பார்த்திபன் காதலி – 39 (1)

மருத்துவர் அவளிடம் பேசிய கனிவான தொனியே பார்கவியை மிரட்டியது.

அவரின் கேள்விக்கு, “என் ஹஸ்பன்ட் வந்திருக்காங்க டாக்டர்” என்று பதில் சொன்னாள்.

“மாமியாரும் வந்திருக்காங்க” என்று வேகமாகச் சொன்னவள், “குழந்தைக்கு எதுவும் பிரச்சினையா டாக்டர்? நான் ஹார்ட் பீட் கேட்க முடியுமான்னு கேட்டதுக்குக் கூட நீங்க ஒன்னுமே சொல்லலையே” அவள் விழிகள் மருத்துவரின் முகத்தில் அலைபாய, மனம் பதற கேட்டாள்.

மருத்துவர் பதில் சொல்ல எடுத்துக் கொண்ட அவகாசம் அவளின் பதற்றத்தை அதிகரித்தது.

“டாக்டர்?”

“ஒன்னும் இல்லம்மா, படுங்க” என்றார். அடுத்து வந்த நிமிடங்கள் அவளை மீறி வேகமாக நகர்ந்தது. மருத்துவர் அவளுக்கு நேரடியாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் அவரின் பார்வையும், பேச்சும், கரிசனமும் அவளுக்கான பதிலை சொல்லி விட்டது.

அவளைப் பரிசோதனை மேஜையில் இருந்து எழுந்து நிற்க, நடக்கக் கூட அனுமதிக்கவில்லை அவர்.

அவசரமாகப் பார்த்திபன் வரவழைக்கப்பட்டான். அதிவேகத்தில் மகப்பேறு மருத்துவர் வந்தார். அவளை உடனடியாகத் தனி அறைக்கு மாற்றினார்கள்.

பார்கவி பயந்து போனாள்.

படுக்கையில் இருந்தவள், “பார்த்தி, என்னங்க? டாக்டர் என்ன சொல்றாங்க? எனக்குப் பயமா இருக்கு.” என்று அவன் சட்டை நுனியை பிடித்துக் கேள்வி கேட்டாள். அவன் கண்களில் அதீத வலியின் சாயல்.

அவன் உதடுகள் கோடாக இறுகின. கண்களில் வெள்ளித்திரை மின்னியது.

“எதுக்கு என்னை அட்மிட் பண்ணியிருக்காங்க பார்த்தி? குழந்தைக்கு எதுவும் பிரச்சினையா?” அவளின் கேள்விக்கெல்லாம் அவனது தொண்டைக் குழி அவஸ்தையாய் ஏறி இறங்கியது.

“பாரு..” என்று ஆதரவாக அவளின் கைப் பிடித்தவனின் கண்கள் கலங்கி இருந்தன.

“என்னன்னு சொல்லுங்க, என்னைப் பயமுறுத்தாதீங்க”

“ரிலாக்ஸ் பாரு.” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மருத்துவர் அறைக்குள் வந்து விட்டார்.

பார்கவி தன் கேள்வி கணைகளை இப்போது அவரிடம் தொடுத்தாள்.

அவளுக்குக் குழந்தை கருப்பையில் அல்ல, கருக்குழாயில் தங்கியிருக்கிறது என்றார் மருத்துவர்.

அது ஆபத்தான, “எக்டோபிக் ப்ரெக்னன்சி (Ectopic Pregnancy)”. குழந்தை பெலோப்பியன் ட்யூப்பில் வளர்கிறது என்றார்.

கருக்குழாயில் குழந்தை வளர்வது சிரமம். இன்னும் சில வாரங்கள் போனால் குழந்தையின் வளர்ச்சியைத் தாங்காமல் கருக்குழாய் வெடித்து அவளின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மருத்துவர் விளக்கினார்.

அவர்கள் சரியான சமயத்தில் வந்திருக்கிறார்கள். இப்போதே சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவர் சிகிச்சை முறையை விளக்க, தன் கருவில் உருவான குழந்தை, தங்களின் கைக்கு வராது என்ற செய்தியே அவளை உடைத்துப் போட்டது.

மருத்துவர் பேச பேச அவள் கண்களில் கண்ணீர் கொட்டியது. உதடுகள் அழுகையில் பிதுங்கின.

“நாம டிலே பண்ற ஒவ்வொரு செகண்ட்டும் உங்க ஒய்ஃப் உயிருக்குத்தான் ரிஸ்க் சார்” என்று மருத்துவர் சொன்னதும், “ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ணிடுங்க டாக்டர். எவ்ளோ வேகமா முடியுமோ, அவ்ளோ வேகமா பண்ணுங்க” என்றான் தீர்க்கமாக. அவன் கண்கள் மனைவியை வாரி அணைத்துக் கொண்டன.

“ட்ரிப்ஸ் போட்டுட்டு இன்ஜெக்ஷன் போடுவோம்..” அதனால் கருவின் வளர்ச்சி தடுக்கப்பட்டு விடும், அவளின் உடலே சிதைந்த கருவின் செல்களைப் படிப்படியாக உறிஞ்சி அகற்றி விடும் என்று மருத்துவர் விளக்க விளக்க, பார்கவி நொறுங்கி போனாள்.

“டாக்டர் பிளீஸ்..” என்று பார்த்திபன் கெஞ்ச, “ஸ்டே ஸ்ட்ராங் சார். மெடிக்கல் ப்ரோசீஜர் எக்ஸ்பிளைன் பண்ண வேண்டியது எங்க பொறுப்பு” என்றார் மருத்துவராக.

பார்கவியின் இரத்த அழுத்தம் மிகவும் குறைந்திருந்தது. அவளின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு குளுக்கோஸ் ஏற்றினார்கள். அதன் பிறகே சிகிச்சையைத் தொடங்கினார்கள்.

சத்யபாமா அவ்வளவு நேரமும் பிரபாவதியிடமும், அவளின் அம்மாவிடமும் பேசிக் கொண்டிருந்தவர், மகன் பதற்றத்துடன் அழைக்கவும் விரைந்து வந்தார். ஏற்கனவே பிரபாவதி விஷயம் கேட்டு அதிர்ச்சியில் இருந்தவருக்கு, இப்போது உச்சபட்ச அதிர்ச்சியானது.

“உங்க மருமக ரொம்ப வீக்கா இருக்காங்க. அதுனால ட்ரிப்ஸ் போட்டு, ட்ரீட்மென்ட் முடிச்சுட்டு, இன்னைக்கு ஒரு நாள் அவங்களை அப்சர்வேஷன்ல வச்சு மானிட்டர் பண்ணிட்டு அவங்க ஹெல்த் பெட்டரானதும் அவங்களை டிஸ்சார்ஜ் பண்றோம்” என்று மருத்துவர் சொல்ல, படபடவென அவரிடம் கேள்விகளை அடுக்கினார் அவர்.

முந்தைய தினம் அவளைப் பசியுடன் அலைக்கழித்தது இப்போது அவர் நினைவில் வந்து வருத்தியது. அவரைக் குற்ற உணர்வில் ஆழ்த்தியது.

மருத்துவர் அவருக்கு விளக்கம் சொல்லி வெளியேறியதும், “பார்த்திபா” என்று மகனை அழைத்தார்.

கலங்கிய மனத்தைக் கட்டுப்படுத்திய குரலில், “ம்மா” என்றான் அவன்.

மகனையும், மருமகளையும் குற்ற உணர்வுடன் பார்த்து, “எல்லாம் என்னால..” என்று அவர் சொல்ல, “என்னம்மா பேசுற நீ? இப்படிப் பேசாதம்மா” என்று அவரைக் கடிந்து கொண்டான்.

சத்யபாமா சேலை தலைப்பால் வாயை மூடி அழ, “உனக்கும் பிரசர் இருக்கும்மா. அழாத பிளீஸ்” என்று அவரைத் தேற்றி வெளியே அழைத்து வந்தான்.

“நீ அழுதா பார்கவியும் அழுவாம்மா.‌ எங்களுக்கு இப்படி நடக்கணும்னு விதிச்சுருக்கு என்ன செய்ய? அதுக்கு உன்னைய குத்தம் சொல்லுவியாம்மா நீ..” என்று அவரை அதட்டினான்.

“நீ அழாம அவளோட இரும்மா. நான் இப்போ வந்துடுறேன்” என்று மீண்டும் அவரை அறையில் விட்டுவிட்டு சென்று அவருக்கு உணவும், பழச்சாறும் வாங்கி வந்தான். அவன் உடைந்து நொறுங்கி போய் இருக்கும் நிலையிலும் அவரைக் கவனிக்கிறான். ஆனால் நேற்று நான் செய்தது? என்று நினைக்க நினைக்க அவருக்குக் கண்ணீர் பெருகியது.

“பார்கவி, கொஞ்சமா ஜூஸ் குடிக்கறியா?” என்று மருமகளை விசாரித்தார். கலங்கிய கண்களுடன் புன்னகைத்து, “வேணாம்த்தே” என்று மறுத்தாள்.

அந்நேரம் மருத்துவர் அறைக்குள் வந்தவர், அவர்களை வெளியில் காத்திருக்கச் சொன்னார்.

கணவன் தன்னுடன் இருக்க வேண்டுமெனப் பார்கவி ஒரே பிடியாக நிற்க, பார்த்திபன் மட்டும் அவளோடு இருக்க அனுமதித்தார்கள்.

அவனிடம், “அம்மாக்கு சொல்லணும்ங்க” என்றாள்.

“இரு, இப்போ கால் பண்ணித் தர்றேன் பேசுவ” என்றான்.

“ம்ம், பிரியாக்கு.. உங்க பிரபாக்கு போன் பண்ணணும்..” என்று சொல்லும் போதே அவள் குரல் உடைந்து விட்டது.

அவள் படுக்கையை நெருங்கி, அவள் கைப் பிடித்து, “ஷ்ஷ் பார்கவி. என் பார்கவி ரொம்ப ஸ்ட்ராங். அழ கூடாது. ம்ம்” என்றவன் குரலும் பிசிறடித்தது. அவன் உள்ளுக்குள் உடைந்து நொறுங்கினாலும், அவளுக்காகத் திடமாக நின்றான். முந்தைய இரவில் இருந்து எத்தனை ஆர்வமாகக் காத்திருந்தார்கள். காலையில் கர்ப்பம் என்று பரிசோதனை கருவியின் வழியே உறுதியானதும் அவனுக்கே இதயம் இரட்டிப்பாகத் துடிப்பது போலிருந்தது.

மருத்துவர் முறையாக உறுதி செய்ததும் மனைவியைக் கண்களால் தூக்கி சுழற்றி கொஞ்சி கொண்டாடினான். அவர்களின் உயிர் வர போகிறது. அவர்களின் காதலில் உதித்த உயிர். அவர்களின் பிரதி பிம்பமாக ஓர் உயிர். அவர்களின் உயிராகப் போகிற ஓர் உயிர். அவனது உயிரானவளின் உயிர் என எத்தனை ஆவலும், ஆசையும் கனவுகளோடும் காத்திருந்தான் அவன்.

சில மணி நேரங்களில் பிள்ளையின் வளர்ச்சி, படிப்பு என அவனது எண்ணங்கள் எங்கெங்கோ ஓடியிருந்தன.

“உன்னைப் போலவே கொள்ளை அழகா ஒரு பொண்ணு வேணும் எனக்குப் பார்கவி” மகிழ்ச்சியில் மலர்ந்து மின்னிய மனைவியின் முகத்தை ரசித்துக் காதலாகச் சொல்லியிருந்தான். இப்போது அவனது ஆசையெல்லாம் நிராசையாகி போனது. எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றமாகி போயின. ஆனால் அதையெல்லாம் தன் மனத்தின் ஆழத்திற்குள் புதைத்து, மனைவிக்காகத் திடமாக நிமிர்ந்து நின்றான் அவன்.

பார்கவி, “பார்த்தி” என்று அவன் கையில் முகம் புதைத்தாள். அவன் உள்ளங்கையில் சூடாக இறங்கியது அவளின் கண்ணீர்.

தன் கைக்குட்டையால் அவளின் கன்னம் துடைத்து விட்டுக் கொண்டேயிருந்தான் அவன்.

error: Content is protected !!
Scroll to Top