கதவை திறந்து இறங்கியவன், அவள் பக்க கதவை திறந்து விட்டு, “வா” என்றான்.
“கடலுக்குப் பக்கமா போக வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே, கீழே இறங்கி நின்று புடவையைச் சரி செய்யக் குனிந்தவளை, அவள் எதிர்பாரா நொடி இடுப்பில் கைக் கோர்த்து தூக்கி காரின் மேல் அமர வைத்தான்.
“உதய், என்ன பண்றீங்க?” மிரண்டு கத்தினாள் ராகவி.
“கூல் டவுன். இப்ப என்ன பண்ணிட்டேன்? இப்படிக் கத்துற? கார் போனேட்டில் தானே உட்கார வச்சேன்? அதுவும் கீழ அழுத்தமான மேட் எல்லாம் போட்டு இருக்கேன். சூடு தெரியலை தானே?” பதிலுக்கு “இல்லை” என்று தலையை அசைத்தவள்,
“யாராவது பார்த்தா…”
“எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்குள்ள தான் இருக்காங்க ராகவி. யாரும் வெளில வரப் போறது இல்ல. அப்படியே வெளில வந்தாலும் ஒரு பிரச்சனையும் இல்லை. யாரும் பார்க்கக் கூடாததை நாம பண்ணப் போறதில்லை. சோ, ரிலாக்ஸ்” அவளை நெருங்கி நின்றபடி சொன்னான்.
‘போலீசுக்குப் பேச்சை பாரு’ சிவந்த முகத்தை அவனிடம் காட்ட விரும்பாமல் தலையைத் திருப்பினாள்.
மணி எட்டை கடந்திருக்க, நன்றாக இருட்டி விட்டிருந்தது. கடல் காற்று அவளை முழுதாகத் தூக்கிச் செல்லும் முயற்சியில் இருந்தது போல அத்தனை வேகமாய் அவளைச் சுற்றிச் சுழன்றது. அவளது கூந்தலையும், புடவையையும் கலைத்து விளையாடிக் கொண்டிருந்தது.
ஒரு கையால் புடவையையும், மறுகையால் கூந்தலையும் இறுகப் பற்றினாள். ஆனாலும், அவளது கட்டுப்பாட்டையும் மீறி காற்றோடு காற்றாகப் பறந்து கொண்டிருந்தது.
அவளது போராட்டத்தைச் சன்ன சிரிப்புடன் பார்த்தவன், எட்டி அவள் கைப்பையில் இருந்து க்ளிப்பை எடுத்து அவளிடம் நீட்டினான்.
சிறு நிம்மதி பெருமூச்சுடன் தலை முடியை அதில் அடக்கினாள். அதையும் மீறி பறந்த முடி கற்றைகளைத் தன் சுண்டு விரல் கொண்டு ஒதுக்கி விட்டவன், “சாரி” என்றான்.
“என்ன.. என்ன சொன்னீங்க?”
“மன்னிச்சிடு ராகவி” என்றான் அவள் கண்களைப் பார்த்து,
“ஏன் உதய்?”
“சாரி..” என்றான் மீண்டும்.
“ஏன்…”
“மன்னிக்க மாட்டியா ராகவி?”
“மாட்டேன். என்ன பண்ணுவீங்க?” என்றாள் தீர்க்கமாக,
அவளை நெருங்கி நின்றவன், லேசாக முன்னோக்கி நகர்ந்து, குனிந்து அவளது முகத்தைத் தனது இரு கரங்களிலும் அள்ளிக் கொண்டான். அவளது மனத் தாங்கலை புரிந்தவனாக முகம் தாங்கினான்.
மின்னிக் கொண்டிருந்த அவளது ஈர விழிகளைப் பார்த்தான்.
பாலைவனத்தில் பல நாட்கள் தண்ணீர் இன்றித் தவித்தவனுக்கு, பாலையின் சோலையைக் கண்டது போலிருந்தது. மனமெங்கும் பரவிய அமைதியை மெல்ல கண் மூடி, ஆழ்ந்து அனுபவித்தான்.
“உ… த.. ய்”
“எனக்குக் கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உன் கூட மட்டும் தான் நடக்கும் ராகவி.
உனக்குக் கல்யாணம் ஒன்னு நடந்தா… தாலின்னு ஒன்னு உன் கழுத்துல தொங்கினா, அது நான் கட்டுனதா மட்டும் தான் இருக்கும். இருக்கணும்”
இருவருக்கும் நடுவில் நூலளவு இடைவெளியே இருந்தது.
தான் இமைகளை அசைத்தால் அவனைத் தொட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் இமைக்க மறந்து உறைந்திருந்தாள் ராகவி.
“வாழ்க்கையில் கருப்பு வெள்ளை மட்டுமில்ல. வேற பல வண்ணங்களும் இருக்கு தானே ராகவி. மனுஷங்களும் அப்படித் தான் பட்டே. வண்ணங்களைப் பற்றி உனக்குத் தெரியாததா? சொல்லு. மனிதர்கள் பலவிதம். எல்லோரையும் அனுசரிச்சு தான் போகணும்.. இல்லனா…”
“அப்ப, என்ன நடந்தது? ஏன் நடந்தது? யார் காரணம்? எதுவும் சொல்ல மாட்டீங்க? அப்படித் தானே?” என்று கோபத்துடன் அவள் கேட்க, அக்கேள்வியை எதிர்பார்த்தது போல, உதடு கடித்துக் கண்களை இறுக மூடித் திறந்தான். அவள் முகம் பற்றியிருந்த அவன் கைகளில் அழுத்தம் கூடுவதைக் கூட அவளால் நன்றாக உணர முடிந்தது.
“உதய்..”
“ராகவி பிளீஸ். இனி இந்த மாதிரி நடக்காது. என்னை நம்பு. ஐ பிராமிஸ் யூ”
“ஏற்கனவே நடந்ததுக்கு…”
“பிளீஸ் பட்டே, வேண்டாம். நடந்ததை மறக்க டிரை பண்ணு. எங்க வீட்ல இருந்து மன்னிப்பு கேட்டாங்க தானே மா?”
“ஆனா, ஆனா…மன்னிப்பு கேட்டா? போதுமா? எப்படி உதய்? நாங்க, எங்க வீட்ல எவ்வளவு டென்ஷன் ஆனோம்… தெரி…”
“பிளீஸ் பட்டே”
பட்டை விட மென்மையாக வந்து விழுந்தது அவன் குரல்.
அவள் முகத்தைத் தன்னை நோக்கி இழுத்தான்.
“அப்போ சொல்ல மாட்டீங்க? அப்படித் தானே? யார் பண்ணா..”
“பிளீஸ் பட்டே” என்றவனின் உதடுகள், அவளது இதழ்களைத் தொட்டு விடும் நெருக்கத்தில் இருந்தது. அவளது சேலை பறந்து அவன் தோளை சுற்றியிருந்தது.
இருவரும் ஒரே மூச்சுக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருந்தனர். உணர்ச்சி மிகுதியில் நடுங்கிய கரத்தை இறுக மூடித் திறந்தாள். உதடு கடித்துக் கோபத்தை அடக்கினாள்.
“உனக்கு மட்டுமில்ல. எனக்கும் பயமா தான் இருக்கு ராகவி. உன் பக்கத்தில் நான், நானாவே இருக்கறது இல்ல. எனக்குப் பேசவே பிடிக்காது. ஆனா உன்கிட்ட பேசிட்டே இருக்கேன். நிறையப் பேசுறேன்.
நீ வேணும் பட்டே. வாழ்நாள் முழுக்க என் பக்கத்தில் இருக்கணும். நீ இல்லாம, இனி ஒரு நாளை கூட நகர்த்த முடியாதுன்னு தோணுது. பைத்தியம் பிடிக்கும் போல இருக்கு. உன்னோடு ஒட்டிக்கணும் போல இருக்கு. உன்னை இறுக்கி கட்டிக்கணும் போல இருக்கு. இதோ, இந்தக் கடலின் அடி ஆழத்தில் உன்னோடு மூழ்கிப் போய்டனும் போல இருக்கு. உன்னில் மூழ்கிடணும் போல இருக்கு. எனக்கு மட்டும் தான் அப்படி இருக்கா பட்டே?
உன்னைத் தவிர எதுவும், யாரும் பொருட்டா தெரிய மாட்டேங்கறாங்க. என்னை, என்ன பண்ற நீ?” என்று உணர்ச்சிப் பொங்க சொன்னவன், விழி உயர்த்தி அவளைப் பார்த்தான். மயங்கி, உறைந்து போய் அமர்ந்திருந்தவளை பார்த்து, மோகன புன்னகை சிந்தினான்.
“என்னை நம்பி என் வாழ்க்கையில் வா, ராகவி. உன்னை, நம்மை நல்லா பாத்துக்க வேண்டியது இனி என் பொறுப்பு. பிளீஸ் டிரஸ்ட் மீ”
“உதய், ஐ.. ஐ..” தடுமாறினாள் அவள்.
“லவ் யூ பட்டே. ஐ லவ் யூ ராகவி” அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே அழுத்தமாக, ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தான்.
“லவ் இஸ் அ பவர்ஃபுல் பிராமிஸ் உதய்”
“தெரியும் பட்டே. காதல் எனும் சத்தியத்தைக் காப்பத்துவேன். பிளீஸ், டிரஸ்ட் மீ” என்றான். அவனிடம் மொத்தமாக மயங்கி நின்றாள் ராகவி.
காலமும் அவர்களைத் தழுவி சென்ற காற்றும் அவர்களின் காதலை சோதித்துப் பார்க்க ஆவலாகக் காத்திருந்தது.