சத்யபாமா மகளை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்க, காலையிலேயே வீடு வந்து விட்டாள் ரேணுகா.
வீட்டுக்குள் நுழைந்ததும், “பசிக்குதும்மா” என்றாள்.
“இவ்ளோ தூரம் சாப்பிடாமயா வந்த?”
“பின்ன? காலையில சாப்பிட எங்கம்மா நேரம் இருக்கு? பிரேக்பாஸ்ட், லஞ்ச் சமைச்சு, பசங்களை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பிட்டு, அவர ஆஃபீஸ் அனுப்பிட்டு.. அத்தை மாமாவை கவனிச்சு…” என்று மூச்சு விடாமல் அவள் புலம்ப, “இந்தா சாப்பிடு மொதல்ல..” என்று அவள் கையில் காலை உணவு இருந்த தட்டை திணித்தார் அவர்.
இதே போன்று மருமகளையும் கவனிக்காமல் போனோமே என்ற குற்ற உணர்ச்சி அவருக்கு இன்னமும் நீங்கவில்லை.
ஒரு தோசையை முழுமையாக உண்டு முடித்து, “என்னம்மா ஒரு மாதிரியா இருக்க, நீ சாப்பிட்டியா இல்லையா?” என்று அவரை விசாரித்தாள் ரேணுகா.
“ம்ம். எனக்கு அந்தப் பிரபாவதி பொண்ணு ஞாபகமாவே இருக்கு ரேணு” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.
“ம்மா, அண்ணா, அண்ணி முன்னாடி இப்படி உளறி வைக்காத. விஷயம் அவங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.
“இல்லயில்ல, உங்க அண்ணனுக்கு எதுவும் தெரியாது. நான்தான் அன்னைக்கே சொன்னேனே, நாங்க ஹாஸ்பிடல் வெயிட்டிங் ரூம்ல இருக்கும் போது அந்தப் பொண்ணும் அவங்க அம்மாவும் என் பக்கத்துல உட்கார்ந்திருந்தாங்க. அப்போ உன் அண்ணே வந்தவன், அப்படியே நாலு வரிசை முன்னாடியே உட்கார்ந்துட்டான். நான்தான் அவங்ககிட்ட பேசினேன்”
“அப்புறம் என்னம்மா? விடு. நீ இப்படிக் கவலைப்பட்டா அவங்க லைஃப் நல்லாகிடுமா?”
“புரியாம பேசாத ரேணு. மாசமா இருக்கப் புள்ள புருஷன் கூட இல்லாம அப்பா வீட்ல இருக்குன்னு கேட்டதும் மனசு பதறி போச்சு”
“அ…ம்மா” என்று அழுத்தமாகப் பல்லைக் கடித்து அழைத்தாள்.
“சும்மா என்னைய அதட்டாத ரேணு. அன்னைக்கு ஹாஸ்பிடல் வந்த நீயே என்னைய திட்டல?” என்று கோபமாகக் கேட்டார்.
“உன் மேல் இருந்த கோபத்துல திட்டினேன் மா. நீ அண்ணியைப் போட்டு படுத்தின பாட்டுக்கு திட்டினேன். அதுக்காக…” என்று அம்மாவை முறைத்தாள்.
“நேத்து கூட அந்தப் பொண்ணுக்காகக் கோவிலுக்குப் போய் வேண்டிக்கிட்டேன் தெரியுமா?”
“அ..ம்மா”
“நம்ம பார்கவிக்கு வேண்டும் போது அந்தப் பொண்ணுக்கும் சேர்த்து வேண்டினேன். அந்தப் பொண்ணும் பாவம்தானே?” என்று கேட்டார்.
பதிலே சொல்லாமல் அம்மாவை அழுத்தமாகப் பார்த்தாள் ரேணுகா.
அன்று மருத்துவமனையில் பிரபாவதியின் அம்மாவை பார்த்ததும் பேசாமல் முகம் திருப்பிக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டார் அவர். ஆனால் பிரபாவதியின் அம்மா அவராக வந்து அவரின் அருகில் அமர்ந்தார்.
அன்றொரு நாள் அவர் மனம் வருந்த கோவிந்தன் பேசியதற்கு, மனதார மன்னிப்பு கேட்டார்.
“பரவாயில்ல இருக்கட்டும். அந்தப் பேச்சு எதுக்கு இப்போ? நான் என் மருமகளைக் கூட்டிட்டு டாக்டர் பார்க்க வந்திருக்கேன். ரெண்டு பேரும் ஸ்கேன் எடுக்கப் போய் இருக்காங்க” என்று பெருமையும் பூரிப்புமாகச் சொன்னார்.
“நானும் மகளுக்குத் துணையாதான் வந்தேன். நாங்க மாச செக் அப்க்கு வந்தோம்” என்றார்.
“அவங்கப்பா எங்களோட வர்றேன்னார், மக வேண்டாம்னுட்டா. அப்பாகிட்ட மக முகம் கொடுத்துப் பேசுறது இல்ல. அவரு பண்ண பாவம் எல்லாம் என் பொண்ணு தலையில வந்து விழுந்துருச்சு. கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடினார். உங்களையே என்ன பாடாப்படுத்தியிருப்பார்? அடுத்தவனைக் கஷ்டப்படுத்தினா ஒருநாள் நமக்குத் திருப்பி அடிக்கும் இல்ல? என் புருஷன் பண்ண கொடுமைக்கு என் பொண்ணு கஷ்டப்படுறா, உங்ககிட்ட சவால் விட்டு அவசர அவசரமா மாப்ள பார்த்து பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணார். போலீஸ் மாப்ள. இவரை விடவும் பெரிய போஸ்டிங். இவர் பண்ற அராஜகத்த பார்த்திட்டு பேசாம இருப்பானா? பதிலுக்குப் பதில் திருப்பி அடிச்சுட்டான்”
“ஐயோ..”
“இவளுக்கு அப்பா மேல கண்ணு மண்ணு தெரியாத பாசம். உங்கப்பாதான் முக்கியம்னா அவரோடயே இருந்துக்கோன்னு விட்டுட்டு போயிட்டார். மாசமா இருக்கப் பொண்ணு அப்பாக்கும் புருஷனுக்கும் நடுவுல கிடந்து அல்லாடுது.”
“நீங்க உங்க மருமகன் கிட்ட பேசலாம்ல?”
“எங்க இவரு விடணுமே? இத்தனை வருஷமா இவரு பேச்சுக்கே ஆடி நானும் பழகிட்டேன். மாப்ளயும் இறங்கி வர மாதிரி தெரியல. இவங்கப்பாவும் பிடிச்ச பிடிய விடுறதா இல்ல. மாசமா இருக்கப் பொண்ணு தினம் அழுது வாடுறத பார்த்தா..” என்று அவர் கண் கலங்க, “நீங்க பேசி சரி பண்ணுங்க. பொண்ணு வாழ்க்கைதானே முக்கியம்.” என்றவர், அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.
ஓய்வறை சென்றிருந்த பிரபாவதி வரவும், அந்தப் பேச்சு அத்தோடு நின்று போனது. பிரபாவதியை பக்கத்தில் அமர்த்தி, அவளிடம் இயல்பாக நலம் விசாரித்துப் பேசினார் அவர்.
பத்து நிமிடங்களில் அவர்கள் மருத்துவரை பார்க்க சென்று விட, உடனடியாக மகளை அழைத்துப் புலம்பித் தள்ளினார்.
இப்போதும் அதையேதான் சொன்னார்.
“அவங்கப்பா.. அந்தப் போலீஸ் மேல இருந்த கோபத்துல.. என்னென்னமோ திட்டியிருக்கேன் ரேணு. ஆனா அன்னைக்கு அந்தப் பொண்ணை அப்படிப் பார்க்கும் போது மனசு கனத்து போச்சு”
“விடும்மா. அதுக்கு நீயென்ன பண்ண முடியும்? அவங்க லைஃப், அவங்க பார்த்துப்பாங்க. நீ அண்ணனையும், அண்ணியையும் பாரு”
“சத்தியமா அந்தப் பொண்ணுக்கு நான் கெடுதல் நினைச்சுது இல்ல ரேணு” என்று அவர் படபடக்க, “அம்மா.. அவங்கப்பா பண்ணதுக்கு நீ என்னம்மா பண்ணுவ? நீ அண்ணியை ஒழுங்கா நடத்து போதும். இல்லன்னா நாளைக்கு அண்ணே தனியா உட்காந்துட்டு இருக்கும். பார்த்துக்கோ” என்று மிரட்டலாகச் சொல்லியிருந்தாள்.
“அண்ணியை ஆசைப்பட்டுக் கல்யாணம் பண்ணியிருக்கும்மா அண்ணே. அதுக்கு நீ பண்றது எல்லாம் எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு நீயே நினைச்சு பாரு. உனக்கும், அண்ணிக்கும் நடுவுல கிடந்து போராடிட்டு இருக்கு. இப்பிடியே போனா உன்னைய வெறுத்துடும்மா. இல்லன்னா உனக்காக அண்ணிய விட்டா..”
“ஏன் ரேணு இப்படி அச்சாணியமா பேசுற?” என்று அவர் கடிய, “நீ பண்ற கொடுமைக்கு அண்ணா வேற என்னம்மா பண்ணும்?” என்று கோபமாகக் கேட்டாள் அவள்.
“அண்ணி கைய பிடிச்சுட்டு அண்ணே அழுதும்மா. அண்ணா அழுது பார்த்துருக்கியா நீ? என்கிட்ட போன்ல பேசும் போது அண்ணா குரலை கேட்டிருக்கணுமே நீ..” என்று மூக்கை உறிஞ்சி கொண்டாள்.
“அந்தப் பொண்ணு வாழ்க்கையை அவங்களும், அவங்க அம்மாப்பாவும் சேர்ந்து சரி பண்ணிக்குவாங்கம்மா. இங்க நீ சரியாகு, இல்லன்னா..” என்று அவள் இழுத்து நிறுத்த, “என் மகனும், மருமகளும் நல்லா இருப்பாங்க. நான் ஏதோ கோபத்துல வருத்ததுல என்னென்னமோ பண்ணிட்டேன்” என்று வருந்தி புலம்பினார் சத்யபாமா. அதன் பிறகு அவரிடம் பலத்த மாற்றம் வந்திருந்தது.
பிரபாவதியின் அப்பாவின் மேல் அவருக்குக் கோபமும், வருத்தமும் இருந்தது. பல பொழுதுகளில் அவரைப் பேசியிருக்கிறார். ஆனால் ஒருநாளும் மனதார கெடுதல் நினைத்ததில்லை.
பிரபாவதியை பார்த்ததில் இருந்து பெரும் குற்ற உணர்ச்சி அவரை வியாபித்திருந்தது.
பார்கவிக்கு இப்படியானது வேறு அவரை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
“அந்தப் பொண்ணுக்காக வேண்டிக்கறதோட விட்டுடும்மா. அதுக்கு மேல அவங்களுக்கும் நம்மளுக்கும் எதுவும் இல்ல. என்கிட்ட புலம்பின மாதிரி அண்ணா, அண்ணி முன்னாடி இதையே சொல்லி அவங்களுக்கு நடுவில..”
“ரேணு, அம்மாவை என்ன நினைச்ச நீ. அப்படியெல்லாம் முட்டாள்தனம் பண்ண மாட்டேன் நான்” என்றார் கோபமாக.
“ம்ம், அப்புறம் சும்மா எனக்காக அண்ணாகிட்ட பணம் கேட்காத. ஏற்கனவே அண்ணா எனக்கு நிறையச் செஞ்சுடுச்சு. அண்ணி பேரை சொல்லி என் மாமியார் பணம் புடுங்க பாக்குது. அதுக்கு நீயும் துணை போகாதம்மா. அப்புறம் ஒரு நாள் வெறுத்து போய் அண்ணியும் என்னைப் போல ஏதாவது செஞ்சிட்டா..” என்றவளின் தோளில் சுளீரென்று அடித்திருந்தார் அவர்.
“உனக்கு அப்பா செய்வார் ரேணு. உங்க அண்ணனை நான் கேட்கல போதுமா?”
“ம்ம், அண்ணியை விட்டுட்டம்மா?” என்று அவள் புருவம் உயர்த்த, “அவ என்ன எனக்கு எதிரியா? இனி அவளை எதுவும் சொல்லல போதுமா?” என்று கோபம் போலச் சொன்னவருக்கு மகளின் பார்வையில் சிரிப்பு வந்து விட்டது.