பார்த்திபன் காதலி – 34 (1)

பார்த்திபன் மருத்துவமனை வளாகத்தில் வண்டியை நிறுத்த, அவர்களுக்காக அங்கே காத்திருந்தான் பிரபஞ்சன்.

பார்கவியிடம் பேசியவன், பார்த்திபனை திரும்பியும் பார்க்கவில்லை.

அவர்களின் திருமணச் சமயத்தில் பிரியதர்ஷினிக்கு நிறை மாதம். அந்த நிறை மாத வயிற்றுடன் பார்கவியின் பக்கத்தில் இருந்தாள் அவள். பல நேரம் சத்யபாமாவை சமாளித்தது அவள்தான். அவளால் முடியவில்லை என்றால் அம்மா அல்லது மாமியாரை இழுத்து வந்தாள்.

“உங்க மொத மாமியாரை கொஞ்சம் என்னன்னு கேளுங்க பிரபா” என்று சமயங்களில் பிரபஞ்சனையும் பஞ்சாயத்து பண்ண வைத்தாள்.

அவள் சொன்னதைக் கேட்டு, “பிரியா, மாமியார்னு என்ன பேசுற நீ?” என்று அவன் கோபிக்க, தோழியைப் பார்த்த பார்கவியின் பார்வையில் அனல் பறந்தது.

“அவ்வ் சாரி பாரு. இனிமே பார்த்திபன் அண்ணா உனக்கு மட்டும்தான். இவரை நான் பார்த்துக்கறேன்” என்று வரவேற்பு மேடையில் வைத்தே அவள் சொல்ல, பக்கென்று சத்தமாகச் சிரித்திருந்தான் பார்த்திபன்.

பார்கவி அவனைத் திரும்பி முறைக்க, அவளைக் கண்களால் உரிமையாகக் களவு செய்து சிவக்க வைத்தான் கணவன்.

“இனிமே பிரபஞ்சன் போன் பண்ணா உன்னை அம்போன்னு விட்டுட்டு ஓடி வர மாட்டார், அப்படியே இந்தக் கிரிக்கெட்டையும் உனக்காக விட்டுடுவார். இல்லண்ணா?” என்று பிரியதர்ஷினி பார்த்திபனிடம் கேட்க, “டேய் பிரபா” என்று நண்பனை முறைத்தான் பார்த்திபன்.

“என்ன விட மாட்டீங்களா?” என்று பார்கவியும் கேட்க, “ஹே, நான் என்ன இவனை மாதிரின்னு நினைச்சியா பாரு? நான் ரொம்பப் பொறுப்பு. இது வரை எப்போவாவது உன்னைப் பார்க்க வந்துட்டு, உன்னைத் தனியா விட்டுட்டு போய் இருக்கேனா நீயே சொல்லு?” என்று திருமணத்திற்கு முன்னான அவர்களின் சந்திப்புகளைக் குறிப்பிட்டு கேட்டான்.

அவள் மறுப்பாகத் தலையசைக்க, “எனக்கு எப்பவும் நீதான் முக்கியம் பாரு. இனிமே எனக்கு இவன்கிட்ட என்ன பேச்சுங்கறேன்? இவனோடு சேர்ந்து கிரிக்கெட் ஆடியே நான் கெட்டு குட்டி சுவராகிட்டேன்னு எங்கம்மா திட்டுறது போதாதா? நீ ஒரு வார்த்தை சொல்லு பாரு, நான் இனிமே இவன் கூடப் பேச என்ன, இவன் பக்கமே திரும்ப மாட்டேன்னு உனக்கு எழுதி சைன் போட்டு தர்றேன்” என்று அந்தர் பல்டி அடித்திருந்தான்.

“அடப்பாவி பார்த்தி, படி தாண்ட மாட்டேன்னு சொன்னியே டா?” என்று பிரபஞ்சன் கோபிக்க, “இப்பவும் பார்த்திபன் படி தாண்ட மாட்டான்தான் பிரபா. ஆனா பார்கவிக்காக” என்று அழுத்தமாகச் சொல்லி, இன்னும் ஆழமாய்ப் பார்கவியின் பிரியத்தைப் பெற்றுக் கொண்டான்.

இதோ அவர்களின் திருமணம் முடிந்த சில நாள்களில் பிரியதர்ஷினிக்கு மகன் பிறந்திருந்தான்.

“பிரியா..” என்று ஆவலாகத் தோழியிடம் விரைந்தாள் பார்கவி. அவளின் நலம் விசாரித்து, பேசி கொண்டிருந்தவளின் கவனமெல்லாம் குழந்தையின் மீதே இருந்தது.

“இந்தாடா பாரு” என்று ராதா பேரனை தூக்கி அவள் கையில் கொடுக்க, பொக்கிஷமாக அவனைக் கையில் வாங்கிக் கொண்டாள் அவள்.

“க்யூட்டா இருக்கான் பிரியா. ஐயோ அழகு, பட்டுக்குட்டி” என்று அவனைக் கொஞ்சியவளின் கால்கள் அனிச்சையாகக் கணவனை நெருங்கின.

பார்த்திபன் மருத்துவமனைக்கு வந்ததும் அவனைத் தவிர்த்து நடக்கும் நண்பனை இழுத்து அவன் தோளில் தட்டி வாழ்த்துகள் சொன்னான்.

இப்போது நண்பர்கள் இருவரும் என்னவோ சண்டைக் கோழிகள் போலத் தள்ளியே நிற்க, அவர்களுக்கு நடுவில் சென்று நின்றாள் பார்கவி.

“பார்த்தி, நீங்க தூக்கறீங்களா?” என்று கணவனிடம் குழந்தையை நீட்டினாள்.

தங்கை மக்களைக் கூடப் பிறந்த புதிதில் தூக்க பயந்து தூக்கியதில்லை அவன். அம்மா, தங்கையின் கையில் வைத்தே அவர்களைக் கொஞ்சி கொள்வான். இப்போதும் அவன் தயங்க, பார்கவி அவனை நெருங்கி நின்று, “வாங்குங்க பார்த்தி, கையை நீட்டுங்க. நான் குடுக்கறேன்” என்றாள்.

“அவனுக்குக் குழந்தை தூக்க தெரியாது பார்கவி” என்று பிரபஞ்சன் சொல்ல, “உங்கிட்ட கேட்டாளா அவ?” என்று நண்பனிடம் எகிறினான் அவன்.

“ஏன்டா, பச்ச பிள்ளையைத் தூக்க பயப்படுற நீயெல்லாம் இவ்ளோ வாய் பேச கூடாதுடா” என்று பிரபஞ்சன் அவனைக் கேலி செய்ய, மறுகணம் பார்த்திபன் கையில் வாகாகப் பிள்ளையை வைத்து அணைத்துப் பிடித்துக் கொண்டாள் பார்கவி.

“பாரு” என்று ஆட்சேபித்தவன் பார்வை பிள்ளை மீதே இருந்தது. அவன் குழந்தையைக் கையில் ஏந்திய கணம் தூக்கம் கலைந்து கண்ணைத் திறந்து அவனைப் பார்த்தான் பிரபஞ்சனின் மகன். கோலி குண்டு கண்களைத் திறந்து திறந்து மூடி அவனைப் பார்த்தான்.

சிறிய கொட்டாவி வேறு பெரிய மனிதனுக்கு வந்தது. அவன் உதட்டை உள்ளே இழுத்து வெளியே விட்ட அழகில் மயங்கி அசையாமல் அவனைப் பார்த்து நின்றான் பார்த்திபன்.

பிரபஞ்சனின் பிரதி பிம்பமாகவே பிள்ளை அவன் கண்களுக்குத் தெரிய, பாசம் பொங்க அந்தக் குட்டி உருவத்தைப் பிரம்மிப்புடன் பார்த்திருந்தான்.‌

“குழந்தையை ரொம்ப நேரம் கையில வச்சிருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க, குடுங்க” என்று குழந்தையை வலுக்கட்டாயமாக அவனிடம் இருந்து வாங்கிப் பிரியதர்ஷினியின் பக்கத்தில் கிடத்தினாள் பார்கவி.

மூன்று மணி நேரம் கழித்து மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார்கள்.

வீடு செல்லும் வழியெங்கும் பார்கவியின் பேச்சில் பிள்ளை வாசம் அடித்தது.

“நாமளும் சீக்கிரம் பிள்ளையைப் பெத்துக்கறோம், பிரபா முன்னாடி பிள்ளையைத் தூக்கிட்டு போறோம். என்ன சொல்ற?” என்று அவன் கேட்க, அவனுக்குப் பின்னால் வண்டியில் அமர்ந்திருந்தவள் அடக்க முடியாமல் சத்தமாகச் சிரித்திருந்தாள்.

“ஹேய் இப்போ நீ எதுக்குச் சிரிக்கறன்னு எனக்குத் தெரியும். உன்ன வீட்டுக்குப் போனதும் கவனிச்சுக்கறேன்” என்று வண்டியின் பக்கவாட்டுக் கண்ணாடியில் அவளை முறைத்தான்.

இருவரும் வீடு வர, பார்த்திபனின் தங்கை மற்றும் தாய் மாமன் மனைவி அங்கிருந்தனர்.

ரேணுகா அவர்களைக் கண்டதும், “என்ன அண்ணி குழந்தை எப்படி இருக்கான்? பிரியா நல்லா இருக்காளா? நார்மல் டெலிவரி தானே?” என்று பார்கவியிடம் கேட்க, அவளுக்குப் பதில் சொன்னாள் அவள்.

“வெளில போய்ட்டு வர்றாங்களாக்கும்? புதுப் பொண்ணு தலையில ஒத்த கண்ணி பூவை காணல” என்று அங்கு அமர்ந்திருந்த பார்த்திபனின் மாமன் மனைவி உமா சொல்ல, சத்யபாமா மருமகளை முறைத்தார்.

முன்பு அவளைச் சந்திக்கும் போதெல்லாம் அன்பாகப் பேசி அவளுக்குப் பூ வைத்து விட்டவரின் தற்போதைய மாற்றம் அவளுக்கு மீண்டும் அதிர்ச்சியை அளித்தது.

“எத்த, நீங்க பூ வாங்கிட்டு வந்துருப்பீங்க இல்ல? அதை எடுத்து கொடுங்க, என் பொண்டாட்டி பின்னலை நிறைச்சு நான் பூ வச்சு விடறேன்” என்று பார்த்திபன் உமா முன் சென்று நிற்க, மற்றவர் கவனத்தை ஈர்க்காத வகையில் அவனது சட்டையைப் பிடித்து இழுத்த பார்கவி, “நாங்க ஹாஸ்பிட்டல் போனதால, நான் பூ வச்சுட்டு போகல சித்தி” என்று இயல்பாகப் பதில் சொன்னாள்.

“அப்படியா? இப்போ வர்ற வழியில வாங்கி வச்சுருக்கலாம்ல?” என்று அவர் இழுக்க, “ஏன் நீங்க வாங்கிட்டு வந்திருக்க வேண்டியதுதானே? வீட்டுக்கு கைய வீசிட்டு வந்துட்டு நல்லா பேசுறீங்க அத்த” என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டான்.

அவனுக்கு வந்த கோபத்தில் நாலே எட்டில் அம்மாவை நெருங்கி, “நீயாம்மா இது? நீ இப்படி மாறுவன்னு நான் எதிர்பார்க்கலம்மா” என்று அவருக்கு மட்டும் கேட்கும் விதமாக ஏமாற்றம் நிறைந்த குரலில் சொல்லியிருந்தான் பார்த்திபன்.

“பிரபா பிள்ளையைப் பத்தி கூடக் கேட்க தோனல உனக்கு, இல்லம்மா?” என்று முறைத்தான்.

அவன் திரும்பிப் பார்க்க, பார்கவி அவனைப் பின் தொடர்ந்திருந்தாள்.

“வீட்டுக்கு வந்த என்னை மதிச்சு வாங்கன்னு கூடக் கேட்கல உங்க மருமக. பின்ன வசதியான பொண்ணுன்னா இப்படித்தான் தலைக் கனத்தோட இருப்பா அண்ணி” என்று உமா நொடித்துக் கொள்ள, “அண்ணி உங்களை வாங்கன்னு கேட்கறதுக்கு முன்னாடியே நீங்கதான் அவங்க பூ வைக்கலன்னு புகார் படிக்க ஆரம்பிச்சுட்டீங்களே அத்த” என்று அவருக்குப் பதிலடி கொடுத்தாள் ரேணுகா.

இந்தச் சூழலே பார்த்திபனுக்குப் பிடிக்கவில்லை. தங்கள் வீட்டுக்குப் புதிதாக, தன் உறவாக வந்தவளை அம்மா நடத்தும் விதம் அவனுக்கு உவப்பானதாக இல்லை.

அதனால் மறுநாள் மறுவீட்டுக்குச் செல்கையில் மகிழ்ச்சியாகவே சென்றான். சற்றே ஆசுவாசமாகக் கூட உணர்ந்தான்.

error: Content is protected !!
Scroll to Top