அவர்களுக்குத் திருமணமான இந்த சில நாள்களில் அல்ல, அதற்கு முன்பே சத்யபாமாவின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் இருந்தது.
அவர்கள் வீட்டில் திருமணம் பேசும் போது கூட நல்ல விதமாகத்தான் நடந்து கொண்டார். ஆனால் திருமண வேலைகள் தொடங்கியதும் ஆளே மாறி போய் இருந்தார்.
காவேரி என்ன சொன்னாலும், செய்தாலும் அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
அதுவேதான் பார்கவி, பார்த்திபனுக்கும். கணவரின் பேச்சுக்கு மட்டுமே செவிசாய்த்தார் அவர்.
“சத்யா, என்ன பிரச்சினை உனக்கு? நம்ம பையன் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு நினைக்கறியா இல்லையா நீ?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு துரைராஜ் கோபித்தால் கொஞ்சம் அடக்கி வாசித்தார்.
இல்லையென்றால் எல்லாவற்றுக்கும் ஏட்டிக்குப் போட்டிதான்.
திருமணப் பத்திரிக்கையை அவர் கேட்ட வண்ணமே அச்சடித்து வாங்கிக் கொடுத்து விட்டார் ரங்கராஜன். அதில் மட்டுமே அவருக்குத் திருப்தியானது போலும்.
திருமண ஜவுளி, நகை என மற்ற அனைத்து இடங்களிலும், காவேரியின் கருத்துக்கு எதிராகவே நின்றார்.
காவேரி முகூர்த்த புடைவை பத்தாயிரத்தில் பார்த்தால், “எதுக்கு இம்புட்டு விலை கம்மியா எடுக்கறீங்க?” என்று கோபித்தார்.
அதுவே கொஞ்சம் விலை உயர்ந்ததாகப் பார்த்தால், “ஒரு கல்யாண சேலைக்கு இம்புட்டா செலவு பண்ணுவாங்க. எங்க கல்யாணத்தப்போ நாங்க வெறும் ஆயிரம் ரூபாய்க்கு புடைவை எடுத்தோம். இன்னைக்கு என்னன்னா காசு இருக்குன்னு கணக்கு பார்க்காம கண்ணை மூடிட்டு கரியாக்குறாங்க” என்று அவர் சொன்னதும், காவேரி கையைப் பின்னுக்கு இழுத்து விட்டார்.
அதன் பிறகு எதிலும் அவரால் முழு மனத்துடன் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பார்கவி எதை எடுத்தாலும், “ம்மா இது எப்படி இருக்கு?” என்று அவரைத்தான் பார்த்தாள்.
“மாப்ளகிட்ட கேளு பாரும்மா, உங்க அத்தைய கேளு” என்று அவர்களைக் கண் காட்டி லகுவாக விலகிக் கொண்டார் காவேரி. பார்த்திபனோடு நின்றதில் சத்யபாமா பேசியது அவளுக்குத் தெரியாது. அது மகளுக்குத் தெரியாமலும் பார்த்துக் கொண்டார் காவேரி. ஆனாலும் அம்மாவின் முக வாட்டத்தை வைத்தே விஷயத்தைக் கண்டு கொண்டாள் பார்கவி.
“சாரிம்மா” என்றாள்.
“நீ எதுக்குச் சாரி சொல்ற பாரும்மா? பொண்ணுக்குக் கல்யாணம் பண்றதுன்னா சும்மாவா, போ பாரு” என்று மகளைத் தேற்றினார் அவர்.
குங்கும சிவப்பில் சற்றே விலை உயர்ந்த, வேலைப்பாடுகள் மிகுந்த காஞ்சிப் பட்டை பார்த்திபனே பார்கவிக்காக அங்கிருந்த அனைவருக்கும் பிடித்த விதமாகத் தேர்ந்தெடுத்திருந்தான். வரவேற்பு உடையும் அவன் தேர்வானது.
அடுத்ததாக நகைக் கடையில் அடுத்தப் பிரச்சனை ஆரம்பமானது.
“அம்மா போட்டுருக்கறது இந்த டிசைன் தாலி பாரு” என்று காவேரி ஒரு திருமாங்கல்யத்தை எடுத்து காண்பிக்க, அவ்வளவுதான் அவரின் செய்கை, சத்யபாமாவின் காரணமில்லா கோபத்துக்குத் தூபம் போட்டது போலானது.
“எங்கதுல இந்தத் தாலி போடுறதுதான் வழக்கம்” என்று அவர்கள் பக்க திருமாங்கல்யத்தை எடுத்துக் கோபமாக அவர்கள் முன் நீட்டினார்.
நகைக்கடையில் வைத்து இப்படியான பேச்சுகள் வர வேண்டாம் என்று காவேரி அமைதியானாலும், சத்யபாமா விடுவதாக இல்லை.
“எங்க வீட்டு தாலிய உங்க பொண்ணு போட மாட்டாளா? நான் இதுக்குத்தான் அப்பவே என் தம்பி பொண்ணைக் கட்ட சொன்னேன். எங்க சொந்தத்துல என் பையனுக்குப் பொண்ணு பார்த்தேன். இவன்தான் பார்கவிய லவ் பண்றேன்னு வந்து நின்னுட்டான். இப்போ என்னன்னா உங்க பொண்ணுக்கு..” என்று அவர் புலம்பலாகப் படபடக்க, “அண்ணி, நான் தெரியாம பேசிட்டேன். அதுக்காக என் பொண்ணு முன்னாடி இப்படிப் பேசாதீங்க பிளீஸ்” என்று இறங்கி வந்தார் காவேரி.
பார்த்திபன் அந்தப் பக்கம் அலைபேசி கொண்டிருந்தவன் வந்துதான் சூழலை கொஞ்சம் லகுவாக்கினான்.
பார்கவிக்கு அப்போதே மாமியாரின் மனநிலை புரிந்து போனது. அவரின் போக்குக்கு முழுமையாகச் செல்லவில்லை என்றாலும், மொத்தமாக அவரை எதிர்க்கவும் இல்லை அவள்.
சத்யபாமாவின் மாற்றம் அவரின் சொந்தக்காரர்களால் நிகழ்ந்திருந்தது.
“நல்ல வசதியான வீட்டு பொண்ணு மருமகளா வருது போல. அவங்க உங்களை எங்க மதிக்கப் போறாங்க?” என்பதில் தொடங்கி, “இம்புட்டு வசதியான பொண்ணை மகன் விரும்பறான்னு தெரிஞ்சு என் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டீங்க போல.. ஆமா, பொண்ணா முக்கியம்? பணம்தானே முக்கியம். இம்புட்டு சொத்து இருக்கவளுக்கு முன்னாடி சொந்தம் எங்க கண்ணுக்கு தெரிய போகுது” என்று அவரின் தம்பி மனைவியே, அவரைப் பார்க்கும் போதெல்லாம் சொல்லி காண்பிக்க, அவரின் மனத்தில் அது ஆழமாகப் பதிந்து போனது.
“பார்த்திபன் ஆசைப்பட்டான்னுதான் இந்தக் கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன். இல்லன்னா நான் நம்ம வசதிக்குத் தக்கனதான் பொண்ணு பார்த்திருப்பேன்” என்று அவர் சொல்லி சமாளித்தாலும் உறவுகள் விடுவதாக இல்லை.
“பார்த்திபன் பார்கவிய லவ் பண்றான்ங்கறதயே தெரியாத மாதிரி இல்ல நடிச்சீங்க? உங்களுக்குத் தெரியாமயா இருந்திருக்கும்? பணத்தைப் பார்த்துட்டு பேசாம இருந்துட்டீங்க போல?” என்று மற்றொரு நெருங்கிய உறவு பெண்மணி பேச, சத்யபாமா மறுத்தாலும் அவர்கள் நம்புவதாக இல்லை.
“அந்தப் போலீஸ்காரன் கிட்ட பட்டும் நீங்க திருந்தலையே சத்யா அண்ணி. நான் ஒன்னும் உங்கள பயமுறுத்த சொல்லல, ஆனா பார்த்துக்கோங்க. அவங்க ஒரே பொண்ணு வச்சுருக்காங்க. நாளைக்கு நம்ம பார்த்திபனை அவங்க பக்கம் இழுத்துக்கப் போறாங்க. இன்னைக்குப் பணம் பெருசா தெரியும், நாளைக்குப் புள்ள துணைக்கு இல்லாம என்ன செய்வீங்க?” என்று ஏற்றி விட்டார்கள். விளைவு? சத்யபாமாவின் பேச்சிலும், செயலிலும் வெளிப்பட்டது.
அதிலும் புதிய பிரம்மாண்ட திருமண மண்டபத்தைக் கண்டதும் அனைவரும் வியந்து புகழ்ந்து பேசுவது என்னவோ அவருக்குப் பிடிக்கவே இல்லை. என்னவோ அவர்கள் வசதியில் தாழ்ந்து போனதொரு எண்ணத்தில் முகம் திருப்பிக் கொண்டே சுற்றினார்.
காவேரி, பார்கவி அவரிடம் இணக்கமாக இருந்தாலும், அவரின் இறுக்கம் குறையவில்லை.
அதைக் கவனித்த பார்த்திபன், “இங்க பாரும்மா, இன்னைக்கு அவன் பேசுறான், இவன் இதச் சொல்லுறான்னு என் கல்யாணத்துல மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டு சுத்தாத சொல்லிட்டேன். இப்போ பேசுறவங்களுக்கு அதுனால ஒரு பாதிப்பும் இல்ல. வந்து வாய் வலிக்கப் பேசிட்டு, விருந்து சாப்பிட்டுட்டு போயிடுவாங்க. ஆனா, நாளைக்கு நீதான் இத நினைச்சு வருத்தப்படுவ புரியுதா? யோசிச்சுக்கோ மா, என் மாமனார் வீட்டுக் கல்யாணம் மண்டபம் இருக்குன்னு நான் பாருவை இன்னொருக்காலாம் உனக்காகக் கல்யாணம் பண்ண முடியாது. அதுனால சிரிச்சா மாதிரி இரும்மா” என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தான்.
“பார்கவிய நீ என்ன பேசினாலும் அது என்னைப் பேசுறதுக்குச் சமம். அப்புறம் உன் இஷ்டம்மா” என்று அவன் கோபமாகச் சொல்ல, “எனக்காக என்னைக்காவது இப்படிப் பேசியிருக்கியாடா நீ?” என்று கத்தினாலும் கொஞ்சம் சிரித்த முகமாகச் சுற்றினார் அவர்.
திருமண நிகழ்வுகள் அனைத்துக்குமான விருந்து பொறுப்பைச் சத்யபாமாவை கேட்டே முடிவு செய்தார்கள் பார்கவி பெற்றோர்.
ஆனால் பணம் இருப்பவர்களிடம் எளிமை இருந்தாலும் அதில் செழுமை வெளிப்பட்டு விடுமே.
கல்யாண விருந்து பாரம்பரிய முறையில் உணவை வீணாக்காத விதமாகப் பரிமாறப்பட்டது மிகுந்த பாராட்டைப் பெற்றது.
மணப்பெண் பார்கவி எளிமையான அலங்காரத்தில், நகைக் கடை காட்சி பொம்மை போல நிற்காமல் அளவான நகைகளுடன் நின்றாலும், பேரழகியாகத் தெரிந்தாள்.
பார்த்திபன் அதற்குக் குறையாத கம்பீரத்துடன் அவளுடன் இணைந்து நிற்கையில் ஜோடி பொருத்தம் பிரமாதம் என்று புகழ்ந்தார்கள்.
அவர்களின் திருமணம் முடிந்த பின்னும் நெருங்கிய உறவுகள் அங்கிருந்தனர்.
“எங்க பழக்கம் அது, நாங்க இப்படிச் செய்ய மாட்டோம்.” என்ற உறவுகளின் ஆலோசனையில் சத்யபாமா செயல்பட, பார்கவி அமைதியாக அவர் சொன்னதைச் செய்தாள். அவளால் செய்ய முடியாததை, முடியாது என்று முகம் கோணாமல் மறுத்து விட்டாள்.
அதில் சத்யபாமாக்கு மன சடவு.
இன்று தம்பதிகள் இருவரும் வெளியே செல்ல கிளம்பி விட்டார்கள். கூடத்துக்கு வந்ததும் மாமியாரின் முறைப்பை காண மனமின்றிக் கணவனின் கையை விட்டுவிட்டு தள்ளி நின்றாள் பார்கவி.
வீட்டின் பின்பக்கம் இருந்து உள்ளே வந்த சத்யபாமா, “எங்க..” என்று இழுத்து, “ரொம்பத் தூரமா பார்த்திபா?” என்று மகனிடம் கேட்டார்.
“ப்ச், ம்மா. பிரபாக்கு நேத்து நைட் குழந்தை பிறந்திருக்கும்மா. காலையிலயே உங்கிட்ட சொன்னேன்தானே? இப்ப காபி குடிக்கும் போது கூட ஹாஸ்பிடல் போறோம்னு சொன்னேனா இல்லையா? நீயும் எங்களோட வர்றியான்னு கேட்டேன்தானே? அப்புறம் இப்போ ஒன்னுமே தெரியாத மாதிரி எங்கன்னு இழுக்கற? என்னம்மா பிரச்சனை உனக்கு?” என்று அவன் எரிச்சலுடன் குரல் உயர்த்த, “இல்ல பார்த்திபா, உன் பொண்டாட்டி கூட எங்கேயும் வெளில போறியோன்னு கேட்டேன்..” என்றார்.
“வேணும்னு பண்றியாம்மா?” என்று அவன் கத்த, “உன்னை ஒத்த கேள்வி கேட்டது குத்தமாடா? உன் பொண்டாட்டி முன்னாடியே என்னைக் கத்துற?” என்று பதிலுக்குப் பாவமாகக் கேட்டார் அவர்.
“நாங்க பிரியாவ பார்க்க ஹாஸ்பிடல் போறோம் அத்த. நீங்களும் எங்களோட வர்றீங்களா?” என்று அவரிடம் நேரடியாகக் கேட்டிருந்தாள் பார்கவி.
“ஆங் இல்லம்மா. நீங்க போய்ட்டு வாங்க” என்றார், அவளை நேராகப் பார்க்காமல்.
“மதியத்துக்குள்ள வீட்டுக்கு வந்திடுவீங்கதானே?” என்று அவர் கேட்க, “ம்மா” என்று பல்லைக் கடித்தான் பார்த்திபன்.
“ஏன்டா நான் எல்லாருக்கும் சமைக்க வேணாமா? அப்புறம் நான் சமைக்கலன்னா அதுக்கும் சண்டைக்கு வருவ நீ..”
“நீ எங்களுக்காகச் சமைக்கவே வேணாம்மா. நாங்க வெளில சாப்பிட்டுட்டு வந்துடுறோம்” என்று கோபமாகச் சொல்லி விட்டான். சட்டென்று அவர் முகம் வாட, “நாங்க ஹாஸ்பிட்டல்ல ரொம்ப நேரம் இருக்க மாட்டோம்த்த. நாங்க அங்க இருந்து கிளம்பும் போது உங்களுக்குக் கால் பண்றேன்” என்று பார்கவி சொல்லவும், “ம்ம்” என்றார்.
பார்த்திபன் அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேற, பார்கவி பொறுப்பாக அவரிடம் சொல்லி விட்டே அவனைப் பின் தொடர்ந்தாள்.
அவர்கள் போன சற்று நேரத்தில் அம்மா வீடு வந்த ரேணுகா, அம்மாவின் பேச்சை கேட்டு கடுப்பாகி அவரைக் கத்தி விட்டாள்.
கல்யாண சமயத்திலும் அம்மாவுக்கு அத்தனை அறிவுரைகள் சொல்லியிருந்தாள்.
இப்போதும், “நீ இப்படியே பண்ணிட்டு இருந்தா அண்ணே கடுப்பாகிட போகுது பாரும்மா” என்று அவள் சொல்ல, சத்யபாமாக்கே அது புரிந்தாலும் அவரால் மாற முடியவில்லை.
மனைவியின் தோள் தொட்டு மன்னிப்பை கண்களால் கேட்டு நின்றான் பார்த்திபன். அவள் மென்மையாய் புன்னகைக்க, அதன் தடயம் அவனது இதழ்களுக்கும் தடம் மாற, வண்டியை ஆக்கிரமித்து அவளை ஏறும்படி தலையசைத்துச் சொன்னான். அதிகாலையில் பெய்த மழை ஊரையே பளிச்சென்று அழகாக்கி இருந்தது.
காற்றில் இருந்த குளுமை இருவரையும் இதமாக வருடிச் செல்ல, அவளின் கைப் பிடித்துத் தன் இடையைச் சுற்றி போட்டுக் கொண்டு மந்தகாசப் புன்னகையுடன் வண்டியை நகர்த்தினான் அவன்.