உதயின் மொபைல் தொடர்ந்து ஒலியெழுப்பி அவர்களைப் பேச விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. ராகவிக்கு அலைபேசியின் ஒலி தான் கேட்டதே தவிர அவன் வார்த்தைகள் காதில் விழவேயில்லை. மனதில் மூண்ட எரிச்சலை கட்டுப்படுத்திக் கொண்டு அவனை ஏறிட்டாள்.
“ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கப் போகுது. எடுத்து பேசுங்க” என்றாள்.
அவளிடம் இருந்து விலகி, பால்கனி கிரில்லில் சாய்ந்து, அலைபேசி அழைப்பை ஏற்றுப் பேசி விட்டு வந்தான் உதய்.
“சாரி. ஒரு முக்கியமான கேஸ். அதான்…”
“இட்ஸ் ஓகே” எதுவும் சரியில்லை என்று மூளை அறிவுறுத்தினாலும், வாய் வார்த்தையாகச் சொல்ல ஏனோ மனம் வரவில்லை அவளுக்கு. அதற்காகப் பின்னர்த் தன்னைத் தானே நொந்து கொள்ளப் போகிறோம் என்பதை அப்போது அவள் உணரவில்லை.
“நாளைக்கு ஃப்ரீயா ராகவி. இல்ல நாளைக்கு முடியாது. சண்டே. அதுவும் முடியாது. அடுத்த வாரத்தில் ஒரு நாள்? வெளில எங்கயாவது மீட் பண்ணலாம். உன்னை நானே வந்து பிக் அப் பண்ணிக்கறேன். நிறையப் பேசணும்” என்றான்.
“இப்பவே பேசலாமே?” என்றவள், “கிளம்பனுமா? வேலை இருக்கா?” என்று கேட்க, சங்கடத்துடன் தலையை அசைத்தான்.
அவளுக்குச் சிரிப்பு வந்தது, அதில் தானும் இணைந்து கொண்டவன், “இந்த மைசூர் பட்டில் மகாராணி மாதிரி இருக்க. உனக்காக ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி நெய்ததா?” அவளது சேலை நுனியை பிடித்துக் கொண்டு கேட்டான்.
“உங்களுக்கு மைசூர் பட்டு பத்தி எல்லாம் தெரியுமா?” ஆச்சரியமாகக் கேட்டாள்.
“வீட்டம்மா ஜவுளி கடை முதலாளி, அப்புறம் இது கூடத் தெரிஞ்சுக்கலைன்னா நல்லாவா இருக்கும்” என்றான் சீரியசாக, கன்னச் சதை கடித்துச் சிரிப்பை விழுங்கினாள் அவள்.
அவளது முந்தானையை, அவன் கைகளில் சுற்றிய படி,
“பொண்டாட்டி முந்தானையைப் பிடிச்சுட்டுச் சுத்துறது இது தானா?” என்றான்.
“உங்களுக்கு வேலை இருக்குன்னா கிளம்புங்க. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன். அதுக்காக இங்க நின்னு இப்படி..”
“உளறாத சொல்றியா?” பட்டென்று கேட்டான். சிரித்தாள். அவனுக்கும் சிரிப்பு வந்தது.
“நான் இந்த டிபார்ட்மெண்டில் ரொம்ப வீக்” என்றவன், “ஒரு முக்கியமான கேஸ், தோண்ட தோண்ட வீடியோஸ் வந்திட்டே இருக்குது. ஆனா, சரியான க்ளூ கண்ணுல விளக்கெண்ணெய் விடாத குறையா, எவ்வளவு தேடியும் சிக்கலை. ம்ப்ச், வேலை கழுத்தை நெரிக்குது. மேலிடம் ரொம்பப் பிரஸர் கொடுக்கறாங்க. சீக்கிரம் முடிக்கணும். இல்லனா எங்களை முடிச்..”
“ம்ப்ச், நீங்க இந்தக் கேசை நல்லபடியா முடிப்பீங்க. போய்ட்டு வாங்க. நீங்க ஃப்ரீயா இருக்கும் போது மீட் பண்ணலாம்” அவளது புரிதல் அவனுக்கு அத்தனை ஆறுதலாக இருந்தது.
மனம் நெகிழ அவளை நெருங்கி நின்றவன், “மீட் பண்ணி?” இழுத்தான்.
“ம்ம்ம், உதய்கு, உதை கொடுக்கலாம்” என்றாள் கிண்டலாக,
“எனக்கு ஒன்னும் ஆட்சேபனையில்லை.” கண் சிமிட்டினான். முறைத்தாள்.
“இன்னைக்கு என்னைப் பார்த்து முறைக்கும் இந்தக் கண்களில், சீக்கிரமே அன்பை பொங்க வைக்கிறேன்.” அவள் கன்னம் வருடி சொன்னான்.
அவனது நெருக்கம் அவளை என்னவோ செய்ய, இருவருக்கும் இடையில் இடைவெளியை கூட்ட விரும்பி பின்னே நகர்ந்தவள், அங்கிருந்த ஊஞ்சலில் இடித்துச் சரியப் போனாள்.
“ஏய், பார்த்து..” இடுப்பை பற்றி நிறுத்தினான். அப்படியே அவளை ஊஞ்சலில் அமரச் செய்து, தானும் அருகில் அமர்ந்தான்.
“எப்பவும் இப்படித் தான் விழுந்துட்டே இருப்பியா? இல்ல என்னைப் பார்த்தா மட்டும் தானா?”
கிண்டலாகக் கேட்டான்.
இவனிடம் மட்டும் தனக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் என்பது அவளுக்கும் புரியத் தானில்லை.
“தெரியல” என்றாள்.
“கேஸ் விஷயமா நிறையப் பெண்களைச் சந்திக்கறேன். தினம் தினம் சந்திக்கறேன் ராகவி. பிறந்ததில் இருந்து பெண்களோடு தான் இருக்கேன். ஆனா, எனக்கான பெண், மனதுக்கு நெருக்கமான பெண்ணா யாருமே இருந்ததில்லை. அதான், உன்னைப் பார்த்ததில் இருந்து நானும் தடுமாறிட்டு இருக்கேன்னு தோணுது. நமக்கே நமக்கானவங்கன்னு மனசு நம்பும் போது தானே எல்லாப் பைத்தியக்கார தனங்களையும் செய்ய வைக்குது. நம்மோட முதல் சந்திப்பில் தொடங்கி, இதுவரை எதுவுமே நாம பிளான் பண்ணி நடக்கல. நாமளும் புதுசா பேசிக்கறவங்க மாதிரி பேசிக்கல. ம்ப்ச், உன் முன்னால நான் நானாவே இருக்கறது இல்ல”
அவன் பேச்சு அவளை அப்படியே உருக்கி விட்டது. இந்தச் சந்திப்பு கூட, தனக்காக அவன் வேலையை ஒதுக்கி விட்டு தான் வந்திருக்கிறான் என்று அவளுக்கு நன்றாகவே விளங்கியது. கண்களில் மின்னலுடன் அவனை ஏறிட்டாள்.
“நல்லா தூங்கி பல நாள் ஆச்சு ராகவி. இப்படியே உன் தோள் சாய்ந்து, கதைப் பேசிட்டே தூங்கனும் போல இருக்கு” கரகரத்த குரலில் சொன்னான்.
அவன் காலால் லேசாகத் தரையைத் தட்ட, ஊஞ்சல் மெல்ல ஆடத் தொடங்கியது. அவள் மனம் அவன் புறமாகப் பலமாகச் சாயத் தொடங்கியது.
“இப்ப தான் இந்த டிபார்ட்மெண்டில் வீக் சொன்னீங்க?”
“ஓ, அப்ப இதுக்குப் பேர் தான் ரொமான்ஸா. ரைட்டு. அப்பச் சரி, அப்பச் சரி” என்றவன், “சொன்னதைச் செய்யவா?” என்பது போலக் கண் காட்டி, புருவம் உயர்த்தினான்.
அந்நேரம் அவனது மொபைலில் மீண்டும் அழைப்பு வர, அழகான மொழியில் அர்ச்சித்துக் கொண்டே அதை எடுத்தான்.
“சாரி, ராகவி. இனி உன் முன்னாடி இந்த நல்ல வார்த்தை எல்லாம் பேச மாட்டேன். வந்து…”
“எனக்கு இது முன்னோட்டம் மாதிரி இருக்கு உதய். ஆனா, நான் தயாரா தான் இருக்கேன். நீங்க வேலை இருந்தா கிளம்புங்க, வீட்ல நான் சொல்லிக்கறேன்” என்றாள்.
‘உன்னோடு வாழ நான் தயார்’ என்று அர்த்தம் சொல்லிய அவள் வார்த்தைகளில் மனம் மகிழ, அவளை நெருங்கி மென்மையாய் அவள் கைப் பற்றி நின்றான். முகத்துக்கு மிக நெருக்கத்தில் வந்து விட்டு, “கொடுக்கக் கூடாதா?” என்று கண் சிமிட்டினான்.
அவன் முகத்தில் இருந்து கண்களை நகர்த்தி, பார்வையை வெளியில் பதித்தாள் அவள். ஒற்றை விரல் கொண்டு அவள் முகம் நிமிர்த்தி,
“உன் கண்களில் தெரியும் இந்தக் காதலை என்னைக்கும் அழிக்க மாட்டேன் ராகவி. வரேன்.” என்று விட்டு, வேக வேகமாகப் படியிறங்கி போனான்.
உதய் அங்கிருந்து போய்ச் சிறிது நேரம் ஆகியும் கூடக் கீழே இறங்கி செல்லாமல், அப்படியே நின்றிருந்தாள் ராகவி.