பார்கவி திருமணம் முடியும் வரைக்குமே கீழ் தளத்தில் பெற்றோரோடுதான் இருந்தாள்.
இப்போது மகளுக்காக மேல் தளத்தைப் புதுப்பித்து மாற்றியிருந்தார்கள்.
புதிய வர்ணம் பூசி நின்ற வீட்டில் பழைய நினைவுகள் வராமல் இருக்குமா என்ன?. அப்படி அவளுக்கு வர விடாமல் பார்த்துக் கொண்டான் பார்த்திபன்.
“உங்க அத்த இன்னமும் அப்படித்தான் வெடுக் வெடுக்குன்னு உன்கிட்ட பேசிட்டு இருக்கா பாரு?” என்று காவேரி தனிமை கிடைத்ததும் மகளிடம் கேட்க, “அவங்க எப்பவும் போல நார்மலாதான் இருக்காங்கம்மா” என்றாள். எதற்கு அங்கு நடப்பதை எல்லாம் அம்மாவிடம் சொல்லி அவரை வருத்த வேண்டும் என்ற எண்ணம்தான் அவளுக்கு.
தாய் அறியாத சூலா?
“ம்ம், நீயும் சொல்ற, நானும் நம்புறேன்” என்றார் காவேரி.
ரங்கராஜன் மருமகனுடன் மும்முரமாகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இவர்கள் அருகில் சென்றாலே சட்டென்று அவர்கள் பேச்சை நிறுத்தியது போலிருந்தது.
“என்னப்பா?” என்று பார்கவி கேட்க, “என்ன பாரும்மா, ஒன்னும் இல்லையேடா?” என்றார் ரங்கராஜன்.
“அப்பாக்கு உன் கையால ஒரு கப் காஃபி குடுடா” என்று அவர் கேட்கவும், அவரைச் சந்தேகமாகப் பார்த்தபடியே சமையல் அறைக்குச் சென்றாள் அவள்.
மாலையும், “பிரியா பொண்ணு வீடு வரைக்கும் போயிட்டு வருவோம் வா பாரு” என்று ராதா மட்டுமே இருந்த வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்றார் காவேரி.
அங்கே மொட்டை மாடி தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றி, பூக்களைப் பறித்துத் தொடுத்து என நேரம் போக்கி, பொறுமையாக வீடு திரும்பினர்.
இரவு உணவு முடித்து அவளின் வழக்கம் போல அப்பாவுடன் தெருவில் நடைப் பயிற்சி மேற்கொண்டாள்.
இம்முறை அவர்களுடன் பார்த்திபனும் இணைந்திருந்தான். மாமனாருடன் அவனும் அரசியல், தொழில் நிலவரம் பேசியபடி நடந்தான்.
“பாரு” என்று காவேரி உள்ளிருந்து அழைக்க, மூவரும் உள்ளே சென்றார்கள்.
“இந்தா இதை எடுத்துட்டு போ” என்று மகளின் கையில் சூடான பால் இருந்த பிளாஸ்க்கை கொடுத்தார் காவேரி.
அவர் விலகியதும், “மாடிக்குப் போகலாம் வா பாரு” என்று அவளின் கைப் பிடித்தான் பார்த்திபன்.
அவனோடு இணைந்து நடந்தாள். முதல் தளத்தில் கால் பதித்ததும் திகைத்து விட்டாள். அங்கிருந்த ஊஞ்சலை கண்டதும் ஒரு நொடி அவள் தடுமாறிட, அவளைத் தாங்கிப் பிடித்தான் பார்த்திபன்.
அவளின் இடை தழுவிய அவன் கரம் அவளை முன்னகர்த்தியது.
“இது உன் வீடு பார்கவி. இங்க நீ, நீயா இருக்கணும். உனக்குப் பிடிச்ச எதையும் யாருக்காகவும் நீ விட்டுக் கொடுக்கக் கூடாது. அதான் எனக்குப் பிடிச்ச உனக்காக உன்னோட ஊஞ்சலை திரும்ப இங்க போட்டுட்டேன்” என்றான்.
“உங்கப்பா இந்தப் பழைய ஊஞ்சல் வேணாம், புதுசு வாங்கலாம்னு சொன்னார். ஆனா உனக்குப் பிடிச்சத எதுக்கு ஒதுக்கணும்னு இதுதான் வேணும்னு அவர்கிட்ட சொல்லிட்டேன். நீ நான்தான் வேணும்னு உறுதியா நின்ன மாதிரி” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
“பார்த்தி” என்று உச்சரித்த உதடுகளில் புன்னகையின் தடயம் தெரிந்தது.
அவள் கையில் இருந்த பாலை வாங்கி ஓரமாக வைத்து, அவளைக் குனிந்து அப்படியே கைகளில் அள்ளி ஊஞ்சலில் அமர்த்தினான்.
“பார்த்தி என்ன பண்றீங்க?” என்று அவள் பதற, மறுநொடி விளக்கை அணைத்து விட்டான். மொட்டை மாடியில் இருந்து கசிந்து வந்த நிலவொளி பரவி, அந்தக் கூடத்தைக் கவர்ச்சியாக்கியது.
பார்த்திபன் மிகவும் நிதானமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவளை நோக்கி வந்தான்.
அவனையே பார்த்தபடி ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளின் மனம் நிதானம் இழந்து ஊசலாடியது. அவர்கள் இருவருக்கும் இடையில் நேசமும், நெருக்கமும் இருந்தது. பிரிய முத்தங்கள் பகிர்ந்தாலும் முன்னுரை, முடிவுரை என எதையும் எழுதவில்லை அவர்கள்.
காதலின் உச்ச வெற்றி, அதை உரியவரிடம் சேர்ப்பது என்றால் தாம்பத்தியம் உரியவரிடம் சேர்வதுதானே.
இதுநாள் வரை இல்லாத நெருக்கம் அவன் கண்களில் தெரிய மனைவியை நெருங்கினான் பார்த்திபன்.
ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளின் கண் பார்த்து மெல்ல ஊஞ்சலின் இரு பக்கமும் கரம் பதித்து அசைத்து விட்டான்.
“பார்த்தி, என்ன பண்றீங்க? தள்ளி நில்லுங்க, உங்க மேல இடிச்சுட போறேன்” என்று அவள் பதற, சட்டென்று ஊஞ்சலை எட்டிப் பிடித்து, அவளை இடித்துக் கொண்டு அவளுடன் அமர்ந்திருந்தான் அவன்.
ஊஞ்சலின் ஒரு முனையில் அமர்ந்து, அவளை இழுத்து அணைத்தான். அவனோடு வாகாகப் பொருந்தினாள் அவள்.
அவள் நாசியை நிறைத்தது அவனது பிரத்யேக வாசம். வியர்வையும், அவனது வாசனை திரவியமும் சேர்ந்ததொரு கலவையான வாசம் அவள் நாசியை நிறைக்க, ஆழ மூச்செடுத்தாள். அவளின் மூச்சுக் காற்று அவனைச் சீண்ட, அவனது நுண்உணர்வுகள் தூண்டப்பட, அவளை அணைத்த கரங்களில் இறுக்கம் கூடியது.
அவள் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடித்து, ஈரமாய் இதழ் தடம் பதித்தான்.
அவளை மெல்ல விலக்கி சென்று பாலை எடுத்து வந்தான்.
“இந்தச் சம்பிரதாயமெல்லாம் யாரு கண்டுபிடிச்சது பார்த்தி?”
“ஏன்? பாலும் பழமும்னு செட் அப் நல்லாதானே இருக்கு?” என்று கண் சிமிட்டினான்.
“செட் அப் சரிதான். ஆனா செமிக்காது” என்று முகம் சுழித்தாள்.
“செமிக்காதா? பாரு பாப்பா, இது இப்போ குடிக்க இல்ல. பசிக்கும் போது குடிக்க” என்று அவன் கிசுகிசுக்க, அவள் விழிகள் அதிர்ந்து விரிந்தன. வெட்கம் மிகக் கன்னச் சதை கடித்துப் புன்னகையை அடக்கினாள்.
அவளின் எதிர்வினை கண்டு சிரித்தவன், பாலை கோப்பையில் ஊற்றி ஒரு வாய்க் குடித்திருந்தான்.
“எனக்கு வேணாம்” என்று அவள் மறுக்க, சட்டென அவள் முகத்தை நிமிர்த்தி இதழ் சேர்த்திருந்தான். அந்த முத்தத்தின் சுவை இருவருக்கும் இனித்தது.
“வேணாமா?” அவளை விலகி விழி பார்த்து கேட்டவன் நெஞ்சில் நெற்றியால் முட்டினாள். சட்டென அவளைத் திருப்பித் தள்ளி நின்றான்.
“பார்த்தி”
“பொறுமை பாரு” அவனை நோக்கி திரும்பிய தலையைத் திருப்பி முன் நோக்கி பிடித்தான்.
“கண்ணை மூடு பார்கவி” காதோரம் காதல் கூடி கிசுகிசுத்தது அவன் குரல். பார்கவியின் கண்கள் மூட புலன்கள் கூர்மை பெற்றன.
அவள் கழுத்தோரம் பட்டாம் பூச்சியின் லாகவத்துடன் பதிந்து பதிந்து விலகின அவன் விரல்கள்.
அவளுக்கு உடல் சிலிர்த்ததை அவன் விரல் நுனி உணர்ந்தது. கர்வமாய்ப் பூத்த புன்முறுவலுடன் மெல்ல குனிந்தான்.
அவள் கழுத்தில் திருமாங்கல்யம் மட்டுமே இருந்தது. அதை உரசியபடி ஏதோ ஈரமாகப் பதிய, “பார்த்தி” என்று முணுமுணுப்பாக அழைத்தாள்.
“கண்ணைத் திற பாரு” என்றான். கண்களைப் பட்டெனத் திறந்தவள், அனிச்சையாக அவன் புறம் திரும்ப எத்தனிக்க, “ம்ஹும்” என்று அவள் முகத்தைத் திருப்பிக் கழுத்தை பார்க்க வைத்தான். அதற்குள் அவள் கரம் உயர்ந்து அதை மென்மையாக வருடியது.
அவள் கண்கள் அதைக் கண்டு ஆச்சரிய அதிர்ச்சியுடன் விரிய, “இது இது..” என்று திணறினாள்.
அவள் கழுத்தில் நாடியை பதித்துப் பின்னால் இருந்து அவளை அணைத்து, “உன் செயின் பாரு” என்றான்.
அது அவளின் தங்கச் சங்கிலிதான். பல மாதங்களுக்கு முன்பு இதே இடத்தில் தொலைத்த ஒன்றை அவளுக்குத் திருப்பித் தந்திருந்தான்.
முன்பிருந்த “பா” எனும் எழுத்துப் பொறித்த பதக்கம் இப்போது இல்லை. மாறாகப் புதியதாக ஒன்றை சேர்த்து கோர்த்து அவளுக்குப் பரிசளித்திருந்தான்.
அவள் விரல்கள் அதை ஆசையாக வருடின.
இருவர் பெயரின் ஆங்கில முதல் எழுத்தை, அவர்களைப் போலவே ஒன்றோடொன்று ஒட்டி உரசி நிற்பது போல வடிவமைத்து இருந்தான் அவன்.
“அழகா இருக்கு பார்த்தி”
“ஐ லவ் யூ பார்கவி” என்றான் ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து, அர்த்தம் சேர்த்து, முத்தங்கள் பதித்து. அவள் கண்கள் சட்டெனக் கலங்கி விட்டன.
“பாரு” பட்டென்று அவளின் கலங்கிய கண்களை முத்தமிட்டான்.
“லவ் சொன்னா பதில் சொல்லணும் பார்கவி”
“நான் எப்பவோ சொல்லிட்டேன்” என்று அவள் சொல்ல, “அப்போ இனி செயல்லதான் காட்டணுமா பாரு?” குனிந்து அவள் கண் நோக்கி கேட்டான். செல்லமாய்ச் சிணுங்கின அவள் விழிகள்.
“பேச்செல்லாம் மூச்சாகிடலாம் முத்தத்தால்” என்று முணுமுணுத்து அவளை மெல்ல ஊஞ்சலில் சாய்த்தவன், அவளை ஒட்டி உரசி அவளோடு ஊஞ்சலுக்குள் தஞ்சமடைந்திருந்தான்.
ஊஞ்சல் மெல்ல அசைந்து இருவரையும் இணைத்துத் தாலாட்டியது.
கீழே விழுந்து விடாமல் இருக்க இறுக்கமாய் அவன் சட்டையைப் பற்றினாள் பார்கவி. அவள் இடையில் கரம் கோர்த்து தூக்கி அவளைத் தன் மார்பில் போட்டுக் கொண்டான் அவன்.
“விழுந்திட போறோம் பார்த்தி” என்று அவள் எச்சரிக்க, கண்ணடித்துக் குறும்பாகப் புன்னகைத்து, “அதான் பிளான். உனக்குள் நானும் எனக்குள் நீயும்” என்றான். ஊஞ்சல் அசைய, அவளின் வளையல் குலுங்கி ஒலியெழுப்ப, கொலுசு சிணுங்கி அந்த ஏகாந்த பொழுதிற்கு இசை சேர்த்தது.
அவள் முகத்தை அவன் மார்பில் புதைக்க, “உடல் அணிந்த ஆடை போல எனை அணிந்து கொள்வாயா? இனி நீ?” என்று கேள்வியையும் பாட்டாகவே பாடினான்.
“இப்படிப் பேசி, பாடி மயக்கியே..” என்றவளின் முகத்தை உயர்த்தி முத்தமிட்டு அவளின் பேச்சை நிறுத்தியிருந்தான். ஊஞ்சல் தானாக ஆட, இருவரும் காதலுக்கும் காமத்துக்கும் இடையில் ஊசலாடி கொண்டிருந்தனர்.
அவனது வேகத்துக்கு ஈடு கொடுத்து ஊஞ்சல் அசைய, “பார்த்தி” என்று அவளின் கண்டிப்பும், எதிர்ப்பும் சிணுங்கலாகத்தான் ஒலித்தது.
அவளை லேசாக விலக்கி எழுந்து, அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டு அவளின் அறைக்குள் நுழைந்து, காலால் கதவை அடைத்துப் படுக்கையில் விட்ட கையோடு திரும்பி அறைக் கதவை தாழிட்டான்.
அறையின் ஜன்னல் வழியே மழை சாரல் அறைக்குள் நுழைய, இருவரும் காதல் மழையில் நனைந்தார்கள்.
மனைவியை முத்தத்தால் களவாடி, மொத்தமாய் அவளைக் கொள்ளையடித்து மீண்டும் முத்தமிட்டு மார்பில் இட்டுக் கொண்டான் பார்த்திபன். காதலில் அவனைத் தாங்கியவளை காதலுடன் அவன் தாங்கினான்.