோடு இணைந்து நின்று அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினான்.

அவன் கையால் வீட்டிலும், அவர்களின் திருமண மண்டபத்து வாசலிலும் மரக் கன்றுகளை நடச் செய்தார் ரங்கராஜன்.

“அம்மாக்கு எனக்கு முன்னாடி ஒரு குழந்தை பிறந்து இறந்துடுச்சு. எனக்கு அப்புறமும் அம்மாக்கு ரெண்டு அபார்ஷன். அப்போல இருந்தே அப்பாக்கு இந்தப் பழக்கம் இருக்கு” என்றாள்.

“நம்ம தெருவுல பாதி மரம் எங்கப்பா வச்சதுதான்” என்றாள் பெருமையாக. அவன் புன்னகையுடன் கேட்டுக் கொண்டான்.

மகளை இளவரசியாக நடத்தினார் ரங்கராஜன். அவரைப் போன்ற ராஜகுமாரனே மருமகனாக வாய்த்து விட்டதில் அவருக்குப் பேரானந்தமே.

பின்காலை பொழுதில் பார்த்திபனின் வீடு வந்தார்கள்.

“உனக்கு இப்பத்தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சதா பார்த்திபா?” என்று சத்யபாமா அவனைக் கண்டதும் சடைக்க, “பிள்ளைக்குப் பொறந்தநாள் வாழ்த்து சொல்றதை விட்டுட்டு என்ன பேச்சு இது சத்யா?” என்று மனைவியைக் கடிந்து கொண்ட துரைராஜ், மகனை வாழ்த்தி அவன் கையில் பணம் கொடுத்தார்.

“அம்மா” என்று அவன் திரும்ப, “உனக்குத் துணி எடுத்து வச்சுருக்கேன் பார்த்திபா” அவன் கேட்கும் முன்னே பதில் சொல்லியிருந்தார் அவர்.

மகன், மருமகள் இருவருக்கும் புத்தாடை கொடுத்து திருநீறு பூசி ஆசீர்வதித்தார்.

“மதியம் வெளில எங்கேயும் போறீங்களா? இல்லல்ல? மட்டனும், மீனும் எடுத்துருக்கேன், எங்க போறதா இருந்தாலும் சாப்பிட்டுட்டு போங்கடா” என்றார்.

“நீ பிரியாணிலாம் செஞ்சு சிரமப்படாதம்மா. சிம்பிளா சோறு மீன் குழம்பு, வறுவல், மட்டன் சுக்கா, எலும்பு ரசம் வை போதும்” என்றவனைப் பார்கவி முறைக்க, என்ன என்றான் கண்களால்.

“பெர்த்டே அன்னைக்குக் கூட நான்வெஜ் சாப்பிடுவீங்களா?”

“பெர்த்டே என்ன பாவம் பண்ணுச்சு பாரு? அதையேன் ஒதுக்கி வைக்கணும்? ஸ்பெசல் டே அன்னைக்கு எனக்குப் பிடிச்ச விதமா சாப்பிட வேணாமா?”

“ம்ம், உங்ககிட்ட பேச முடியுமா? அதுவும் சாப்பாட்டு விஷயத்துல.. நான் போய்ச் சமைக்கறேன்” என்று அவளும் களத்தில் இறங்கி விட்டாள்.

அவனுக்கு அலுவலக வேலையிருக்க, அதை முடித்து விட்டு வந்தான். அதற்குள் மதிய சமையலை மாமியாரும், மருமகளுமாகச் சேர்ந்து விருந்தாகச் சமைத்து முடித்திருந்தார்கள்.

பார்கவியின் குடும்பம், பிரபஞ்சன் குடும்பம், ரேணுகா குடும்பம் என அனைவரையும் அழைத்திருந்தார்கள்.

சத்யபாமா ஓய்ந்து அமர, “நான் போய் ஃப்ரெஷ் அப்பாகிட்டு வர்றேன்” என்று அறைக்குச் சென்றிருந்தாள் பார்கவி.

பார்த்திபன் அம்மாவிடம் வந்தான்.

“என்ன பார்த்திபா, பூனை மாதிரி என் காலையே சுத்தி வர்ற?” என்று சந்தேகமாக அவனைப் பார்த்தார். அப்பாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டான் அவன்.

“பார்கவியையும் கூப்பிடு. அவளை மட்டும் விட்டுட்ட” என்றார் இடக்காக.

“நாம பேசும் போது நடுவுல அவ எதுக்கும்மா?” என்ற மகனை ஆச்சரிய அதிர்ச்சியுடன் பார்த்தார் அவர்.

துரைராஜ், “என்ன தம்பி?” என்று சிரிப்புடன் கேட்க, “இல்லப்பா. இன்னைக்கு நான் எது கேட்டாலும் அம்மா சரின்னு சொல்லிடுவாங்கதானே?” என்று அவன் பீடிகை போட, “என்ன பார்த்திபா வேணும்?” என்று நேரடியாக அவனிடம் கேட்டார் சத்யபாமா.

அவனும் சுத்தி வளைக்காமல், “நான் யூஎஸ் போகலம்மா” என்று விட்டான்.

சத்யபாமா அதிர்ச்சியுடன் மகனைப் பார்க்க, “இப்போ என் பேர்ல இருக்க வீட்டுக் கடன் மட்டும்தான் இன்னும் அடைக்காம இருக்கும்மா. அதுக்காக யூஎஸ் போனா நான் வீட்டை ரொம்ப மிஸ் பண்ணுவேன்ம்மா. என்ன இப்போ, இந்தக் கடனை அடைக்கக் கொஞ்ச வருஷம் ஆகும். ஆனா அங்க போனா எங்க லைஃப்..” என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே, “உனக்குப் பிடிக்கலன்னா போக வேணாம்ப்பா” என்று அழுத்தமாகச் சொல்லியிருந்தார் துரைராஜ்.

“என்னங்க நீங்க யோசிக்காம பேசிட்டு..”

“நமக்குப் பணத் தேவை என்னைக்கும் இருக்கும் சத்யா. தேவை இருக்குன்னு அதுக்குப் பின்னாடி ஓடிட்டே இருந்தா காலத்துக்கும் ஓடிட்டேதான் இருக்கணும். நம்ம வாழ்க்கையை நாம வாழ்ந்துட்டோம். நம்ம பிள்ளைங்க வாழ்க்கையை அவங்க விருப்பத்துக்கு வாழ விடு சத்யா.” என்றார்.

“அது இல்லங்க வீட்டு கடன் அடைச்சுட்டா நிம்மதியா கடன் இல்லாம இருப்பானேன்னு சொன்னேன்”

“அவன் யூஎஸ் போனா நிம்மதி இருக்காதுன்னு சொல்றான். அப்புறமும் இப்படிப் பேசுறியே?. நம்ம பையனை நம்பு, அவன் விருப்பத்துக்கு வாழ விடு. சும்மா அவங்க வாழ்க்கையில நீ மண்டைய நுழைக்காத” என்றார் கண்டிப்புடன். அம்மாவின் ஆதங்கம் அவனுக்குப் புரிந்தது. அவரின் கவலையைப் போக்கும் விதமாகப் பேசினான்.

பிரபஞ்சனுடன் புதுத் தொழிலில் இறங்கப் போகிறார்கள், அதன் வழியே கூடுதல் வருமானம் வரும் என்று விளக்கினான். பார்கவியின் வருமானமும் வரும், அதை அப்படியே சேமிக்கப் போகிறோம் என்றான்.

சத்யபாமா சட்டென மனமிறங்கி வரவில்லை என்றாலும், “உங்க விருப்பம்” என்று விட்டார்.

பார்த்திபன் நிம்மதி பெருமூச்சுடன் புன்னகைத்தான்.

நான்கு குடும்பங்களும் சேர அன்றைய மதிய விருந்து அமர்க்களப்பட்டது.

அந்த வார ஞாயிறு அன்று நண்பர்கள் கிரிக்கெட் விளையாட செல்லவில்லை.

பார்த்திபன் வீட்டில் கூடி அவர்களின் தொழில் எண்ணத்தைப் பெற்றவர்களுக்குப் புரிய வைத்து அவர்களின் சம்மதத்தைப் பெற்றார்கள்.

மறுவாரமே இருவரும் மங்களூர் சென்றார்கள். அவர்களின் தேனிலவு பொழுதுகள் தித்திப்பாகக் கழிந்தன.

error: Content is protected !!
Scroll to Top