பார்த்திபன் காதலி – 35 (3)

பிரியதர்ஷினி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்க, குழந்தைக்கும் அவளுக்கும் பரிசுகள் வாங்கிக் கொண்டு, அவளைப் போய்ப் பார்த்தார்கள்.

“டேய் குட்டி பிரபா. நான் யார் தெரியுதா?” மனைவியின் மடியில் இருந்த குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தான் பார்த்திபன்.

அவன் கன்னத்தை ஒற்றை விரல் கொண்டு மென்மையாக வருடினான்.

“உன்னை விடச் சாப்ட்டா இருக்கான் பாரு” என்று அவன் சத்தமாகச் சொல்லி விட, “ப்ச் பார்த்தி” என்று அவன் இடையில் இடித்தாள்.

“ஆ.. உண்மையைதானே சொன்னேன். அதுக்கேன் அடிக்கிற?” என்று அவளைப் போலியாக முறைத்தான். அவள் கைப் பிடித்துக் குழந்தையைத் தானும் தாங்கி அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். அவன் மீசை உரசியதில், குழந்தை சிணுங்கி அழத் தொடங்க, “என்ன பாரு, இதுவும் உன்னை மாதிரியே பண்றான்” என்று ஆச்சரியத்துடன் சொல்லி அவளிடம் அடி வாங்கினான்.

“டேய் பிரபா மகனே, நல்லா செய்யறடா” என்று சிணுங்கும் குழந்தையிடம் அவன் கோபிக்க, “பார்த்தி” என்று அவனை முறைத்தாள்.

“விடு. இப்போ பாரு மீசை படாம எப்படிக் கிஸ் பண்றேன்னு பாரு” என்று குனிந்து அவன் மென்மையாக முத்தமிட, மீண்டும் சிணுங்கி உதடு பிதுக்கினான் குழந்தை.

“நம்ம பார்த்தி மாமா தங்கம். கிஸ் பண்றாங்க செல்லக் குட்டிய. உங்களுக்கு வலிச்சா மாமாவ அடிச்சுடலாமா?” என்று அவள் குழந்தையைச் சமாதானம் செய்ய, பிரபஞ்சன் அவர்கள் பக்கத்தில் வந்து நின்றான்.

“மாமா மேலலாம் யாரும் கைய வைக்க முடியாது. என்னடா சிங்கக் குட்டி?” என்று பிரபஞ்சன் மகனை இப்போதே தன் கூட்டணியில் சேர்ந்திருந்தான் அவன்.

குழந்தை தொடர்ந்து சிணுங்க, பார்த்திபன் மிகக் கவனமாக மனைவியின் கையில் இருந்து அவனை வாங்கினான்.

அவன் கைச் சூட்டில் சட்டென்று அமைதியாகி விட்டான் குழந்தை.

சற்று நேரத்தில் உறங்கியும் விட்டிருந்தான்.

“அவனைக் குடுங்க, தொட்டில்ல போடலாம்” என்று பார்கவி கேட்க, “தூங்கறான் இல்ல? எதுக்கு டிஸ்டர்ப் பண்ற?” என்று மனைவியிடம் எகிறினான்.

“குடுங்க அண்ணா” என்று பிரியதர்ஷினி வர, “இருக்கட்டும்மா” என்று அவளிடமும் கொடுக்க மறுத்திருந்தான்.

“கைக் குழந்தைங்க, இப்படிக் கையிலேயே வச்சுட்டு இருக்கக் கூடாது, குடுங்கன்னு சொல்றேன்” என்று வலுக்கட்டாயமாக அவனை வாங்கித் தொட்டிலில் கிடத்தினாள் பார்கவி.

“நாங்க வேணாமாம். எங்ககிட்ட பேச மாட்டாராம். ஆனா என் பிள்ளையை மட்டும் கொஞ்சுவாராம். என்னங்கடா உங்க நியாயம்?” என்று நண்பனை முறைத்தான் பிரபஞ்சன்.

“ஆட்டை வித்திட்டு குட்டியை கொஞ்சுறது இல்லையா? அப்படித்தான் மிஸ்டர் பி” என்று பார்த்திபன் கிண்டலாகச் சொல்ல, “சொந்தமா புள்ளை பெத்து கொஞ்சுங்கடா” என்று கேலியாகப் போலி கடுப்புடன் சொன்னான் பிரபஞ்சன்.

“மிஸ்டர் பி, இந்த நாளை உன் மொபைலில் குறிச்சி வச்சுக்கோ..” என்று பார்த்திபன் ஆரம்பிக்க, “ஒன்னும் வேணாம். வாங்க” என்று அவனைப் பிடித்து இழுத்தாள் பார்கவி.

“ஹேய் விடு பாரு. சீக்கிரமே நம்ம பிள்ளையை இவன் கையில் கொடுத்து இவனை நான் வெறுப்பேத்தல என் பேர் பார்த்திபன் இல்ல” என்று சவால் விட்டான்.

“அய்யோ. எதுக்கு எதுக்குச் சவால் விடணும்னு விவஸ்தை இல்லாம போச்சு உங்களுக்கு” என்று அவனைப் பிடித்து இழுத்தாள் அவள்.

பிரபஞ்சனுக்குக் கண்ணால் சவால் விட்டே மனைவியின் பக்கம் திரும்பினான் அவன்.

அதே தெருவில் இருந்த அவர்களின் வீட்டை நோக்கி நடக்கும் போதே, “உங்களுக்கு வேலை எதுவும் இருக்கா மாப்ள?” என்று அவனிடம் கேட்டார் ரங்கராஜன்.

“இல்லங்க மாமா. சொல்லுங்க” என்றான்.

ரங்கராஜனிடம் பணிபுரியும் அனைவருக்கும் மகளின் திருமணத்தை முன்னிட்டு ஒரு மாத ஊதியத்தைக் கூடுதலாகக் கொடுத்திருந்தார்.

ஆனால் அனைவருக்கும் உடைகள் எடுத்து கொடுக்க வேண்டும் என்பது காவேரியின் விருப்பம்.

பணியாளர்களுக்கு மகளின் கையால் உடைகள் எடுத்து கொடுக்க ஆசைப்பட்டு அவர்களையும் அழைத்துக் கொண்டு கடைக்குச் செல்லலாம் என்று திட்டமிருந்தார். கூடுதலாக மகளுக்கும், மருமகனுக்கும் மறுவீடு முடிந்து செல்லும் போது கொடுக்க வேண்டிய உடைகளையும் அவர்களுக்குப் பிடித்த விதமாக எடுத்து விடலாமே என்ற எண்ணம்தான்.

“ஓகே, நான் ப்ரீ தான் போகலாம் மாமா” என்று பார்த்திபன் சொல்ல, அங்கிருந்து அப்படியே ஜவுளி கடைக்குச் சென்றிருந்தார்கள்.

கிட்டத்தட்ட அரை நாளுக்கு மேலாக அங்கேயே கழிந்திருந்தது. எல்லாம் முடிந்து வீடு திரும்புகையில், “நீங்க வீட்டுக்கு போங்க மாமா, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு வந்துடுறேன்” என்று சொல்லி சென்றிருந்தான் பார்த்திபன்.

பார்கவி எங்கே என்று வினவ, “வந்துடுவேன் பாரு” என்று விட்டான். அதற்கு மேல் அழுத்தி கேட்கவில்லை அவள்.

இரவு வீடு திரும்பியவனிடம் கேட்க, “அம்மா கால் பண்ணாங்க. அதான் போய் அவங்களைப் பார்த்துட்டு வர்றேன்” என்று சாதாரணமாகச் சொன்னான்.

“என்னையும் கூட்டிட்டு போய் இருக்கலாம் இல்ல பார்த்தி?” என்று கோபமாகக் கேட்டாள் அவள்.

“எதுக்குப் பாரு? நாளைக்கு எப்படியும் நம்ம வீட்டுக்குப் போகப் போறோம்தானே?” என்றவனைப் பல்லைக் கடித்து முறைத்தாள் பார்கவி.

error: Content is protected !!
Scroll to Top