சில கேள்விகளுக்கு வெட்கமே பதிலாகி போகிறது. அவள் விழிகளில் வெட்க மின்னல் வெட்ட, அவனைத் தொட்டு விடும் நெருக்கத்தில் நின்று, கன்னங்கள் செம்மையுற அவனைப் பார்த்திருந்தாள்.
“என்ன பாரு, திடீர்னு டேட் கேக்கற? வெட்கப்படுற? என்னாச்சு?” என்று புருவங்களை உயர்த்தினான்.
“நமக்குக் கல்யாணமாகி எவ்ளோ நாள் ஆகுது? அதுக்கும் நான் டேட் கேட்டதுக்கும் தொடர்பு இருக்கு” என்றாள்.
“டேட்டுக்கு என்ன தொடர்பு..?” என்ற கேள்வியை முடிக்கவில்லை அவன்.
அவன் கண்கள் புரிதலில் பெரிதாக விரிந்தன. அவனது வலக்கரம் அவளை வளைத்து அணைத்தது.
“டெஸ்ட் பண்ணி பார்ப்போமா?” என்று அவளும், “கிளம்பு ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று அவனும் ஒரே நேரத்தில் சொல்லியிருந்தார்கள்.
“ஹாஸ்பிட்டல் வேணாம் பார்த்தி. இட்ஸ் டூ எர்லி. நமக்குக் கல்யாணமாகியே ஒரு மாசம் பத்து நாள்தானே ஆகுது? சோ ஃபர்ஸ்ட் வீட்ல டெஸ்ட் பண்ணி பார்த்துட்டுப் போகலாம்” என்றாள். அவனுக்கு அது ஒப்புதலாக இல்லை. மருத்துவமனை செல்லலாம் என்றான்.
“ப்ரெக்னன்சி டெஸ்ட்ல பாசிட்டிவ்னு வந்தா போய் டாக்டர் பார்க்கலாம்” என்றாள்.
அவன் முறைக்க, “பிளீஸ்” என்றாள். இப்படியொரு இனிப்பான செய்தியை சொல்லி விட்டு அவள் என்ன கேட்டாலும், அவன் மறுக்கவா போகிறான்.
“சரி, நான் இப்போவே போய் டெஸ்ட் கிட் வாங்கிட்டு வர்றேன்” என்று கிளம்பினான். அதற்கு முன் அவளை அறையில் விட்டு அவள் குளித்து, உடை மாற்றும் வரை உடனிருந்து விட்டுத்தான் வெளியில் சென்றான்.
ஒன்றுக்கு மூன்று பரிசோதனை கருவிகள் வாங்கி வந்திருந்தான்.
பார்கவி சோர்வுடன் படுக்கையில் இருக்க, “என்ன பாரு படுத்துட்ட?” என்று கரிசனத்துடன் கேட்டான்.
“தல ரொம்ப வலிக்குது பார்த்தி” என்றவளுக்குக் கண்களைப் பிரிப்பது கூடச் சிரமமாக இருந்தது.
அன்று காலையில் இருந்து வெறும் வயிற்றில் இருந்தது, வெளியில் சென்றது எல்லாம் சேர்த்து நல்ல தலைவலியை அவளுக்குத் தந்திருந்தது. ஒரு பக்கம் முழுக்க விண்ணென்று தெறித்தது.
அவன் கையில் இருந்த பரிசோதனை கருவியை ஓரமாக வைத்து விட்டு, தலைவலி தைலத்தைத் தேடி எடுத்து, மனைவியின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்து, தைலம் தடவி நெற்றியை நீவி விட்டான்.
பார்கவி கண்களை மூடிக் கொண்டாள்.
“டீ போட்டுத் தரவா பாரு”
“வேணாம் பார்த்தி, வாந்தி வர்ற மாதிரி இருக்கு” என்றாள். அவளுக்கு இந்தத் தலைவலி வந்தாலே இதுவொரு தொல்லை வாந்தி எடுத்தால்தான் விடுதலை கிடைத்தது போலிருக்கும்.
“இஞ்சி டீ போட்டுத் தரேன் பாரு”
“வயிறு வலிக்குது பார்த்தி, ஷோல்டர் வலிக்குது, முதுகு குடையுது” அவளின் குரலிலேயே வலியின் தடம் தெரிய, “சரி, டீ குடி சரியா போகும்” என்று அவள் தோளை அழுத்தி விட்டான்.
“ஒரு வாரமா இந்த ஷோல்டர் பெயின், வயிறு வலி எல்லாம் சொல்றியே பாரு. பேசாம எழுந்து வா, இப்பவே டாக்டர் பார்த்திட்டு வந்துடுவோம்” என்றான் வற்புறுதலாக.
“திருடன் பார்த்தி நீங்க” என்று முணுமுணுத்தாள்.
சிரிப்புடன், “உனக்கு முடியலன்னு சொன்னா, என்னைக் கேலி பண்ற பார்த்தியா?” என்று கேட்டான்.
பார்கவி பட்டென்று எழுந்து அமர, என்னவென்று பதறி விட்டான்.
மின்னல் வேகத்தில் குளியல் அறைக்குள் நுழைந்தவள், ஓங்கரித்து வாந்தி எடுத்திருந்தாள்.
அவளின் உடல் பலவீனம் மனத்தையும் தாக்க, அவளுக்குக் கண்கள் கலங்கி விட்டன.
“ப்ச், பாரு” என்று கண்டிப்புடன் அவளைத் தோள் சாய்த்துக் கொண்டான்.
அவளால் தலையை உயர்த்த முடியவில்லை.
“ஷ்ஷ், ஒன்னும் இல்ல ரிலாக்ஸ்” என்று அவளை அப்படியே அலேக்காகத் தூக்கி படுக்கையில் விட்டிருந்தான்.
“கொஞ்சமா லெமன் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரவா பாரு?”
அவளுக்கு வலியில் நெற்றி பொட்டுத் தெறிக்க, “ம்ம்ம்ம்” என்று முனங்கினாள்.
படுக்கையில் அவளுக்கு வாகாகத் தலையணையை வைத்து விட்டு வேகமாகச் சமையல் அறை சென்றான்.
அவனைக் கண்டதும் எழுந்து வந்து, “என்னடா காஃபி வேணுமா?” என்ற சத்யபாமாவை அவன் பார்த்த பார்வையில் அனல் அடித்தது.
“ஏன்டா காஃபி வேணுமான்னு கேட்டா முறைப்பியா நீ?”
“காஃபி வேணுமான்னு இப்போ என்னைக் கேக்கற உனக்கு, காலையில இருந்து பட்டினி கிடக்குற உன் மருமககிட்ட இந்தக் கேள்வியைக் கேட்கணும்னு தோனல இல்லம்மா? காலையில வெறும் வயித்தோட உன் கூடக் கோவிலுக்கு வந்தாம்மா அவ..”
“நல்லா இருக்கே, நானா அவளைக் காப்பிக் குடிக்க வேணாம்னு சொன்னேன். ஒரு இடத்துக்குப் போறோம்ன்னா அவதான் சீக்கிரமா எழுந்து வந்து எல்லாம் செஞ்சுக்கணும்” என்று சொன்னவரை கோபத்துடன் முறைத்தன அவன் கண்கள்.
“என் வயசுக்கு நானே விரதம் இருக்கேன். உன் பொண்டாட்டியால ஒரு நாள் சாப்பிடாம இருக்க முடியாதா? அத்த பசிக்குதுன்னு சொன்னா நானே அவளைச் சாப்பிட வச்சு கூட்டிட்டு வர போறேன். அதை விட்டுட்டு உன்கிட்ட வந்து என்னைப் பத்தி வத்தி வைக்கிறாளா?” என்று அவர் படபடக்க, “போம்மா, நீ முழுசா மாமியாரா மாறிட்ட, உன்கிட்ட பேசுறதே வேஸ்ட்.” என்று கடுப்புடன் சொல்லி, அடுப்பில் பாலை ஏற்றினான்.
“என்கிட்ட பேச பிடிக்கலையா பார்த்திபனுக்கு? இப்படித்தான் டா ஆரம்பிக்கும்.. அப்புறம் அமெரிக்கா போகல. தனியா போறேன்னு வந்து நிக்கும். எனக்குத் தெரியாதா” என்று புலம்பினார்.
“நீ இப்படியே பேசிட்டு, நடந்துட்டு இருந்தீன்னா அதான்ம்மா நடக்கப் போகுது. பார்த்துட்டே இரு” என்றான் மிரட்டலாக.
அவனை அதிர்ந்து பார்த்தவர், சட்டென்று அமைதியாகி விட்டார்.
“தள்ளு, நான் டீ போடுறேன்” என்றார்.
“நீ உக்காரும்மா. என் பொண்டாட்டிக்கு நானே போட்டுக்கறேன். உனக்கெதுக்கு அந்தக் கஷ்டம்”
“ஓ, அப்போ டீ உனக்கு இல்ல? அவளுக்குத்தான் போட்டுட்டு இருக்கியா நீ?” என்று கேட்கவும், கையில் இருந்த டம்ளரை சத்தம் வர மேடையில் ஓங்கி வைத்தான்.
“என்னடா..” என்று சத்யபாமா கோபமாகக் கேட்க, “அப்பா” என்று கத்தினான்.
“என்னமோ பண்ணு போ. எல்லாம் என் நேரம்” என்று புலம்பிக் கொண்டே கூடத்துக்குச் சென்று விட்டார் அவர்.
இருபது நிமிடங்கள் கழித்து அவன் அறைக்குள் நுழைய, பார்கவி சுருண்டு படுத்திருந்தாள்.
அவள் தோளை தொட்டு, “இஞ்சி டீ குடிக்கறியா பாரு? இல்ல லெமன் ஜூஸ் தான் வேணுமா?” என்று கேட்டான்.
எலுமிச்சை சாறை கைக் காட்டினாள். கையை ஊன்றி எழுந்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்தாள்.
எலுமிச்சை சாறில் புதினா இலைகளைக் கசக்கி போட்டு, அரை இனிப்பும், துளி உப்பும், சிட்டிகை சீரகப் பொடியும் சேர்ந்திருந்தான். அது ருசியாக இருக்கவும் ரசித்துக் குடித்தாள்.
அவன் தேநீரை அருந்தியபடி அவளுடன் பேசிக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்களில் அவளுக்கு எலுமிச்சை சாறும் வாய் வழியாக வெளியேறி இருந்தது.
“டாக்டர் பார்த்திடுவோமா பாரு?”
“இது தலைவலியினால வர்ற வாந்தி பார்த்தி. தூங்கி எழுந்தா சரியா போகும்” என்று அவனுக்குச் சமாதானம் சொன்னாள்.
சந்தேகமாக அவளைப் பார்த்து தலையசைத்து, “அப்படினா இப்போ டெஸ்ட் பண்ணி பார்ப்போமா?” என்று பரிசோதனை கருவியை அவளிடம் நீட்டினான்.
“நமக்கு டூ அர்லி பார்த்தி. அதுனால இப்போ டெஸ்ட் பண்றதை விட நாளைக்குக் காலையில டெஸ்ட் பண்றது பெஸ்ட் ரிசல்ட்ஸ் கொடுக்கும்” என்றாள். அவனும் அது குறித்து இணையத்தில் தேடி படித்திருந்தான். ஆனாலும் மனம் ஆவலில் அலை மோதுவதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவள் முகம் பார்த்துக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“ஆரஞ்சு, திராட்சை சாறு வாங்கி வரவா?” என்று கேட்டான். அதையும் அவள் மறுக்க, “உனக்கு அலைச்சல் சேரல போலப் பாரு, நீ படு ” என்றான். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழும் வரை, அவன் கரம் அவளின் தலைக் கோதலை நிறுத்தவில்லை.
அப்போதே எழுந்துச் சென்று இரவு உணவை வாங்கி வந்து விட்டான்.
“நான் செஞ்சுருப்பேன் இல்லடா? எதுக்கு வீணா வெளில இருந்து வாங்கிட்டு வந்து காசை விரயம் பண்ற?” என்று சத்யபாமா சத்தம் போட, “கோவிலுக்குப் போயிட்டு வந்தது அவளுக்கு முடியலம்மா. அவளுக்கே அப்படி இருக்கும் போது உனக்குக் கஷ்டமா இருக்காதா? ஒரு நாள் வெளில வாங்குறதால நாம கடனாளி ஆகிட மாட்டோம். சாப்பிட்டு படும்மா” என்று நல்லவிதமாகவே சொன்னான்.
“சரி, நீ மருமகளைக் கூப்பிடுப்பா சாப்பிடுவோம்” என்று துரைராஜ் சொல்ல, “அவ தூங்குறாப்பா, அவ எழுந்ததும் அவளோட நான் சாப்பிட்டுக்கறேன்” என்றான். அதற்கும் சத்யபாமா ஏதோ சொல்ல வர மனைவியை முறைத்து அடக்கினார் துரைராஜ்.