பார்கவி மருத்துவமனைக் கிளம்பியதும் காவேரி, பிரியதர்ஷினி என இருவருக்கும் அழைத்திருந்தாள்.
“அம்மா.. ம்மா..” என்று அவள் சலுகையாக அழைக்க, “என்னடா பாரு. இப்பத்தான் அம்மா சொல்ல கத்துக்கிட்ட பிள்ள போலத் திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருக்க?” என்று காவேரி கேலி பேச, “நாங்க ஹாஸ்பிடல் போறோம்மா” என்றிருந்தாள்.
“எதுக்குப் பாரு, என்னாச்சு?” என்று அவர் பதற, “அதுவாம்மா.. நான் நேரா வீட்டுக்கு வந்துட்டு சொல்லவா? லஞ்ச் நம்ம வீட்லதான்ம்மா, ஏதாவது ஸ்பெஷலா செஞ்சு வைங்க. நான் சீக்கிரம் வந்துட்டா நானும் ஹெல்ப் பண்றேன்” என்றாள். காவேரி திரும்பத் திரும்பக் கேள்விகள் கேட்டு ஓரளவு விஷயத்தைக் கணித்து விட்டார்.
“சரி, நான் அப்பாவ அனுப்பி மாப்பிள்ளைக்கு மட்டன் வாங்கிட்டு வர சொல்லி செஞ்சு வைக்கறேன். கூடவே உனக்குப் பிடிச்ச ஸ்வீட் செஞ்சுடுறேன்” என்று அவர் சொல்ல, “ம்மா” என்று சலுகையாக அழைத்து, சிரித்து அழைப்பை துண்டித்திருந்தாள்.
“உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கு பிரியா. மதியம் நம்ம வீட்ல மீட் பண்ணுவோம். ஓகே?” என்று பூடகமாகத் தோழியிடமும் சொல்லியிருந்தாள்.
இப்போது அம்மாவிடம் பேச வேண்டும் என்று அவள் மனம் தவிக்கிறது. ஆனால், “பாரும்மா, பாரு” என்று உயிர் உருக காவேரி அலைபேசியில் அழைக்க அவளால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. முதலில் முட்டி கொண்டு அழுகைதான் வந்தது. வாய் விட்டுக் கதறிச் சத்தமாக அழ வேண்டும் போலிருந்தது.
“பாரு” என்று அவளின் தலைக் கோதி அவளின் பக்கத்திலேயே இருந்தான் பார்த்திபன்.
மருத்துவர் உறுதி செய்யும் வரை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று அவர்கள் பேசியிருந்தாலும், நண்பனிடம் மறைக்க முடியாமல் பிரபஞ்சனை அழைத்து, “மிஸ்டர் பி, எனக்குப் பிடிச்ச பூந்தி லட்டும், இட்டாலியன் டிலைட் ஐஸ்கிரீமும் வாங்கி வைங்க. நாம மதியம் மீட் பண்றோம், அப்போ ஸ்வீட் எடு கொண்டாடுக்குத் தேவைப்படும். ஓகே? அப்புறம் இன்னைக்குக் கிரிக்கெட் அது இதுன்னு ஊர் சுத்தமா வீட்ல இருடா நல்லவனே” என்று அவனுக்குத் தகவல் சொல்லியிருந்தான்.
இப்போது நண்பனுக்குக் குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தான் பிரபஞ்சன். அவனோடு பார்கவியின் பெற்றோரும் வந்திருந்தார்கள்.
காவேரி கண்ணீருடன் மகளின் கைப் பிடித்தார். “இந்தக் கடவுளுக்குக் கண்ணே இல்ல. இன்னும் என் மகளை எவ்ளோதான் சோதிப்பாரோ, தெரியல” என்று அழுது புலம்பினார். ரங்கராஜன் முகம் வேதனையில் வாடி இருந்தது.
மகளுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று கூட அவருக்குத் தெரியவில்லை. மருமகனின் தோளை தட்டிக் கொடுத்தார். மகளின் கன்னம் தட்டி தலை கோதி கொடுத்தார். தலைக் கோதும் தந்தையின் அன்புக்கு முன் எதுவும் ஈடாகுமா என்ன?
காவேரி அழுகையில் கரைய, “பாருக்கு லோ பிபியா இருக்குன்னு டாக்டர் சொல்றார். நீ அழுது அவளை அழ வைக்காத. பிள்ளை ரெஸ்ட் எடுக்கட்டும். நாம வெளில இருப்போம் வா” என்று மனைவியை அழைத்துக் கொண்டு வெளியேறினார் அவர்.
பிரியதர்ஷினி அழைத்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னாள். அவளுக்குப் பின்னால் கேட்ட குழந்தையின் அழுகை சத்தத்தில், பார்கவியின் இழப்பு பேரிழப்பாக அவளின் நெஞ்சில் மோத, மூக்கை உறிஞ்சி தேம்பினாள்.
அந்த அழைப்பை துண்டித்து, “பாரு” என்று மனைவியைப் பரிதவிப்புடன் பார்த்தான் பார்த்திபன்.
“பார்த்தி” சிறுபிள்ளையாய் தேம்பி, உதடுகள் அழுகையில் துடித்துப் பிதுங்க, படுக்கையில் அவனை நோக்கி நகர்ந்து வந்து கை நீட்டினாள்.
அவர்களுக்குத் தனிமை கொடுத்து அறையில் இருந்த செவிலி வெளியேற, ஒற்றைக் கையால் அவன் இடுப்பை கட்டிக் கொண்டு, அவன் வயிற்றில் முகம் புதைத்து, “பார்த்தி” என்று கத்தி அழுதாள். அவளின் கன்னம், நெற்றி, தலை, கழுத்து, முதுகு என ஆறுதலாக வருடிய அவன் கரம், அவள் வயிற்றில் மென்மையாகப் பதிந்து வருடவும், சத்தமாகக் கேவினாள் அவள்.
“சாரி பார்த்தி” என்று கதறினாள்.
“அழாத பாரு, என்கிட்ட சாரி சொல்லுவியா நீ?” என்றவன் குரலில் கரகரப்பு கூடி போய் இருந்தது. அவன் கண்ணீர் சொட்டு சொட்டாக அவள் கன்னத்தில் விழ, தாய் அழுதால் உதடு பிதுக்கி அழும் பிள்ளையைப் போல அவனைப் பார்த்து பார்த்து அழுதாள் அவள்.
“என் பாரு அழ கூடாது. நம்ம புள்ளை நம்மளோடதான் இருக்கும். நம்ம கூடவே குட்டி தேவதையா.. இருப்பா. ம்ம்” மனைவியோடு தன் மனத்தையும் சேர்த்துத் தேற்றினான். அவளின் கண்ணீர் அவன் சட்டையைத் தாண்டி ஈரமாய் அவன் உடலைத் தொட்டது. அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. அன்பால் அவளை அரவணைத்துக் கொண்டான்.
அன்பை விடப் பெரிய ஆறுதல் என்ன இருந்து விடப் போகிறது?!
மனைவியைத் தாங்கியவனின் மனம் தவித்து, கரையில் விழுந்த மீனைப் போலத் துடிதுடித்தது. அவனுக்குத் தோள் கொடுக்க வந்தான் தோழன்.
“பிரபா” என்று நண்பனை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டான்.
பார்கவிக்குச் சிகிச்சை தொடங்கியிருந்தார்கள். அசதி, சோர்வு, மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து அவளை உறக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.
பார்த்திபனின் முதுகு அழுகையில் குலுங்க, “பார்த்தி..” என்று நண்பனை தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டான் பிரபஞ்சன்.
“பார்கவி பாவம் பிரபா. விதி ஏன்டா எங்களை இப்படி வச்சு செய்யுது? நாங்க என்னடா பண்ணோம். அவள ரொம்பச் சந்தோஷமா வச்சுக்கணும்னு நினைக்கிறேன் மச்சா. ஆனா.. முடியல டா பிரபா. வொய் மீன்னு கத்தணும் போலருக்குடா. அவ அழறத பாக்க முடியலடா என்னால”
“கடவுள் எப்பவும் நல்லவங்களைதான் சோதிப்பான் பார்த்தி. நீ நல்லவன்டா. உனக்கு எப்பவும் நல்லதே நடக்கும்.” என்றான் உணர்ச்சி தழும்பலில் உடைந்த குரலில்.
“பார்கவியோட சந்தோஷமே நீதான்டா. யூ ஹவ் டு ஸ்டே ஸ்ட்ராங் ஃபார் ஹெர் டா பார்த்தி” என்றான். அவன் சட்டையில் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டான் பார்த்திபன்.
அன்றிரவு மருத்துவமனையில் மருமகளோடு நான் இருக்கிறேன் என்று சத்யபாமா சொல்ல, காவேரி மகள் தன்னைத் தேடுவாள் என்றார்.
இங்கே இருவரும் வாக்குவாதம் செய்ய, அங்கே, “இவர் என்னோட இருக்கட்டும்ப்பா. நீங்களும், அம்மாவும் வீட்டுக்கு போங்க” என்று அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் பார்கவி.
“சரிம்மா, அப்பா காலையில வர்றேன் அப்போ” என்று ரங்கராஜன் சொல்ல, பார்த்திபனின் பார்வை முழுக்க மனைவியின் மீதுதான் இருந்தது. அந்த இரவையும், அவர்களின் இழப்பையும் இருவரும் இணைந்தே கடந்தார்கள். ஒற்றை இரவில் அவர்களின் அன்பும், புரிதலும் இரு மடங்காகி இருந்தது.
அவளின் படுக்கைக்கு அருகே இருக்கையை இழுத்து போட்டு, அவளின் படுக்கையில் தலை வைத்துப் படுத்திருந்தான் பார்த்திபன். அவன் கையில் கன்னம் பதித்து மெல்ல உறக்கத்தில் அமிழ்ந்தாள் அவள்.
இரண்டு நாள்கள் அவளைக் கண்காணிப்பில் வைத்திருந்து, அவள் உடல் நிலை தேறியதும் வீட்டுக்கு அனுப்பினார்கள்.
ரங்கராஜன் காரோடு மகளை அழைக்க வந்து விட்டார்.
பார்த்திபனுக்கு அம்மாவின் மீது கோபம் இல்லை. ஆனால் வருத்தம் நிச்சயமாக இருந்தது. இந்நிலையில் மனைவியை வீட்டுக்கு அழைத்துப் போகும் முன் அவள் விருப்பத்தை அறிய விரும்பினான் அவன்.
காவேரி வேறு, “பாரு, எங்க வீட்ல பத்து நாள் இருக்கட்டும்.” என்று சத்யபாமாவிடம் சொல்ல, “நான் பார்கவிய நல்லா பார்த்துப்பேன் அண்ணி. ஆனா நீங்க கூட்டிட்டுப் போறதுன்னா பார்த்திபனை கேட்டுட்டு கூட்டிட்டு போங்க” என்றார்.
துரைராஜ் மனைவியின் மேல் மிகுந்த கோபத்தில் இருந்தார். அவர் எத்தனை முறை மனைவியை எச்சரித்திருப்பார். அப்போதெல்லாம் அவர் பேச்சுக்குச் செவி சாய்க்காமல் மருமகளைப் போட்டு பாடாய்ப்படுத்தி விட்டு இப்போது தான் பார்த்துக் கொள்கிறேன் அவளை என்று அவர் சொன்னால் யார் நம்புவார்? அவரே நம்ப மாட்டார் என்பதுதான் உண்மை.
“பத்து நாள் என்ன ஒரு மாசம் கூட இருக்கட்டும். நாங்க நினைச்சா இருபது நிமிஷத்துல வந்து பார்த்திட போறோம். நீங்க மருமகளைக் கூட்டிட்டு போங்க சம்மந்தி” என்று விட்டார் அவர். சத்யபாமா சங்கடமாகக் கணவரைப் பார்த்து நின்றார்.
அப்போது, “நான் எங்க வீட்டுக்கே போறேன்ம்மா” என்று பார்கவி மெல்லிய குரலில் சொல்ல, இரண்டு பெண்களும் அவளை அதிர்ந்து பார்த்தார்கள்.
ரங்கராஜன், “சரிம்மா” என்று லகுவாகச் சொல்லி விட்டார். அவருக்கு எப்போதும் மகளின் விருப்பம்தான் முக்கியம் என மீண்டும் மீண்டும் நிரூபித்தார்.
“உங்க அம்மா வீட்டுக்குப் போகலாம் பாரு. நானும் உன்னோட வர்றேன். அங்க நீ கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருப்ப இல்ல?” என்று பார்த்திபன் அவளிடம் தனியாகக் கேட்க, “நான் அங்க போனா அம்மாவும், அப்பாவும் என்னைப் பார்த்து பார்த்து ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க பார்த்தி. இதுவே இங்க இருந்தா என்னைப் பார்க்க வர போகன்னு அவங்க கொஞ்சம் நார்மலா இருப்பாங்க. அதுவும் இல்லாம இப்போ நான் அங்க போய்ட்டா, அது என்னமோ அத்தையை ஹர்ட் பண்ற மாதிரி ஆகிடும். ஆல்ரெடி அவங்க ரொம்பக் கில்ட்டியா ஃபீல் பண்றாங்க. நாம இப்போ எங்க வீட்டுக்கு போனா அவ்ளோதான். அவங்களுக்கு ரொம்பக் கஷ்டமா போயிடும்” என்று அவள் சொல்ல, “எங்கம்மாவை இன்னுமா நம்புற நீ?” என்று கண்டனத்துடன் புருவம் உயர்த்தினான்.
அவள் மெலிதாகப் புன்னகைத்து, “அவங்க உங்கம்மா பார்த்தி. அதுனால நானும் கொஞ்சம் இறங்கி போனா தப்பில்லதானே?” என்று கேட்க, அவளின் புன்னகை அவனையும் தொற்றியது.
“எங்க இருந்தாலும் எனக்கு உங்களோட இருந்தா போதும்” என்று உளமார அவள் சொல்ல, அந்த அன்பில் உன்மத்தம் கொண்டான் அவன்.