பார்த்திபன் காதலி – 38 (3)

துரைராஜ் குளித்து வந்தவர், “என்னடா ஒரே சத்தமா இருக்கு?” என்று மகனை கேட்க, அப்பாவிடம் மகிழ்வாக விவரம் பகிர்ந்தான். மகனின் தோளில் தட்டி சிரித்து, “ரொம்பச் சந்தோஷம் தம்பி” என்றார்.

“ஹாஸ்பிடல் போயிட்டு வர்றோம்ப்பா” என்று என்றான்.

“நானும் வர்றேன் உங்களோட. முதல்ல சாப்பிடுங்க” என்று சத்யபாமா அவர்களை அழைக்க, பார்கவி மறுத்து விட்டாள்.

“என் மேல இருக்கக் கோபத்தைச் சாப்பாட்டு மேல காட்டாத பார்கவி” கண்டிப்புடன் சொன்னார்.

“எதையும் நேரா பேசித்தான் அத்த எனக்குப் பழக்கம்” என்று அவருக்கு நேரடியாகப் பதில் சொன்னவள், “கறி குழம்பு வாசமே குமட்டுது. அதான் வேணாம்னு சொன்னேன்” என்றாள்.

“சரி, உட்காரு. நிக்காத. நான் ரெண்டு நிமிஷத்துல வெங்காயம் தக்காளி வதக்கி சட்னி அரைச்சு தர்றேன்” என்று அவள் கைப் பிடித்துச் சோஃபாவில் அமர்த்தினார்.

“டாக்டர் பார்க்க பெரியவங்க இல்லாம தனியா போவீங்களா? பொறுப்பே இல்லடா பார்த்திபா உனக்கு” என்று மகனை கடிந்தார்.

“எதும் வேணுமான்னு சொல்லும்மா. நான் கடைக்குப் போய் வாங்கிட்டு வர்றேன்” என்று துரைராஜ் கேட்க, “அவளுக்கு என்ன வேணும்னு கேட்டு நானே ஹாஸ்பிடல்ல இருந்து வரும் போது வாங்கிக் கொடுத்துக்கறேன்.” என்று விட்டார் சத்யபாமா.

அவர் சொன்னது போலவே அவளுக்காகத் தக்காளி சட்னி வதக்க, பார்த்திபன் சென்று உதவினான்.

“ஏன்டா எனக்குச் சட்னி அரைக்கத் தெரியாதா? எதுக்கு இங்க வந்து நிக்கற நீ?”

“உனக்குச் சட்னி அரைக்கறத விடப் பட்னி போட நல்லா தெரியுமேம்மா. அதான் என் பொண்டாட்டிக்கு நானே செய்யலாம்னு நிக்கறேன்” என்று அவன் பதிலடி கொடுக்கவும், அவர் முகம் வாடி விட்டது.

“நான் வேணும்னு பண்ணல பார்த்திபா.”

“பொய் சொல்லாதம்மா.‌ இத்தனை நாளும் நீ பார்கவிய என்ன பேசின, எப்படி நடத்தினன்னு நல்லா யோசிச்சிட்டு பேசு. யாரு மேல இருக்கக் கோபத்தையோ இம்புட்டு நாளும் நீ அவ மேல காட்டலன்னு உன் மனசாட்சிய தொட்டு சொல்லு பார்ப்போம்?”

“அதுக்காக..” என்று அவர் ஆரம்பிக்க, “வேணாம் விடும்மா” என்று முடித்து விட்டான். அவன் மனம் மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும் போது அம்மாவை வருத்த மனம் வரவில்லை அவனுக்கு.

“நான் சொன்னதை நினைச்சு ஃபீல் பண்ணாதம்மா. நேரமாகுது நீ போய்க் கிளம்பு, நான் சட்னியை அரைக்கிறேன்” என்று சொல்லி அவரை அனுப்பினான். அவர் அந்தப் பக்கம் சென்றதும், பார்கவி அவனிடம் வந்து நின்றாள். அவளைக் கண்களால் மிரட்டி, அவனேதான் சட்னியை அரைத்துத் தாளித்தான்.

அவளிடம் உப்பு பார்க்க சொல்லி நீட்டினான். அவள் ருசி பார்த்து, கண்ணை உருட்டி பாராட்ட, “நான் யூஎஸ்ல இருக்கும் போது என் காதலி எனக்குச் சமைக்கச் சொல்லிக் கொடுத்தா” என்று கண் சிமிட்டினான்.‌

அதிசயமாக அவளுக்காக அவனும் தோசைக்குத் தக்காளி சட்னியை தொட்டே உண்டான்.

“நீங்க மட்டன் குழம்பு ஊத்திக்கோங்க பார்த்தி. உங்க தட்டுல இருக்கத் தோசை கோபிச்சுக்கப் போகுது” என்று அவள் சொன்னாலும், அவன் கேட்பதாக இல்லை.

“உனக்கு வாந்தி வரப் போகுது” என்று மறுத்து விட்டான். அப்படியும் அடுத்த ஐந்தாம் நிமிடம் அவள் வாந்தி எடுத்திருந்தாள்.

அவள் தலையை ஓடி வந்து தாங்கிப் பிடித்தார் சத்யபாமா.

“டாக்டர்கிட்ட கேட்டா வாந்திக்கு மாத்திரை கொடுப்பாங்க பாரு. அதுவரைக்கும் பொறுத்துக்கோ” என்றார் ஆறுதலாக.

எலுமிச்சை சாறு வேண்டுமா என்று கேட்டார். அவள் மறுக்கவும், “போற வழியில ஆரஞ்சு ஜூஸ் வாங்கித் தர்றேன்” என்றார்.

அதற்குள் துரைராஜ் அவசரமாகச் சென்று தெரு முனையில் இருந்த ஆட்டோவை அழைத்து வந்திருந்தார்.

“டாக்டர் பார்த்திட்டு போன் பண்ணுங்க.” என்றார்.

பார்கவி கணவனின் இரு சக்கர வாகனத்தை ஆசையாகப் பார்க்கவும், “அம்மாவும் கூட வர்றாங்க இல்ல பாரு. அதுனால ஆட்டோல போகலாம். உனக்குத் தலை சுத்தல் வேற இருக்கு, வண்டி சேஃப் இல்ல. ஈவ்னிங் வந்து டிரைவ் போகலாம்” என்று அவள் கைப் பிடித்தான்.

முக்கால் மணி நேரத்தில் மருத்துவனையில் இருந்தார்கள். மருத்துவரை சந்தித்து அவர் சொன்ன எல்லாப் பரிசோதனைகளுக்கும் ரத்தம், சிறுநீர் மாதிரிகளைக் கொடுத்து விட்டு வந்தாள். சில நிமிடங்களில் சிறுநீர் பரிசோதனை முடிவு அவள் கர்ப்பத்தை உறுதி செய்திருந்தது.

அதனால், “ஸ்கேன்” எழுதி கொடுத்திருந்தார். அதற்காக நிறையத் தண்ணீர் குடித்துக் காத்திருந்தாள்.

“நானும் உன்னோட வரலாமா?” என்று பார்த்திபன் கேட்க, “ம்ஹும் விட மாட்டாங்க பார்த்தி” என்றாள்.

“ஏன் விட மாட்டாங்க? இரு, நான் போய்க் கேட்டுட்டு வர்றேன்” என்று எழுந்தான். அவன் கையைப் பிடித்து இழுத்து அமர்த்தினாள். அவளின் உள்ளங்கைகள் வியர்த்துப் போய்ச் சில்லென்று இருக்க, “என்ன பாரு? டென்ஷனா இருக்கியா?” என்று அவள் கண் பார்த்து கேட்டான்.

“ஸ்கேனுக்காகத் தண்ணி நிறையக் குடிச்சேன் இல்ல? வாந்தி வர்ற மாதிரி இருக்கு. வயிறு வேற வலிக்குது பார்த்தி. வாஸ்ரூம் போகணும் போல இருக்கு” என்று பாவமாகக் கண்களைச் சுருக்கி சொன்னாள்.

“டாக்டர் ஸ்கேன் பார்த்திட்டு என்னன்னு சொல்றேன்னு சொன்னாங்க இல்ல? வெயிட் பண்ணுவோம் பாரு” என்று ஆதரவாக அவள் கைப் பற்றி அழுத்திக் கொடுத்தான். மருத்துவமனை என்றும் பாராமல் அவன் தோள் சாய்த்துக் கண் மூடினாள் அவள்.

அடுத்தப் பத்தாம் நிமிடம் அவளை அழைக்கவும், “நீங்க போய் அத்தை கூட வெயிட்டிங் ஹால்ல இருங்க. நான் வந்துடுறேன்” என்று உள்ளே சென்றாள்.

பார்த்திபன் அங்கேயே இரண்டு நிமிடங்கள் அமர்ந்து பின் அம்மா தனியாக இருக்கிறாரே என்று அவரிடம் சென்றான்.

அங்கே காத்திருப்பு அறையில் சத்யபாமா அமர்ந்திருக்க அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த பரிச்சயமான முகத்தைக் கூர்ந்து பார்த்தான் அவன்.

நன்றாக மேடிட்ட வயிற்றுடன் சத்யபாமாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் பிரபாவதி.

பார்கவிக்கு ஸ்கேன் செய்து கொண்டிருந்த மருத்துவர், அவளிடம் தொடர்ந்து கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“ஆறு வாரம்னா ஹார்ட் பீட் கேட்கும் இல்ல டாக்டர்?” ஆவலாகத் தலையை உயர்த்தி அவள் கேட்க, “அசையாதீங்கம்மா‌. நேரா படுங்க. உங்க கூட யார் வந்திருக்கா?” என்று அவளிடம் கேட்டார் அவர்.

error: Content is protected !!
Scroll to Top