பார்த்திபன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் நெற்றி வருடி, “பாரு” என்று அவளை எழுப்பினான்.
கண்களைப் பிரிக்க முடியாமல் சிரமப்பட்டுப் பிரித்தாள்.
“தலைவலி எப்படி இருக்கு?”
“ஓகே. ஆனா பாடி பெயின் இருக்கு. அதுவும் வயிறு, குறுக்குலாம் ரொம்ப வலிக்குது பார்த்தி”
“ஒரு வாரமா இதையே சொல்லிட்டு, இன்னைக்கு அலையணுமா நீ? அதுவும் பஸ்ல..”
“கோவிலுக்குதானே போனோம் பார்த்தி” என்று முகத்தைச் சுருக்கினாள்.
“ஓகே, விடு. சாப்பிடலாம் வா”
“சாப்பிடணும்னு நினைச்சாலே குமட்டுது பார்த்தி” என்று அவள் சொல்லவும், அதைக் கேட்டு அவன் முகத்தில் கரிசனையுடன் கூட ஆவலும் கூடியது.
“மனசுல சந்தேகம் வந்ததும் சிம்ட்டம்ஸ்லாம் சரியா வந்தருச்சே பாரு” என்று அவன் புன்சிரிப்புடன் கேட்க, “வாந்தி அது தலைவலியினால வந்தது பார்த்தி” என்று அவன் இடையில் இடித்துப் புன்னகைத்தாள்.
உணவே வேண்டாம் என அவள் மறுக்க, “உனக்கு இட்லிதான் வாங்கிட்டு வந்தேன் பாரு. ரெண்டே ரெண்டு சாப்பிட்டு படு, பிளீஸ்” என்று அவளைக் கெஞ்சி கொஞ்சி உண்ண வைத்திருந்தான்.
காலையில் எழுந்ததும் மீண்டும் வாந்தியுடன் அவஸ்தைப்பட்டாள். அவளுக்கு முன்னே அலாரம் வைத்து எழுந்திருந்தான் அவன்.
“இன்னைக்கும் கிரிக்கெட் விளையாட போறீங்களா பார்த்தி?”
“கிரிக்கெட்டா? நோ வே. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவனுங்க விளையாடுறது. நீ வா நமக்கு முக்கியமான வேலை இருக்கு” என்று அவளை இழுத்தான்.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாகப் பரிசோதனை செய்திருந்தாள். குறும்பு புன்னகையில் அவள் முகம் பிரகாசிக்க, பரிசோதனை கருவியை எடுத்து அவன் முன்னே அசைத்து காட்டினாள். மறுகணம் அவளை இறுக அணைத்து முத்தமிட்டு, தூக்கி சுற்றியிருந்தான்.
“பார்த்தி, தலை சுத்துது கீழ இறக்கி விடுங்க” என்று அவள் கத்தவும்தான் இறக்கி விட்டான்.
அவளின் இரவு உடையைச் சற்றே மேலேற்றி வயிறை வருடினான்.
அவள் கூச்சதுடன் நெளிய, மந்தகாசப் புன்னகையுடன், அப்படியே அவளை இறுக்கி அணைத்தான். அவள் இடையில் ஏதோ ஈரமாகப் பதிய, மெல்ல விலகி குனிந்து பார்த்தாள்.
மறுநொடி அவளை விலகி அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
மென்மையாக இடையில் முத்தமிட்டு உதட்டால் வருடி, அந்தப் பரிசு பொருளை அவளுக்கு அணிவித்தான்.
மெல்லிய தங்கச் சங்கிலி அவளின் இடையைச் சுற்றியது. சில்லென்று மேனியில் அது பதிய சிலிர்த்து சிரித்தாள்.
தங்கச் சங்கிலியுடன் சேர்த்து இடையில் முத்தமிட்டு அவன் நிமிர, “திருடன் பார்த்தி நீங்க? இது எப்போ வாங்கினீங்க?” என்று கேட்டாள்.
அவன் எழுந்து அவள் தோளில் கைப் போட்டு அணைக்க, “அதுவும் எப்போ தர்றீங்க பாருங்க” என்று அவள் முறைக்க, “நம்ம கல்யாணத்தப்போவே வாங்கிட்டேன் பாரு. நம்ம ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கே உனக்குப் போட்டு விடணும்னு நினைச்சேன். ஆனா அப்போ குடுக்கக் கூச்சமா இருந்தது. அப்புறம் அன்னைக்கு ஊஞ்சல்ல வச்சு இந்தச் செயின் போட்டாதான் சரியா இருக்கும்னு பட்டதும் இதையே போட்டு விட்டுட்டேன். இது உன் செயின், பென்டன்ட் மட்டும்தான் ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி வாங்கினேன். அப்போ செயின் வாங்கலையா சார்னு கேட்கவும், செயின் தானேன்னு இடுப்புக்கு வாங்கிட்டேன்” என்று அவள் இடையை வருடிச் சொன்னான்.
“ஆனாலும் டைமிங்கா குடுக்கறீங்க பாருங்க, பிராடு பார்த்தி” என்று அவன் மார்பில் அடித்தாள்.
“பிடிச்சிருக்கா?”
“ம்ம், எனக்கு எப்பவுமே பார்த்தியை ரொம்பப் பிடிக்குமே. நான் சொன்னதில்லயா?” என்று கேட்டு அவள் விழிகளை விரிக்க, அவனை மயக்கிய அந்த விழிகளில் முத்தமிட்டு, மெதுவாகத் தன் இணையான இதழ்களை அடைந்து, இளைப்பாறினான்.
அவளை விலகிய மறுகணம், “பிரபாக்கு போன் பண்ணி சொல்லணும்” என்று அவன் பரபரக்க, இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து, “அம்மாக்கு சொல்லணும்” என்றாள் அவள்.
“பொண்டாட்டி ப்ரெக்னென்ட்டுனு ஃபர்ஸ்ட் கள்ள காதலிக்குத்தான் சொல்லணுமா மிஸ்டர் பார்த்திபன்?”
“சாரி பாரு. பழக்க தோஷத்துல..” என்று ஆரம்பித்து, சட்டென்று சுதாரித்து, “அப்புறம் அவன்கிட்ட விட்ட சவால்ல ஜெயிச்சுட்டேன்னு சொல்ல வேணாமா?” என்று கேட்டான்.
“இப்போவே சொல்லணுமா? கன்பார்ம் பண்ணிட்டு சொல்லுவோமா?” என்று அவள் தயக்கத்துடன் கேட்க, “ம்ம், உங்கம்மாகிட்டயும் டாக்டர் பார்த்திட்டுச் சொல்லிக்கலாம்” என்றான். அம்மாவிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பது என்று அவள் தயங்க, “ஆல்ரெடி டாக்டர் அப்பாயின்மெண்ட் புக் பண்ணிட்டேன் பாரு. அவங்களைப் பார்த்திட்டு நேரா உங்க வீட்டுக்குப் போய்டலாம். என்ன சொல்ற?” என்று கேட்டான். அவளுக்குச் சம்மதமில்லை என்றாலும், அவன் சொல்வது சரியெனபடவும் சம்மதித்தாள்.
“ஆனா எங்கம்மாகிட்ட சொல்லாம இருக்க முடியாது பாரு. நாம வெளில போறோம்னா, எங்க எதுக்குன்னு கேட்பாங்க..” என்று அவன் சொல்ல, “நான் அவங்ககிட்ட சொல்ல வேணாம்னு சொல்லலங்க. அவங்க நம்மளோட வர்றேன்னு சொன்னா அவங்களையும் சேர்த்தே கூட்டிட்டு போவோம்” என்று லகுவாகச் சொல்லி விட்டாள்.
அவளுக்குச் சோர்வு இன்னமும் நீங்கவில்லை. காலையில் குடித்த காஃபியும் வெளியே வர, தலை சுற்றி கண்ணடைத்து விட்டது அவளுக்கு.
அன்று ஞாயிறு என்பதால் காலையிலே கறி வாங்கி வந்திருந்தார் துரைராஜ். கறி குழம்பு கொதிக்கும் வாசமே அவளுக்குக் குமட்டியது.
சமையல் அறை சென்று எலுமிச்சையை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.
“என்ன பார்கவி பண்ணுது உனக்கு? நேத்து கோவிலுக்குப் போயிட்டு வந்ததுக்கா இப்படிச் சுணங்கிட்டு இருக்க?” என்று அவளைப் பார்த்ததும் சத்யபாமா கேட்க, “அம்மா” என்று கோபமாக அவரை அழைத்தான் பார்த்திபன்.
“என்னடா விரதம் இருந்து கோவிலுக்குப் போன நானே நல்லாதான் வேலை பார்த்துட்டு இருக்கேன். உன் பொண்டாட்டி என்னன்னா..”
அவரைப் பேச விடாமல், “அவளுக்கு முடியலன்னு சொன்னா புரியாதாம்மா உனக்கு?” என்று கத்தியவன், “ரேணு ப்ரெக்னன்ட்டா இருக்கும் போது அவளை எப்படிப் பார்த்துக்கிட்ட? பாருவை உன் மக மாதிரி பாருன்னு நான் சொல்லலம்மா..” என்று அவன் கடிந்து கொள்ள, அவன் முதலில் சொன்னது மட்டுமே அவர் காதில் விழுந்த வேகத்தில் மனத்தில் பதிந்திருந்தது.
“பார்கவி” என்று மருமகளை நெருங்கினார்.
“இவன் என்ன சொல்றான்? உனக்கு நாள் தள்ளி போய் இருக்கா?” எத்தனை நாள்? என்று கேள்விகளாக அடுக்கி விட்டார்.
அவள் பதில் சொல்லி, பரிசோதனை செய்து ஊர்ஜிதம் செய்ததை அவரிடம் சொல்ல, “கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு? வயித்துல புள்ளைய வச்சுட்டுதான் நேத்துப் பூரா பட்டினியா பசியோட கிடந்தியா? என்கிட்ட வாயத் தொறந்து சொல்றதுக்கு என்ன? ஏதாவது வாங்கிக் கொடுத்திருப்பேன் இல்ல?” என்று அவளைக் கத்தினார்.
“அப்போ உங்களுக்கு நான் பசியோட இருந்திருக்கேன்னு தெரிஞ்சுருக்கு இல்லத்த?” என்று பதில் கேள்வி கேட்டிருந்தாள்.
“எனக்குப் பசிச்சா நானே வாங்கிச் சாப்பிட்ருப்பேன். ஆனா நான் உங்களுக்காகப் பார்த்தேன். நீங்க பசியா இருக்கும் போது உங்களைப் பார்க்க வச்சுட்டு நான் மட்டும் தனியா எப்டி சாப்பிடுறதுன்னு இருந்த என்னைச் சொல்லணும். என் மேல பாசமோ, அக்கறையோ இல்லல்ல அத்த உங்களுக்கு?” அவளுக்குக் கோபத்திலும் கண்களே கலங்கின.
அப்போதும் வார்த்தையைச் சிதற விடக் கூடாது என்று தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டாள். அவளை ஆதரவாக நெருங்கி நின்ற பார்த்திபன் அம்மாவை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“அவ பசியோட இருக்கான்னு தெரிஞ்சே பஸ்ல அலைய வச்சு கூட்டிட்டு வந்திருக்க இல்லம்மா? வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா கூடச் சாப்பிடுன்னு சொல்ல உனக்கு மனசு வரல ஏன்ம்மா? நீயாம்மா இப்படி, என்னால நம்பவே முடியலம்மா” அதிர்ச்சி, கோபம், துளி வெறுப்பு எனக் கலவையான உணர்வுகளுடன் வார்த்தைகளை வெளிப்படுத்தினான்.
“இல்ல பார்த்திபா.. கோவிலுக்கு வேண்டுதல்னு..”
“என்னம்மா பெரிய வேண்டுதல்? பாருவை பட்டினி போட்டா உன் வேண்டுதல் பலிச்சுடுமா? இப்படி மனசாட்சி இல்லாம நீ நடந்துக்கிட்டா அந்தச் சாமி உன் மேல மனசிறங்கி வரம் கொடுத்துடுமா உனக்கு? போம்மா” என்று வெறுப்புடன் சொன்னான்.
அவர் சொன்ன சமாதானங்களை ஏற்கும் மனநிலையில் இருவருமே இல்லை என்றாலும் இறங்கி வரத்தான் செய்தார்கள்.