சூரியன் மெல்ல மேலெழும்பி கொண்டிருந்தான்.
தொண்டையைச் செருமி சீர் செய்து அவள் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினான் அவன்.
என்னவென்பது போலக் கண்களில் கேள்வியுடன் அவனைப் பார்த்தாள் ராகவி.
“சுஹாசினி உங்களுக்கு ஏன் இவ்வளவு க்ளோஸ்? மலரை காட்டிலும் அவங்க தானே உங்களுக்கு ரொம்ப க்ளோஸ்?” கேட்டான்.
கண்களில் வலியுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி.
“சாரி, தப்பா எதுவும் கேட்டுட்டேனா…” தயக்கத்துடன் இழுத்தான்.
இதே கேள்வியைக் கணவன் கோபமாகக் கேட்டது நினைவில் வந்து சென்றது. அவள் முகத்தைத் திருப்பிக் கடலை பார்த்துக் கொண்டிருந்தாள். கடலை வெறித்த அவள் கண்களில் அலையடித்துக் கொண்டிருந்தது.
நினைவலைகள்.
“ராகவி…” தண்ணீர் எடுத்து நீட்டினான். மௌனமாய் வாங்கி அருந்தினாள்.
“இவ்வளவு பேசிட்டோம். கல்யாணம் எப்படி நடந்தது?, நீங்க அதைப் பத்தி பேசவேயில்லை”
இப்போது அவள் முகத்தில் தன்னிச்சையாகப் புன்னகை வந்து அமர்ந்தது.
சின்னதாகச் சிரித்துக் கொண்டாள்.
‘இவன், ஏன் ஒவ்வொரு முறை கதை கேட்டு முடிக்கும் போதும், சண்டையைப் பற்றிப் பேசி அவள் மனம் கடினமாகும் போது, அவளிடம் இனிமையான நினைவுகளைக் குறித்து நினைவுப்படுத்தி விடுகிறான்?. அவளும், இரவில் இவன் கேட்ட கேள்விகளில் திகைத்து, அந்நிகழ்வுகளில் மீண்டும் பயணித்து, காலையில் மனம் மாறி எழுகிறாள். இவனின் நோக்கம் தான் என்ன?’ திடீரென்று அந்தக் கேள்வி அவள் மனதில் தோன்ற அவனைத் திரும்பி பார்த்தாள் ராகவி.
“அச்சோ, எனக்கு எந்தத் தப்பான இன்டன்ஷனும் இல்லைங்க. நான், நீங்க சொல்லாம விட்டதைத் தான் கேட்டேன்” என்றவனை, தலையைச் சாய்த்து சந்தேகத்துடன் பார்த்தாள் ராகவி
“கல்யாணம் எப்படி நடந்தது? ஹனிமூன்…” என்று ஆரம்பித்தவன், அவள் பார்வையில் உதடு மடித்துத் தலையைத் திருப்பிக் கொண்டான்.
முழுதாக ஒரு நிமிடம் கூட அமைதியாக இருக்க முடியவில்லை அவனால். மீண்டும் அவள் பக்கம் திரும்பி, “அப்புறம் ஒன்னு கேட்க மறந்துட்டேன், அன்னைக்குத் தண்டனை கொடுக்கும் போது… மூணாவது ஆப்ஷன் உங்க வீட்டுக்கு போறதை, தண்டனையா ஏன் சொன்னீங்க?”
“கல்யாணமாகி இந்த ஒரு வருஷத்தில் நாங்க பிரிந்து இருந்ததே இல்ல. எப்பவும். இன்னைக்கு வரைக்கும். அவரும், நானும் தனித்தனியா வெளியூர் போற பயணங்களைத் தவிர்த்து, நாங்க ஒருத்தர் இல்லாம, இன்னொருத்தர் இருந்ததே இல்ல. நான், எங்க போனாலும் என் வால் பிடிச்சுட்டு வந்திடுவார்” என்றாள். ஏனோ அவளை அறியாமல் குரல் நடுங்கியது.
“ம்ம், அன்றில் பறவைகளைப் போல இருந்து இருக்கீங்க? கிரேட்” என்றான்.
அவளுக்கு வெறுப்பாக வந்தது. அதைக் கேட்கையிலயே மனதில் லேசாகக் கசப்பு எட்டிப் பார்க்கவே செய்தது.
அவள் தலையைத் திருப்பி அவளைச் சுற்றி ஒலியெழுப்பிக் கொண்டிருந்த பறவைகளைப் பார்த்தாள்.
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா?” என்று அவன் விடாமல் கேட்க, அவள் மௌனத்தைத் தத்தெடுத்து இருந்தாள்.
“அன்றில் பறவைகள் சேர்ந்து இருக்கும் போது, காதலில் திளைத்து இருக்கும் போது எழுப்பும் ஒலிக்கு பேர் உளறல். மனுஷங்க கூட எவ்வளவு ஒத்துப் போகுது பாருங்க. நாமளும் காதலில் மூழ்கி இருக்கும் போது, ஸ்வீட் நத்திங்ஸ் என்ற பேரில் உளற தானே செய்யறோம். அப்புறம் தன் துணையைப் பிரிந்து இருக்கும் போது எழுப்பும் ஒலிக்கு பேர் அகவல். அழுகை போல. நம்மைப் போலவே பிரிவை அன்றில் பறவைகளும், அந்தத் துயர்மிக்கக் காலத்தை அகவல் ஒலி எழுப்பியே கடக்குமாம்.”
பட்டென்று இருக்கையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு எழுந்து கொண்டாள் ராகவி. என்னவோவென்று பதறி நொடியில் அவள் பக்கத்தில் வந்து நின்றான் ராஜா.
“என்னாச்சு?” என்றான்.
“ஒன்னுமில்ல. டையர்டா இருக்கு. படுக்கப் போறேன். அப்புறம் பார்க்கலாம்” அங்கிருந்து நகரப் போனவளை தடுத்து நிறுத்தியது அவன் குரல்.
“அந்த வண்ணமயத்துக்குக் காரணம் சொல்லவே இல்ல நீங்க?” என்று கேட்டவனைக் கண்களில் தீயுடன் பார்த்தாள்.
“சொல்ல…. முடியாது” என்றாள் கடினமான குரலில்,
“ஓகே.” தோள் குலுக்கினான்.
“சுஹாசினி ஏன் க்ளோஸ்?, கல்யாணம் எப்படி நடந்தது, அப்புறம் வண்ணமயம், இந்த ஆர்டரில் யோசித்துப் பாருங்க. ஒருவேளை தூக்கம் வரலைன்னா…” என்றான்.
“கல்யாணம், சுஹாசினி விஷயம் கூட விட்டுடலாம். அந்த வண்ண…” என்று மீண்டும் முதலில் இருந்து தொடங்கியவனைத் தாண்டி கொண்டு செல்ல முயன்றாள் ராகவி.
அப்போது, அவன் கை அவள் வயிற்றில் உரச, “ஹலோ, என்ன? கை மேல படுது. தள்ளி நில்லுங்க” எரிந்து விழுந்தாள்.
“அட, தெரியாம பட்டு இருக்கும். அதுக்குப் போய், என்னமோ மணிவண்ணன் சொன்ன மாதிரி, “அம்மாவாசை கால் படுது”ன்னு கத்தறீங்க?” அவன் பேச்சில் அப்படி ஒரு கோபம் வந்தது அவளுக்கு. ஆழ மூச்சிழுத்து விட்டு, அவனைக் கடந்து, அறையை நோக்கி நடந்தாள் ராகவி.
ஏதோ தோன்ற லேசாகத் தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள், உடல் குலுங்க சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.
அறைக்குச் சென்று உடை மாற்றி, படுக்கையில் விழுந்தாள். கண்களைத் தூக்கம் நிறைப்பதற்குப் பதில் கணவன் தான் நிறைத்தான். கூடவே, ராஜாவின் கேள்வியும்.
“கல்யாணம், சுஹா, வண்ணமயம்” காதில் அவன் குரல் குரல் எதிரொலித்தது கொண்டேயிருந்தது.
நினைவுகள் தாமாக அவர்களின் திருமணத்தில் போய் நின்றது.