சத்யபாமாக்கு இரத்த அழுத்தம் இருப்பது அவளுக்குத் தெரியும். அவர் சோர்வாக இருப்பதைக் கண்டு, “பால், ஜுஸ், பழம் எதாவது வாங்கித் தரவா அத்த? நீங்க சாப்பிடலாமா?” என்று அக்கறையுடன் அவரிடம் கேட்டாள்.
“நான்தான் விரதம்னு சொன்னேன் இல்ல பார்கவி? சாயந்தரம் வீட்டுக்குப் போய்தான் சாப்பிடுவேன். கோவிலுக்கு வரும் போது கூடச் சோறு கட்டிட்டு வருவாங்களே உங்கம்மா. பின்ன நீ இப்படிக் கேக்கதான் செய்வ” என்று அவர் சொன்னதும் அவளுக்குச் சுள்ளென்று கோபம் வந்து விட்டது.
“அன்னைக்கு நீங்க விரதம் இருக்கலையே அத்த? அம்மாக்கு லோ பிபி, டைமுக்குச் சாப்பிடலன்னா படபடன்னு வந்திடும் அவங்களுக்கு. உங்களுக்கும் பிரஷர் இருக்குன்னு, அன்னைக்கு உங்களுக்காகதான் அம்மா சமைச்சு எடுத்துட்டு வந்தாங்க.”
“ம்ம்ம். பால் குடிக்க மாட்டேன்னு காலையிலயே உன்கிட்ட சொன்னேன். அப்புறம் இப்போ பால் வாங்கித் தரவான்னு கேட்டா என்ன அர்த்தம்? மாமியார் எதுவும் சொன்னா அப்படியே மறந்துடும் போல” என்று சலித்துக் கொண்டார்.
“மறக்கலத்த. நீங்க டையர்ட்டா தெரியறீங்களேன்னு கேட்டேன்.
“ம்ம், இங்கன ஆட்டோ எதுவும் காணோம். நம்ம ஏரியாக்குப் பஸ் இருக்கான்னு பாரு” என்று அவளை ஏவினார்.
அவளுக்குப் பசிக்கிறதா? நீ சாப்பிடுகிறாயா? என்று எதுவுமே கேட்கவில்லை அவர்.
அவர் விரதம் இருக்கும் போது அவளுக்குத் தனியாக உண்ணவும் மனம் வரவில்லை.
அவருக்காகத் தண்ணீர் வாங்கிக் கொடுத்தாள். அந்தக் கடையில் பழச் சாறு வாங்கலாம் என்றால், “நேரமாகுது பார்கவி. பஸ் இருக்கான்னு பார்க்கணும் வா” என்று அவளின் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துச் சென்றார்.
அவள் தொடர்ந்து அலைபேசியில் ஆட்டோ முன் பதிவு செய்ய, அவ்வளவு தூரம் வர முடியாது என்று நான்கு பேர் மறுக்க, அந்த முயற்சியைக் கை விட்டிருந்தாள் அவள்.
இருபது நிமிடங்கள் காத்திருந்து பேருந்து ஏறி, நீண்ட பயணம் செய்து வீடு வருவதற்குள் பசியில் வாடி சோர்வில் வதங்கி, தலை வலியில் துவண்டு போய் இருந்தாள்.
ஆனாலும், “சாப்பிடுறீங்களா அத்த. உங்களுக்குத் தோசை ஊத்தி தரவா? இல்ல காஃபி குடிக்கறீங்களா?” என்று மாமியாரை விசாரித்தாள். முன்பொரு முறை நேரம் சென்று உண்டதால் தலை சுற்றல் வந்தது என்று அவளிடமே சொல்லி இருக்கிறாரே. அந்த அக்கறையுடன் கேட்டாள்.
“ம்ம், காலையில வச்ச சாம்பார் இருக்கு. அதைச் சூடு பண்ணி எனக்கு ரெண்டு தோசை ஊத்தி குடு” என்று அவளிடம் சொல்லி உள்ளே சென்றார்.
அவள் தோசை மாவை எடுத்து வெளியில் வைத்து விட்டு சாம்பாரை சூடு செய்யத் திறந்தால் குப்பென்று புளித்த வாடை அடித்தது.
அதை அப்படியே ஓரமாக வைத்து விட்டு அவசரம் அவசரமாகக் கோதுமை மாவை எடுத்து பிசைந்து வைத்தாள்.
அதற்குள் முகம் திருத்தி வெளியே வந்திருந்தார் சத்யபாமா.
அவர் பூஜை அறையில் விளக்கேற்றி வருவதற்குள் வேகவேகமாகச் செய்து விடலாம் என்று வெங்காயம், தக்காளியை வெட்டி, தக்காளி தொக்கு செய்திருந்தாள்.
“என்ன செய்யுற பார்கவி? உன்னைய தோசைதானே ஊத்த சொன்னேன்?” என்று அவர் கேட்கும் போது அவளுக்கு அயர்ச்சியாக வந்தது.
“நீங்க உக்காருங்க அத்த. நான் எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லி சப்பாத்தியை தேய்த்து போட்டு எடுத்தாள்.
சூடாக அவருக்குப் பரிமாறி அவர் உண்டதும், பாலை காய்ச்சி காஃபி போட்டு கொடுத்து விட்டு அறைக்குள் சென்று ஓய்ந்து போய்ப் படுக்கையில் சரிந்திருந்தாள்.
இப்போது பசியா மயக்கமா உறக்கமா எனப் பிரித்தறிய முடியாத நிலையில் இருந்தாள். அவளின் கண்கள் சொருக, அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பொலி வந்தது. அவளுக்குக் கையை உயர்த்துவதே பெரும் பாடாக இருந்தது.
மெதுவாகக் கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து பார்த்தாள். அம்மா, அப்பா, கணவன் என அனைவரிடமும் இருந்து எண்ணற்ற தவறிய அழைப்புகள் இருந்தன.
இந்த மனநிலையில் அம்மாவிடம் பேசினால் அழுதே விடுவாள். ஆகவே கணவனை மட்டும் அழைத்தாள். நல்ல வேளையாக அவளின் அழைப்பை ஏற்று உடனடியாக வீடு வந்து விட்டான் பார்த்திபன்.
படுக்கையில் உடலை குறுக்கி படுத்திருந்தவளை நெருங்கி, “பாரு, என்ன சேலையோட படுத்துட்ட? எப்போ வீட்டுக்கு வந்தீங்க?”
என்று கேட்டான்.
மெல்ல கண் திறந்து, “பசிக்குது பார்த்தி” என்றாள் தீனமான குரலில்.
“பசிக்குதுன்னு படுத்திருக்க? எழுந்திரு சாப்பிடலாம்” என்று அதட்டினான். சட்டென்று அவளுக்குக் கண்கள் குளம் கட்டின.
“என்ன பாரு?” பதறி அவள் பக்கத்தில் அமர்ந்தான். புரண்டு அவன் தொடையில் தலை வைத்தாள்.
அவளின் தலைக் கோதி, “மதியம் என்ன சாப்பிட்ட?” என்று கேட்டான். அவள் பதிலே சொல்லவில்லை.
“மதியம் சாப்பிடலையா பாரு” மீண்டும் மௌனமே பதிலாக வர, அவள் முகத்தை நிமிர்த்தி, “எந்திரி சாப்பிடலாம்” என்றான்.
அவள் கைப் பிடித்துத் தூக்கி விட்டு, அவளைக் குளியல் அறைக்குள் அனுப்பி முகம் கழுவி வரச் சொன்னான்.
அவள் வெளியே வந்ததும், “பசி வந்தா பத்தும் பறந்து போகும். எல்லாப் பிரச்சனையும் பூதாகரமா தெரியும். நீ வேணும்ன்னா பாரு சாப்பிட்டு முடிச்சதும் எல்லாப் பிரச்னையும் சின்னதா ஆகிடும். சரியா? வா சாப்பிடலாம்” என்று சமையல் அறைக்குள் அழைத்துச் சென்றான்.
“சத்தியமா ரொம்பப் பசிச்சுடுச்சு பார்த்தி. இப்படிப் பசிய ஃபீல் பண்ணி பல வருஷம் ஆகுது” உணர்ச்சி வசப்பட்டுத் தொண்டை அடைக்கச் சொன்னாள்.
காவேரி ஒரு நாளும் அவள் வயிறை வாட விட்டதில்லை. ஒரே மகள் என்பதால் ஊட்டித்தான் வளர்த்தார். அவருக்கு முடியவில்லை என்றால் சரளா செய்து கொடுத்து விடுவார். இல்லையென்றால் உணவகத்தில் இருந்து வாங்கி வந்து விடுவார் ரங்கராஜன்.
பார்கவி வளர்ந்த பிறகு அவளே அப்போதைக்கு எதையாவது செய்து சாப்பிட்டு விடுவாள்.
“அச்சோ பாரு. சாரி” என்று அவள் முகத்தை வருடினான். சமையல் அறையை ஆராய்ந்து சப்பாத்தி மாவை பார்த்ததும் வேகமாகத் தேய்த்து சுட்டெடுத்துக் கொடுத்தான்.
சமையல் மேடையில் சாய்ந்து நின்று கையில் தட்டை பிடித்திருந்தாள்.
“நீங்க சாப்பிட்டீங்களா?” என்று அவனுக்கு நீட்டினாள்.
“பசிக்குதுன்னு சொல்லிட்டு எனக்கு ஊட்டுற? நீ சாப்பிடு ஃபர்ஸ்ட்” என்று அவள் கையைப் பிடித்து அவளுக்கே ஊட்டினான்.
“நான் கிரவுண்ட்ல பசங்களோட சாப்பிட்டுட்டேன். நீ இப்படியா பட்டினி கிடப்ப? அம்மா விரதம் இருக்காங்கன்னா நீ சாப்பிட கூடாதுன்னு இருக்கா என்ன? அட்லீஸ்ட் ஜூஸாவது குடிச்சுருக்கலாம் இல்ல?” என்று கேட்டவன் குரலில் அடக்கப்பட்ட கோபம் இருந்தது.
“வீட்டுக்கு வந்துட்டு அம்மாக்காகச் சப்பாத்தி செஞ்சதானே? அப்பவே நீயும் ரெண்டு சாப்பிட்டு இருக்கலாம் இல்ல பாரு.” என்று கடிந்தான்.
அவள் முகம் வாடவும், “சரி சரி சாப்பிடு” என்று தணிந்தான்.
அவளை வற்புறுத்தி மூன்று சப்பாத்தியை சாப்பிட வைத்திருந்தான். அன்றைய நாளின் மொத்த பசியையும் அந்த மூன்று சப்பாத்திகள்தான் தீர்த்தன.
மனத்தாங்கலுடன் இருந்தவளின் முகத்தைக் கையில் தாங்கி, “இப்போ ஓகேவா?” என்று கேட்டான். பசிக்கிறது என்று சொல்லி சிறு பிள்ளை போலக் கண் கலங்கி விட்டோமே என்ற கூச்சத்துடன் புன்னகைத்து, “சாரி” என்றாள்.
“எல்லாம் இந்த ஹார்மோன்ஸ் பண்ற குழப்பம் பார்த்தி. அந்த டைம்ல இப்படித்தான் எனக்கு மூட் ஸ்விங் இருக்கும்” என்றாள்.
“இனிமே எங்க போனாலும் இப்படிச் சாப்பிடாம இருக்காத புரிஞ்சுதா? எங்கம்மாக்கு இன்னைக்கு டோஸ் விட்டாதான் அடங்குவாங்க. இரு அவங்களைப் பேசிக்கிறேன்” என்றான்.
“அய்யய்யோ வேணாம் பார்த்தி. நான் இந்த டைம் இப்படித்தான் இருப்பேன். சும்மா அத்தையைத் திட்டி அவங்களுக்கு என் மேல இருக்கக் கோபத்தை ஏத்தி விடாதீங்க”
“எந்த டைம்? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஹார்மோன்ஸ் பண்ற குழப்பம்னு சொன்ன? புரியல?” என்று புருவங்கள் சுருங்க சந்தேகம் கேட்டான்.
“அதுவா?” என்று ராகம் போட்டவளுக்கும் இப்போது சந்தேகம் வந்திருந்தது.
“பார்த்தி இன்னைக்கு என்ன டேட்?” என்று கேட்டாள். அவன் தேதியை சொன்னான். அவள் அதிர்ந்து மூச்சை உள்ளே இழுத்து, அவனை நெருங்கி நின்று, “பார்த்தி” என்று ரகசியமாக அழைத்தாள்.
“என்ன பாரு?” அவளைப் போலவே ரகசிய குரலில் கேட்டான்.