அறையின் கதவை மூடியதும், “குட் மார்னிங் பட்டே. அஞ்சு நிமிஷம் கழிச்சு என்னை எழுப்பி விடு. குளிக்கணும்” தலையணையில் முகம் புதைத்தபடி முணுமுணுத்தான் உதய்.
“நான் குளிச்சிட்டு வந்து உங்களை எழுப்பறேன், அதுவரை தூங்குங்க உதய்” என்று விட்டு, குளியலறை கதவை திறக்கப் போனாள்.
மெல்ல புரண்டு படுத்து, “குளிக்காம கிட்சென் பக்கம், போய் இருக்க மாட்டியே? திரும்பவும் குளியலா?” என்று தூக்க கலக்கத்தோடு, கோடாகக் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான்.
ஆமாம், அது ஒரு இம்சை. அதிகாலையில் குளித்து வேறு தொலைக்க வேண்டும். அவர்களிடம் சொல்லவா முடியும். கணவன் இரவு வீட்டிற்கே வரவில்லை என்று.. மனதில் கடுப்புடன் நினைத்துக் கொண்டாள் அவள்.
“மண்ணு எதுவும் அள்ளி போட்டுட்டு வந்தியா பட்டே” என்றான். வியர்த்து வழிந்த அவளது முகத்தையும், உடலையும் பார்த்து.
“ஐ அம் நாட் இன் ஃபுன் மூட் உதய்.” என்று எரிந்து விழுந்தாள் ராகவி.
“காலையிலேயே என்ன கோபம்?” என்றான் அவளுக்காகக் கையை நீட்டி,
அவள் நின்ற இடத்தில் இருந்தே,
“ஒரு நாள், ஒரே ஒரு நாள் இந்த வீட்டில ராகவியா இருந்து பாருங்க. வேலை செய்யுங்க. அப்புறம் வந்து காமெடி பண்ணுங்க. சிரிக்கறேன்” என்றாள் கோபத்துடன், புருவம் சுருக்கி அவளைப் பார்த்தான் உதய்.
“யூ மீன், இன்னைக்கு ஒரு நாள் இந்த வீட்ல நான் உன்னைப் போல இருக்கணும். உன் ரோலை நான் செய்யணும். அப்படித் தானே?” என்றான் கேள்வியாக.
“ஆமா” என்றாள் அழுத்தமாக,
“ஐ டோண்ட் மைண்ட் பட்டே. வா, இப்ப இருந்தே தொடங்குவோம்” என்றான் மல்லாந்து படுத்துக் கொண்டு, அவனது வார்த்தைகள் புரிய அவளுக்குச் சில நொடிகள் தேவைப்பட்டது. புரிந்ததும், பல்லைக் கடித்தபடி, அவன் காலடியில் இருந்த தலையணையை எடுத்து நன்றாக அவனை மொத்தினாள் ராகவி.
அவள் கைகளை வளைத்து பிடித்து, “என்ன பண்ணனும் உனக்கு? காலையிலேயே என்ன கோபம்?” என்று மென்மையாகக் கேட்டான் உதய்.
“வீட்டு வேலைக்கு ஆள் வைக்கச் சொல்லி, மூனு மாசமா கேட்கறேன். அத்தை, மாமா ரெண்டு பேரும் முடியாது சொல்றாங்க. என்னால முடியல உதய். சமையல் மட்டும் நான் செய்யறேன் சொன்னேன். ம்ப்ச், அப்பவும் முடியாது சொல்றாங்க. அக்காவும் குழந்தையை வச்சுட்டு வேலை செய்ய முடியாது. விஜி வேலைக்குப் போறா. ம்ப்ச், என்னவோ போங்க.” அவனிடம் இருந்து விடுபட்டு, எழுந்து நின்றாள்.
“என்கிட்ட முன்னாடியே சொல்றதுக்கு என்ன?” என்று கோபத்துடன் எழுந்து, கைக்குக் கிடைத்த சட்டையை அணிந்து கொண்டு வெளியே போகப் போனான்.
“இது உங்களுக்கே தெரியணும். இந்த வீட்ல தானே நீங்களும் இருக்கீங்க?” என்றவளை முறைத்துக் கொண்டே கதவில் கை வைத்தான்.
“உதய்…” மெல்ல அழைத்தாள்.
“பொறுமையா பேசுவேன்” பட்டென்று பதில் கொடுத்தான்.
“லேட்டாகுது சொன்னீங்க? சரி. பேசிட்டு வாங்க. நான் குளிக்கப் போறேன்” என்று அவள் நகர,
“உன் கூட நானும் வந்தா, இன்னும் லேட்டாகும். நீ போய்க் குளி” என்று சாதாரணமாகச் சொல்லி விட்டு வெளியே போனான் அவன்.
முகம் சிவக்க, “இவருக்கு இதே வேலை. பேச்சைப் பாரு” அவனில்லாத அறையில் அவனைத் திட்டிக் கொண்டே குளிக்கச் சென்றாள் ராகவி.
அவள் எதிர்பார்த்த படி மறுநாளே வேலைக்கு ஆள் கூட்டிக் கொண்டு வந்தார் பேச்சி முத்து.
“நல்லா விசாரிச்சுட்டேன் மேடம். நல்ல ஆள் தான். கை ரொம்பச் சுத்தம். ஆனா, வாய் கொஞ்சம் அதிகம். வாய்க்கு மெள்ள ஏதாவது கொடுத்துட்டா, நம்மைப் போட்டு மெள்ள மாட்டாங்க” என்றார்.
“சரிங்க சார்” என்று புன்னகைத்தாள்.
அன்றிரவு, “தேங்க்ஸ் உதய்” என்றாள்.
“ம்ம்” என்றதோடு உறங்கிப் போனான் அவன்.
நினைவுகளில் மூழ்கியபடியே இருந்தவள், அவளை அறியாமல் உறங்கி விட்டிருந்தாள்.
அதிகாலை ஐந்து மணிக்கு விழிப்பு வந்து விட்டது அவளுக்கு. தோழிகளைப் பார்த்தாள், அவர்கள் இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.
அரை மணி நேரத்தில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு, அறையை விட்டு வெளியில் வந்தாள்.
சில்லென்ற கடல் காற்று முகத்தில் மோதி அவளைக் கண் மூடச் செய்தது.
கடற்கரையை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.
அவளுக்கு முன்பாகவே பலர் விடியலை கண்டிருந்தனர் அன்று.
தனியாக, ஜோடியாக என்று கடற்கரையில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
அவர்களில் ராஜாவும் ஒருவன். கை வீசி நடந்து கொண்டிருந்தவன் அவளைப் பார்த்ததும், முகம் மலரப் புன்னகைத்தான்.
அவன் நெருங்கி வர, வழக்கம் போல அவன் அலைபேசியில் மனோ, அவர் குரலில் தூதுவளை இலை அரைத்துக் கொண்டிருந்தார்.
“குட் மார்னிங்” என்றான் புன்னகைத்து, பதிலுக்குப் புன்னகைத்தாள் ராகவி.
“டீ?” என்றான் கேள்வியாக,
“இல்ல, நடக்கணும்” என்றாள்.
“ஓகே” என்று அவளுடன் இணைந்து, நடக்க ஆரம்பித்தான்.
“நைட் சரியா தூங்கலையா?” என்று அவன் கேட்க, லேசாகத் தலையைத் திருப்பிப் பக்கத்தில் நடந்து கொண்டிருந்தவனைப் பார்த்தாள் ராகவி.
“தூங்கினேன்” என்றாள், ஒற்றைப் வார்த்தையில்.
“உங்களுக்குக் கடல் பயம் எப்படிப் போச்சு?” அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.
“அவர், உதய், பயம் போக வச்சார்” என்றாள். ஏனோ விளக்கி சொல்லும் மனநிலை அப்போதில்லை அவளுக்கு.
“உங்க ரெண்டு பேருக்கு நடுவுல எல்லாமே சரியா தான் இருந்திருக்கு. நீங்க இதுவரை சொன்னதை வச்சு சொல்றேன்..” என்று வேகமாக இரண்டாம் வாக்கியத்தைச் சொன்னான், அவள் திரும்பி அவனைப் பார்க்கவும்.
“உதய்கு ஒரு பழக்கம் இருக்கு. அவர் நிறையப் புத்தகம் வாசிப்பார். புத்தகங்களில் இருந்து பிடித்த சில வரிகளைக் குறிப்பிட்டு பேசுவார்”
“ம்ம்” என்றான்.
“விஜிக்குக் கல்யாணம் பேசும் போது ஏகப்பட்ட கெடுபிடி. அப்போ அவர், எழுத்தாளர் பிரபஞ்சன் வரிகளை…”
“இத்தனைக்கும் நடுவில் ஒரு பூ பூக்கத் தானே செய்கிறது. அதுவா?” என்றான்.
“இல்ல.” என்று மறுப்பாகத் தலையை அசைத்தாள்.
“இது கல்யாணத்தைப் பத்தி.. “இரண்டு பேர் சேர்ந்து வாழ்வதற்கு எது எதெல்லாம் தேவையில்லையோ, அது அதெல்லாம் தான் இங்கே திருமணத்தைத் தீர்மானிக்கிறது.” இந்த வரிகளைச் சொன்னார். மாப்பிள்ளை வீடு போட்ட கண்டிஷன்ஸ் கேட்டு…”
“ம்ம்”
“இங்க பெரும்பாலும் ரெண்டு பேர் இணைந்து இருப்பதையும், பிரிந்து போவதையும்.. மோஸ்ட்லி, அவங்களைச் சுற்றி இருக்கவங்களும், சுற்றமும் தானே முடிவு பண்ணுது?” என்றாள் கேள்வியாக.
“அப்போ உதய் மேல தப்பு இல்ல? அவர் குடும்பம்? இல்லனா அவரோட வேலை? உங்க குடும்பம்?” என்று எல்லோரையும் உள்ளே இழுத்தான் அவன்.
அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தாள் ராகவி.
“இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?” என்றான் புருவம் நெரித்து,
“பதில் சொல்ல முடியாதுன்னு அர்த்தம்” சொல்லி விட்டு முன்னே நடந்தாள் ராகவி.