அதிகாலையில் கடல் காற்று உடலைத் தழுவிச் செல்ல, சூரிய உதயத்தை ரசித்தபடியே நடந்து கொண்டிருந்தாள் ராகவி.
“நடக்கணும்னு சொன்னீங்க. ஆனா, திரும்பி ரூமுக்கு போறீங்க போல?” என்று ராஜா கேட்க,
“இன்னைக்குச் சுஹா, மலர் ரெண்டு பேரும் மங்களாதேவி கோவிலுக்குப் போறாங்க.”
“நீ.. நீங்களும் போறீங்களா?”
“ஆமா, போகலாம்னு இருக்கேன்” என்றாள் ராகவி.
“ஏன்?”
“என்ன கேள்வி இது? கோவிலுக்கு எதுக்குப் போவாங்க? சாமி கும்பிட தான்.”
“ஓ, எதுவும் வேண்டுதலோன்னு… கேட்டேன்” என்றான் தயங்கியபடி,
“வேண்டுதல் எல்லாம் இல்ல. ஆனா, கடவுளுக்கு நன்றி சொல்லத் தான் போறோம்.” என்றாள், புன்னகையை இதழ்களுக்குள் மறைத்தபடி,
“எதுக்கு நன்றி?”
“சாமி வரம் கொடுத்தா மட்டும் நன்றி சொல்றோம். ஆனா, கஷ்டம் கொடுத்தா உனக்குக் கண்ணிருக்கா சாமின்னு கேட்டு அவரை இன்சல்ட் பண்றோம். ஆனா, நாங்க அப்படி இல்லப்பா. கஷ்டம் கொடுத்த சாமிக்கு நன்றி சொல்லிட்டு வரலாம்னு போறோம். வாழ்க்கையில் நல்லதையும், கெட்டதையும் ஒரே மாதிரி பார்க்கணும் இல்ல? நல்லதோ, கெட்டதோ அவர் தானே கொடுக்கறார். அதான்”
அவளை அப்படியே பார்த்தது, பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.
“என்ன?” என்றாள் கேள்வியாக,
“ஒன்னுமில்ல. போய்ச் சாமிக்கு நல்லபடியா நன்றி சொல்லிட்டு வாங்க. அப்படியே சீக்கிரமே போலீஸ் கூடச் சேர்த்து வைக்கச் சொல்லி மனு கொடுத்துட்டு வாங்க” என்றான்.
அவள் கண்களைச் சுருக்கி அவனைப் பார்க்க,
“உங்களுக்கு என்ன, ஜாலியா உங்க ப்ரெண்ட்ஸ் கூட இருக்கீங்க. ஆனா, நீங்க இல்லாம போலீஸ் ரொம்பத் தவிச்சு போய் இருப்பார்னு தோணுது” என்றான் தீவிரமான குரலில்.
“ம்ம்ம், ரொம்பத் தான் அக்கறை. அப்படியே தவிச்சுட்டாலும்…” என்று விட்டு, அவனைத் திரும்பி பாராமல் நடக்கத் தொடங்கினாள் ராகவி.
தோழிகள் இருவரும் ரிசார்ட்டின் காரில் கோவிலுக்குச் சென்று விட, ராகவி ரிசார்ட்டில் தோட்டத்தை ஒட்டி இருந்த திறந்தவெளி உணவகத்தில் காலை உணவிற்காகச் சென்று அமர்ந்தாள்.
மணி எட்டு தான் ஆகிருந்தது. இரவு சரியாக உண்ணாததால் காலையில் சீக்கிரமே பசிக்கவும், நேராக அங்கு வந்து விட்டாள்.
என்ன சாப்பிடுவது என்ற யோசனையுடன் அவள் நிமிர,
“நானும் ஜாயின் பண்ணிக்கலாமா?” என்றபடி நின்றிருந்தான் ராஜா.
“முடியாது சொன்னா? எழுந்து போய்டுவீங்களா?” அமரப் போனவன் அவளது பதிலில் ஒரு நொடி தயங்கி விட்டுப் பின் அமர்ந்தான்.
பணியாளரை அழைத்து இருவருக்கும் தேவையான உணவினை சொல்லி அனுப்பினான்.
காலை நேர பறவைகளின் பல்வேறு கானங்களைக் கேட்டு ரசித்தபடி அமர்ந்திருந்தாள் ராகவி. சிறிது நேரத்தில் எல்லாம் அவைகளின் ஒலி அதிகமாகி இருந்தது.
ஏனோ அவளுக்கு அது சற்றே எரிச்சலை மூட்டுவது போலிருந்தது.
எதுவுமே அளவாக இருந்தால் தான் இனிமையாக இருக்கும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள் ராகவி.
அவளுக்கான உணவு வர, ஒரு வாய் உண்டவள் விழி விரித்தாள்.
“இன்னைக்கு இட்லி, தக்காளி சட்னி சென்னையில் சாப்பிடுற மாதிரியே இருக்கு” என்றாள் வியப்புடன்.
“ஸ்பெஷலா செய்யச் சொன்னது” என்றான்.
அவள் நிமிர்ந்து கண்களில் கேள்வியுடன் அவனைப் பார்க்க,
“உங்க ப்ரெண்ட் சொல்லி இருப்பாங்க போல” என்றான்.
ஒன்றும் சொல்லாமல் உணவை உண்ணத் தொடங்கினாள். அவனும் தன் சப்பாத்தி, சென்னாவில் கவனமானான்.
தொடர்ந்த நிமிடங்களில், அவர்களின் அமைதியும் தொடர்ந்தது.
அந்த அமைதி, பறவைகளின் ஒலியைத் தாண்டிய பேரிரைச்சலாக இருந்தது அவளுக்கு.
மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள், அவனும் அப்போது அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். புன்னகைத்துக் கொண்டனர்.
“விஜி, காவ்யா எல்லாம் எப்படி? பிரியதர்ஷினி கிட்ட ஏன் அவங்க தற்கொலை முயற்சி பத்தி நீங்க பேசலை?” கேள்வி கணைகளைத் தொடுத்தான்.
“பிரியா அக்கா, கொஞ்சம் கொஞ்சமா அதில் இருந்து மீண்டு வந்தாங்க. அந்த நேரம் அவங்ககிட்ட திரும்பவும் அதைப் பத்தியே பேசி, ட்ரிக்கர் பண்ண விரும்பல நான். அந்த நிகழ்வையும், அது சம்மந்தப்பட்ட அனைத்தையும் அவங்க முழுசா மறக்கணும்னு நினைச்சேன்” என்றவள்,
“கேட்காததுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. ஒரு வேளை, நான் கேட்டு, அவங்க எங்க வீட்ல இருந்த தனிமையும், வேலைப் பளுவும், குழந்தையைத் தனியா கவனிக்க முடியா சூழ்நிலையும் தான் காரணம்னு சொல்லிட்டா… எனக்கு ரொம்பக் குற்ற உணர்ச்சியாகி இருக்கும். நாம, அதாவது.. மனிதர்கள் மகத்தான சல்லிப்பயல்கள் தானே? முதலில் நம்ம மனசை காத்துக்கத் தானே பார்ப்போம்” ஒரு நொடி அவன் கண்களைப் பார்த்து விட்டு,
“நான், என்னோட மன நிம்மதிக்காகத் தான் அதைப் பத்தி அதிகம் அவங்ககிட்ட பேசலை. ஆனா, அவங்க அதில் இருந்து மீண்டு வர என்னாலான உதவியை… உதவி சொல்ல முடியாது. நான் என்ன செய்யணுமோ, அதைச் செய்தேன்” நீண்டதாகச் சொல்லி முடித்தாள்.
மென்மையாகப் புன்னகைத்து, “அந்த அளவுக்குச் செய்யவும் ஒரு மனசு வேணும்.” என்றான்.
தலையை மறுப்பாக அசைத்து கொண்டாள்.
“உதய் தங்கை காவ்யா எப்படி?” என்றான் கேள்வியாக.
“எங்களுக்குக் கல்யாணம் ஆன புதுசுல அவ்ளோ பாசமா இருப்பாங்க. அவர் கிட்ட வந்து வந்து பேசுவாங்க. ஆனா, அவர் அதிகம் பேசுற ஆள் கிடையாது. எல்லாப் பேச்சும் என்கிட்ட மட்டும் தான். அவர் பதில் சொல்லலைன்னாலும் அவர்கிட்ட உட்கார்ந்து பேசிட்டே இருப்பாங்க. அண்ணி, அண்ணின்னு என் பின்னாடியும் வருவாங்க. ஆனா, திடீர்னு ஆளே மாறிப் போய்ட்டாங்க..”
“எப்படி?” என்ற கேள்வியுடன் இரண்டு கால்களையும் பிணைத்து முன்னே நீட்டிக் கொண்டு, இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
கதைச் சொல்லத் தொடங்கினாள் ராகவி.