பார்த்திபன் திருமணத்துக்கு எடுத்திருந்த விடுமுறை முடிந்திருந்தது. இப்போது வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி பெற்றிருந்தான். அவன் முக்கியமான அலுவலக அழைப்பில் இருக்கும் போது அம்மா அழைக்க, “அவர் கிளையண்ட் கால்ல இருக்கார்த்த. இப்போ வர்றேன்னார்” என்று அவருக்குப் பார்கவி தகவல் சொன்னாள்.
“ம்ம், சரி” என்று மகளிடம் திரும்பி விட்டார்.
பார்கவி அங்கிருந்து சென்றதும், “உன் மாமியா பிரச்னை பண்ணுதா ரேணு?” என்று மகளிடம் அக்கறையுடன் கேட்டார் அவர்.
“இல்லம்மா..”
“நீ சொல்ற விதமே சரியில்லையே? என்ன திரும்பப் பணம் எதிர்ப்பார்க்கறாங்களா?”
“இல்லன்னு சொல்றேன் இல்லம்மா” என்றாள் கோபமாக.
“இப்படித்தான் சொல்லுவ நீ. ஆனா கடைசியில என்னத்தயாவது செஞ்சு எங்க உசுரை உருவிப்புடுவ நீ. இன்னொருக்கா என்னமாவது செஞ்சன்னா அவ்ளோதான். புள்ளைங்கள யோசி ரேணு. அதுங்களை அனாதையா விட்டுட்டு போயிடாத” என்று கண்ணீருடன் அவர் மகளைக் கடிய, “அப்படியெல்லாம் எதுவும் பண்ண மாட்டேன்ம்மா” என்றாள் ரோஷத்துடன்.
“உன்னைய நம்ப முடியாது. உன் மாமியா எம்புட்டு எதிர்பார்க்குதுன்னு சொல்லு? நான் ரெடி பண்ணி தர்றேன்” என்று அழுத்திக் கேட்டார்.
“வேணாம்னு சொன்னா விடேன்ம்மா”
சத்யபாமா அந்தப் பேச்சை பாதியில் விடுவதாக இல்லை.
ஒரு வருடத்துக்கு முன்பு ரேணுகாவின் புகுந்த வீட்டில் புது வீடு வாங்க விரும்பினார்கள். அப்போது இணையத்தில் பார்த்து ரேணுகா சொன்ன வீட்டுக்கு பெரிய தொகையை முன் பணமாகக் கொடுத்திருந்தார்கள். ஆனால் வீட்டு உரிமையாளர் வீட்டை வேறொருவருக்கு விற்று விட்டார். இவர்கள் கொடுத்த முன் பணத்தையும் திருப்பித் தரவில்லை. ரேணுகா வீட்டில் அது பெரிய பிரச்சினையாக வெடிக்க, மனம் வருந்தி தன்னையே வருத்தி கொண்டிருந்தாள் அவள்.
மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் மகளைக் கண்டதை சத்யபாமாவால் என்றைக்கும் மறக்க முடியாது. அப்போது பார்த்திபன்தான் பணம் கொடுத்து தங்கைக்கு உதவியிருந்தான்.
இப்போதும் மகளுக்கு ஏதோ பணத் தேவை என உணர்ந்து பயத்துடன் சத்யபாமா தோண்டி துருவி கேட்க, அவளோ பிடி கொடுப்பதாக இல்லை.
“உங்கண்ணே வரட்டும். நீ அவன்கிட்டேயே பேசிக்கோ.” என்று மகளிடம் முகம் திருப்பினார்.
அவர்களின் பேச்சை கேட்டபடியே அங்கு வந்த பார்த்திபன், “என்னம்மா என்கிட்ட பேசணும்?” என்று கேட்டான்.
“அதுவா உன் தங்கச்சிக்கு..” என்று அவர் ஆரம்பிக்க, “அது ஒன்னும் இல்லண்ணா. எங்கத்தை உனக்குப் போன் பண்றேன்னு சொன்னாங்க, பண்ணாங்களா? உங்களை விருந்துக்கு வீட்டுக்கு கூப்பிடணும்னு சொல்லிட்டு இருந்தாங்கண்ணா. அதைப் பத்திதான் பேசிக்கோன்னு அம்மா சொல்லுது” என்று படபடத்தாள்.
துப்பட்டா நுனியை கையில் சுற்றுவதும், பிரிப்பதுமாக இருந்தவளின் செயலில் பதட்டம் அப்பட்டமாக வெளிப்பட்டது.
“என்ன ரேணு? என்னன்னு சொல்லு? எதுவும் பிரச்சினையா?” என்று தங்கையின் அருகில் அமர்ந்தான் அவன்.
“சத்தியமா ஒன்னும் இல்லண்ணா” என்றதில் சமாளிப்பு மட்டுமே இருக்க, தங்கை தயங்குகிறாள் என்று எண்ணி பார்த்திபன் திரும்பி மனைவியைப் பார்த்தான்.
“நான் ஏன் போகணும்?” என்று பார்வையால் கேள்வி தொடுத்தாலும் அங்கிருந்து நகர்ந்திருந்தாள் அவள்.
“இப்போ சொல்லு ரேணு” என்றான். அப்படியும் அவள் சொல்வதாக இல்லை.
“சரி, உனக்கா சொல்லத் தோனும் போது சொல்லு. ஆனா உனக்காக அண்ணே இருக்கேன். அதை ஞாபகத்துல வச்சுக்கோ” என்று அழுத்தமாகச் சொன்னான்.
மதியம் போல அவன் மாமன் மனைவி உமா வந்தார். மாலை ரேணுகாவுக்கும், அவருக்கும் பாதிப் பலகாரங்களைக் கொடுத்து விட்டு மீதியை அக்கம் பக்கத்தினருக்குக் கொடுத்திருந்தார் சத்யபாமா.
இரவு உணவு முடித்துக் குடும்பமாகக் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
“நிறைய நேரம் பாதிக்கப்பட்டவன்தான் பாதிக்கப்பட்டவனுக்கு எதிரி, தெரியுமா பார்த்தி?” என்று கணவனின் புறம் சாய்ந்து வினவினாள் பார்கவி.
“என்ன சொல்ற புரியல? யாரு பாதிக்கப்பட்டா?”
“யாரும் பாதிக்கப்படல பார்த்தி. இது வேற மேட்டர். பொதுவா நாம எல்லாம் என்ன நினைப்போம்? ஒருத்தர் ஒரு விஷயத்துல பாதிக்கப்பட்டிருந்தா அவங்களுக்கு அதே போலப் பாதிக்கப்படுற இன்னொருத்தர் வலி புரியும்னுதானே?”
“ம்ம், அவசியம் இல்ல” என்றான்.
“அதான் நானும் சொன்னேன்” என்றாள் குறுநகையுடன்.
“என்ன திடீர்னு தத்துவம் சொல்ற? பார்த்திபன் பாபா கூடச் சேர்ந்ததும் ஞானம் கூடிடுச்சா உனக்கு?” என்று குறும்பாகக் கண் சிமிட்டி கேட்டான்.
அவன் இடுப்பில் இடித்து, “இது தத்துவம் இல்ல. நான் உண்மையைச் சொன்னேன். இப்போ உங்கம்மாவ எடுத்துக்கோங்க, அவங்க லவ் மேரேஜ். அதுவும் வீட்டை எதிர்த்து போராடி கல்யாணம் பண்ணிட்டு.. நம்மளுக்குச் சப்போர்ட் பண்ணாம சண்டைக்கு நிக்கறாங்க. புரியுதா?” என்றாள் வருத்தத்துடன்.
“ஏ பாரு. அவங்களுக்கு நம்ம மேல கோபம் இல்ல. புரிஞ்சிக்கோ பிளீஸ். நான்தான் சொன்னேனே, அந்தப் போலீஸ் பேசினது, நடந்துக்கிட்டது அம்மாவை ரொம்ப ஹர்ட் பண்ணிடுச்சு”
“அதுக்காக அவங்க நம்மள ஹர்ட் பண்ண கூடாது இல்லங்க?” அவன் கண் பார்த்து கேட்டு விட்டாள்.
கண்களை விரித்து அவளைக் கண்டித்தவன், சற்று தள்ளி அமர்ந்திருந்த அம்மாவை கண்ணால் சுட்டி காட்டி, “அம்மாக்கு கேட்டா ஃபீல் பண்ணுவாங்க பாரு. நான் அவங்ககிட்ட பேசறேன்” என்றான்.
உதடு சுழித்து, “ஏன் எனக்குப் பேச தெரியாதா? நானே பேசிப்பேன், போங்க” என்றாள்.
“பாரு” என்று அவளின் கைப் பிடித்தான்.
“நீங்க ஒன்னும் பார்க்க வேணாம். நான் கேட்கறதுக்குப் பதில் சொல்லுங்க போதும்”
“பார்க்க வேணாமா? பாருவை அப்புறமா பார்த்துக்கறேன். இப்போ என்ன பதில் வேணும் பாருக்கு?” என்று கேட்டான்.
“உங்கம்மாப்பா லவ் ஸ்டோரி சொல்லுங்க” என்று ஆர்வமாகக் கேட்டாள்.
“நம்ம லவ் அளவுக்கு அது இன்ட்ரெஸ்ட்டா இருக்காதே பாரு” என்று மந்தகாசப் புன்னகையுடன் சொன்னவனைப் பார்வையால் மிரட்டினாள்.
“என்னை விட எங்கப்பா சொல்லி கேட்டா செம்மையா இருக்கும். இரு அவரைச் சொல்ல சொல்றேன்” என்றவன், “அப்பா” என்று சத்தமாக அழைத்திருந்தான்.
“அச்சோ மாமாவை ஏன் கூப்பிடுறீங்க?” என்று பதறி அவன் வாயை மூடியவள், மாமனார் மாமியார் அவர்கள் புறம் திரும்பவும் சட்டென்று கையை எடுத்து விட்டாள்.
தொலைக்காட்சியில் சத்தம் குறைத்து மகன் பக்கம் திரும்பி, “என்னப்பா பார்த்திபா?” என்று கேட்டார் துரைராஜ்.
“உங்க மருமகளுக்கு உங்க லவ் ஸ்டோரிய சொல்லுவீங்களாம்ப்பா. என்ன என்னன்னு என்னைக் கேட்கிறா, என்னைய விட நீங்க இன்ட்ரெஸ்டிங்கா சொல்லுவீங்கன்னு சொன்னேன். சொல்லுங்கப்பா” என்றான். துரைராஜ் புன்னகையுடன், “அதுவாம்மா” என்று மருமகளைப் பார்த்து ஆரம்பிக்க, “இப்போ அந்தக் கதைதான் ரொம்ப முக்கியம்.” என்று கோபமாக இடை புகுந்தார் சத்யபாமா.
“ரேணு வீட்ல ஏதோ பிரச்னை போல. அதை என்னன்னு கேளுங்கன்னு சொன்னா, அதைச் செய்யாம காலம் போன காலத்துல கதை சொல்ல கிளம்பிட்டார்” என்று பொறுமினார்.
“சத்யா..”
“இந்த அதட்டுற வேலையெல்லாம் உங்க புள்ளை கிட்ட செய்ய வேண்டியதுதானே? அவன்தான் அவுத்து விட்ட கன்னுக்குட்டியா துள்ளிட்டுத் திரியறான்”
“ம்மா” என்று பார்த்திபன் அழைக்க, துரைராஜும் மனைவியைக் கேள்வியாகப் பார்த்திருந்தார்.
“ரேணு வீட்டுக்கு விருந்துக்குப் போயிட்டு வாங்கன்னு சொன்னா, அடுத்த வாரம் போறேங்கறான் உங்க புள்ளை” என்று புகார் படித்தார்.
“இந்த வாரம் வீட்ல விசேஷத்தை வச்சுட்டு எப்படி அங்க போவாங்க சத்யா?” என்று அவர் கடிந்து கொள்ள, “தாலி பெருக்கி போடுறது என்ன பெரிய ரெண்டு நாள் விசேஷமா? தங்கச்சி வீட்டுக்கு போகாம இருக்க இவனுக்கு ஒரு சாக்கு” என்றார் கோபமாக.
“என்னம்மா வேணும் உனக்கு? நானும் பார்த்துட்டே இருக்கேன். உன் பேச்சே சரியில்ல. திடீர்னு மாமியார் வேசம் போடாதம்மா உனக்குக் கொஞ்சம் கூடச் செட் ஆகல” என்று கோபமாக அம்மாவிடம் நேரடியாகச் சொல்லியிருந்தான் பார்த்திபன். அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஆனது.
எங்கள் மகளுக்கு நாங்களே செய்து கொள்கிறோம், நீ அண்ணனாக ஒன்றும் செய்ய வேண்டாம் என்று கோபத்தில் அவனைக் கடுமையாக எச்சரித்தார் அவர்.
துரைராஜ் இருவருக்கும் இடையில் வர, ரேணுகாவின் புகுந்த வீடு புதிய வீடு வாங்க திட்டமிடுகிறார்கள். அதற்குப் பணம் தேவைப்படும் போல, அவளின் மாமியாரை பற்றி உங்களுக்குத் தெரியாதா? என்று கணவரிடம் பாய்ந்தார் அவர்.
“அவனை விடு. நான் பார்த்துக்கறேன்” என்று அவர் சமாதானம் செய்ய, “என்ன பார்ப்பீங்க? இன்னும் என்ன இருக்கு நம்ம கிட்ட? உங்க போஸ்ட் ஆபீஸ் சேவிங், பசங்க பேர்ல இருந்ததுன்னு எல்லாத்தையும் ஏற்கெனவே துடைச்சு எடுத்து அவளுக்குச் செஞ்சாச்சு” என்றார்.
“நான் ரேணு மாப்ளகிட்ட பேசறேன்ம்மா” என்று பார்த்திபன் சொல்லவும், அவரின் கோபம் கூடியது.
“என்ன சொல்லுவ பார்த்திபா? நீ அமெரிக்கா போய்ட்டு திரும்பி வந்து தங்கச்சி வாழ்க்கையைச் செட்டில் பண்ணி விடுவன்னு நம்பிக்கையா நாங்க இருந்தோம். அதுனாலதான் அண்ணே பணம் கொடுப்பான்னு அவகிட்டே சொல்லியிருந்தேன் நான். நீ என்னன்னா.. லவ் பண்றேன்னு இவ பேச்சை கேட்டுட்டு இங்க வந்துட்ட..” என்று மருமகளைத் திரும்பி உக்கிரமாகப் பார்த்தார்.
அதுவரை அமைதியாக இருந்த பார்கவி, “இவரை நான் ஊருக்கு வரச் சொல்லல அத்த” என்றாள்.
“அப்புறம் அவனா வந்தானாக்கும்? நீயும், உங்கம்மாவும் சேர்ந்து பிளான் போட்டு வர வச்சீங்கதானே? இவன் வந்ததும் வராததுமா உன்னைத் தேடிதானே உங்க மண்டபத்துக்கு வந்தான்? அப்படியே உங்க வீட்டுக்கு வரலன்னு சொல்லு பார்ப்போம்..”
“எதை எப்போம்மா பேசுற நீ?” பார்த்திபன் கோபமாகக் கேட்க, “இவர் திரும்பி வந்ததுல எனக்கு ரொம்ப ரொம்பச் சந்தோஷம் அத்த. ஆனா இவர் ஊருக்கு வந்தது நான் சொல்லி இல்ல” என்றாள் பார்கவி, அவரை நேராகப் பார்த்து.
“எவ்ளோ திமிரா பேசுறா பாருடா பார்த்திபா” என்று அவர் புகார் படிக்க, பார்த்திபன் மனைவியின் பேச்சில் விளைந்த புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.
“சத்யா” துரைராஜின் அழைப்பு அவரை அமைதியாக்கியது.
பார்த்திபன் திட்டமிட்டுச் சென்றது போல அமெரிக்காவில் இரண்டு வருடங்கள் இருந்திருந்தால், அவர்களது வீட்டு கடன் அடைந்திருக்கும். அவனால் தங்கைக்கு உதவ முடிந்திருக்கும். அவர்கள் வீட்டின் நிதி நிலைமை சற்றே உயர்ந்திருக்கும் என்று அதைச் சொல்லி சொல்லி அவர் புலம்ப, “இப்போ என்னம்மா உனக்கு? நான் அமெரிக்கா போகணும். அவ்ளோதானே? என் பொண்டாட்டியை கூட்டிட்டு நான் அடுத்த மாசமே அமெரிக்கா போய்டுறேன். போதுமா?” என்று கடுமையான குரலில் கேட்டிருந்தான்.
“நீ என்ன பாரு சொல்ற? உனக்கு ஓகே தானே?” என்ற கேள்வியுடன் மனைவியின் பக்கம் திரும்பினான்.
நொடியும் யோசிக்காமல், “போகலாம்ங்க. நான் ஆஃபீஸ்ல ஆன் சைட் கேட்கறேன்” என்றாள் அவள்.
“நான் என்ன சொன்னா, இவன் என்ன பேசுறான்னு பாருங்க”
“நீ இப்போ சொன்னதைதான் அவன் செய்யப் போறேன்னு சொல்றேன். எழுந்து வா. எல்லார் தூக்கத்தையும் கெடுக்காத” என்று மனைவியைக் கடிந்து, அவரைக் கையோடு அங்கிருந்து எழுப்பி அழைத்துச் சென்றார் துரைராஜ்.
அடுத்த மாதமே அமெரிக்கா செல்ல அவர்கள் திட்டமிட்டனர்.
நாம் நினைப்பது எல்லாம் நிறைவேறி விடுமா என்ன?
காலம் கனியும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் பார்த்திபா!