பல வருடங்களாகச் சத்யபாமாவை அவளுக்குத் தெரியும்.
ஒரே பகுதியில் வசித்திருந்தார்கள். அவர்கள் இரண்டு குடும்பத்தினருக்கும் அப்படியொன்றும் பெரிதான நெருக்கம் இல்லை.
ஆனாலும் பழகிய வரை அவள் அறிந்த சத்யபாமாவுக்கு வேறொரு அழகான முகம் இருந்தது.
கடந்த ஆறேழு மாதங்களில் அம்மாவுடன் சந்திக்கும் போதெல்லாம் அவளிடம் மிகவும் அன்பும், கனிவும், அக்கறையுமாகப் பேசி இருக்கிறார். ஆனால் இப்போது மாமியார் ஆனதும் அவரின் முகமே மாறி போனதில் அவளுக்குப் பெருத்த அதிர்ச்சிதான்.
அவர்களுக்குத் திருமணம் முடிந்த இந்த ஒரு மாதத்தில் அவரிடம் நேர்ந்த மாற்றங்களைப் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.
எல்லாவற்றுக்கும், எல்லோருக்கும் பணம்தான் பிரச்சினையாக இருக்கிறது.
பணத் தேவைதான் பெருவாரியான பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகிறது. இங்கே இவளிடம் அதிகமாகப் பணம் இருப்பது மாமியாருக்குப் பிரச்சனை.
பொதுவாக மருமகளிடம் அதிகமாக வரதட்சணை கேட்டுக் கொடுமை செய்வார்கள். இங்கோ வித்தியாசமாக, அவளின் பணமே வீட்டுக்குள் வரக் கூடாது என்று திட்டவமாகச் சொல்லி விட்டார் சத்யபாமா. இங்கும் பிரச்சனையின் ஆணி வேர் பணம்தான். ஆனால் வேறு விதமாக.
பார்கவி ஒரு பெருமூச்சுடன் முகத்தில் மோதிய காற்றை ஆழ உள்ளிழுத்துச் சாலையில் விரையும் வாகனங்களை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.
மனம் மீண்டும் எங்கெங்கோ பயணிக்கத் தொடங்கியது.
வாழ்க்கையில் நாம் எடுக்கும் முக்கியமான முடிவுகளுக்கு, நம்மில் நிகழும் மாற்றங்களுக்கு, நம் அனுபவங்கள்தான் காரணமாக அமைகிறது.
சத்யபாமாவின் மாற்றம் அவரின் மோசமான அனுபவத்தால் வந்தது. அவளுக்கு அதை விளக்கி, “உங்கத்தையோட பயத்தை நீ புரிஞ்சுக்கணும் பாரு. அவங்களுக்கு உன் மேலயும், என் மேலயும் இருக்கக் கோபம்லாம் நிரந்தரம் இல்ல. நம்மளை புரிஞ்சு அவங்க வர்ற வரைக்கும் நீதான் அட்ஜெஸ்ட் பண்ணி போகணும் புரியுதா?” என்று அறிவுரை சொன்னார் காவேரி. சரியென்று கேட்டு கொண்டாலும் நடைமுறை சிக்கலாகத்தான் இருந்தது.
அவளுக்காகத் தாலி சங்கிலி எடுக்கையில் யதேச்சையாக ஐந்து சவரன் நகையைக் கையில் எடுத்திருந்தான் பார்த்திபன்.
“அவங்க வசதிக்குலாம் நாம நகை எடுக்க முடியாது பார்த்திபா. தங்கம் விக்கிற விலைக்கு அஞ்சு பவுனுக்கு எங்க போக? ஒழுங்கா மூனு பவுன்ல எடு” என்று கண்டிப்புடன் சொல்லி மகன் கையில் இருந்த சங்கிலியை பிடுங்கி இருந்தார். அத்தோடு அதை விடாமல் வீட்டுக்கு வந்த பிறகும், பார்கவியின் முன் வைத்தே அதைச் சொல்லி குத்தி காண்பித்து மீண்டும் அவனைக் கடிந்து கொண்டார்.
அவன் என்ன சமாதானங்கள் சொன்னாலும் அவரிடம் எடுபடுவதாக இல்லை. பதிலுக்குப் பேசி விட்டான். உடனே கோபித்துக் கொண்டார்.
துரைராஜ் இடை புகுந்து, “பல வருஷத்துக்கு முன்னால எங்கம்மா உன்னைப் பேசினத, உன்னால இப்பவும் மறக்க முடியலன்னு சொல்லி சொல்லி வருத்தப்படுவியே சத்யா. இன்னைக்கு நீயும் அதைத்தான் பண்ற. புரியுதா? நாளைக்கு உன் மருமக உன்னை எப்படி நினைப்பாங்கற விட, நம்ம பார்த்தியை பத்தி யோசிச்சுக்கோ. நான் எங்கம்மாகிட்ட உனக்காகச் சண்டை போட்டது போல அவனையும் பேச வச்சுடாத” என்று அவர் மனைவியைக் கடிய, அவரின் முகம் மாறியதே தவிர அவரிடம் மாற்றம் வரவில்லை.
பார்கவி திருமணத்துக்கு எடுத்த விடுமுறை முடிந்திருக்க, மூன்றாம் வாரத்தில் இருந்து அலுவலகம் செல்லத் தொடங்கியிருந்தாள்.
புகுந்த வீடு, புதிய மண வாழ்க்கை, இந்த உறவுகள் என அவளுக்கு அனைத்தும் புதிது. அதில் பொருந்தி போக, அவளால் ஆன முயற்சியைச் செய்து ஓரளவு வெற்றியும் கண்டிருந்தாள்.
ஆனால் காலையில் சீக்கிரமாக எழுந்து, அலுவலகம் செல்லும் முன் சமையல் செய்யும் வேலை இருக்கிறதே அதுதான் அவளுக்குப் பெரும் சிரமமாக இருந்தது.
அப்போதுதான் காதலின் அரிச்சுவடியை படிக்கிறார்கள். அதில் நேரம் காலம் காற்றாய் கடக்க, காலையில் எழுவது கடினமாக இருக்கிறது.
“வீட்டுக்கு மருமக வந்தும் நான்தான் அடுப்படியில வேக வேண்டியதா இருக்கு” என்ற சத்யபாமாவின் புலம்பலை கேட்டதும், அலாரம் வைத்து எழுந்து சமையல் அறை சென்றாலும், அவளுக்கு முன்னமே சமையலை தொடங்கி விடுகிறார் சத்யபாமா.
“குடுங்க அத்த. நான் செய்யுறேன்” என்று அவள் கேட்டால், “அதான் நானே செஞ்சுட்டேனே. நீ போய் ஆபீஸ் கிளம்பும்மா” என்று முகம் திருப்பிக் கொள்வார். இத்தனைக்கும் அலுவலகம் முடிந்து வந்து பெரும்பாலும் இரவு உணவை அவள்தான் செய்கிறாள். ஆனாலும் அவருக்கு மனசடவு.
“ஏன்ம்மா இப்படித் தொட்டதுக்கு எல்லாம் குத்தம் சொல்ற? சத்தியமா இரிட்டேட் ஆகுதும்மா, சொல்லிட்டேன். பாரு நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி நீதானேம்மா எல்லா வேலையும் செஞ்ச? இப்போ அவ ஒருத்தி வந்ததால உனக்கு வேலை கூடிருச்சா? இல்ல அவளுக்காகத் தனியா எதுவும் சமைக்கறியா? சொல்லும்மா? இன்ஃபாக்ட் சொல்லப் போனா அவ வீட்டு வேலையில ஹெல்ப் பண்றதால உன் வேலைதான் குறைஞ்சிருக்கும். நீ என்னன்னா எப்போ பாரு கம்ப்ளைண்ட் பண்ணி கத்திட்டே இருக்க.” என்று ஆதங்கத்துடன் சொன்னான் பார்த்திபன்.
“உன்னால செய்ய முடியலன்னா சொல்லும்மா, வேலைக்கு ஆள் போட்டுக்கலாம்” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் கோபத்துடன், “தெரியும்டா எனக்கு. நீ இப்படித்தான் சொல்லுவன்னு எனக்கு நல்லா தெரியும்” என்று கத்தத் தொடங்கி விட்டார் அவர்.
“உனக்குப் பணம் என்ன மரத்துல காய்க்குதா? நாலு பேர் இருக்க வீட்ல வேலை செய்ய ஆள் வச்சா விளங்கிடும்டா பார்த்திபா. உன் பொண்டாட்டி வீட்ல பண மரம் காய்க்குதுன்னா, அவங்க வீட்டு வேலைக்கு ஒன்னு என்ன நாலு பேரை கூட வைப்பாங்க. ஆனா நம்ம வசதிக்கு அதெல்லாம் சரிப்படாது சொல்லிட்டேன்” என்று ஆரம்பித்து, அவனுக்கு இருக்கும் கடன், பொறுப்புகள் என்று புலம்பி பாடம் எடுத்து முடித்திருந்தார்.
பார்கவி வேறு வழியின்றித் தன் மௌனத்தைக் கலைத்து, “வீட்டுக்கு வேலைக்குலாம் ஆள் போட வேணாம்த்த. நான் செய்யுறேன் இனிமே” என்று சமாதானமாகச் சொல்லியிருந்தாள். ஆனால் அவளாலும் அதை நடைமுறை படுத்த முடியவில்லை.
காலையில் அவள் எழுந்து வரும் போதே பாதிச் சமையல் வேலையை முடித்திருப்பார் சத்யபாமா. அவள் புறம் ஏளனமாக அவரின் பார்வை பதிவதிலேயே மனம் குன்றி போவாள்.
“அமெரிக்கா போக ஆஃபீஸ்ல பேசிட்டியா?” சத்யபாமா கேட்கவும், சுய உணர்வு பெற்று அவர் பக்கம் திரும்பினாள்.
“ம்ம், ஆன் சைட் கேட்டிருக்கேன் அத்த. இப்போ நான் இருக்கற ப்ராஜெக்ட் முடிஞ்சாதான் அனுப்புவாங்க” என்றாள்.
“ஓ, அதுக்கு எம்புட்டு நாளாகுமாம்?”
“ஒரு மூனு மாசம் ஆகலாம் அத்த”
“ஓஹோ. இத நான் கேட்கும் போதுதான் சொல்ற இல்ல நீ? இது பார்த்திபனுக்குத் தெரியுமா?”
“தெரியும்த்த” என்றாள். அது போதுமே அவருக்கு. ஆரம்பித்து விட்டார் கச்சேரியை. ஆட்டோ கோவிலை நெருங்கியதும்தான் நிறுத்தினார்.
வாசலில் அத்தனை பூக்கடைகள் இருந்தாலும் அவளுக்குப் பூ வாங்கிக் கொடுக்கவில்லை அவர். அர்ச்சனைக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு அவளோடு கோவிலுக்குள் நுழைந்தார்.
அவர் சொன்னது போலவே அன்று கோவிலுக்குள் நல்ல கூட்டம்.
சாமி தரிசனம் செய்யக் காத்திருக்கும் போதே பார்கவிக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. அவளுக்குப் படபடவென வர, மெதுவாக நகர்ந்த வரிசையில் சுவரோரம் சாய்ந்து நின்று தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.
நேரம் செல்ல செல்ல அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதீத பசியில் தலை வலித்தது, உடலெல்லாம் வியர்த்து விறுவிறுத்து, மயக்கம் வரும் போலிருந்தது. காலை நேர பரபரப்பில் தண்ணீர் கூட எடுத்து வந்திருக்கவில்லை அவள்.
சத்யபாமா சுணங்கி சோர்ந்து சுவரில் சாய்ந்து நிற்கும் அவளை எரிச்சலுடன் பார்த்து, “ஒழுங்கா நில்லு பார்கவி” என்று அதட்டினார்.
“உங்ககிட்ட தண்ணி இருக்கா அத்த? இல்லன்னா நான் போய் வாங்கிட்டு வரவா?” நெற்றியில் வழிந்த வியர்வையைப் புடைவை தலைப்பால் துடைத்துக் கொண்டே கேட்டாள்.
“இங்க வரிசை பாதி நகரும் போது வெளில போவியா நீ? வீட்ல இருந்து கிளம்பும் போதே பொறுப்பா உனக்குத் தேவையானதை எடுத்து வைக்க வேணாமா? இந்தக் கோவிலுக்கு வரவே இரண்டு மணி நேரம் எடுக்கும்னு தெரியும்தானே உனக்கு? உங்கம்மா எப்பவும் வரும் போது சோறு கூடக் கட்டிட்டு வருவாங்களே” என்று அவர் பேச பேச, அவளுக்கு நா வறண்டது. அவர் அம்மாவை குறிப்பிடவும் அவளுக்குச் சட்டெனக் கண்கள் கலங்கி விட்டன.
“இந்தா” என்று அவர் நீட்டிய தண்ணீரை வாங்க அவள் கை நீளவில்லை. அவள் கையில் பாட்டிலை திணித்திருந்தார் அவர்.
பசியும், தாகமும், சோர்வும் சேர்ந்து கோபத்தைப் பின்னுக்குத் தள்ள, தண்ணீரை அருந்தி மிச்ச மீதி இருந்த கோபத்தைத் தணிக்க முயன்றாள்.
சற்று நேரத்தில் வரிசை சீராக நகரத் தொடங்கியது.
அவள் மனத்தை அதுவரை அழுத்திய அத்தனை விஷயங்களையும் மறந்து, பெரியதாக வேண்டுதல் ஏதும் இன்றிக் கண் மூடி நிறைவாகச் சாமியை தரிசித்திருந்தாள்.
அவர்கள் கோவிலில் இருந்து வெளியே வரும் போது சூரியன் தன் தகிப்பை குறைத்து முன் மாலைப் பொழுதென அறிவித்தான்.