சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து காரசார விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர் சிதம்பரமும், கண்ணதாசனும். அவர்களை மாறி, மாறி பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராகவன்.
“என்னப்பா?” என்றாள்.
“என்னம்மா? ஒன்னுமில்லயே. வா, இப்படி வந்து உட்காரு. உங்க ஐயா நாளைக்கே நாள் நல்லா இருக்குன்னு சொல்றார். நான் ரெண்டு நாள் கழிச்சு வர சொல்லலாம் சொல்றேன். அவ்ளோ தான் டா. ஏற்பாடு எல்லாம் பண்ணனும் இல்ல? அதுக்குத் தான். வேற ஒன்னுமில்ல” என்றார்.
“ஆமா செல்லம். வா, வந்து இப்படி உட்கார்” என்று நின்று கொண்டிருந்த பேத்தியின் கைப் பிடித்துத் தன் அருகில் அமரச் செய்தார் கண்ணதாசன்.
“என்கிட்ட எதையும் மறைக்கறீங்களா?” என்றாள் சந்தேகத்துடன்,
“இல்லையே.. ஏன்டா அப்படிக் கேட்கற?” பட்டென மறுத்தார் சிதம்பரம்.
“இல்ல, சும்மா தான் கேட்டேன் ப்பா, முதல்ல முடியாது சொன்னாங்க. இப்போ அவங்களே கல்யாணம் பேசி முடிக்க வரோம் சொல்றாங்க. ரொம்ப முன்னுக்குப் பின் முரணா இருக்கு அவங்க நடவடிக்கை. அதான் கேட்டேன்” என்றாள்.
“பெருசா காரணம் எதுவும் சொல்லலை டா. பொண்ணுக்கும், பையனுக்கும் பிடிச்சிருக்கும் போது, நாம ஏன் இடையில் புகுந்து தடுக்கணும். அப்படினு அவங்கப்பா சொன்னார்” என்றார் சிதம்பரம்.
“நாளைக்கே வர சொல்லிடவா செல்லம்?” கண்ணதாசனின் கேள்விக்கு, “அப்பா, ஆயா கிட்ட கேட்டுக்கோங்க ஐயா” என்று சொன்னாள் ராகவி.
“சரி செல்லம்” என்றவர், திரும்பி மகனிடம் பேச ஆரம்பித்தார்.
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியையும் மீறி, ஏதோ சிறு தவிப்பு இருப்பது போலப் பட்டது. ஆனால், அவள் கேட்டும் சரியான பதில் வராததால், ராகவனை அழைத்தாள்.
“என்ன பாப்பா?”
“என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க? உதய் வீட்ல இருந்து என்ன சொன்னாங்க?”
“உன்னைப் பார்க்க வரோம் சொன்னாங்க. நான் ஹாஸ்பிட்டலில் இருந்து இப்ப தான் வீட்டுக்கு வந்தேன். எனக்குச் சரியா தெரியலை. டயர்டா இருக்கு நான் போய்ப் படுக்கறேன்” என்றபடி அவன் நகர, போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி. எப்படியும் பூனை வெளியில் வரத் தான் போகிறது, அப்போது தெரிந்து கொள்கிறேன் என்று நினைத்தபடி தனது அறையை நோக்கி நடந்தாள் அவள்.
மனதின் மகிழ்ச்சியையும் மீறி எதுவோ உறுத்திக் கொண்டேயிருந்தது. முதலில் மறுத்தவர்கள், இப்போது ஏன் சரி என்று சொன்னார்கள்? உதய் கட்டாயப்படுத்தி இருப்பானோ? இல்லை, அப்பா அவர்களிடம் பேசியிருப்பாரோ? தன் மனது ஏன் இப்படிக் கிடந்து தவிக்கிறது? அவளுக்கு விளங்கவேயில்லை.
உதயிடம் உடனே பேச வேண்டும் என்று துடித்த மனதிற்கு, அவனது அலைபேசி எண் தன்னிடம் இல்லை என்று சமாதானம் சொல்லி கட்டுப்படுத்தி வைத்தாள் ராகவி.
மறுநாளே உதய் வீட்டினர் அவளைப் பார்க்க வந்து விட்டனர். இரண்டு மனதாகவே போய் அவர்கள் முன் நின்றாள்.
மெல்ல கண்களைச் சுழற்றி அவனது குடும்பத்தினரை பார்த்து விட்டு, மீண்டும் கண்களைத் தரையில் பதித்தாள்.
“எங்க வீட்ல நாங்க ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்க” என்று, முதல் முறை சந்திக்கும் போதே அவளிடம் தன் குடும்பம் குறித்துச் சொல்லியிருந்தான் உதய்.
அவனது பெற்றோர், அண்ணன், அவரது மனைவி மற்றும் கைக் குழந்தை, இரண்டு தங்கைகள் என மொத்த குடும்பமும் வந்திருந்தனர். ஆனால், அவள் எதிர்பார்த்திருந்தவனைத் தான் காணவில்லை. உதய் வராதது அவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது.
இரு குடும்பமும் இரண்டு மணி நேரத்தில் ஒரு குடும்பமாகி இருந்தனர். சொந்த ஊர், உறவினர், இங்கே சென்னை வாழ்க்கை, வேலை என்று பேச்சு எங்கெங்கோ சென்று கொண்டிருந்தது. நடுவில் அவர்களின் கல்யாணம் குறித்த பேச்சையும் தவற விடவில்லை அவர்கள். மறுமாதமே கல்யாணத்தை வைத்துக் கொள்வது என்று முடிவெடுத்து, மாத தொடக்கத்திலேயே ஒரு நல்ல முகூர்த்த நாளை தேர்ந்தெடுத்திருந்தனர்.
அனைத்தையும் பேசி முடித்து மகிழ்வாகக் காஃபி, டிஃபன் சாப்பிட்டு அவர்கள் கிளம்பும் நேரத்தில் வந்து சேர்ந்தான் உதய்.
வண்ண மலரைக் கண்ட வண்ணத்து பூச்சியாய், மலர்ந்து விரிந்தது ராகவியின் முகம்.
அவன் பெரியவர்களிடம் பேசியது, தன் அருகில் வந்து நின்றது, அதற்குப் பின் அவர்கள் சொன்னதை அவனோடு இணைந்து செய்தது என எதுவுமே அவள் மனதில் பதியவேயில்லை.
அவளை அமரச் சொன்னார்கள். அங்கிருந்த ஒற்றைச் சோஃபாவில் அமர்ந்தாள் ராகவி.
அவனது அண்ணனின் பக்கத்தில் சென்று அமர்ந்தான் உதய்.
“ராகவி கிட்ட எதுவும் தனியா பேசணும்னா போய்ப் பேசுங்க மாப்பிள்ளை. நாங்க தப்பா எடுத்துக்க மாட்டோம்” என்று அவனைக் கிளப்பி விட்டார் கண்ணதாசன்.
உதடு மடக்கி, மெலிதாகச் சிரித்துக் கொண்டே எழுந்து அவள் பக்கம் வந்தான் உதய். வெட்கத்தில் தான் இந்த ஆண்கள் எத்தனை அழகு என்று கண் சிமிட்டியது அவள் மனம். ஆண்கள் அல்ல, அவன் மட்டுமே அழகு, உதய் பிரகாஷ். அந்தக் கம்பீரமான வெட்கம், அவளது கோபம் இருந்த இடம் தெரியாமல் போகச் செய்து, அவளையும் புன்னகைக்க வைத்தது.
அவனை மாடிக்கு அழைத்துச் சென்றாள். தவழும் குழந்தையை வால் பிடிக்கும் நாய்க் குட்டியை போல, அமைதியாய் அவள் பின்னே நடந்தான் அவன். ஹாலை அடுத்திருந்த பால்கனியில் சென்று ஆளுக்கொரு பக்கமாக நின்றனர்.
“ஹாய்” என்று மந்தகாசமாகப் புன்னகைத்தவன், இரண்டே எட்டில் அவளுக்கு நெருக்கமாக வந்து நின்றான்.
அவள் பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டு நிற்க, “என் மேல கோபமா இருக்கியா? எதுக்கு? ரொம்ப லேட் பண்ணிட்டேனா?” கழுத்தை தடவி கொண்டே கேட்டான்.
அவள் பதில் சொல்லவில்லை. அதே நேரம் கேள்வி கேட்கவும் தோன்றவில்லை.
“இந்த நாள், இவ்வளவு சீக்கிரம் வரும்னு நான் நினைக்கவேயில்ல ராகவி. அடுத்த மாசமே கல்யாண தேதி குறிச்சுட்டாங்கன்னு சொல்லவும் தான் நிம்மதியா இருக்கு.” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனது மொபைல் அடிக்க ஆரம்பித்தது. ஒரு உச் கொட்டலுடன் அதை எடுத்து, அழைப்பை நிறுத்தி விட்டு அவளைப் பார்த்தான்.
“சாரி, என்ன சொல்லிட்டு இருந்தேன். ஆங், உங்க வீட்ல இருந்து, போலீஸ் டிபார்ட்மெண்ட் பையன் சரி வராதுன்னு சொன்னதா அப்பா சொல்லவும், ரொம்ப ஃபீல் பண்ணேன்… உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன். ஆனா, இன்னைக்கு, இந்த நிமிஷம் அவ்வளவு சந்தோசமா…” மீண்டும் மொபைல் அடித்தது. அவன் பேச்சை கவனிக்க முடியாத அளவு தொல்லைக் கொடுத்தது அலைபேசி சத்தம். எரிச்சலுடன் கண்களை உருட்டினாள் ராகவி.
“இப்போ நீங்க என்ன சொன்னீங்க? அதாவது உதய் என்ன சொன்னாரு. கொஞ்சம் ரீவைண்ட் பண்ணுங்க” கத்தினான் ராஜா. அந்தக் குரலில் கலைந்தவள், தான் சொன்னதையே மனதில் மீண்டும் ஒட்டிப் பார்த்தாள். மின்னல் வெட்டியது போல, விஷயம் அப்போது தான் அவளுக்குப் புலப்பட்டது.
“உங்க வீட்ல இருந்து, போலீஸ் டிபார்ட்மெண்ட் பையன் சரி வராதுன்னு சொன்னதா அப்பா சொல்லவும், ரொம்ப ஃபீல் பண்ணேன்.” இப்போது உதயின் வார்த்தைகள் தெளிவாகப் புரிந்தது.
ஆக, அவனிடம் நாங்கள் மறுத்ததாகச் சொல்லி இருக்கிறார்கள்.
அவன் தன்னை மணக்க மறுத்து விட்டான் என்று அவள் மருகிக் கொண்டிருக்க, அவனோ, அவள் மறுத்து விட்டாள் என்று வருந்தி இருக்கிறான் என்பதை நினைக்கையிலே மனதினுள் மெல்லிய சாரல் வீசியது.
“தப்பு உதய் மேல இல்ல போல…” இழுத்தான் ராஜா.
“ம்ம்ம்”
‘இத்தனை நாள் இதை எப்படிக் கவனிக்காமல் விட்டோம்?’ மானசீகமாகத் தன் மண்டையில் தானே கொட்டிக் கொண்டாள் ராகவி.
“சரி, மேலே சொல்லுங்க. கேட்போம்” என்றான்.
மனதில் தாறுமாறாக ஓடிய எண்ணங்களை ஒதுக்கி விட்டு மீண்டும் சொல்லத் தொடங்கினாள். கால்களை நீட்டி அமர்ந்து கதைக் கேட்க தயாரானான் ராஜா.