பார்த்திபன் காதலி – 35 (2)

“சிரிக்காத பாரு. ஒரு நிமிஷம் ஜெர்க் ஆகிட்டேன்” என்று ஆசுவாச பெருமூச்சை விட்டவன், அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு அவள் கழுத்தை வருடினான்.

“இவ்ளோ காலையிலேயே வந்து சட்டமா ஜன்னலை தட்டி இரை கேட்குதே. நல்லா பழகி வச்சிருக்கீங்கம்மா பறவைங்கள” என்று அவன் சலிக்க, “ஹே பார்த்தி. இது இரை கேட்டு தட்டல. நம்ம விண்டோ மிரர்ல அது அதைப் பாத்தே மிரண்டு கொத்திட்டு இருக்கு. எந்தப் பேர்ட் வந்தாலும் இப்படிதான் பண்ணுங்க. எனக்கு இது பழகிடுச்சு” என்றாள்.

“ஓ.. சிறப்பு” என்று சிரித்துக் கொண்டே சொன்னவன், மெல்ல தலையை நிமிர்த்திப் பார்க்க, ஜன்னலை கொத்தும் பறவையின் வரிவடிவம் தெரிந்தது.

“நம்ம வீட்ட சுத்தி நிறைய மரங்க இருக்கு இல்ல? அதுக்காக வரும்ங்க. அது தேன்சிட்டு. குட்டியா அழகா இருக்கும்” என்று அவள் ரசித்துச் சொல்ல, அவன் பார்வை அவளை ரசித்தது.

அவன் கரம் மெல்ல அவள் கழுத்தை வருட, “தூங்கு” என்று முணுமுணுத்தான்.

அவனிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தவள் அசதியில் அப்படியே உறங்கியிருந்தாள்.

நன்றாக உறங்கி அவள் கண் விழிக்கும் போது காலை எட்டு நாப்பது என்றது கடிகாரம். அம்மா வீடு என்பதால் நிதானமாக எழுந்து சென்று குளித்து வந்தாள்.

கண்ணாடி முன் நின்று தலையை உலர்த்திக் கொண்டிருந்தவளை பார்த்துக் கொண்டே கண் விழித்தான் பார்த்திபன்.

அவன் அகமும் முகமும் கனிய, அவளை நெருங்கி முத்தமிட்டான்.

“பசிக்கலயா உங்களுக்கு? போய்க் குளிச்சுட்டு வாங்க”

“பசிக்குதுதான்.” என்று இழுத்தவன் பார்வையே வில்லங்கமாக அவள் மேல் பதிய, அவனை இழுத்து குளியல் அறைக்குள் தள்ளி விட்டாள்.

சிரித்துக் கொண்டே சென்று அவன் குளித்து வரவும், “நீங்க ரெடியாகி வாங்க. நான் போய் அம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன்” என்று கீழிறங்கி சென்றாள்.

மகளின் முகத்தைப் பார்த்த காவேரியின் முகமே மகிழ்ச்சியில் மலர்ந்து போனது.

“காஃபி தரவா பாரு? நீ குடிச்சிட்டு மாப்ளைக்கும் எடுத்துட்டு போறியா?” என்று அவர் கேட்க, “இல்லம்மா, அவர் வந்ததும் சேர்ந்து குடிக்கறேன்” என்றாள்.

“சரி இந்தா, இதைப் போய் மாடியில வச்சுட்டு வா” என்று இட்லி, கேசரி இருந்த கிண்ணத்தை அவளிடம் நீட்டினார்.

“அப்பா எங்கம்மா? மண்டபத்துக்குப் போய் இருக்காங்களா?”

“நீங்க இருக்கும் போது எப்படிடா உங்கப்பா மண்டபத்துக்குப் போவாரு? பின்னாடி தோட்டத்துக்குத் தண்ணி விட்டுட்டு இருக்கார். இப்போ வந்துடுவார்” என்றவர், “பாருப்பா” என்று கணவருக்குக் குரல் கொடுத்தார்.

அப்போது வாசல் பக்கம் இருந்து வந்த சரளா, “பாரும்மா, புதுப் பொண்ணே. எப்படி இருக்க? உங்கம்மாக்கு ஒரு வாரமா நீ இல்லாம பொழுதே ஓடல. ஏன் கேக்கற, பாரு என்ன பண்றாளோன்னு புலம்பியே பொழுதை போக்கிட்டாங்க” என்று காவேரியின் முறைப்பை சட்டை செய்யாமல் அவளிடம் சொன்னார்.

“அப்படியாம்மா? நான்தான் அப்பப்போ உங்களுக்குப் போன் பண்ணேனே?”

“இருந்தாலும் கூடவே இருக்க மாதிரி வருமா பாரும்மா. அதுவும் நீங்க ஒத்த பொண்ணு” என்ற சரளா, அவளை நெருங்கி கன்னம் வழித்து, “என் கண்ணே பட்ரும் போல” என்று நெட்டி முறித்தார்.

“அவ சும்மா சொல்லுவா, நீ போய்க் காக்காக்கு இட்லிய வச்சுட்டு வா” என்று அவளை விரட்டினார் காவேரி.

“நீங்க இன்னும் சாப்பிடலையாம்மா? அப்பா கூடவா?”

“உங்களை விட்டுட்டு சாப்பிட மாட்டேன்னுட்டார்.”

“இதோ வந்துடுறேன்ம்மா” என்று வேகமாகப் படியேறினாள்.

அப்போது தயாராகி வெளியே வந்த பார்த்திபனும் அவளோடு சேர்ந்து மாடிக்குச் சென்றான்.

அவள் உணவை வைக்கும் வரைக்கும் ஒரு சத்தமும் இல்லை.

இட்லியை வைத்து விட்டு அவள் திரும்ப, சட்டென்று கா என்ற சத்தம் செவியில் மோத மாமரத்தில் இருந்து வந்து இரையைக் கொத்தியது காகம். அதன் பார்வையைக் கண்டு ஒரே சிரிப்பு பார்த்திபனுக்கு.

“அங்க பாருங்க” என்று மனைவி கை காட்டிய இடத்தைப் பார்த்தான். சிறிய மீன் ஒன்று அங்கே இருந்தது.

“உங்களுக்காகதான் கொண்டு வந்திருக்கு போல” அவள் நமுட்டு சிரிப்புடன் சொல்ல, “அது என் இனம் போலப் பாரு” என்று சிரித்துக் கொண்டே சொல்லி அவளையும் கீழே இழுத்துக் கொண்டு வந்தான்.

பார்கவி ஈரக் கூந்தலை விரித்து விட்டிருந்தாள். அதைக் காதோரம் ஒதுக்கி விட்டு அவளோடு நடந்தான் பார்த்திபன்.

உணவு மேஜையில் அவர்களுக்காகக் காத்திருந்தார் ரங்கராஜன்.

“நீங்க இன்னும் சாப்பிடலயா மாமா?”

“உங்களுக்காகத்தான் வெயிட்டிங் மாப்ள, வாங்க” என்றவர், “வா உட்காரு பாரும்மா” என்றார்.

“நீங்க உட்காருங்கப்பா. நான் அம்மாக்கு ஹெல்ப் பண்றேன்” என்று சமையல் அறை சென்று காவேரி கொடுத்ததை வாங்கி வந்து மேஜையில் வைத்தாள்.

நால்வரும் மேஜையில் அமர, ரங்கராஜன் எழுந்து மகளின் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கப் போனார். அதற்குள் அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த பார்த்திபன் திரும்பி, இயல்பாக அவளுக்குக் கொண்டை போட்டு விட்டான்.

“எதுக்கு எழுந்தீங்க? அப்படியே திரும்ப உட்கார்ந்துட்டீங்க?” என்று காவேரி கேட்க, மகளையே பார்த்திருந்தவர், “ஒன்னுமில்ல காவேரி” என்றார் மலர்ந்த முகத்துடன்.

ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு உண்ணத் தொடங்கினார்கள்.

இட்லியும், ஆட்டுக் கறி குழம்பும், குடல் கூட்டும் காலை உணவாகத் தயாராகி இருந்தது. பார்த்திபன் இலையில் இட்லி, குழம்பு, குடல் கூட்டை காவேரி பரிமாறவும் உண்ணத் தொடங்கினான் அவன். உளுந்து வடை, மல்லி சட்னியை அவன் இலையில் பார்கவி வைக்கப் போக, பட்டென்று அவள் கையைத் தடுத்துப் பிடித்தான்.

“வடை சாப்பிடுவீங்கதானே? அப்புறம் ஏன் வேணாம்னு சொல்றீங்க?”

“சாப்பிடுவேன்தான். அதுக்குன்னு கறிக் குழம்பு பக்கத்துல வைப்பியா நீ?”

“அப்புறம்?” அவள் புரியாமல் முழிக்க, “மட்டன் குழம்ப இன்சல்ட் பண்ணாத பாரு. அதுவும் மல்லி சட்னி வைக்கிற பாரு. ம்ஹும்” என்றவனைப் பல்லைக் கடித்து முறைத்தாள்.

“மாப்ளக்கு பிடிக்காது, வேணாம்னா விடு பாரு, வைக்காத” என்று காவேரி மருமகனுக்காகப் பரிந்து பேச, “ம்மா, அதெல்லாம் பிடிக்கும் இவருக்கு. இப்போ வேணும்னு வீம்புக்குன்னு சாப்பிட மாட்டேங்கறார்” என்றாள் வேகமாக.

“புலி பசிச்சா புல்லை சாப்பிடுமா அத்த? நீங்களே சொல்லுங்க?” அவன் கேட்ட வேகத்தில் ரங்கராஜன் சிரிக்க, “யூஎஸ்ல இருக்கும் போது வடை சாப்பிடணும் போல இருக்குன்னு சொன்னீங்க?” என்று திரும்பி அவனிடம் எகிறினாள்.

“அது உன்கிட்ட பேச ஒரு சாக்கு மக்கு” என்று அவள் பக்கம் சரிந்து முணுமுணுத்தான்.

“நீங்க சாப்பிடுங்க மாப்ள” என்று காவேரி அவன் இலையில் கேசரியை வைக்க, ஒரு வாய் எடுத்து உண்டவன், மீதியை மனைவியின் இலைக்கு மாற்றியிருந்தான்.

“கறியை இன்சல்ட் பண்ண கூடாது பாரு. அதுக்கு இட்லியை மட்டும் தொட்டு சாப்பிட்டு மரியாதை பண்ணணும்” என்றான் தீவிரமாக.

“இட்லிக்குத் தொட்டுக்கத்தான் மட்டன் குழம்பு” என்று முறைத்தாள்.

“பாரு, நீ சொல்லித்தான் எனக்குத் தெரியுது” என்றான் நமுட்டு சிரிப்புடன்.

“வெஜ் பக்கத்துல நான்வெஜ் வச்சா நீ சாப்பிடுவ? இல்லதானே? அப்போ நான்வெஜ் மட்டும் என்ன பாவம் பண்ணுச்சு? அது பக்கத்துல மட்டும் வெஜ் வச்சு எதுக்கு அதை இன்சல்ட் பண்ற? இதெல்லாம் தப்பு பாரும்மா” என்று அவன் தீவிரமாகச் சொன்ன விதத்தில் அனைவரும் சிரித்து விட்டார்கள்.

அடுத்து வந்த இரண்டு நாள்களும் அவனுக்காக அசைவ விருந்து தடபுடல் பட்டது.

error: Content is protected !!
Scroll to Top