ரோஜா வண்ண ஜார்ஜெட் புடைவை பார்கவியின் மேனியை பாந்தமாகத் தழுவியிருந்தது. கண்ணாடி முன் நின்றிருந்தவள் ஈரக் கூந்தலை உதறி உலர்த்திக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி குளியல் அறைக்குள் இருந்து இடையில் கட்டிய துவாலையுடன் வெளியில் வந்த பார்த்திபனின் பார்வை மனைவியின் மேல் படிந்ததும் அவன் பார்வையில் மயக்கம் கூடியது.
“பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா?” என்று பாடலை விசிலடித்துப் பாடினான்.
கண்ணாடியில் பார்கவியின் பார்வை அவனை வட்டமிட்டது. அவனை அப்படிக் காணவும் கூச்சம் வர, சட்டென்று பார்வையை அகற்றினாள்.
“ஹேய் பார்த்துட்ட பாரு நீ” என்று பின்னால் இருந்து அவளை நெருங்கினான். அவன் உடலின் ஈரத்தை அவள் உணரும் அளவுக்கான அளவு நெருக்கத்தில் நின்றான்.
“நான் ஒன்னும் உங்கள பார்க்கல” என்று கண்ணாடியில் அவனைப் பார்த்துச் சொன்னாள்.
அவன் கண்களும் கண்ணாடியில் அவள் கண்களோடு கலந்தன, “அதுல உனக்குப் பெருமை வேறயா? நீ பாக்கத்தான் நான் பாரு” என்றான் கண்ணடித்து.
அவள் இதழ்கள் தாமாகப் புன்னகைத்தன. கண்களில் வெட்கமும், போலி கோபமும் போட்டி போட அவனை முறைத்தாள்.
“இதோ இந்தப் பார்வையைதான் சொல்றேன். இதுல இன்னும் கொஞ்சம் தூக்கலா காதல் சேர்த்தா போதும், பாருவின் பார்வை மாறிடும்” என்று அவள் காதோரம் குனிந்து, கண்ணாடியில் அவள் கண் பார்த்து கிசுகிசுத்தான்.
“தூக்கலா காதலா? அப்ப இப்போ எனக்கு உங்க மேல லவ் இல்லைன்னு சொல்றீங்களா?”
“அதெல்லாம் அளவில்லாம லவ் இருக்கு பாரு. நான் சொல்றது வேற, அது என் மேல பாயுற அளவுக்கான லவ். யூ நோ.. அடுத்தக்கட்ட லவ். நீ என்னையும், நம்மையும் தாங்குற அளவுக்கான லவ். கொஞ்சம், ஹ்ம்ம் சரியா எவ்ளோனா ஒரு சிட்டிகை அளவுக்கு லஸ்ட் சேர்த்து..” என்றவனை விழிகள் விரிய நோக்கினாள்.
அவள் விழிகளில் இருந்து விழிகளை அகற்றாமல் கண்ணாடியில் இருந்த பார்கவிக்குக் காற்றின் வழியே சத்தமாக முத்தத்தைக் கடத்தினான்.
“பார்த்தி..” என்று கண்களை உருட்டி அவன் இடையில் இடித்தாள்.
அவன் கரம் வேகமாகத் துவாலையைப் பற்றியது.
அதைக் கண்டு அவள் சத்தமில்லாமல் சிரிக்க, “என்ன சிரிப்பு?” என்று அவளை உரசினான்.
கண்ணாடியில் நெருக்கமாக நின்ற இருவரின் முகத்திலும் மயக்கும் புன்னகை இருந்தது.
அவள் நாசியைத் தீண்டியது அவனது வாசம். மெல்ல குனிந்து அவள் கழுத்தில் வாசம் பிடித்துப் பொன்னுக்குப் போட்டியாக மின்னிய, பசும் மஞ்சள் வாசம் வீசிய திருமாங்கல்யத்தில் முத்தமிட்டான்.
கழுத்தில் இருந்து மெல்ல முத்தமிட்ட படியே முன்னேறி கன்னத்தில் ஈரமாய் முத்தமிட்டு தன் இணையான இதழ்களை அடைந்தான். அவன் கரம் அவளை அப்படியே அவனுக்குத் தோதாகத் திருப்பியது. கண்ணாடியில் இருவரின் முத்தமிடும் பிம்பத்தைக் கண்டவளின் கண்கள் வெட்கம் கொண்டு வேகமாக மூடிக் கொண்டன.
மனைவியை இடையோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.
அவள் மூச்சு விட, அவன் கொடுத்த இடைவெளியில், “சேலை ஈரமாகுது பார்த்தி” என்று கிசுகிசுத்தாள்.
“இதுக்குப் பேர்தான் அன்பில் நனையுறது போலப் பாரு” என்றான். பக்கென்று சிரித்து விட்டாள். அவளின் சிரிப்பையும் முத்தத்தால் களவாடி மூச்சு வாங்க அவளை விடுவித்தான்.
பார்கவி மீண்டும் கண்ணாடியின் புறம் திரும்பி தன் சேலையைச் சரி செய்ய, அவன் உடை மாற்றச் சென்றான்.
“கண்ணாடியில என்னைப் பார்க்க கூடாது பாரு” என்று எச்சரித்தான்.
“இப்பத்தான் நான் பாக்க மாட்டேங்கறேன்னு கம்ப்ளைண்ட் பண்ணீங்க?”
“நீ பார்க்கத்தான் நான், பார்த்திபன் பார்கவியின் ப்ராப்பர்ட்டி” என்று கையை விரித்துக் காண்பித்து அவளை நோக்கி வந்தான்.
அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டாள்.
“ஆல்ரெடி லேட்டாகிடுச்சு பார்த்தி, ரெடியாகுங்க போகலாம்.” என்றாள்.
“பாரு பேச்சை நான் மீறுவேனா?” என்று வசனம் பேசி, உடை மாற்றினான். அதற்குள் அவளும் தயாராகி இருந்தாள்.
கழுத்தில் புது மஞ்சள் தாலியுடன், சிறிய பொன் சங்கிலி அணிந்திருந்தாள். காதில் அதற்குப் பொருத்தமாக ஒற்றைப் பூ மலர்ந்தார் போன்றதொரு கம்மல். கை நிறைய ரோஜா நிற கண்ணாடி வளையல்கள் என்று தயாராகி நின்றவளை மேலும் பொலிவாக்கி காட்டியது புது மணப்பெண்ணுக்கே உரிய பொலிவு.
இளரோஜா நிற சட்டை அணிந்திருந்தவன் முழுக்கையைப் பாதியாக மடித்து விட்டபடியே மனைவியைக் கண்களால் களவு செய்து, “பாருன்னு பொருத்தமா பேர் வச்சுருக்காங்க உனக்கு. பொழுதுக்கும் பார்த்துட்டே இருக்கலாம் உன்னை” என்று கண் சிமிட்டினான்.
“என்னைப் பார்த்தும் பார்க்காம போன ஆள் நீங்க பார்த்தி. ஆனா இந்தப் பேச்சு இருக்கு பாருங்க பேச்சு” என்று அவள் கண்களை உருட்ட, “அந்தப் பார்த்திப் பாவம் பண்ணவன், அவனை மன்னிச்சிடு பார்கவி” என்றான் உருக்கமாக. வலக் கரத்தால் அவள் முகம் நிமிர்த்தி, “இன்னும் என் மேல கோபம் இருக்கா?” என்று கேட்டான்.
“இல்ல, இனிமே அதைப் பத்தி பேசல சாரி” என்றாள் மனதார.
“என்னால இன்னமும் நமக்குக் கல்யாணமானத நம்ப முடியல பார்த்தி. அதான் அப்பப்போ இப்படிப் பேசிடுறேன். சாரி”
“இட்ஸ் ஓகே. நீ மன்னிக்க முடியாத அளவுக்குத்தான் நானும் பண்ணியிருக்கேன் பாரு. சோ ஃப்ரீயா விடு” என்றான். அவன் விரல்கள் அவள் கன்னத்தை மென்மையாக வருடின.
“நமக்குக் கல்யாணமானத உன் மனசுல பதிய வைக்க என்கிட்ட ஒரு ட்ரிக் இருக்கு” என்றான் கள்ளப் புன்னகையுடன்.
“என்ன ட்ரிக்?”
“அதை வார்த்தையால சொல்ல முடியாதே. ஒன்லி ஆக்ஷன்லதான் சொல்ல முடியும்” என்றான் பற்கள் தெரிய புன்னகைத்து. சட்டென்று எக்கி அவனது உதட்டோர குழியில் அழுந்த முத்தமிட்டாள்.
“இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே..” என்று அவன் முணுமுணுக்க, “இந்தப் பேசி மயக்கற, பாடி மயக்கற வேலையெல்லாம் வேணாம். வாங்க” என்று அவன் கைப் பிடித்து இழுத்தாள்.
“ஹேய் என்ன நீ? மனைவிய மயக்கலன்னா புருஷனுக்கு என்ன மரியாத?” என்று அப்போதும் பேசிக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்தான்.
அறையை விட்டு வெளியே வந்ததும் வேகமாகக் கணவனின் கையை விட்டு விட்டாள் பார்கவி.