உதய ராகம் – 11 (1)

அவன் விழிகள் பேசும் மொழியை, அவளிடம் மொழிப் பெயர்த்துக் கொண்டிருந்தது அவளின் விழிகள்.

இருவரின் முகமும் அத்தனை நெருக்கத்தில் இருந்தது. முத்தமிடப் போகிறான் எனும் உள்ளுணர்வில் அவளின் விழிகள் தானாகக் கிறங்கி மூடியது.

சுண்டு விரலால் அவளின் காது மடலை உரசி, “பப்ளிக்” என்று விட்டுப் புன்னகைத்தான். அவன் முகத்தைப் பார்த்து விட்டு, விழிகளைத் தாழ்த்தி தன் முகத்தைப் பார்த்தாள் ராகவி.

உடல் குலுங்க சிரித்துக் கொண்டே, “பப்ளிக்கில் இருக்கோம்னு சொன்னேன் பட்டே” என்றான்.

கண்களைச் சுழற்றினாள். யாரும் வெளியில் இல்லை. ஆனாலும், அவன் சொல்வது சரியென்றே பட்டது. ஐயோ, தன்னைப் பற்றி என்ன நினைத்தானோ எனும் எண்ணத்துடன் உதடு கடித்தாள் அவள்.

“ரிலாக்ஸ் பட்டே. வா, பீச்சில் கால் நனைச்சுட்டு வரலாம்”

“அச்சோ, நான் வரல” பதறினாள்.

“ஏன்”

“பிடிக்காது” என்றாள் வெறுப்புடன்.

“பீச் பிடிக்காதா? உண்மையாவா? ஏன்? ஆசையா ஓடிப் போய், அலைகளில் கால் நனைப்பன்னு பார்த்தா, இப்படிச் சொல்ற”

“நான் டென்த் படிக்கும் போது, கடல்ல மூழ்கி… என் அம்மா கடல்ல மூழ்கி இறந்துட்டாங்க. ஆக்சிடென்ட் தான். ஆனா, அப்போல இருந்து இந்தக் கடல் மேல ஒரு வெறுப்பு. பயம், கோபம். என்னனு சரியா சொல்லத் தெரியல. ஆனா, அம்மா இறந்து போய் இத்தனை வருஷம் ஆகியும் கூட, என்னால… நான் கடல் பக்கமே போனதில்லை”

“ஓ, சாரி பட்டே. எனக்குத் தெரியாது மா. என்னைப் போலவே உனக்கும் அம்மா இல்லைனு தெரியும். ஆனா, சாரி பட்டே, சாரி”

“ம்ம்”

“எனக்குக் கடலும், கடல் சார்ந்த இடமும் ரொம்பப் பிடிக்கும்”

“ஓ”

“ம்ம், வாயேன். என் கைப் பிடிச்சு கொஞ்ச தூரம் நடயேன்.”

“வேணாம் உதய்”

“பிளீஸ், உங்கம்மா கடைசியாக அங்க தான் உயிரோடு இருந்தாங்கன்னு நினை. கடலோடு பேசு. இயற்கை தான் எல்லாமே. அதுக்குப் பயந்தா எப்படி?. வா ராகவி”

இருளுக்கும், கடலுக்கும் தன்னால் எல்லாவற்றையும் கண்ணுக்குத் தெரியாமல் செய்து விட முடியும், மறைத்து விட முடியும் எனும் கர்வம் இருப்பதாக அவளுக்கு எப்போதும் தோன்றும். இப்போதும் அவளைச் சூழ்ந்திருந்த இருளில், கண் முன் விரிந்திருந்த கடலை காண்கையில் அப்படித் தான் தோன்றியது. யாரையோ விழுங்க காத்திருப்பதைப் போல. எதையோ சுவடின்றி மறைக்க அகோர பசியோடு அலை வீசி விழித்திருப்பதைப் போல.

அவளது மனநிலையை அறிந்தது போல, அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை அவன்.

“ஒரு நிமிஷம் பட்டே” என்று, பேண்ட் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்தான்.

கார் மேல் அமர்ந்திருந்தவளின் காலை பிடித்தான்.

“அச்சோ, என்ன பண்றீங்க உதய்?” பதறினாள்.

“பொறுமை பட்டே” அலட்டிக் கொள்ளவேயில்லை அவன்.

மெல்ல கையை முன்னே கொண்டு வந்து நீட்டினான். அவன் கையில் பாந்தமாக அமர்ந்திருந்தது சிறிய நகைப்பெட்டி.

அவர்கள் கல்யாண தேதியை குறித்த அன்றே மோதிரம் மாற்றி இருக்க, இப்போது என்ன கொண்டு வந்திருக்கிறான் என்று விழித்தாள் அவள்.

அவள் முன் கால் மடக்கி பாதி அமர்ந்த நிலையில், நகைப்பெட்டியை திறந்தான்.

அந்த இருளிலும் மின்னி தான் பொன்னெனக் கூறியது நகை.

மெல்ல அவளது பாதத்தை எடுத்து அவன் கால் மேல் வைத்து, அவளது காலணியைக் கழற்றினான்.

“உதய்”

“ஷ்ஷ் வெயிட் பட்டே”

மெதுவாக நகையை வெளியில் எடுத்தான். அழகான, மிகவும் மெலிதான தங்கப் பூக்கள் பதித்த கொலுசு அவன் கைகளில் தவழ்ந்தது. ஏற்கனவே அவள் அணிந்திருந்த கொலுசை கழற்றி அவனது பாக்கெட்டில் போட்டு விட்டு, புதியதை அணிவித்தான்.

“கால்ல தங்கம் போடலா…” அவள் முடிக்கவில்லை. அதற்குள் பதில் கொடுத்து விட்டான்.

“தங்கம் இல்ல. ஐம்பொன் கொலுசு பட்டே” எப்படி இவன் குரல் இத்தனை மென்மையாய் ஒலிக்கிறது என்ற யோசனை அவளுள் ஓடியது.

“அதுவும், அதுவும் தங்கம் தானே உதய்”

“ஷ்ஷ்ஷ், எவ்ளோ அழகா இருக்கு பார்” மெல்ல அவள் பாதத்தை வருடியது அவன் விரல்கள்.

“உதய்…” லேசாகப் பாதத்தை அசைத்து விட்டு, “சத்தமே வரல” என்றாள் கண்களில் கேள்வியுடன்.

“சத்தம் வரக் கூடாதுன்னு தான் வாங்கினது” என்றான் வசீகரப் புன்னகையுடன்.

“என்ன?”

“என் ப்ரெண்ட் அவன் வைஃப்க்கு வளைகாப்பு பரிசா, வளையல் வாங்க கடைக்குப் போனான். கூடவே என்னையும் இழுத்துட்டுப் போனான். இதோ, இந்த வீட்டுக்காரன் தான். கடையை மூடுற நேரத்தில் போய் நகை வாங்கினோம். அப்போ, உனக்கு ஏதாவது வாங்கனும்னு தேடினேன். கல்யாணம் ஆனதும் கிஃப்ட் பண்ண. அந்நேரம் இது தான் என் பட்டுக்கு பொருத்தமா இருக்கும்னு தோணுச்சா, உடனே வாங்கிட்டேன்” என்றான். இரண்டு கால்களிலும் கொலுசை போட்டு விட்டு நிமிர்ந்து நின்றான்.

“ரொம்ப அழகா இருக்கு உதய். தேங்க்ஸ். ஆனா, முத்து இல்லை போல”

“சத்தம் தானே உன் கவலை, விடு பார்த்துக்கலாம்” என்றான் குறும்பாகச் சிரித்து,

முகம் சிவக்க, “முத்து இல்லைனு தானே சொன்னேன். கேடி போலீஸ்” என்றாள். அதற்கும் சிரிக்கவே செய்தான்.

“நான் உங்களுக்குத் தர ஒன்னுமே வாங்கலையே.”

“அதான் எனக்கு வாழ்க்கை தர்றேன்னு சொல்லிட்டியே பட்டே. உதயின் ராகவியா ஆகுறேன்னு சொல்லிட்டியே. அதை விடப் பெருசா என்ன எதிர்பார்க்க போறேன் நான், சொல்லு?”

என்ன சொல்வாள் அவள். வார்த்தைகளே வரவில்லை அவளுக்கு.

“ரொம்ப ஃபீல் பண்ணாத பட்டே. நீ என் கூட இருந்தாலே எனக்குப் போதும். வா, டின்னர் சாப்பிடலாம்” அவள் கைப் பிடித்துக் கீழிறக்கினான்.

சாவியைத் தேடி எடுத்து வீட்டின் கதவை திறந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான். இரவு உணவுக்கு ஏதேனும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அவனே ஃப்ரிட்ஜில் இருந்து தேவையானதை எடுத்து வைத்துச் சமைக்கத் தொடங்கினான்.

அவனுக்குச் சமைக்கத் தெரியும் என்பதே அவளுக்கு அதிர்ச்சி தான். அதிலும், தனக்காகச் சமைக்கிறான் என்பதில் இன்னும் மயங்கியவளாக அவனைப் பார்த்திருந்தாள்.

அடுப்படி மேடையில் அமர்ந்து நேர்த்தியாக, வேகமாக அவன் சமைப்பதை பார்த்திருந்தாள்.

அவன் நீட்டிய கேரட்டை கடித்தபடி,

“நான் ஹெல்ப் பண்ணவா உதய். பிளீஸ்” என்றாள்.

“வேணாம் பட்டே, பேசாம.. இல்ல என்கிட்ட பேசிட்டே இரு போதும்” என்றான் வேலையில் கவனமாக.

அவளிடம் கதை பேசிக் கொண்டே சமைத்தான். அவளைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டான். அவனைக் குறித்தும் சொன்னான். சிறு வயது நினைவுகள், நண்பர்கள், படிப்பு, ஐபிஎஸ் பயிற்சி, அதன் பின்னான வேலை என்று ஒன்றையும் விடவில்லை.

அத்தனையையும் பகிர்ந்தவன், தனது வீட்டினரைப் பற்றிப் பெரிதாக எதுவும் சொல்லாதது அவளுக்கு உறுத்தலாக இருந்தது. ஆனாலும், அவனிடம் அவர்களைப் பற்றி அவளும் கேட்க விழையவில்லை.

error: Content is protected !!
Scroll to Top