பார்த்திபன் காதலி – 39 (3)

மகள் தங்களோடு வரவில்லை என்ற வருத்தமெல்லாம் காவேரிக்கு இல்லவே இல்லை.

“நீ வரவில்லை என்றால் என்ன? உன் வீட்டிற்கு நான் வந்து விட்டுப் போகிறேன்” என்ற மனநிலைதான் அவருக்கு.

தினம் மகளைக் காண வந்து விடுகிறார். ரங்கராஜன் மகளுடன் பேசிக் கொண்டிருக்க, சத்யபாமாவுக்குச் சமையலில் உதவுவார். அவர் மறுத்தாலும் கேட்பதில்லை.

சில நாள்களில் அவரே அனைவருக்கும் சேர்த்து சமைத்து எடுத்து வந்து விடுவார்.

“எங்கத்த பாவம், இப்படி அராஜகம் பண்ணாதம்மா” என்று பார்கவி சொல்லவும், “எனக்கு எம் புள்ளைதான் முக்கியம். உன்னைய பார்த்துக்க அவங்க சிரமப்படக் கூடாதுன்னு அவங்களையும் சேர்த்து நான் பார்த்துக்கறேன். அவ்ளோதான்” என்று முடித்து விட்டார் காவேரி.

அவர்கள் வீடு வந்து ஐந்து நாள்கள் கடந்திருந்தன. அன்று மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்து, பரிசோதனைகள் செய்து, ஆலோசனை பெற்று வந்திருந்தார்கள்.

மீண்டும் இழப்பின் வலி அவளை ஆக்கிரமிக்க, பெரியவர்கள் முன் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை அவள்.

இரவின் தனிமையில் அழுகையில் கணவனின் மார்பை நனைத்தாள்.

“நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி.. ஏன் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்… நாம சேர்ந்து இருந்த மொத டைம் கூட நீயில்லாம ஐ ஃபீல் ஹால்ப்னு டயலாக் பேசினேன் பாரு. அதான் லவ்னு நினைச்சேன். ஆனா அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல வச்சு, உனக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு மனசு துடிச்சது பாரு, அதை எப்படிச் சொல்லன்னு‌ கூட எனக்குத் தெரியல. உன் உயிருக்கு ஆபத்துன்னு டாக்டர் சொல்லும் போது எனக்கு உயிரே போயிடும் போல இருந்துச்சு. நீயில்லாம..” மீசையோடு உதடு மடித்து, கலங்கிய கண்களுடன், தழுதழுத்த குரலில், அன்பால் தடுமாறி நின்றான்.

“பார்த்திபனை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டா பார்கவி” என்று அவள் சொல்ல, அப்படிச் சொல்லாதே என்று அவளின் உதட்டை செல்லமாகச் சுண்டியவன், அவளை மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கினான்.

அவள் அலுவலகம் செல்லாமல் மருத்துவக் காரணங்களைக் காரணம் காண்பித்து வீட்டில் இருந்து வேலைப் பார்த்தாள்.

பார்த்திபன் வாரத்தில் மூன்று நாள்கள் மட்டும் கட்டாயமாக அலுவலகம் சென்று வந்தான்.

அம்மாவின் ஆசை, அமெரிக்கா கனவு எல்லாவற்றையும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்திருந்தான்.

அவர்களுக்கு மணமான இரண்டாம் வாரத்தில் இருந்தே அவனது நிதி நிலைமையைக் குறித்து அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள் பார்கவி.

“நீ பணம் கொடுத்தா நான் வாங்க மாட்டேன் பாரு” என்று கண்டிப்பாக அவளிடம் சொல்லியிருந்தான்.

“நான் பணம் தர்றேன்னு சொன்னேனா உங்ககிட்ட” என்று இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள் அவள்.

“நான் உங்களுக்குப் பணம் கொடுக்கக் கூடாதுன்னா நீங்களும் எனக்காகச் செலவு பண்ணாதீங்க. நான் மாசாமாசம் வீட்டு செலவுக்குப் பணம் கொடுத்துடுறேன்” என்று அவள் வீம்பமாக முகம் உயர்த்திச் சொல்ல, “ஏய் பாரு” என்று முறைத்தான்.

“யோசிச்சு பாருங்க. லாஜிக் சரியா இருக்கும் மிஸ்டர் பார்த்திபன்” என்று அசட்டையாகத் தோள் குலுக்கினாள்.

“என் பொறுப்பை நீ சுமப்பியா?”

“என்னை நீங்க சுமக்கலயா?” என்று ரோஷத்துடன் அவள் கேட்க, “எங்க என்னையே டெய்லி நீதான் சுமக்கற” என்று கண்ணடித்துப் பதில் சொல்லி அவளிடம் அடி வாங்கியிருந்தான்.

“நீங்க தனியா அமெரிக்கா போறதுன்னா போங்க. எனக்கென்ன” என்று கோபித்துக் கொண்டாள். அதன் பிறகு அந்தப் பேச்சை மிகவும் கவனமாகத் தவிர்த்திருந்தான் அவன். ஆனால் இப்போது மனைவியைப் பிரிந்து ஒருநாள் கூட அவனால் இருக்க முடியாது என்று மனம் அடித்துச் சொல்ல, ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான்.

அவனுக்கு ஒன்று மட்டும் உறுதியாகத் தெரியும், இனி ஒருநாளும் அவனால் பார்கவியைப் பிரிந்திருக்க முடியாது.

இப்போது மனம் மாறி இருக்கும் அவன் அம்மாவிடம் இதைச் சொன்னால், மீண்டும் முருங்கை மரம் ஏறி விடுவாரோ என்ற பதட்டம் அவனைச் சூழ்ந்தது. பார்கவியிடம் விரைவில் இதுகுறித்துப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.

அன்று அலுவலகம் சென்றவன், அவனது வேலை முடியவும் முன் மாலைப் பொழுதே விரைவாக வீடு திரும்பியிருந்தான்.

சத்யபாமாதான் அவனுக்குக் கதவைத் திறந்து விட்டார்.

“என்ன பார்த்திபா இன்னைக்குச் சீக்கிரம் வந்துட்ட? டீ போடவா?” என்று கேட்டார்.

“ம்ம். ஒர்க் முடிஞ்சதும்மா, வந்துட்டேன்” என்றான்.

“பார்கவி எங்க?”

“பின்னாடி தோட்டத்துல பூ பறிச்சுட்டு இருக்கா.” என்றார். அவ்வளவு நேரமும் அவரும் அவளோடு சேர்ந்து பூ பறித்திருந்தார்.

“நீங்க போங்கம்மா. நான் டீ போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்று அவரை அனுப்பி விட்டு அறைக்குச் சென்றான்.

பார்கவி அவன் பின்னோடு அறைக்குள் வர, அவளை மென்மையாக அணைத்து நெற்றியில் அழுத்தமாக இதழ் ஒற்றினான்.

“நீ போய்ப் பூ பறி பாரு. நான் ரெப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்” என்றான்.

சரியெனத் தலையசைத்து அவள் வீட்டின் பின் பக்கத்துக்குச் செல்ல, அவன் உடை மாற்றி வெளியே வந்தான்.

பதினைந்தாம் நிமிடம் அவன் ஆவி பறக்கும் ஏலம், இஞ்சி மணத்த தேநீருடன் வர, அங்கே மாமியாரும், மருமகளும் கால் நீட்டி அமர்ந்து பூக் கட்டியபடி கதை பேசிக் கொண்டிருந்ததைக் கண்டவன் உதடுகள் புன்முறுவல் பூத்தன.

மனைவியின் பக்கத்தில் சென்று அமர்ந்து, “டீ குடிச்சுட்டு பூ கட்டு” என்று சொல்லி முதல் தேநீர் கோப்பையை எடுத்து அம்மாவிடம் நீட்டினான்.

“பொழைச்சுப்ப டா நீ” என்று புன்னகையுடன் சொல்லி தேநீரை வாங்கிக் கொண்டார் சத்யபாமா. அவர்களுக்குள் சுமூகமான உறவு வந்திருந்தது. வீட்டு நிலவரம் பேசியபடி தேநீர் அருந்தி முடித்து, “நான் கோவிலுக்குப் போயிட்டு வர்றேன். நைட்டுக்கு எதுவும் செய்யாத பார்கவி. நான் வந்ததும் செஞ்சுக்கலாம்” என்று அவளிடம் சொல்லி சென்றார்.

அவர் சென்றதும் உள்ளே சென்று மண் வெட்டி எடுத்து வந்து அந்தத் தோட்டத்தின் ஒரு பக்கத்தில் குழி வெட்டத் தொடங்கினான் அவன்.

ரோஜா, நந்தியாவட்டை செடிகளுக்கு முன்னே இடமிருக்க, அங்கே ஆழமான குழியை வெட்டினான்.

“என்ன பண்றீங்க பார்த்தி?”

“பொறுமை பாரு” என்றான் புன்னகையுடன். குழி தோண்டி முடித்து, வாளி நிறையத் தண்ணீர் எடுத்து வந்தான். அவள் பூ தொடுத்துக் கொண்டிருந்தாலும் அவள் பார்வை அவனையே பின் தொடர்ந்து கொண்டிருந்தது.

இப்போது வெளியே சென்று வந்தவன் கையில் புதியதாக ஒரு செடி முளைத்திருந்தது.

அவள் புருவங்கள் சுருங்க கேள்வியாக அவனைப் பார்க்க, அவளை நெருங்கி வந்து அவள் கைப் பிடித்து எழுப்பினான்.

அவளை அணைவாகப் பிடித்து, “பவள மல்லி பூ செடி, உன் கையால எடுத்து வை” என்றான்.

அவள் கைப் பிடித்து அவனே செடியை குழியில் வைத்தான்.

“நம்ம தேவதை நம்மளோடதான் இருப்பா பாரு. இதோ இந்தப் பவள மல்லி பூத்து குலுங்கும் போதுலாம் நம்ம புள்ளையை நினைச்சுப்போம் என்ன? குட்டி பையனோ, பொண்ணோ அவங்க எப்பவும் நம்ம மனசுல இருப்பாங்க. இதோ இப்படி இயற்கையா, பூவா நம்மளோடவே இருப்பாங்க” என்று கரகரத்த குரலில் அவள் காதோரம் அழுத்தமாகச் சொன்னான். மெல்ல ஆமோதிப்பாகத் தலையசைத்து, மனம் நெகிழ அவனைப் பார்த்து நின்றாள் பார்கவி.

ஏனோ இப்போது அவளுக்குக் கண்ணீர் வரவில்லை.

இதழ்களில் மெல்லிய புன்னகை படர கணவனைப் பார்த்தாள். அவள் கைப் பிடித்து அழுத்தமாக அந்தச் செடியை மண்ணில் பதித்து, கவனமாக அதற்குத் தண்ணீர் ஊற்றினான் அவன்.

அப்படியே அவன் கைகளில் திரும்பி அவன் தோள் சாய்ந்தாள் பார்கவி. இதையும் கடந்து விடுவோம் என்ற மனத் திடத்தை அவளுக்கு அவன் தந்தான். அவனது அன்பு தந்தது.

error: Content is protected !!
Scroll to Top