“என்ன ஆச்சு பாப்பா?” வண்டியை செலுத்திக் கொண்டே, லேசாகத் தலையைத் திருப்பி அவள் முகம் பார்த்து கேட்டான்.
“ஐ அம் சோ கன்பியூஸ்ட் ராகவ். உதய் கிட்ட வேணாம்னு சொல்ல தோணுது”
“ஏன்?”
“தெரியல. எனக்குச் சாதாரண, நிம்மதியான ஒரு இயல்பு வாழ்க்கை வேணும். அது உதய் வீட்ல கிடைக்காதுன்னு தோணுது. கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி. இதுல அந்த வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் என்ன நடக்குமோ யாருக்கு தெரியும்.” என்றாள்.
இரவு இருந்த தெளிவு இப்போது காணாமல் போய் இருந்தது. மனம் மீண்டும் முரண்டியது அவளுக்கு.
“நான் முன்னாடியே சொன்னது தான் பாப்பா. நடந்தது, நடக்கறது எதுவுமே உதய்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். ஹி இஸ் நாட் இன்வால்வ்டு இன் திஸ். எனக்கு அது மட்டும் நிச்சயமா சொல்ல… “
“கம் ஆன் ராகவ். எல்லோரும் ஒரே வீட்ல தானே இருக்காங்க? பேசிக்கக் கூட மாட்டாங்களா? அவருக்கு எப்படித் தெரியாம இருக்கும்? அவர் சம்மதம் இல்லாம எப்படிக் கண்டிஷன் போடுவாங்க. சும்மா உளறாத” அதட்டினாள்.
“ஏன் நம்ம வீட்ல உனக்குத் தெரியாம நடக்கலையா? அது போல அவருக்கும் தெரியாம நடந்து இருக்கலாம் இல்ல?”
அவள் இறுக்கமாகவே அமர்ந்திருக்க,
“சோ, ஃபைனலா என்ன பண்ண போற நீ?”
“ஒரு வருஷம் போகட்டும், அப்புறமா கல்யாணத்தை வச்சு…” அவள் சொல்லி முடிக்கும் முன்பே அந்தக் கேள்வியைக் கேட்டான் ராகவன்.
“ஒரு வருசம் கழிச்சு உதயை கல்யாணம் பண்ணிக்கப் போறியா?”
ஒருகணம் அதிர்ந்து விழித்தாள் ராகவி.
“இல்ல, உதய்…” அவள் வார்த்தைகளை முடிக்கக் கூட இல்லை.
“தென் ஸ்டாப் லவ்விங் ஹிம்” அடித்தொண்டையில் இருந்து கத்தினான். கார் முழுவதும் அவனது குரலே எதிரொலித்தது.
பதறி இருக்கையை அழுந்த பற்றிக் கண்களை மூடினாள் ராகவி.
நடுரோட்டில் போக்குவரத்து நெரிசலை பொருட்படுத்தாமல் சக்கரங்கள் தேய, பிரேக்கை அழுத்தி காரை நிறுத்தி இருந்தான் ராகவன். காரின் குலுக்கலில் உடலும், மனமும் அதிர அவனைத் திரும்பிப் பார்த்தாள் ராகவி. சீட் பெல்ட் அணிந்திருந்ததால் தப்பித்தாள். இல்லையேல் தூக்கி எறியப்பட்டிருப்பாள்.
“சாரி..” என்று முணுமுணுத்து விட்டு, காரை மெதுவாக நகர்த்தினான்.
“இந்த உலகத்தில் நீ யார்கிட்ட வேணாலும் உன் மனசை மறைக்கலாம். ஆனா, என்கிட்ட அது முடியாது க்கா. யூ லவ் ஹிம் அண்ட் ஐ நோ தட்.” என்றான் அழுத்தமாக.
உடலில் பதட்டம் சிறிதும் குறையாமல் இருக்க, படப்படத்த மனதுடன் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் ராகவி.
“ஆயா கிட்ட பேசு” என்றான். மறுக்காமல் போனை கையில் எடுத்து விசாலாட்சியை அழைத்தாள். நிதானமாகப் பேசி விட்டு வைத்தாள்.
“உதயோட அம்மா, அவருக்கு நாலு வயசு இருக்கும் போது இறந்துட்டாங்க” என்றான் கரகரத்த குரலில்,
“என்ன?” இம்முறை அவன் பிரேக்கை அழுத்தவில்லை. ஆனாலும், அவளது உடல் தூக்கிப் போட்டது. கேட்ட செய்தியின் தாக்கம் அப்படி.
“என்ன சொல்ற ராகவ்? அன்னைக்கு வந்தவங்க? அவங்க உதய், அம்மா தானே சொன்னாங்க?”
“சித்தி” என்றான், ஒரே வார்த்தையில்.
“அவங்க அப்பாவோட இரண்டாவது மனைவி. அவங்களுக்கு ஒரு பொண்ணு. அதான் உதய் தங்கை, அன்னைக்கு வந்தாளே..”
“ம்ம்”
“அந்த இன்னொரு பொண்ணு, அத்தை பொண்ணு.” விளக்கினான்.
“பிறந்ததில் இருந்து பெண்களோடு தான் இருக்கேன். ஆனா, எனக்கான பெண், மனதுக்கு நெருக்கமான பெண்ணா யாருமே இருந்ததில்லை.” உதயின் வார்த்தைகள் காதில் எதிரொலிக்க, அதற்கான அர்த்தம் இப்போது தான் விளங்கியது அவளுக்கு. ஏனோ மனம் தானாகக் கலங்கியது.
அதுவரை மனதில் இருந்த அத்தனை தடைகளையும் தகர்த்து தள்ளியது அந்தத் தகவல்.
மனம் அதுவாகவே ஒரு முடிவிற்கு வந்திருந்தது.
அடுத்தச் சில நிமிடங்களில் கிண்டியை அடைந்து உதயின் முன் இருந்தார்கள். அவளைப் பார்த்ததும் வியப்பில் விரிந்தது அவன் விழிகள்.
அவனது சோர்ந்து, ஓய்ந்த தோற்றத்தை பார்த்ததும் அவளது இதயம் ஒரு நொடி நின்று, பின் துடித்தது.
அவனது காரின் முன்னால் தங்கள் காரை நிறுத்தி விட்டு, இறங்காமல் அதிலேயே அமர்ந்து இருந்தான் ராகவன்.
அவள் மட்டும் இறங்கி உதயின் அருகில் சென்றாள்.
அவர்களைப் பார்த்துப் பெரிதாகப் புன்னகைத்து, “ஹாய், என்ன சர்ப்ரைஸ் எல்லாம் கொடுக்கற?” என்றான் உதய்.
“என்ன இந்தப் பக்கம்?” விசாரித்தான்.
“எப்படி இருக்கீங்க?” என்றாள் ராகவி.
“நல்ல இருக்கேன். ஆமா, டின்னருக்கு தானே போகலாம்னு சொன்னேன். இப்பவே வந்துட்ட?” என்றான் சிரித்துக் கொண்டே. அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க,
அவள் முகம் பார்த்துச் சிரித்துக் கொண்டே, “நீ, என்னைத் தேடி வந்ததில் சந்தோசம். இங்க, எங்க டீம் ஒரு சின்ன வேலையா வெயிட் பண்ணிட்டு இருக்கோம். முடிச்சுட்டு வந்திடுறேன். கொஞ்சம் நேரம் ஆகும். சோ, ராகவை வேணா கிளம்பச் சொல்லு. ஐ வில் ட்ராப் யூ ஹோம்” என்றான்.
“உதய், எனக்கு உங்க கிட்ட பேசணும். இப்பவே, தனியா.” என்றாள் அழுத்தமாக.
ஒரு வினாடி அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். அவள் விழிகளில் தன் விழிகளைப் பதித்து, “நான் இந்நேரம், இங்க இருப்பேன்னு உனக்கு எப்படித் தெரியும்?” என்று ஆராயும் பார்வையுடன் கேட்டான்.
‘ஆ, போலீஸ் கண்டுபிடிச்சுட்டான்.’
தனக்குள் சொல்லிக் கொண்டே அவன் முகம் பார்த்தாள்.
மிகவும் இறுக்கமான முகத்துடன் அவளது பதிலுக்காகக் காத்திருந்தான் உதய்.
“பட்சி சொல்லுச்சு” என்றாள் உதடு சுழித்து, அவன் பட்டென்று திரும்பி பேச்சி முத்தை பார்த்தான். அவர் தலையைக் குனிந்து கொண்டார்.
“பட்சினு தானே சொன்னேன். பேச்சினு சொல்லலையே. அவரை ஏன் முறைக்கறீங்க?” என்றாள் தெளிவுப் படுத்தும் விதமாக. ஆனால், அதை அவள் சொல்லாமலேயே இருந்திருக்கலாம். அவள் அப்படிச் சொன்னது தான், அவனின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது என்று அவள் அறியவில்லை.
ஓரக் கண்ணால் பேச்சி முத்தை முறைத்துக் கொண்டே அவள் புறமாகத் தலையைத் திருப்பினான்.
“காரணம் இல்லாம என்னைத் தேடி வந்திருக்க மாட்ட. என்னனு சொல்லு ராகவி. எதுவும் பிரச்சனையா? என் ஹெல்ப் வேணுமா?” என்று கனிவாகக் கேட்டான். உடல் விரைக்க நின்றான். ஆனால், கண்களில் கலக்கம் நிறைந்திருந்தது.
எப்போதும் போல, தான் அவனைப் பாதிப்பது அவள் மனதில் மழைச் சாரலை தெளிக்க விரிந்த புன்னகையை மென்று விழுங்கினாள் ராகவி.
“சட்டமும், காவல் துறையும் கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு புதுசா ஒரு சட்டம் வந்திருக்காம்” என்றாள்.
“அப்படியா?” என்றான், கைகளைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு, உதட்டில் புன்னகை தவழ,
“ம்ம்.” என்றாள்.
“விளையாட இது நேரமில்லை ராகவி” என்றான் புன்னகை தொலைத்த முகத்துடன்.
“நான் விளையாடலை உதய். ஐ ஆம் சீரியஸ்.”
“ப்ளடி ஹெல்.” இடக் கரத்தால் தலை கோதி கொண்டான். அவள் முகத்துக்கு நேராகக் குனிந்து,
“ஒரு முறை, ஒரே ஒரு முறை கூட நம்ம ரெண்டு பேரும் இயல்பா, சாதாரணமா சந்திச்சுக்கவே மாட்டோமா ராகவி? லைக் ******* நார்மல் பீபுள். நிம்மதியா ஒரு இடத்தில் உட்கார்ந்து சிரிச்சு பேசவே மாட்டோமா?.” கோபத்தோடு திரும்பி காரில் ஓங்கி குத்தினான் அவன்.
சிறிது நேரத்திற்கு முன்பு தான், தானும் இதே போன்றதொரு கேள்வியை விசாலாட்சியிடம் கேட்டது அவளுக்கு மனதில் வந்து திகைப்பூட்டியது.
“ஒவ்வொரு வீட்லயும் போய்க் கேட்டுப் பாரு செல்லம். ஆயிரம் கதை சொல்லுவாங்க. நம்ம ஊர்ல இந்தக் கல்யாணம் மட்டும் இப்படித் தான் ஆச்சி. ஆயிரத்தெட்டுக் குளறுபடிகளுக்கு நடுவுல தான் நடக்கும்.” என்ற ஆயாவின் பதிலும் காதில் எதிரொலித்தது.
“உதய்..” மெல்ல அழைத்தாள்.
“ஐ ஆம் சாரி” என்றாள். அவளது குரல் உடைந்து விடுவேன் என்றது. அதற்கு மேல் பேச முடியாமல் வாயை மூடிக் கொண்டாள் ராகவி.
ஒரு கேஸ் விஷயமாகத் தான் அங்கே நின்று கொண்டிருந்தான் உதய். கிண்டியில் இருந்த ஐடி நிறுவனத்தின் முன் ஒரு முக்கிய நபருக்காகக் காத்திருந்தது அவனது டீம்.
அங்கே அந்நேரம் ராகவியை அவன் எதிர்பார்த்திருக்க வில்லை. பார்க்கிங்கில் வைத்து அவளை எப்படிச் சமாதானப் படுத்துவது, என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தான் அவன்.
அவளது ஈர விழிகளும், இதோ இப்போது உடைந்து விடுவேன் என்று இருந்த குரலும் அவனைக் கலவரப்படுத்தியது.
அவளை மேலும் நெருங்கி வந்து, அவளது கைப் பற்றினான்.
“சீரியஸா பேசுறியா ராகவி? இல்ல கிண்டல் பண்றியா? எதுக்குச் சாரி சொல்ற? ஏதோ புதுச் சட்டம் சொல்ற. என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? யாராவது தொல்லைக் கொடுக்கறாங்களா? வீட்ல திரும்பவும் ஏதும் சொன்னாங்களா? என்னனு சொல்லு. நான் பார்த்துக்கறேன்.”
என்றான்.
விளையாட்டாகத் தான் பேசுகிறாளோ என்று சிறிய நப்பாசை தான் அவனுக்கு. அதே நேரம் அவளுக்கு ஏதும் பிரச்சனையோ என்று கவலையும் கொண்டான்.
“ஆமா. தொல்லை தான். கொடுக்கறது… நீங்க தான். வீட்ல கல்யாணத்தை நிறுத்தற ஐடியால இருக்காங்க. இல்ல இருக்கோம். அதான், உங்க கிட்ட நேர்ல சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். வரட்டா?” வலக் கரம் உயர்த்தி, டாட்டா காட்டி விட்டுக் காரில் ஏறினாள் ராகவி.
அதிர்ந்து இரண்டு எட்டுக்கள் பின்னால் வைத்து, தடுமாறி காரின் மேல் சாய்ந்து நின்றான் உதய்.
அவன் கண்கள் அவள் மேலேயே நிலைத்திருந்தது.
அவனை அப்படிப் பார்க்கையில் கலக்கமாக இருந்தது. சட்டென்று கண்களைத் திருப்பிக் கொண்டாள் ராகவி.
அவள் காரில் ஏறி அமர்ந்ததும் காரை நகர்த்தாமல் கோபப்பட ஆரம்பித்தான் ராகவன்.
“கடைக்குப் போய் மத்ததைப் பேசிக்கலாம் ராகவ்” என்றாள்.
அவன் காரை நகர்த்துவதற்குள் தன் நிதான நடையுடன் அவர்களது காரை நெருங்கி இருந்த உதய், ராகவியின் பக்க கதவை திறந்து, அவளை உரசிக் கொண்டே அவள் முன் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, அவளைப் பார்த்துக் கொண்டே மூடியை திறந்து தண்ணீரை எவ்வித அவசரமும் இன்றி அருந்தினான்.
மீண்டும் பாட்டிலை வைக்கும் சாக்கில் அவளை நெருங்கி நின்று,
“ஹாய் பட்டே, நம்ம கடையில இருக்கறதிலயே பெஸ்டான, அழகான பட்டுச் சேலையா தேடி எடுத்து, அழகா கட்டி ரெடியாகி நில்லு. இந்த முக்கால் பேண்ட், டாப் எல்லாம் வேண்டாம். மைசூர் பட்டு கட்டு சரியா இருக்கும். உன்னைப் போலவே மென்மையா இருக்கும். நான் ஷார்ப்பா ஏழு மணிக்கு வந்து பிக் அப் பண்ணிக்கறேன். ரெண்டு பேரும் ஒன்னா டின்னர் சாப்பிடலாம். முன்னமே பிளான் பண்ண மாதிரி. ஓகே?” அவனது உரிமையான பார்வையிலும், அந்த ஹஸ்கியான குரலிலும் அவளுக்கு உடல் சிலிர்த்தது.
அவளின் நெற்றியில் தொடங்கி, உதட்டை தொட்டு, மீண்டும் மேல் நோக்கி வந்து கண்களில் நிலைத்தது அவனது பார்வை. தன்னை முழுவதுமாகக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனை வெற்றுப் பார்வை பார்த்தாள் ராகவி.
“ராகவ், காரை எடு” அடிக்குரலில் சீறினாள். சிரித்தான் உதய்.
எதற்காகச் சிரிக்கிறான் என்று அவள் திரும்பி பார்க்க, டிரைவர் சீட்டில் ராகவனைக் காணவில்லை. காருக்கு வெளியில் நின்று கொண்டிருந்தான் அவன்.
பலத்த யோசனையுடன் சாலைப் போக்குவரத்தை கவனித்துக் கொண்டிருந்தான்.
“ஹி லவ்ஸ் மீ. உன்னைப் போலவே” என்றான் உதய், குறும்பாகக் கண் சிமிட்டி. வலக் கரத்தின் சுட்டு விரலால் அவள் முகத்தில் இருந்த முடிக் கற்றையை அவள் கன்னத்தில் இருந்து விலக்கி விட்டான்.
“ஏழு மணி, ரெடியா இரு என் மைசூர் பட்டே. அதுக்குள்ள புதுச் சட்டத்தைப் பத்தி தெரிஞ்சிட்டு வரேன்.” கண்சிமிட்டி சொன்னான். சொல்லி விட்டு அவன் பின்னால் நகர, சொல்லி வைத்தது போல, காரில் ஏறி அமர்ந்து காரை இயக்கினான் ராகவன்.
‘உதய் தான் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டானா? இல்லை எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்ற குருட்டு நம்பிக்கையில் தான் இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறானா?’ எனும் குழப்பத்துடன் திரும்பி அவனைப் பார்த்தாள்.
அவளது பார்வையைக் கவனித்து விட்டு, அவளைப் போலவே சல்யூட் வைத்தான் அவன். சட்டென்று தலையைக் காருக்குள் இழுத்துக் கொண்டாள் ராகவி.
அத்தனை நாட்கள் இருந்த அழுத்தங்கள் எல்லாம் நீங்கி, மனம் இறகை போல லேசானதை அவளால் உணர முடிந்தது
ஏனோ, ராகவியின் மனதில் இருந்த அத்தனை வேண்டாத எண்ணங்களும் இப்போது காணாமல் போய் இருந்தது. தலையைச் சுற்றி வளைத்து மூக்கை தொடுவதற்குப் பதில் பிரச்சினையை நேரடியாகச் சந்திக்க வேண்டியே அவனிடம் அப்படிப் பேசி விட்டு வந்தாள். இனி உதய் சரி செய்து விடுவான் என்ற நம்ம்பிக்கை அவளுக்கு வந்திருந்தது.
அவனும் சொன்ன சொல் தவறாமல், சொன்ன நேரத்திற்கு முன்னே அவள் முன் வந்து நின்றான்.