உதய ராகம் – 13 (4)

“பட்டே, அதெல்லாம் சரி மா. ஆனா, அண்ணன் தனியா எப்படி இருப்பான்? நான் எப்படிச் சொல்றது இதை அவன் கிட்ட?”

“அது உங்க சமார்த்தியம். ஆனா, இது எல்லாம் நடக்கலைன்னா…”

“பார்த்துக்கறேன் விடு” என்றான், கண்களைத் தேய்த்து விட்டு,

“நம்ம வீட்ல பிரபா அத்தான், நீங்க, நானு, விஜி எல்லோரும் வேலைக்குப் போறோம். அத்தையும், மாமாவும் எவ்வளவு நேரம் குழந்தையைப் பார்ப்பாங்க. பார்க்கறாங்கன்னு நமக்குத் தெரியாது. இதுவே அக்காவோட அம்மா வீடுன்னா, அவங்க ஃப்ரீயா இருப்பாங்க உதய். பிளீஸ் அண்டர்ஸ்டாண்ட்.”

“புரியுது பட்டே. நான் சொல்லி…”

“சம்மதிக்க வைக்கறீங்க” அவன் சொல்லாமல் விட்டதை முடித்தாள் அவள்.

“அவ்வளவு தானே? தூங்கப் போகலாமா?” என்று எழுந்தவனை,

“உட்காருங்க உதய்” அதட்டினாள்.

அடுத்தது தனக்குத் தான் என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது. ஆனால், எப்படித் தவிர்ப்பது என்று தெரியாமல் விழித்தான் அவன்.

“இப்போ உங்க பனிஷ்மென்ட்டுக்கு வருவோம்” என்று அவள் நக்கலாகச் சொல்ல,

“தாலி எல்லாம் கட்டி இருக்கேன், இதுக்கு முன்னாடி நான் பண்ண நல்லதை எல்லாம் மனசுல வச்சுட்டு பார்த்து செய் பட்டே”

“ஓ, செய்திடலாமே. சிறப்பா செய்திடலாம் ஏசிபி”

‘ஐயோ, இதுக்கு நீ பேசாமயே இருந்திருக்கலாம் டா, உதய்’ மானசீகமாக மண்டையில் அடித்துக் கொண்டான்.

“ஒன்னு, ரெண்டு, மூனு.. இல்ல.. நாலு. ஓகே. நாலு நாளைக்கு நீங்க போலீஸ் யூனிஃபார்ம் போட கூடாது”

“என்ன..?” அதிர்ந்து கத்தினான்.

“இடையில பேசினா, எனக்கு நான் சொல்ல வந்தது மறந்திடும். அப்புறம் லிஸ்ட் பெருசா போகும். எப்படி வசதி?” என்றாள், புருவம் உயர்த்தி.

உதடு மடித்து வாய் மூடினான் உதய்.

“நாலு நாளைக்குப் போலீஸ் யூனிஃபார்ம் போட கூடாது. அது முடியாதுன்னா, வேற ஆப்ஷன் இருக்கு” சட்டென்று ஆர்வத்தில் அவன் கண்கள் மின்ன அவளைப் பார்த்தான்.

“அது என்னன்னா.. பட்டே, பட்டேன்னு நாலு நாளைக்கு என் பக்கத்திலேயே வரக் கூடாது.”

“என்னது?” கத்தியவன், சோஃபாவில் குத்தி விட்டு எழுந்து நின்றான். ராகவி சலனமின்றி அவனைப் பார்த்தாள்.

“என்ன பட்டே, இதெல்லாம் அநியாயம். என்னால ரெண்டுமே முடியாது. கொடுமைப் படுத்தாத பொண்டாட்டி” கெஞ்சினான்.

மறுப்பாகத் தலையை இட வலமாக அசைத்தவள்,

“சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” என்றாள் தோளை குலுக்கி, பதட்டமாக எழுந்து அறையைத் தன் நடையால் அளக்க ஆரம்பித்தான் உதய்.

“பட்டே…”

“நோ..” என்று ஒற்றை வார்த்தையில் அவனது மனுவை, தள்ளுபடி செய்தாள் ராகவி.

“மூணாவது ஆப்ஷன் ஏதும் இருக்கா பட்டே?” கெஞ்சியது அவன் குரல்.

“ஓ, இருக்கே. ஒரு வாரத்திற்கு நான் எங்க வீட்டுக்கு போயிடுவேன். நீங்க இங்கேயே இருக்கணும். ராகவ்வை தாஜா பண்ணி திருட்டுத் தனமா எங்க வீட்டுக்குள் வரக் கூடாது. ஆடி மாசம் வந்த மாதிரி..” என்று அவள் சொல்ல, சிரிப்பில் உடல் குலுங்க, மீசையோடு சேர்த்து உதட்டை மடித்தான்.

ஆடி மாதம் அவள் வீட்டிற்க்கு போன நினைவுகள் மனக் கண்ணில் வந்து, சிரிப்பை மூட்டியது.

“யோசிக்க டைம் கொடு பட்டே, பிளீஸ்” என்றான்.

“நாளைக்கு மதியம் வரை டைம் இருக்கு. அதுக்குள்ள உங்க அண்ணா கிட்ட பேசி இருக்கணும். நீங்க என்ன பண்ண போறீங்கன்னும் முடிவு செய்திருக்கணும்” என்றாள் அழுத்தமாக.

பொத்தென்று சோஃபாவில் விழுந்தான் உதய்.

அவனால் யூனிஃபார்ம் அணியாமல் நிச்சயமாக இருக்க முடியாது. ஒரு நாள் என்றால் கூடச் சமாளித்து விடலாம். ஆனால், நான்கு நாட்கள்? மிகக் கடினம்.

அதுவாவது பரவாயில்லை. ராகவியின் அருகிலேயே செல்லக் கூடாது என்றால், அவனுக்கு மூச்சு முட்டிப் போகும்.

எல்லாம் தெரிந்தே செய்கிறாள் மனைவி என்று பல்லைக் கடிக்கத் தான் முடிந்தது அவனால். முன்னதைக் கூடச் செய்து விடுவான், ஆனால், மனைவி இன்றி வாய்ப்பேயில்லை என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் உதய்.

“இதெல்லாம் ரொம்ப அநியாயம் பட்டே. உனக்கே அதிகமா தெரியல?”

“தெரியல” என்றாள், ஒரே வார்த்தையில்.

“கொடுமைப்படுத்தாத பட்டே. பிளீஸ். வேற ஏதாவது, கொடுமையான தண்டனை கூடக் கொடு. ஆனா..” அவள் பார்வையில் அப்படியே வாயை மூடினான்.

“ராட்சசி. இது தான் எனக்கு மிகக் கொடுமையானதுன்னு தெரிஞ்சே பண்றா. பார்வையைப் பாரு, பார்வையை.. கடிச்சு வைக்கணும் போல இருக்கு.. ஐயோ.. இப்பவே முடியலையே…” மெல்லிய குரலில் புலம்பினான். ஆனால், அவளுக்கு நன்றாகவே கேட்டது.

வெடித்து வெளிவரவிருந்த சிரிப்பை தண்ணீர் குடித்து மறைத்தாள்.

“அப்புறம் ஃபைனல் ஒன்…”

“இன்னுமா..? நான் இதுக்கு மேலே தாங்க மாட்டேன் பட்டே‌. என்னைப் பார்த்தா உனக்குப் பாவமா இல்லையா?” விட்டால் அழுது விடுவது போலப் பேசினான்.

அவளோ, ” இல்லை” என்று முடித்து விட்டாள்.

“இன்னையில் இருந்து, இந்த நொடியில் இருந்து, நீங்களும், உங்க அண்ணனும், வீட்ல இருந்து போன் வந்தா எடுத்தே ஆகனும். நானோ, அக்காவோ, அத்தையோ, யாரா இருந்தாலும்.. நீங்க எங்க இருக்கீங்க, யார் கூட இருக்கீங்க, என்ன பண்றீங்க, எனக்குக் கவலையில்லை. போன் எடுத்தே ஆகணும். அப்படி எடுக்கலைன்னா, விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்” எச்சரித்தாள்.

“எடுப்பேன் பட்டே. கண்டிப்பா இனி உன் காலை அவோய்ட் பண்ண மாட்டேன். ஒரே தப்பே நான் திரும்பவும் பண்றது இல்ல” என்றான், அவள் கண்களைப் பார்த்து,

“மாட்டுனீங்களா? இருக்கு உங்களுக்கு. நான் கடையில் இருக்கும் போது கால் பண்ணி, நைட் என்ன சொன்ன? கழுத்துல பல்லு தடம் போச்சா பட்டே? என்னெல்லாம் கேட்டு என்னை முழிக்க வச்சு இருப்பீங்க. இப்போ, எனக்கு அடிச்சு இருக்கு லாட்டரி. வெயிட் ஃபார் மை கால் உதய்” கண் சிமிட்டினாள்.

“ஆ…” வென்று வாய் திறந்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் உதய்.

error: Content is protected !!
Scroll to Top