பறவைகளின் கீச்சிடல் சத்தத்தில் கண் விழித்தாள் பார்கவி.
அவளுக்கு முன்னே எழுந்து தயாராகி நின்றிருந்த கணவனைக் கண்டதும், “உங்களுக்கு ஆபீஸ் லேட்டாகுதா பார்த்தி” என்று கேட்டபடியே எழுந்து அவனிடம் சென்றாள். அவளின் நெற்றி முட்டி, அழுத்தமாக முத்தம் வைத்தான்.
“மணி ஆறுதான் ஆகுது. நீ போய்க் குளிச்சுட்டு வா.” என்றான்.
இருவரும் குளித்துக் கீழே வர, கூடத்தில் அமர்ந்திருந்தார் காவேரி.
அவர்களைப் பார்த்ததும் அவர் எழ, “நீ உக்காரும்மா. இப்போ கால் வலி எப்படி இருக்கு?” என்று அவரை விசாரித்தாள்.
“அது நேத்தே சரியா போச்சு” என்றார்.
“அப்பாவும் நானும் காஃபி குடிச்சுட்டோம். உனக்கும், மாப்ளைக்கும் மட்டும் கலந்துக்கோ. வேற எந்த வேலையும் செய்யாத. சரளா இப்ப வந்துடுவா, அவ பார்த்துப்பா” என்றார். சரியெனச் சமையல் அறை சென்றாள்.
சரளா சற்று நேரத்தில் வந்து சமையலை கவனிக்க, அப்பாவை தேடி சென்றாள்.
“மாமா பின்னாடி தோட்டத்தில் இருக்கார் போல” என்று அவளுக்கு முன்னே நடந்தான் பார்த்திபன்.
அங்கே வேலைக்கு ஓர் ஆள் வைத்து குழி வெட்டி கொண்டிருந்தார் ரங்கராஜன்.
மகளைப் பார்த்ததும், “வாடா பாரும்மா. வா, இந்த வாழை கன்னை உன் கையால எடுத்து வை” என்றார்.
காவேரியும் வந்து நிற்க, மகள், மருமகனின் கையால் அந்த வாழை கன்றை நடச் செய்தார்.
“வாழையடி வாழையா வளர்ந்துட்டே இருப்பீங்க” என்று அவர்களை வாழ்த்தினார் சரளா.
அப்படியே வீட்டு வாசலின் ஒரு பக்கம் மஞ்சள் சரக்கொன்றை கன்றும், மறுபக்கம் செம்பருத்தி செடியும் நட்டு வைத்தார்கள்.
அவர்கள் காலை உணவு உண்ண அமர்ந்தார்கள். பார்கவி தலைக்குக் குளித்துக் கூந்தலை சிறிய கிளிப்பிற்குள் அடைத்திருந்தாள். சில கற்றைகள் பிரிந்து காற்றுக்குப் பறக்க, அவள் பின்னே வந்து நின்ற பார்த்திபன் அவள் கூந்தலை மொத்தமாக முடிந்து கொண்டையிட்டான்.
பார்கவி அவனைத் திரும்பி பார்த்து, “எங்கப்பா மாதிரியே பண்ணாதீங்க” என்று உதடு சுழித்தாள்.
“இந்த டைம் உங்கப்பாதான் என்னைக் காப்பிப் பண்ணியிருக்கார் பிரின்சஸ்” என்று அவன் சொல்லவும் சிரித்தாள்.
ஆரம்பத்தில் அவனிடம் அவளை ஈர்த்தது அந்தக் குணம்தானே?!
அவர்கள் காலை உணவை முடிக்க, பிரபஞ்சன் பிரியதர்ஷினி அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள்.
காவேரி அவர்களை உபசரிக்க, “இந்தா பாரு. இவனைப் பிடி. நான் கொஞ்ச நேரம் தூங்கிக்கறேன்” என்று அவர்களின் புதல்வன் பிரவாகனை அவளிடம் கொடுத்து விட்டு, படுத்து விட்டாள் பிரியதர்ஷினி.
குழந்தையை மென்மையாக வருடிக் கொடுத்து, கோலி குண்டு கண்களை உருட்டி அவளைப் பார்த்த பிள்ளையிடம் சுட்டு விரல் நீட்டி விளையாடத் தொடங்கினாள்.
அவளின் சுட்டு விரலை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான். காலை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தவனை அவள் ரசிக்க, பிரியதர்ஷினி அசதியில் கண்ணயர்ந்திருந்தாள்.
“பார்த்தி, உங்களுக்கு ஆஃபீஸ் லேட்டாகல?” என்று கேட்டபடியே அவள் நிமிர, அவன் பதிலே சொல்லவில்லை.
“பார்த்தி..” என்று சத்தமாக அழைத்தாள். சட்டென்று அவள் நிமிர்ந்து நோக்க, பிரபஞ்சனின் தோள் சாய்ந்து உறங்கி கொண்டிருந்தான் அவன்.
“டேய் பார்த்தி” என்று பிரபஞ்சன் கிசுகிசுக்க, “என்ன பாரு..” என்று பிரபஞ்சன் மேல் கை போட்டு, கண் விழித்து, “டேய் நீயா.. தள்ளி போடா” என்றான்.
“எல்லாம் என் நேரம்டா..” என்று பிரபஞ்சன் புலம்ப, பார்கவியின் சத்தத்தில் கண் விழித்த பிரியதர்ஷினி, நண்பர்களைக் கண்டு சிரிக்கத் தொடங்கியிருந்தாள்.
“உனக்கெல்லாம் வேலை வெட்டி இல்லையாடா?” பார்த்திபன் கேட்க, “ஒர்க் ப்ரம் ஹோம் மச்சா” என்றான் பிரபஞ்சன்.
“வெட்டி பய, எனக்கு ஆபீஸ் நேரமாச்சு” என்று பார்த்திபன் பரபரப்புடன் கிளம்பினான்.
அலுவலகம் சென்றதும் மனைவியை அழைத்து விட்டான்.
“பார்த்தி, முன்னாடி அண்ணாவும், பிரியாவும் ஒரு பிசினஸ் ஐடியா சொன்னாங்க இல்ல? நாம நாலு பேரும் சேர்ந்து செய்யலாம்னு.. அதை இப்போ செய்யலாமான்னு கேட்கறாங்க.” என்று அவ்வளவு நேரமும் அவர்கள் பேசியதை அவள் சொல்ல, “நீ என்ன நினைக்கிற பாரு? பிசினஸ்ன்னு இறங்கிட்டா நம்ம ஃப்ரெண்ட்ஷிப் பாதிக்கப்படக் கூடாது. அதுனால நாம பொறுமையா யோசிச்சு முடிவு பண்ணுவோம்” என்றான். அவன் சொல்வது சரியெனப்பட அந்தப் பதிலையே பிரபஞ்சனிடம் சொன்னாள்.
அன்று மாலையே பார்த்திபன் வீட்டுக்குச் சென்றிருந்தார்கள்.
அடுத்த மூன்று வாரங்கள் விரைந்து நகர்ந்திருந்தன.
ஒரு மாதம் முடிந்து விட்டதால் மீண்டும் மருத்துவமனை சென்று பரிசோதனைகள் செய்து, அவளின் உடல் நலத்தை உறுதி செய்து வீடு திரும்பினார்கள். பார்கவி முழுதாக இயல்புக்கு திரும்பியிருந்தாள்.
உடலை போலவே மனமும் நன்றாகத் தேறியிருந்தது.
வேலை, வாழ்க்கை என்ற பரபரப்பில் மேலும் மூன்று வாரங்கள் விரைந்து ஓடியிருந்தன.
ரங்கராஜனை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்த பார்கவி, அன்று அம்மா வீட்டிலேயே இருந்து விட்டாள்.
பார்த்திபன் அலுவலகத்தில் இருந்து நேராக அங்கு வந்து விட்டான்.
அவன் வீடு வரவே மிகவும் தாமதமாகி இருந்தது. அவனுக்காகக் காத்திருந்த பார்கவி உறக்க கலக்கத்துடன் ஊஞ்சலிலேயே படுத்து உறங்கி விட்டிருந்தாள்.
மென்மையாக அவள் முகம் வருடி, “பாரு” என்றழைத்தான்.
“ம்ம், என்ன இவ்வளவு லேட்?”
“ப்ராஜெக்ட் ஃபைனல் ஸ்டேஜ் பாரு”
“சாரி, மறந்துட்டேன். சாப்பிடுறீங்களா?”
“ஆபீஸ்ல டீமோட சாப்பிட்டுட்டேன். எழுந்திரு, உள்ள போய்ப் படுக்கலாம்” என்று அவளின் தோள் பிடித்து எழுப்பினான்.
அவள் எழுந்த வேகத்தில் அவன் மேல் மோத, அவன் கரம் அவளை அணைவாகப் பிடித்தது. அவன் மார்பில் முகம் புதைத்து அணைத்து கொண்டாள்.
“பாரு..”
“பாருவ பார்க்கறதே இல்ல நீங்க” அவன் மார்பில் இருந்து முகம் உயர்த்தி, புகார் படித்தாள். சன்ன சிரிப்புடன், “என் பாருவை இப்போ கூடப் பார்க்கறேனே” என்றான்.
“நான் ஒன்னும் இதைச் சொல்லல” என்று உதடு சுழித்தாள்.
“தூக்கம் வரலையா உனக்கு?” என்று பேச்சை மாற்றினான்.
“டாக்டரே ஓகே சொல்லிட்டாங்க. நீங்கதான் ரொம்பப் பண்றீங்க” என்று அவன் மார்பில் முட்டினாள். அவள் முகத்தை நிமிர்த்தி அவளை மெல்ல விலக்கி, அவள் கையில் கனமான பையை வைத்தான்.
கண்களைச் சுருக்கி, “என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க?” என்று கேட்டாள்.
“நாளைக்கு எனக்குப் பெர்த்டே. அதான் உனக்குப் பிடிச்ச லாவெண்டர் கலர் பட்டு சேலை வாங்கினேன். பிடிச்சிருக்கான்னு பிரிச்சு பாரு” என்றான்.
“பிடிச்சிருக்காவா? ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்று அவன் கண்ணோடு கண் சேர்த்து இமைகளைச் சிமிட்டினாள்.
அவள் விரல்கள் அவன் சட்டையின் பொத்தான்களைப் பிரிக்க, “நான் எதைப் பிரிக்கச் சொன்னேன். நீ எதைப் பிரிக்கற?” என்று சிரிப்புடன் அவள் நெற்றி முட்டினான்.
“பெர்த்டே பேபிக்கு பரிசு கொடுக்கிறேன்” என்றாள் காதலுடன். அவன் கழுத்தில் கரம் கோர்த்து நெருக்கமாக இழுத்தாள், முத்தமிட்டு மொத்தமாய் அவளை வாரி சுருட்டி கொண்டான். இருவரையும் இதமாகத் தாங்கியது ஊஞ்சல்.