“அப்போ, தங்கச்சி பொண்ணுதான் முக்கியமா? தன் புள்ளை ஆசைப்பட்ட பொண்ணை அவனுக்குக் கட்டி வைக்க மாட்டாராமா?” கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார் விசாலாட்சி.
“ஆனாலும், ஒரு விஷயத்தில் அந்தக் குடும்பத்தைப் பாராட்டியே ஆகணும். பையன் சொல்லிட்டான்னு ஒத்த வார்த்தையைப் பிடிச்சுட்டு, நம்மகிட்ட வந்து நிக்காம, முதல் வேலையா நம்ம ராகவியைப் பத்தி விசாரிச்சு இருக்காங்க பாரு. தெளிவான ஆளுங்க தான்” விருப்பமே இல்லாமல் பாராட்டினார்.
“முதல் நாள் பேசும் போது.. அன்னைக்கு நடந்ததை அவர் தான் மா என்கிட்ட விளக்கமா சொன்னார். ஆனா, இன்னைக்குப் பேசும் போது.. என்னமோ நம்ம ராகவியும், மாப்பிள்ளையும் விரும்பற மாதிரியும், அதில் அவருக்கு விருப்பம் இல்லன்ற மாதிரியும் பேசுறார் மா. இப்பவே இப்படிப் பேசுறாங்க. இவங்களை நம்பி எப்படி ராகவியை அந்த வீட்டுக்கு அனுப்ப….” பேசிக் கொண்டிருந்த சிதம்பரத்தை சட்டென்று இடை வெட்டினார் விசாலாட்சி.
“ம்ஹூம், வேணாம். பொறுமையா யோசிப்போம். எனக்கு என்னமோ இடருது. மனசுக்கு சரின்னு படல. ரொம்பக் குழப்பமா இருக்கு. என்ன தான் நம்ம செல்லத்தோட ஆசைக்காகப் பார்க்கணும்னு நாம இன்னைக்கு ஒரு முடிவெடுத்தாலும், நாளைக்கு அது நல்லபடியா நடக்கலைன்னா, உட்கார்ந்து அழுதுட்டு இருக்க முடியாது பாரு. புள்ளைங்க வாழ்க்கையே இதுல தான் இருக்கு. நாம ராகவி கிட்டயே பேசுவோம். தேவைப்பட்டா மாப்பிள்ளையை வரச் சொல்லுவோம். ஆனா, எக்காரணம் கொண்டும் ராகவன் பேர் அந்தக் குடும்பத்து ஆளுங்க வாயில இருந்து இனி வரவே கூடாது.” தீர்க்கமாகச் சொன்னார் விசாலாட்சி.
ஆண்கள் இருவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கியபடி அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பேச்சை இருளில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த ராகவிக்கு அடுத்து என்ன செய்வதென்றே புரியவில்லை.
விசாலாட்சியின் கேள்வி தான் அவள் மனதிலும் ஓடியது.
உதயின் தந்தை சோமசுந்தரத்திற்கு மகனின் ஆசையை விட, தங்கை மகளின் ஆசை ஏன் பெரிதாகி போனது? பெற்றோர் இல்லாததால் அவளுக்கு அத்தனை முக்கியத்துவமா? கேள்விகள் மனதை குடைந்தது.
தன் குடும்பத்தினரும் இன்னும் தெளிவான ஒரு முடிவுக்கு வராமல் இழுத்தடிப்பது எரிச்சலை மூட்டியது. தானும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று தன் மேலேயே கோபமாக வந்தது.
அப்படி என்ன பார்த்த உடன் ஒருவன் மீது எல்லையில்லா ஈர்ப்பு வந்து தொலைத்தது.
அவனை மறக்க முடியாத அளவு, அவனைக் கடந்து வேறெதையும் சிந்திக்க முடியாத அளவு, மனதும், மூளையும் நிதானம் இழந்து போகும் அளவு.. அவளுக்குத் தலையை அப்படியே சுவரில் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.
ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி இருந்தவளை கலைத்தது, கதவு தட்டப்படும் சத்தம். கீழே பேச்சுச் சத்தம் குறைந்திருக்க விசாலாட்சி தான் வருகிறாரோ என்று லேசாக எட்டிப் பார்த்தாள் ராகவி.
கைகள் அனிச்சை செயலாகக் கண்களைத் துடைத்தது.
கதவு திறந்து ராகவன் வந்து கொண்டிருந்தான். அவன் கைகளில் அவளுக்குப் பிடித்த, ஐந்தே நிமிடத்தில் செய்து விடக் கூடிய சாக்லேட் மக் கேக் மற்றும் தண்ணீர் பாட்டில். அதைப் பார்த்ததும் அவளையும் அறியாமல் புன்னகையில் மலர்ந்தது இதழ்கள்.
இளஞ்சூட்டில் இருந்த கப்பை அவளிடம் நீட்டினான். தானும் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு அவளருகில் அமர்ந்தான்.
தன் மனம் அமைதியின்றித் தவித்ததை, கோபத்தில் கனன்றதை உணர்ந்து கொண்டு தான் வந்திருக்கிறான் என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது.
அவன் அருகில் வந்து அமர்ந்ததும் வந்த மனநிம்மதியை அவளால் வார்த்தைகளில் வடித்திடவே முடியாது. எதையும் கத்தி, விளக்கி, அழுது கரைந்து என்று எதுவும் செய்யத் தேவையில்லை அவனிடம், எங்கிருந்தாலும் உணர்வுகளாலேயே அவனால் அவளைப் புரிந்து கொள்ள முடியும் என்பது தான் எத்தனை பெரிய வரம்.
ஒரே வீட்டில் பிறந்து, ஒன்றாக வளர்ந்தது தான் காரணம் என்று எல்லாம் சொல்லிட முடியாது. அவர்கள் கருவிலேயே ஒன்றாக வளர்ந்தவர்கள். அப்போதில் இருந்தே இந்த ஓட்டுதல் அவர்களுக்குச் சாத்தியப்பட்டதோ என்னவோ அவளுக்குத் தெரியவில்லை. அப்படியாகத் தான் இருக்க வேண்டும் என்று எப்போதுமே மனதில் சொல்லிக் கொள்வாள்.
சிறு வயதில் தாயிடம் இது குறித்துப் பேசியது நினைவிலாடியது.
“அம்மா இந்த ராகவ், நான் நினைக்கிறதை எல்லாம் சரியா சொல்றான் மா. எப்படி?” என்ற ராகவியை இழுத்து தன் அருகில் அமர்த்தியவர், “ராகவ் என்ன பண்ணான் சொல்லு என் ரோஜா குட்டி?” என்றார் கனிவாக,
“நான் கோபமா இருந்தா, ஏன் கோபமா இருக்கக் கேட்கறான், யார் என்ன பண்ணாங்கன்னு விசாரிக்கறான். நான் சோகமாக இருந்தா, யாருக்கு என்ன ஆச்சு? ஏன் அழற மாதிரி இருக்கறன்னு கேட்கறான். அப்புறம்…” மெல்ல அவளின் தலைக் கோதி பேச்சை நிறுத்தினார் தெய்வநாயகி.
“சரி செல்லம். உனக்கும் அது மாதிரி எப்பவாவது தோனி இருக்கா? திடீர்னு ராகவை பார்க்கணும் போல, அவனுக்கு ஏதோ பிரச்சனை போல, அவனுக்குத் துணையா போய் நிக்கணும் போல…”
“ஆமா ம்மா..” வியப்புடன், வேகமாகப் பதில் சொன்னாள் ராகவி.
“நீங்க ரெண்டு பேரும் டுவின்ஸ் இல்லையா? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல யுனீக் பாண்ட் இருக்கும் டா. உங்களுக்குள்ள இது சாத்தியம் டா.” மகளின் கன்னம் வருடி சொன்னார். மேலும் பல கேள்விகள் கேட்டு, பதில்கள் பெற்று தெளிவான பின்னே அம்மாவை விட்டாள் ராகவி.
இன்று அதை யோசிக்கும் போது சிரிப்பாக வந்தது.
முன்பு போலக் கேள்விகளால் அவளை நிரப்பாமல் அமைதியாய் அமர்ந்திருக்கும் ராகவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“சாப்பிட்டு முடி” என்று கண் காட்டினான். கேக்கை ரசித்து உண்டு முடித்தாள் அவள்.
“சுஹா கூட ரொம்பச் சேராத ராகவ்.” என்றாள். சிரித்தான் அவன்.
“அவளோட புட் தெரபி எனக்கு வொர்க் அவுட் ஆகுது. அதுனால நானும் ஃபாலோ பண்றேன்” என்றான் தோள் குலுக்கி,
“நடக்கற எதுக்கும் உதய் பொறுப்பில்லன்னு தோணுது எனக்கு” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
“எப்படிச் சொல்ற?” ஆச்சரியமாகக் கேட்டாள் ராகவி.
“ராகவனின் உள்ளுணர்வு, கமல் அப்படித் தானே சொல்வார். என்ன படம் அது?” புருவம் சுருக்கி, நெற்றிப் பொட்டில் தட்டியபடி யோசித்தான்.
“படம் பேரு, வேட்டையாடு விளையாடு. ஆனா, நீ இப்போ விளையாடாத ராகவ்” சலித்துக் கொண்டாள்.
“மறுபடியும் முதல்ல இருந்து தொடங்கணும் போல இருக்கா பாப்பா? இந்த முறை சரியான பேரை கேட்டுட்டு போய், சரியான ஆளைப் பார்த்து, எல்லாம் சரியா நடந்து….”
“இல்ல, இந்த முறையும் பேரை கேட்டு இருக்க மாட்டேன்னு தான் தோணுது. ஆனா, நடந்ததை… உதயை மீட் பண்ணதை நேரா நம்ம வீட்ல வந்து சொல்லி இருப்பேன். அவங்க வீட்ல இருந்து பேசுற வரை பொறுத்திருந்திருக்க மாட்டேன். குறைந்த பட்சம் உன்கிட்டயாவது அவரைப் பத்தி சொல்லி இருப்பேன். நடந்த குளறுபடியை, ஆள் மாறினதை நானே விளக்கி சொல்லி இருப்பேன்.” என்றாள் தெளிவாக,
“இதை, இதை எதிர்பார்த்தேன். நீ இப்படித் தான் சொல்லுவன்னு எனக்குத் தெரியும்” என்றான் புரிதலுடன். மெலிதாகப் புன்னகைத்தாள் அவள்.
“என்ன பண்ணலாம்?” என்றான். அவன் கண்கள் இருளில், தொலைவில் எதையோ தேடியது.