உதய ராகம் – 10 (1)

‘இனி வரும் நாட்கள் எங்கள் இருவருக்குமானது. என் நாட்கள் இனி, அவனுக்கானது’

திருமணம் முடிவான பொழுது, ராகவியின் எண்ணவோட்டம் இப்படியாகத்தான் இருந்தது.

ஆனால், இருவரின் மனம் இணைவது மட்டுமே, அவர்கள் திருமண வாழ்க்கையில் இணையப் போதுமானது இல்லை என்று அவள் விரைவிலேயே தெரிந்துக் கொண்டாள்.

அவள் பெரிதாகக் கனவு கோட்டைகள் கட்டவில்லை தான். ஆனாலும், அவளது ஆசைகள் அதிகாலை கனவைப் போல, கானல் நீரைப் போல எட்டிப் பிடிக்க நினைக்கையில் அத்தனையும் கைக்கு எட்டாமல் மறைந்து போய் இருந்தது.

இத்தனை இடையூறுகளை அவள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

ராகவன் அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாகக் காரை அவர்களின் கடையை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான்.

கடையை அடைந்ததும் அமைதியாக இறங்கி சென்று தன் வேலையைக் கவனிக்கலானாள் ராகவி. தோழிகள் இருவரும் அவள் எங்கே சென்றாள், எதற்காகச் சென்றாள் என்று தெரிந்தும் கூட எதுவும் கேட்கவில்லை.

அவர்களின் பார்வை அவளையே வட்டமடித்துக் கொண்டிருந்தது. அவளாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள் போல. ஆனால், ராகவி எதையும் பகிர்ந்து கொள்ளத் தயாராகயில்லை.

தன் ஒட்டு மொத்த கவனத்தையும் திசைத் திருப்பி, கடைக்கு வந்த வாடிக்கையாளர்களைக் கவனித்து அனுப்பிக் கொண்டிருந்தாள்.

ராகவன் ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்து அலைபேசியுடன் ஐக்கியமாகி விட்டான். அவ்வப்போது போனில் பேசிக் கொண்டேயிருந்தான். இது நாள் வரை இருந்த பதட்டம் போய் இன்று அவன் முகத்தில் அப்படி ஒரு அமைதி குடியேறி இருந்தது.

“ஆயா பேசுறாங்க. பேசு” என்று வந்து அவளிடம் போனை நீட்டினான்.

அந்தப் பக்கம் இருந்து வந்த தகவலில், தண்ணீருக்கு தவித்த மீன் குஞ்சை போல வாயை திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தாள் ராகவி. பேச்சே வரவில்லை அவளுக்கு. எதிர்பார்த்தது தான் ஆனாலும் இந்த வேகத்தை எதிர்பார்க்கவில்லை அவள்.

“ம்ம், சரிங்க ஆயா” என்று மட்டுமே சொல்ல முடிந்தது.

போனை வைத்ததும் அவள் முன் வந்து நின்றாள் சுஹாசினி.

“சீக்கிரம் வா, ரா. நேரமில்லை. வீட்டுக்கு போகணும்” என்று அவளை இழுத்துக் கொண்டு போய்க் கடையின் டிரையல் ரூமுக்குள் தள்ளி, கதவை சாத்தி வெளியில் தாளிட்டாள்.

“சுஹா, என்ன பண்ற? கதவை திற” கத்தினாள் ராகவி.

“அங்க உனக்குச் சேலையும், ரெடிமேட் பிளவுஸிம் வச்சுருக்கேன் பாரு ரா. உனக்குப் பத்து நிமிஷம் தான் டைம். அதுக்குள்ள அதைக் கட்டிட்டு வெளில வர்ற.” பதிலுக்குக் கத்தி அவசரப்படுத்தினாள் சுஹாசினி.

“சுஹா…”

“சின்னப் புள்ளை மாதிரி சிணுங்காம சேலையைச் சுத்திட்டு வா, ரா… பிளீஸ்”

அந்தப் பக்கம் அவள் திட்டிக் கொண்டே உடை மாற்றுவது கேட்டது. நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள் சுஹாசினி.

ஐந்தாம் நிமிடம் கதவை திறந்து உள்ளே சென்ற சுஹாசினி, சேலையைக் கட்டிக் கொண்டிருந்தவளுக்குத் தலைவாரி பின்னலிட்டாள். முகத்தின் ஒப்பனையை லேசாகத் திருத்தி, “அழகு” என்று நெட்டி முறித்தாள்.

ஒரு பெருமூச்சுடன் ராகவி நிமிர, “ராகவ், காரை எடு. பொண்ணு ரெடி” என்ற சுஹாசினியைப் பார்த்து நாக்கை துருத்தி காட்டினாள் ராகவி.

“சிரி, செல்லம்” என்று அவள் கையைப் பிடித்து நடந்து கொண்டே சுஹாசினி சொல்ல, அதுவரை கோபமாகக் காட்டிக் கொண்டிருந்த ராகவி, அதற்கு மேல் அதை இழுத்துப் பிடிக்க முடியாமல் சிரித்து விட்டாள்.

ராகவியும், ராகவனும் காரில் ஏறி அமர, “கடையை நான் பார்த்துக்கறேன், போய்ட்டு வாங்க” என்று கை அசைத்தாள் சுஹாசினி.

பத்தே நிமிடத்தில் வீட்டை அடைந்திருந்தனர்.

ஒரு கண்ணை வாசலிலேயே பதித்திருந்திருப்பார் போல, அவர்களைப் பார்த்ததும் வேகமாக எழுந்து வந்தார் சிதம்பரம்.

“உனக்காகத் தான் வெயிட் பண்றாங்க. வா ராகவி” என்று மகளை உள்ளே அழைத்துக் கொண்டு போனார். அவர்களைத் தொடர்ந்து உள்ளே சென்றான் ராகவன்.

உதயின் குடும்பத்தைப் பார்த்து, வணக்கம் சொன்னவள், பொதுவாக நலம் விசாரித்தாள்.

ஏற்கனவே பெரியவர்களிடம் பேசி விட்டதால் அவளிடம் எதையும் தனியாகப் பேசாமல் பொதுவாகக் கல்யாண வேலைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.

உதயின் சித்தி மெல்ல எழுந்து அவள் முன் வந்து நின்றார்.

சட்டென்று மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள் அவள்.

“ராகவி, கொஞ்சம் தண்ணி கொடுமா” என்றார், அவள் கையைப் பிடித்து, “இதோ அத்.. அத்தை. வாங்க” தடுமாறினாள்.

“அத்தை தான் மா. அழுத்தமா சொல்லு” என்றார் புன்னகைத்து.

“ம்ம்” என்று தலையை அசைத்தாள் ராகவி. இருவரும் அடுப்படியை நோக்கி நடந்தனர். ஹாலில் இருந்த பூஜை அறையைக் கடக்கையில் அவளது கைப் பிடித்து நிறுத்தி, உள்ளே அழைத்துப் போனார்.

அவர் திரும்பி பார்க்க, உதயின் அண்ணி வந்து அவரிடம் பூ பந்தை திணித்து விட்டு சென்றார்.

ஒரு நொடி கண் மூடி கடவுளை வேண்டியவர், அவளுக்கு நெற்றியில் விபூதியும், குங்குமமும் வைத்து விட்டார். ராகவியின் மனம் நெகிழ்வதை அவளால் தடுக்க முடியவில்லை.

“விபூதி சின்னதா, கீத்தா தான் வச்சுருக்கேன் மா. உதய் அப்படித் தான் வைப்பான்” என்று சிரித்தவர், அவளை மெல்ல திருப்பி, கையில் இருந்த பூ மொத்தத்தையும் அவளுக்கு வைத்து விட்டார். ராகவிக்கு என்ன செய்வது என்றே புரியாத நிலை.

அவரைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள்.

“அழகா இருக்க மா. எங்க பையன் கொக்கு போல ஒத்த கால்ல நிக்கறதுலயும் அர்த்தம் இருக்கத் தான் செய்யுது. ஏன்னு காரணமும் இப்ப தான் புரியுது. உங்க கடையையும் நீ தான் பார்த்துக்கறீயாமே? சொன்னான். சந்தோசம் மா” என்றவர், அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவளுக்குத் தான் சங்கடமாக இருந்தது.

“உனக்குக் கோபம் இருக்கும் ராகவி. நான் அதைத் தப்புன்னு சொல்ல மாட்டேன். உன் இடத்தில யார் இருந்தாலும் கோபப்படத் தான் செய்வாங்க. ஆனா, நான் மன்னிப்பு கேட்டா நீ சமாதானம் ஆவேன்னா… இல்ல, நான் மன்னிப்பு கேட்க தயாராவும் இருக்கேன். என்னை மன்னி…”

“ஐயோ, பெரியவங்க நீங்க. என் கிட்ட…போய்ப் பெரிய வார்த்தை எல்லாம். வேணாம்.” அவர் அப்படிச் சொல்வார் என்று அவள் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் விழித்தாள் ராகவி.

“குணத்துலயும் தங்கமா தான் இருக்க.” என்றவர்,

“இந்தக் கல்யாண விஷயத்துல நீ என்ன சொன்னாலும் நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம் மா. என்னால உன் மனசை, உன் கோபத்தைப் புரிஞ்சுக்க முடியும். உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனா, என் பையன் ஆசைப்பட்ட பொண்ணு நீ. எங்க வீட்டுக்கு சந்தோசமா வாழ வந்தா.. நாங்க வரவேற்கத் தயாரா இருக்கோம் மா. நடந்ததைப் பேசுறதால எதுவும் மாறப் போறதில்லை. அதை மறந்துட்டு, எங்க வீட்டுக்கு மருமகளா நீ வரணும் ராகவி. உன்னை, மகளா பார்த்துக்க முடியலைன்னாலும், கண்டிப்பா மோசமான மாமியாரா நடந்துக்க மாட்டேன். நீயும் பார்க்க தானே போற..” என்று முகம் மலர சிரித்து,

“மருமகளா வருவ தானே மா?” என்றவரின் குரலில் என்ன இருந்தது என்று அவளால் கண்டறிய முடியவில்லை.

“என் பையன் உன்னை நல்லா பார்த்துப்பான் ராகவி. இனி, இது.. இது போல நடக்காது. என்னை நம்பலாம் நீ. தெளிவா யோசிச்சு முடிவு சொல்லு மா” என்றார் முடிவாக.

“சரிங்க” என்று அவள் நிமிர்ந்து பார்க்க, அவர் முகம் அப்பட்டமாக வாட்டத்தைக் காட்டியது.

“என்னாச்சு அத்தை?” என்று அவள் வினவ, சட்டென்று மலர்ந்தது அவர் முகம்.

“அத்தை சொல்லிட்ட.. அப்போ.. கல்யாணத்துக்குச் சம்மதம் தானே ராகவி?” என்று அவர் கேட்க, பதிலுக்குப் புன்னகைத்தாள் ராகவி.

அவர்கள் இருவரும் முகம் நிறைத்த புன்னகையுடன் வெளியில் வர, அங்கிருந்த அனைவரின் முகத்திலும் அச்சிரிப்பு பரவியது.

error: Content is protected !!
Scroll to Top