பார்த்திபன் காதலி – 37 (1)

அடர் ஒயின் நிற ஜார்ஜெட் புடைவை பாந்தமாய்ப் பார்கவியின் மேனியை தழுவியிருந்தது‌.

கண்ணாடி முன் அமர்ந்து அவசரமாகத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

அலைபேசி குறுஞ்செய்தி சத்தத்தில் படுக்கையில் இருந்த பார்த்திபனின் உறக்கம் கலைய, ஒற்றைக் கையைப் படுக்கையில் ஊன்றி அதில் கன்னம் பதித்து மனைவியை மையலுடன் பார்த்தான். அவன் உதடுகள் தன்னிச்சையாகச் சீட்டி அடித்தன. அந்தச் சத்தத்தில் கண்ணாடியில் அவன் முகம் பார்த்து புன்னகைத்து, தலையைத் திருப்பி அவனைப் பார்த்தாள்.

இப்போது கண்ணடித்து நீண்டதொரு விசில் அடித்தான் அவன். அவள் முகத்தில் செம்மை படர, அவனது புன்னகை பெரிதாக விரிந்தது.

படுக்கையை உதறி எழுந்து அவளிடம் வந்தான்.

“நான் அத்தையோட கோவிலுக்குப் போறேன் பார்த்தி. என்னைத் தொடாதீங்க” என்று முன்னெச்சரிக்கையுடன் மொழிந்தாள்.

“புருஷனுக்குக் கஷ்டத்தைக் கொடுத்துட்டு…சாமிகிட்ட போய் எனக்குச் சந்தோஷத்தை குடுன்னு வேண்டிக்க வேண்டியது..ம்ம்ம்” என்று அவன் சொன்ன தினுசில் பக்கென்று சிரித்து விட்டாள்.

“நீங்களும் எங்களோட வாங்களேன் பார்த்தி”

“ம்ஹும்‌. நீங்க போய்ட்டு வாங்க பாரு. எனக்கு வெளியில வேலை இருக்கு” என்றான்.

“என்ன வேலை?” என்று புருவம் உயர்த்தினாள்.

“ஆபீஸ் ஒர்க்”

“பார்த்தி” என்று கண்ணைச் சுருக்கி அவனைக் கூர்மையாகப் பார்த்தாள்.

“என் இதயம் துடிக்கிற ஒவ்வொரு நொடியும் நீ நல்லா இருக்கணும். சந்தோஷமா இருக்கணும்னுதான் துடிக்கும் பாரு. அதுக்காகத் தனியா கோவிலுக்குப் போய்தான் வேண்டிக்கணுமா என்ன?”

“இப்படிப் பேசி ஆளை கவுக்காம எங்களோட வாங்களேன். பிளீஸ்”

“பிளீஸ்லாம் சொல்லாத பாரு. பிளீஸ்.. இன்னைக்கு நீங்க போய்ட்டு வாங்க. நான் இன்னொரு நாள் வர்றேன்” என்றான், அவள் கன்னம் தாங்கி.

“கிரிக்கெட் விளையாட தான போறீங்க?”

“ஆமான்னு சொன்னா அடிப்பியா?”

“ஆமா, அடிக்கிறாங்க. போங்க” என்று கன்னத்தில் இருந்து அவனதுக் கையைத் தட்டி விட்டாள்.

“ஹே பாரு. பிளீஸ், கிரிக்கெட் கிரவுண்ட் பக்கம் போய் ரொம்ப நாள் ஆச்சு. நாள் இல்ல, மாசக் கணக்காச்சு. கொஞ்சம் கருணை காட்டு” என்று கெஞ்சலாக மிரட்டினான்.

“பிரபா அண்ணா உங்களோட வர்றாங்களா?” என்று அவள் கேட்கவும், ஐயோ சிக்கினோம் என்று மெல்ல விலகினான். அதிலேயே அவளுக்கு உண்மை விளங்கிட, “ப்ராடு பார்த்தி நீங்க. நம்ம கல்யாணத்தப்போ என்னெல்லாம் கதை சொன்னீங்க? சும்மா அடிச்சு விட்டுருக்கீங்க என்ன? அன்னைக்கே லாயரை வச்சு உங்ககிட்ட எழுதி வாங்கி இருக்கணும் நான்” என்று அவள் முறைக்க, “பட்டுக்குட்டி பாரு. லாயர் வச்சு எழுதி வாங்குவியா? இதெல்லாம் அநியாயமா இல்ல உனக்கு?” என்று சிரிப்புடன் வினவினான்.

அவளின் பார்வையில் தீவிரம் தெரிய, “சரி. நீ பெர்மிஷன் கொடுக்கலன்னா நான் போகல” என்று படுக்கையை நோக்கி நடந்தான்.

“நான் பெர்மிஷன் கொடுக்கல. நீங்க எங்களோட கோவிலுக்கு வாங்க” என்றாள் புன்னகையை அடக்கி, தீவிரமாக.

“பட்டுக்குட்டி பாரு. இப்படிப் பொசுக்குன்னு பெர்மிஷன் இல்லைன்னு சொல்லக் கூடாது. உன் பார்த்திப் பாவம் இல்ல?”

“இல்ல” என்றாள் ஒத்தை வார்த்தையில்.

அவன் சிரிப்பும் முறைப்புமாக அவளையே பார்த்திருக்க, “சரி, போய்ட்டு வாங்க” என்று அனுமதி தந்திருந்தாள்.

“ஆனா எல்லா வாரமும் இப்படியே போகாதீங்க. நான் அதுக்குக் கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன். சரியா?”

“உன்னையும் கூட்டிட்டு போனா ஓகேவா?” என்று டீல் பேசினான்.

“எனக்குக் கிரிக்கெட் பார்க்க ரொம்பப் பிடிக்கும்தான். ஆனா அதுக்காக மொட்டை வெயில்ல நாள் முழுக்க நின்னு விளையாடுறதை பார்க்குறதுலாம் சான்சே இல்ல” என்று கையை விரித்தாள்.

“அதையும் பார்ப்போம்” என்று சவால் விட்டுக் குளிக்கச் சென்றான். அவன் குளித்து வெளியே வர, பார்கவி தயாராகி நின்றிருந்தாள்.

அப்போது, “பார்கவி” என்று சத்யபாமா அழைக்க, “அச்சோ லேட்டாகுது போல அத்தை கூப்பிடுறாங்க. எனக்குப் பசிக்குது, நான் ப்ரேக்பாஸ்ட் எடுத்து வைக்கிறேன். நீங்க சீக்கிரமா வாங்க” என்று அவனிடம் படபடத்து விட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் சமையல் அறைக்குள் நுழைய, “ஆட்டோ புக் பண்ணு பார்கவி, நேரமாகுது” என்றபடியே அவளிடம் வந்தார் சத்யபாமா.

“இதோ இப்ப பண்ணிடுறேன் அத்த” என்று அவரிடம் சொல்லிக் கொண்டே அடுப்பில் பாலை ஏற்றி விட்டு, அலைபேசியைக் கையில் எடுத்து ஆட்டோ முன்பதிவு செய்தாள். அது பக்கத்தில்தான் இருந்தது. நான்கு நிமிடத்தில் வந்து விடும் என்று தோராயமாக நேரத்தைக் கணக்கிட்டுச் சொல்லியது.

“ஆட்டோ அஞ்சு நிமிஷத்துல வந்துடும் அத்த” என்றவள், அவசரமாக அடுப்புப் பக்கம் திரும்பினாள். அவளின் அவசரத்திற்குப் பால் பொங்கவில்லை.

“உங்களுக்குக் காபி தரவா அத்த?”

“நான் இன்னைக்கு விரதம். உன்கிட்ட நேத்தே சொன்னேன் இல்ல? மறந்துட்டியா?” என்று கடுமையாகக் கேட்டார்.

“பால் குடிப்பீங்க இல்லத்த?”

“ம்ஹும். தண்ணி மட்டும்தான். இப்பத்தான் உனக்கு எல்லாச் சந்தேகமும் வரும். சும்மா என்னைய கேள்வி கேட்காம காப்பிய போட்டு குடிச்சிட்டு வா. ஆட்டோ வந்திட போகுது” என்று அவசரப்படுத்தினார்.

அவள் சமையல் மேடையை ஆராய, “உங்க மாமா சாப்பிட்டு கிளம்பிட்டார். மதியத்துக்கு அவர் வெளில பார்த்துப்பார். உன் புருஷன் கிரிக்கெட் விளையாட போனா அங்க ஃப்ரெண்ட்ஸ் கூடச் சாப்பிட்டுப்பான்” என்று அவள் கேட்காமலே விளக்கம் சொன்னார்.

அப்போது பார்த்திபன் கிரிக்கெட் உடையில் தயாராகி வர, பொங்கிய பாலை அணைத்து அவனுக்குக் காஃபி கலந்து கொடுத்தாள். அத்தோடு அவளுக்கும் சேர்த்து கலந்து கொண்டாள்.

“எங்களுக்கு ஆட்டோ இப்போ வந்திடும். நீங்க சாப்பிடுறீங்களா பார்த்தி? எடுத்து வைக்கவா?” என்று கணவனை நெருங்கி அவள் கேட்க, “நான் போட்டு சாப்பிட்டு வீட்டை பூட்டிட்டு கிளம்பறேன். நீ சாப்பிட்டுக் கிளம்பு” என்றான் அவன்.

எங்கே அவளுக்குக் காஃபி குடிக்கக் கூட நேரம் அமையவில்லை. அதற்குள் ஆட்டோ வந்திருந்தது.

ஆட்டோ ஓட்டுநர் அவளை அழைக்க, “வா, வா” என்று பரபரத்தார் சத்யபாமா.

“இன்னைக்குக் கோவில்ல நல்ல கூட்டம் இருக்கும். நேரத்தோட போகணும்” என்று வாசலை நோக்கி நடந்திருந்தார்.

“இரும்மா, அவ சாப்பிட்டுட்டு வருவா” என்று பார்த்திபன் சொல்ல, “அது வரைக்கும் நீ வெயிட் பண்ணுவ. ஆட்டோ டிரைவர் வெயிட் பண்ணுவானா? காலையில கோவிலுக்குப் போறோம்ன்னு நேத்து நைட்டே இவகிட்ட சொல்லிட்டேன்தானே. இன்னைக்கு ஒரு நாள் நேரத்தோடு எந்திரிச்சு வந்தா குறைஞ்சுடுவாளா இவ? உங்களுக்காக வேண்டிக்கிட்டு விரதம் இருக்கற நானே எழுந்து சமைச்சு வச்சுட்டு, சாப்பிடும்மானு கெஞ்சணுமா இவளை?” என்று அவர் கடுகடுக்க, கையில் இருந்த சூடான காபியை குடிக்கும் மனமின்றிப் போனது பார்கவிக்கு.

பார்த்திபன் பட்டென்று எழுந்து வர, “பிளீஸ்” என்று அவனைப் பார்வையால் தடுத்து விட்டு, காஃபி கோப்பையை அங்கேயே வைத்து விட்டு, சத்யபாமாவை பின் தொடர்ந்தாள்.

அவள் ஆட்டோவில் ஏறியதும், “காஃபி குடிச்சுட்டதானே?” என்று அவர் கேட்க, மையமாக மண்டையை ஆட்டி வைத்தாள். எதுவும் பேசி அவரிடம் பேச்சு வாங்க அவள் தயாரில்லை.

நான் பேசுவதற்கு ஏதாவது பயன் இருக்க வேண்டும். இல்லையென்றால் எதற்காக வீணாக வார்த்தை விரயம் செய்ய வேண்டும் என்ற மனநிலை அவளுக்கு. அதனால் அமைதியை கடைப்பிடித்தாள். ஆனால் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும் என அவள் உணரவில்லை.

அமைதி எல்லா நேரமும் அமைதியை தராது.

error: Content is protected !!
Scroll to Top