பார்கவி இடுப்பில் கை வைத்து நின்று, “என்னை விட்டுட்டு நீங்க மட்டும் தனியா போய்ட்டு வருவீங்களா?” என்று கோபமாகக் கேட்க, “அம்மா கால் பண்ணவும் சட்டுன்னு போய்ட்டேன் பாரு” என்றான் பார்த்திபன்.
“அவங்க எனக்கு அத்தை”
“ஐயோ ஆமா இல்ல?” என்று கிண்டலாகச் சொல்லி அவளின் இடையை வளைத்தான்.
“மாமியாரை பார்க்க நீ இம்புட்டு ஆசையா இருப்பேன்னு தெரியாம போச்சே பாரு. தெரிஞ்சுருந்தா உன்னையும் கூடக் கூட்டிட்டு போய் இருப்பேனே. ம்ம், அம்மா வேற உன்னைக் கேட்டாங்க”
“என்னைக் கேட்டாங்களா?”
“ம்ம், நீ வரலையான்னு கேட்டாங்க. உங்கப்பாம்மா கூட நீ ஷாப்பிங்ல பிஸின்னு சொன்னேன்” என்று அவன் சொல்லவும், கடுமையாக முறைத்தாள்.
“நான் வரலன்னு கோபிச்சுக்கிட்டாங்களா?”
“அதுக்கு எதுக்குக் கோபிக்கப் போறாங்க? நாமதான் நாளைக்கு வீட்டுக்கு போறோமே?” என்றான். பதிலுக்கு ஒன்றுமே சொல்லவில்லை அவள். பெண்களின் அரசியல் ஆண்களுக்கு எப்போதும் புரியாத புதிர்தான்.
“அத்தைக்கு உடம்புக்கு எதுவும் முடியலையா?”
“ச்சே அதெல்லாம் அம்மா நல்லாருக்காங்க பாரு. மூனு நாளா என்னைப் பார்க்காதது ஒரு மாதிரியா இருக்குன்னு சொன்னாங்க. அதான் போயிட்டு வந்தேன்”
“இனிமே என்னை விட்டுட்டு தனியா எங்கேயும் போகாதீங்க பார்த்தி” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
அவளை ஒரு நொடி கூர்ந்து பார்த்தவன், சரியென்றான். அவன் முன்னேயே சத்யபாமாவை அழைத்துப் பேசினாள் அவள்.
“ஆமா, கொஞ்சம் மேலுக்கு முடியல. என்னமோ சாயந்தரம் வாக்குல தலையைச் சுத்திட்டு வந்துருச்சு” என்று சோர்வாகச் சொன்னார் சத்யபாமா.
“ஏன்த்த, டைமுக்கு சாப்பிடலயா நீங்க?”
“ஆமா, பசிக்கல. நான் ஒரு ஆள்தானே என்னத்தன்னு படுத்துட்டேன்.”
“அச்சோ நீங்க சாப்பிடாம இருந்ததால பிபி லோ ஆகியிக்கும் அத்த. இப்போ சாப்பிட்டீங்களா இல்லையா? இன்னமும் தலை சுத்தல் இருக்கா? நாங்க இப்போ கிளம்பி வர்றோம், நீங்க ரெடியாகி இருங்க. ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம்” என மெய்யாகப் பதறி கரிசனத்துடன் படபடத்தாள். அவள் கண்கள் கணவனைக் கடுமையாகக் குற்றம் சாட்டின.
“ம்ம் சாப்பிட்டேன். இப்போ நல்லாத்தான் இருக்கேன். நீங்க ஒன்னும் வர வேணாம்” என்று சலிப்புடன் சத்யபாமா சொல்ல, மனைவியின் கையில் இருந்து அலைபேசியைப் பறித்து அம்மாவிடம் பேசினான் பார்த்திபன்.
“என்னம்மா? நான் கேட்டப்போ சும்மா படுத்திருந்தேன்னு சொல்லிட்டு இப்போ பிபி லோன்னு என் பிபியை ஏத்துற நீ?” என்று கரிசனத்துடன் கேட்டவன் குரல் கொஞ்சம் கடுமையாக ஒலித்தது.
மனைவியை விட்டு விலகி மாடியேறியிருந்தான். அவனுக்குத் தனிமை தந்து அங்கேயே நின்று விட்டாள் பார்கவி.
இருபது நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தவன், “அப்பாகிட்ட பேசினேன், அம்மா நல்லாதான் இருக்காங்க. நாம இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்குன்னு ஃபீல் பண்றாங்க. வேற ஒன்னும் இல்ல” என்று விளக்கம் சொன்னான்.
“ம்ம், அத்த தலை சுத்தல் இருக்குன்னு சொன்னாங்க இல்ல? எதுக்கும் போய் டாக்டர் பார்த்திட்டு வந்துடுவோமா பார்த்திப் பிளீஸ்?” உண்மையில் அவளைப் பதற்றம் தொற்றியிருந்தது. அப்பாவை உடல் நலமின்றிப் பார்த்ததில் இருந்து அந்தப் பயம் அவளுக்கு நீங்கியிருக்கவில்லை.
“வாங்க பிளீஸ்” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
“அம்மா நல்லா இருக்காங்க பாரு. உன்கிட்ட தெளிவாதானே பேசினாங்க. அப்பா பார்த்துக்கறேன்னு சொல்லிட்டார். கூல் டவுன் பாரு” என்றான்.
அவளுக்குப் பதற்றம் குறைவதாக இல்லை. அப்போதே சென்று அம்மாவிடம் சொல்லி விட்டாள். காவேரி உடனடியாகச் சத்யபாமாவை அழைத்து நலம் விசாரித்து, விவரம் கேட்டறிந்தார்.
“உங்கத்தைக்கு ஒன்னும் இல்லையாம் பாரு. நீ போய்ப் படு போ” என்று அம்மா சமாதானம் சொன்னதும்தான் அறைக்குச் சென்றாள்.
அவர்கள் ஐந்து நாள்கள் மறுவீடு தங்கிச் செல்லும் திட்டத்தில் வந்திருந்தார்கள். சென்னைக்குள்தானே இருக்கிறோம், கூடுதலாக இரண்டு நாள்கள் தங்கலாம் என்றிருந்தான் பார்த்திபன். இனி அது எங்கே நடக்கப் போகிறது?
ரங்கராஜனின் பணியாளர்களுக்கு வாங்கிய உடைகளை மறுநாள் காலையிலேயே சென்று அவர்களுக்கு ஒரு பெட்டி இனிப்புடன் சேர்த்து வழங்கினார்கள்.
மகளும் மருமகனும் சேர்ந்து நின்று வழங்குவதை மனம் கனிய பார்த்திருந்தனர் அவள் பெற்றோர்.
வீடு வந்ததும் சரளா குடும்பத்துக்கென்று வாங்கி வந்திருந்த உடைகளை அவரிடம் கொடுத்து அவர்கள் ஆசீர்வாதம் வாங்க, அவர்களை மனதார வாழ்த்தி ஆசீர்வதித்தார் அவர்.
“சீக்கிரமா அப்பாவோட தொழிலை முழுசா பார்த்துக்க வந்துரு பாரும்மா.” என்று அவர் சொல்ல, பட்டென்று திரும்பி கணவனைப் பார்த்தாள் அவள். அவன் அதைக் கவனித்தது போலக் கூடத் தெரியவில்லை.
“அப்பா பார்த்துக்கிறேன்டா பாரு. நீ கவலைப்பட்டுக்காத” என்று அவளின் தலைக் கோதினார் ரங்கராஜன்.
அவர்களுக்குத் தனிமை கிடைத்ததும், “முன்னாடி மண்டபம் நீதானே பார்த்துட்டு இருந்த பாரு?” என்று அவளிடம் கேட்டான் பார்த்திபன்.
“ம்ம், ஆமா. அப்பாதான் பார்த்தாங்க. பட் ஐ ஹெல்ப்டு ஹிம்” என்றாள்.
“அப்போ இப்பயும் செய்ய வேண்டியதுதானே?”
“செய்யவா?”
“உன் விருப்பம் பாரு. என்னை ஏன் கேட்கற?” என்று புருவம் சுருக்கியவனைத் தாவி அணைத்துக் கொண்டாள்.
“ஹே பார்த்து பாரு” அவன் கரங்கள் அவள் விழுந்து விடாமல் வளைத்து இறுக்கிய வேகத்தில் அவளை வாரி தனக்குள் சுருட்டிக் கொண்டான்.
***
மகளுக்குத் தேவையானதை எடுத்து வைப்பதில் காவேரி பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார்.
பார்கவி பிரிவின் தாக்கத்தில் புன்னகை தொலைத்த முகத்துடன் பெற்றோரையே சுற்றி வர, ரங்கராஜன் கண்களுக்கு மகள் இன்னமும் பள்ளி செல்லும் சிறுமியாகவே தெரிந்தாள்.
“பாரும்மா, பறவை பெருசானா பறந்துதான் ஆகணும்டா. அப்புறம் அது எப்படிச் சுதந்திரமா பறக்க கத்துக்கும்? உலகத்தை எப்படிப் பார்க்கும் சொல்லு? ஆயிரம் மைல் தள்ளி பறந்து போனாலும் திரும்பத் தன் கூட்டுக்கே வந்துடுது இல்லடா. உனக்கான கூடா நாங்க எப்பவும் இங்கேயே இருப்போம்மா. அப்பாவும், அம்மாவும் உனக்காக என்னைக்கும் இருப்போம். எங்களை யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காம நீ சந்தோஷமா இருக்கணும். புரிஞ்சுதா?” என்று அன்பும், கண்டிப்பும் கலந்து கேட்டார்.
அன்பின் மிகுதியில் கண்கள் கலங்க, “நீங்க உடம்பை பார்த்துக்கோங்கப்பா. அம்மாவை பார்த்துக்கோங்க. அப்புறம் மண்டப வேலையை நான் அப்பப்போ வந்து பார்க்கறேன். கேட்டரிங்க்கு ஆள் போட்ட மாதிரி இதுக்கும் நல்ல புரொபஷனலானா ஒருத்தரா தேடி போட்டுடுவோம். அப்போ உங்களுக்கு அதிகமா வேலை இருக்காது” என்றாள்.
மனம் நெகிழ, “நீ சொல்லிட்ட இல்ல, அப்படியே செஞ்சுடலாம் டா” என்றார்.
“அதையும் நீங்களே செய்வீங்களா? அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்ப்பா” என்று பதறிய மகளைக் கண்டு சிரித்தார் ரங்கராஜன்.
பார்த்திபன் அவளை நெருங்கி பார்வையால் என்னவென்று கேட்டான்.
“நம்ம மண்டபம் பார்க்க ஆள் வேணும். ஆல்ரெடி மேனேஜர் இருக்கார். இருந்தாலும்..” என்று அவள் இழுக்க, “நாம விளம்பரம் குடுக்கலாம். எல்லாமே அவங்களே ஹேண்டில் பண்ற மாதிரி நல்ல புரொபஷனல் ஒருத்தரை அப்பாயின்ட் பண்ணலாம்” என்றான்.
பார்கவியின் பார்வை அவனைப் பாராட்ட, மகளின் எண்ணவோட்டத்தைப் பிரதிபலித்த மருமகனின் தோளில் தட்டினார் ரங்கராஜன்.
மகள் மறுவீடு எடுத்துச் செல்ல வேண்டிய எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்து அவர்களை அழைத்தார் காவேரி.
மகள், மருமகளை அழைத்துச் சென்று முறையாக அவளைப் புகுந்த வீட்டில் விட்டுவிட்டு, பிரிவு தந்த வலியுடன் வீடு திரும்பினர்.
பார்கவிக்குச் சீர் எதுவும் செய்ய வேண்டாம் என அவர்களின் திருமணத்தின் போதே தெளிவும் திருத்தமுமாகத் தெரிவித்திருந்தார் சத்யபாமா.
இப்போது பார்கவி கொண்டு வந்திருந்த பலகாரங்களை நெற்றி சுருங்க பார்வையிட்டு, “எதுக்கு இம்புட்டு, நான்தான் எதுவும் வேணாம்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன்தானே?” என்று அவளிடம் கேட்டார்.
“இந்தக் கேள்விய என் மாமியார் இருக்கும் போதே கேட்க வேண்டியது தானேம்மா? உனக்கு வேணாம்னா அவங்களைக் கையோட திருப்பி எடுத்துட்டுப் போகச் சொல்லியிருக்கலாம்” என்று கடுப்பாகச் சொன்னான் பார்த்திபன்.
அவன் கையைக் கட்டி நின்ற தோரணையில் கடுப்பான சத்யபாமா, “இப்ப என்னடா சொல்லிட்டேன்னு எகிறிட்டு வர்ற? இம்புட்டுப் பலகாரம் நம்ம நாலு பேருக்கு என்னத்துக்குன்னு கேட்டது குத்தமா உனக்கு? உன் பொண்டாட்டி கல்யாணத்தப்போ கொண்டு வந்த பலகாரத்தையே எல்லாருக்கும் குடுத்து விட்டுதான் காலி பண்ணியிருக்கு” என்று முறைத்தார்.
“இப்பயும் அப்படியே செய்ம்மா. நாம ரேணுகாக்கு இதை விட அதிகமா செஞ்ச ஞாபகம் எனக்கு இருக்கு. சும்மா எல்லாத்துக்கும் குறை சொல்லிட்டு இருக்காதம்மா. எரிச்சலா வருது” என்று அவன் சொன்ன விதமே அவன் எரிச்சலின் அளவை காட்டியது.
“நாளைக்கு ரேணுவை வரச் சொல்லி அவளுக்குக் குடுத்து விடு. இல்லன்னா என்கிட்ட குடு. நான் போய் அவளுக்குக் கொடுத்துட்டு வர்றேன்” என்றான்.
பார்கவி ஒன்றுமே பேசவில்லை. தான் என்ன பேசினாலும் பிரச்சனையாகும் என்று புரிந்தவள், அமைதியாய் அறைக்குச் சென்று விட்டாள்.
மறுநாள் ரேணுகா வீடு வந்தவள், “எங்க அத்தை உனக்குப் போன் பண்ணுச்சாம்மா? அண்ணனை இந்த வாரம் ஞாயித்துக் கிழமை விருந்துக்குக் கூப்பிட சொன்னாங்கம்மா. உங்களுக்கு அவங்களே போன் பண்றேன்னு சொன்னாங்க. அதான் கேட்டேன்” என்றாள். அந்தக் கேள்வியின் வழியே பிரச்சினைக்கு முதல் புள்ளியை வைத்திருந்தாள் அவள்.
மறுநொடி, “பார்த்திபா” என்று சத்தமாக மகனை அழைத்தார் சத்யபாமா.